அத்தியாயம் 39 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 32

தென்னிந்தியாவில் பெருங் கற்படைப் பண்பாடு நிலவிய காலகட்டம் குறித்து, அது அறியப்பட்டது முதல் பல்வேறுபட்ட காலவரையறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

மு.பொ.ஆ.1500 முதல் பொ.ஆ. 200 வரை ஏறத்தாழ 1700 ஆண்டுகள், தென்னிந்தியாவில் நிகழ்ந்த பெருங் கற்படைப் பண்பாட்டை 1. முதல் நிலைப் பெருங் கற்படைக் காலம், அல்லது கீழ் நிலைப் பெருங் கற்படைக் காலம், 2. மத்திய நிலைப் பெருங் கற்படைக் காலம் அல்லது இடை நிலைப் பெருங் கற்படைக் காலம், 3. இறுதி நிலை பெருங் கற்படைக் காலம் அல்லது மேல்நிலைப் பெருங் கற்படைக் காலம் என்று பகுத்தறிவதன் அவசியம் என்ன? அவ்வாறு பகுத்தறிவதில் உள்ள நன்மைகள் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கையே. உடன், இவ்வாறு பிரித்தறிவதற்கான மூலங்களை அவை வெளிப்படுத்தியுள்ளனவா என்ற கேள்வியும் அதில் தவிர்க்க முடியாது உள்ளது.

தென்னிந்தியாவில் பெருங் கற்படைப் பண்பாடு நிலவிய காலகட்டம் குறித்து, அது அறியப்பட்டது முதல் பல்வேறுபட்ட காலவரையறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்புகளால், இப்பாண்பாட்டின் காலநிலை தொடர்ந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டு வந்துள்ளது என்பது அறிந்ததே. முன்னர் குறிப்பிட்டதுபோல், மு.பொ.ஆ. 1500 ஆண்டுகளில் இப்பண்பாடு துவங்குகிறது என்று இன்றளவில் அறியப்பட்ட முடிவுகளில் இருந்து வரையறுக்க முடிகிறது.
 

நிலை
காலநிலை
காலம்
வெளிப்பாடு
1
முதல்நிலை அல்லது கீழ்நிலைப் பெருங் கற்படைக் காலம்
மு.பொ.ஆ. 1500 முதல் மு.பொ.ஆ. 700 வரை
 
2.
மத்திய நிலை அல்லது இடைநிலைப் பெருங் கற்படைக் காலம்
மு.பொ.ஆ. 700 முதல் மு.பொ.ஆ. 500 வரை
சிந்துவெளி எழுத்துகள், கீறல் குறியீடுகள்
3
இறுதிநிலை அல்லது மேல்நிலைப் பெருங் கற்படைக் காலம்
மு.பொ.ஆ. 500 முதல் பொ.ஆ. 200 வரை
தமிழி எழுத்துகள்

தொல்காப்பியத்தின் காலம் குறித்த முரண்களைக் கணக்கில் கொண்டு, பெரும்பான்மையோரின் பொது கால வரையறையாக உள்ள மு.பொ.ஆ. 300-க்கு முற்பட்டது எனில், அது மத்திய நிலை அல்லது இடைநிலைப் பெருங் கற்படைக் காலத்தைச் சேர்ந்தது எனலாம். புதிய கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக, தென்னிந்திய பெருங் கற்படைப் பண்பாடு துவங்கியது என்ற பின்புலத்திலும், புதிய கற்காலம் என்பது மானுடப் பரிணாம வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளால் புரட்சிகளை உருவாக்கிய காலம், குறிப்பாக மருத நில வேளாண்மையை அடைந்த காலம் என்பதையும் கணக்கில் கொண்டால், தென்னிந்தியாவில் மருத நில வேளாண்மைப் பண்பாடு, பெருங் கற்காலப் பண்பாடு துவங்கியதாக அறியமுடிகின்ற மு.பொ.ஆ.1500-ல் நன்கு வேறூன்றியதாக இருக்க வேண்டும். எனில், தொல்காப்பியம் தனக்கு முற்பட்ட நானிலப் பண்பாட்டை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது என்பது இதனாலேதாம் எனலாம்.

இங்கு ஆய்வுக்களமாக உள்ள திணை சொல் பற்றிய விளக்கங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. “திணை எனும் கலைச் சொல், குடும்பம், நிலம், இனம், குடியிருப்பு எனும் பல்வேறு பொருள்களைக் கொண்டிருந்தாலும், இவற்றில் எல்லாம் மேம்பட்ட நிலையில் இச்சொல் ‘ஒழுக்கம்’ எனும் பொருளிலேயே தொல்காப்பியரால் ஆளப்பட்டுள்ளது. இந்த ஒழுக்கம் அகம், புறம் என இருதிறப்பட்டாலும், இவை தனித்தனியே அணுகத்தக்கதல்ல; இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை என்பதே தொல்காப்பியரின் திணைக் கோட்பாடு அடிப்படை. இதனால்தான், ஒவ்வொரு அகத்திணையையும் அவர் ஒவ்வொரு புறத்திணையோடு இயைபுபடுத்தியே புறத்திணையியலில் புறத்திணைகளின் இலக்கணத்தை வரையறுத்துள்ளார்”*1 என்பதும், “நடத்தை முறைகளோடு தொடர்புடைய திணைக் கருத்துகள் சூட்சுமமான சிந்தனைகளின் விளைவாகத் தோன்றியவையாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில், ‘திணை’ என்ற சொல்லின் மூலப் பொருளான குடும்பம், குடியிருப்பு ஆகியவை முக்கியம் பெறுகின்றன. பல நிலப்பகுதிகளின் நடத்தை முறைகளை விளக்கும் சொற்களாக அவை பரிணமித்த வரலாற்றை அவை குறிப்பிடுகின்றன”*2 என்ற கருத்தும், திணை என்ற சொல்லின் பன்முகப் பயன்பாட்டுப் பொருளை விளக்குபவையாக உள்ளன. இதனுடன், திணையியல் என்பதற்கும் பொருத்தப்பாடான விளக்கத்தை காண்பது அவசியமாகிறது. அது, “திணையியல் என்பது குறிஞ்சி முதலான நால்வகை நிலங்களின் புணர்தல் முதலான ஐவகை ஒழுக்கங்களுடன் கைக்கிளை பெருந்திணை எனும் இரண்டையும் இணைத்து எழுவகை நடத்தை முறைகளை ‘வாழ்வியல்’ என்ற அடித்தளத்திலிருந்து விளக்கும் கவிதையியல்”*3 ஆகும்.

இவ்விளக்கங்கள், திணை என்பது வாழ்வியலின் அடித்தளத்தில் உருவான ஒழுக்கங்களை அடையாளப்படுத்துகின்றன. இவ்வாழ்வியலை பாதித்த காரணிகளை ஒரு பருந்துப் பார்வையாகவாவது அறிய வேண்டிய அவசியத்தை வேண்டிநிற்கின்றன. இக்காரணிகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் காரணிகள் என்று பகுத்தறியவேண்டி உள்ளது. உள்நாட்டுக் காரணிகள் இயல்பான அறிவியல் வயப்பட்ட மனித இனப் பரிமாண வளர்ச்சிப் போக்கில் ஆதி வேட்டைச் சமூகமாகவும், மேய்த்தல் சமூகமாகவும், நீர் சார் சமூகமாகவும், வேளாண் சமூகமாகவும் கிளைத்து நிலைபெற்றமையையும், இயற்கை மாற்றங்களையும், உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி - வீழ்ச்சி நிலைகளையும் குறிப்பிடலாம். வணிகமும், வணிகக் குடியேற்றமும், அந்நியப் படையெடுப்பும், அந்நியக் குடியேற்றமும் வெளிநாட்டுக் காரணிகளின் பக்கங்களாக உள்ளன.

இந்த, இரு உள்நாட்டு, வெளிநாட்டுக் காரணிகளும் பெருங் கற்படைக் காலப் பண்பாட்டை பெரிதும் பாதிக்கும் காரணிகளாக இருந்துள்ள. பெருங் கற்படைப் பண்பாடு என்பதே அந்நியப் பண்பாடு பரவியதால் உருவானது என்ற கருதுகோளும், சுயமாக உருவான பண்பாடு என்ற கருதுகோளும் இதனுடன் இணைத்துப் பார்க்கத்தக்கது.

எனில், பெருங் கற்படைப் பண்பாடு துவங்கியதாக உள்ள காலகட்டமான மு.பொ.ஆ.1500 என்பதும் அதனைத் தொடர்ந்த ஆண்டுகளும், இந்திய வரலாற்றுக்கு முக்கியமானதொரு காலகட்டமாகும். இக்காலகட்டத்தில், வடஇந்தியாவில் சிந்துவெளி நாகரிகம் என்றும் ஹரப்பன் நாகரிகம் என்றும் அழைக்கப்படும் நகர நாகரிகம் நலிவுறத் தொடங்கிய காலகட்டமும், மேய்த்தல் நாகரிகத்துடன் சிந்துப் பகுதியில் ஆரியர் குடியேறிய நிகழ்வும், தென்னிந்தியாவில் பெருங் கற்படைப் பண்பாடு துவங்கிய காலம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை அது கொண்டுள்ளது.

இம்மூன்று நிகழ்வுகளில் இருந்து, தென்னிந்திய பெருங் கற்படைப் பண்பாடு என்பது சிந்துப் பகுதி மக்களால் தென்னிந்தியாவில் புகுத்தப்பட்ட ஒன்றல்ல என்பதும், அது மேய்த்தல் சமூக மக்களாக வடஇந்தியாவில் நுழைந்த ஆரியர் கூட்டம் வழங்கிய பண்பாட்டுக் கொடையும் அன்று என்பதும் தெளிவாகிறது. பெருங் கற்படைப் பண்பாடு என்பதே அந்நியப் பண்பாடு பரவியதால் உருவானது என்ற கருதுகோளை திணை அடிப்படையாக நோக்கும்முன், பெருங் கற்படைப் பண்பாடு தென்னிந்தியாவில் பூர்வீகமாக வாழ்ந்த புதிய கற்கால மக்கள் வளர்த்தெடுத்த பண்பாடு என்ற கருதுகோளின் பின்புலத்தில் சில விஷயங்களை தெளிவாக்கிக்கொள்ளலாம்.

தென்னிந்தியாவில் பெருங் கற்படைக் பண்பாட்டுக்கு முற்பட்ட மக்களின் வாழ்வியலும், அக்காலப் பண்பாடும், பண்பாடுகளைப் பாதித்த நிலவியல் மாற்றம், அயலகத் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்பக் காரணிகளை அறிவது பெருங் கற்படைப் பண்பாட்டின் வளர்ச்சிப்போக்குகளை அடைய வழியமைத்துத் தருகின்றது.

அயலகத் தொடர்புகள் குறித்து அறியும் முன், பலூசிஸ்தான் முதல் குமரிமுனை வரை பரவியிருந்த பண்டைய அகன்ற இந்தியாவின் வட, தென் புல மக்களிடையே நிலவியிருந்த தொடர்புகளையும் அது அறுபட்ட நிலையையும் காண்போம்.

வடஇந்தியா மாற்றும் தென்னிந்தியா இடையே முதல்நிலை அல்லது கீழ்நிலைப் பெருங் கற்படைக் காலத்தில் நிலவியதாகத் தோற்றமளிக்கும் தொடர்பின்மை, பெருங் கற்படைப் பண்பாட்டுக்கு முன்னரும் மத்திய நிலை அல்லது இடைநிலைப் பெருங் கற்படைக் காலத்துக்குப் பிறகும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதை தொல்பொருள் சான்றுகளாலும், இடப்பெயர் ஆய்வுகளாலும், எழுத்துகளின் பரவலாலும் நன்கு அறிய முடிகிறது. விந்திய மலை இந்தத் தொடர்பின்மையை உருவாக்க முக்கியக் காரணியாக இருந்தது என்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர்.

இருந்தாலும், இத்தொடர்பின்மையை சிந்துப் பகுதி, கங்கைச் சமவெளிப் பகுதி மற்றும் தென்னிந்தியா என்று மூன்று நிலக்கூறுகள் அடிப்படையில் கண்டால், தொடர்பின்மை என்பது சிந்துப் பகுதியில் மட்டும் நிலவியதை அறியமுடிகிறது. கங்கைச் சமவெளியுடனான தொடர்பு என்பது ஒரு அறுபடா தொடர்ச்சியைக் கொண்டிருப்பதாக உள்ளது. இவ்வுண்மை இந்திய வரலாற்றின் மற்றொரு பகுதியை மீட்டு வழங்குகின்றன. அது, கீழ்நிலைப் பெருங் கற்படைக் காலத்தில் சிந்துப் பகுதியில் நிகழ்ந்த அந்நிய பண்பாட்டுக் கலப்பு மற்றும் அப்பகுதி பூர்வீக மக்களின் மருத நிலப் பண்பாட்டின் வீழ்ச்சி ஆகியவை காரணமாக உள்ளது. இந்த நிகழ்வு, அந்நாள் வரை வடஇந்தியா மற்றும் தென்னிந்தியா என்ற இருபெரும் நிலக்கூறுகளை பிரம்ம வர்த்தம் என்ற சிந்துப் பகுதியையும், ஆரிய வர்த்தம் என்ற கங்கைப் பகுதியிலும், தென்னிந்தியா என்ற விந்திய மலைக்குக் கீழான பகுதி ஆகிய மூன்று நிலக்கூறுகளை உருவாக்கியது.

பிரம்ம வர்த்தம் துவக்கத்தில் மருதப் பண்பாடு நிலவி அது வீழ்ச்சியடைய, வரையறையில் முல்லை நிலம் இல்லாது போனாலும், மேய்ச்சல் நிலமாக மேய்த்தல் சமூக மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது அல்லது மேய்த்தல்வெளிகளாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. மு.பொ.ஆ.1500 முன்னர் அகண்ட இந்தியாவின் இருநிலப் பகுதியிலும் பெரும்பான்மையாக திராவிட குடிகளே பரவலாக வாழ்ந்து வந்தனர் எனவும், சிறுபான்மையினராக ஆரியர் நீங்களாக இமயமலைச் சார்பு நிலங்களில் மங்கோலியரும் பிற குடியினர் மத்திய இந்தியாவிலும் வாழ்ந்திருந்தனர் என மானுடவியளாலர்களால் மொழியப்படுவது இங்கு கவனம் கொள்ளத்தக்கது. இக்காரணமே, இடப்பெயர்களில் தமிழ், சிந்துவெளி எழுத்துகளின் பொதுப் பயன்பாடு முக்கியக் காரணமாக உள்ளது.

இப்பின்னணியில், சிந்துப் பகுதியின் மருத நில நகரப் பண்பாட்டின் வீழ்ச்சி, மேய்த்தல் சமூக மக்களில் வரவால் ஏற்பட்டதா அல்லது இயற்கைச் சீற்றங்கள் காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்த கருத்து முரண்பாடுகள் நிலவிவருகின்றன. மேய்த்தல் சமூகத்தினராக நுழைந்த ஆரியர்களால் நலிவுற்றது என்பது ரிக் இலக்கியச் சான்று கொண்டு அடையப்பட்ட கொள்கையாகும். தொல்லியல் சான்றுகள், இயற்கைச் சீற்றம் அல்லது மாற்றங்களால் உருவானதாக இருக்கலாம் என்ற கொள்கையை அடையச் செய்திருக்கின்றன. நலிவுற்றிருந்த மக்களிடையே நல்லிணக்கமாகப் பரவினர் என்ற கருதுகோளும், அவர்கள் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு குழுக்களாக வந்தனர் என்ற கருத்தும் இதனுடன் ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது.

சிந்துப் பகுதியின் தொல்லியல் சான்றுகள் இரு முக்கியப் பண்பாடுக் கூறுகளை நமக்கு அடையாளப்படுத்தியுள்ளன. மு.பொ.ஆ. 1500-க்கு முற்பட்ட தொல்பொருள் சான்றுகள் என்றும், மு.பொ.ஆ. 1500-க்கு பிற்பட்ட தொல்பொருள் சான்றுகள் என்றும் இரண்டு பிரிவாக சிந்துப் பகுதியின் தொல்பொருட்களை பகுத்து அறிவது இந்த இரு பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாக அடைய உதவுகின்றன. மு.பொ.ஆ. 1500-க்கு முற்பட்ட தொல்பொருள் சான்றுகள் அங்கு வாழ்ந்த மக்கள் மு.பொ.ஆ. 3500 முதல் மு.பொ.ஆ. 1500 வரை தொடர்ச்சியாக பல்வேறு காலகட்டங்களில் இயற்கை சீற்றத்தையும், இயற்கை மாறுபாட்டையும் சந்திந்துள்ளதை காட்டுகின்றன. குறைந்தது ஏழு முறையாவது அப்பகுதி கடுமையான இயற்கை சீற்றத்தையும், இயற்கை மாறுபாட்டையும், அதனால் நிலமட்ட வேறுபாட்டையும் சந்தித்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது.

நிலமட்ட வேறுபாட்டுடன் சிந்துப் பண்பாடு மக்கள் தங்களின் நகரப் பண்பாட்டை தங்கள் குடியிருப்புகளை தொடர்ந்து உயர்த்திப் புதுப்பித்துக்கொண்டுள்ளனர். அவ்வாறு குறைந்தது ஏழு முறைக்கும் குறையாமல் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வாழ்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் கூடுதலாக இருக்கக்கூடும். “ஏழாவது அடுக்கின் அடியிலும் பல அடுக்குகள் உள்ளன. ஆனால், அகழாய்வின்போது நீர் ஊற்றம் ஏற்படுவதால், மேலும் ஆழமாக தோண்டிப் பார்ப்பது இயலாததாக உள்ளது”*4 என்பது, அவ்வுண்மையை தெளிவிப்பதாக உள்ளது. இவ்வகையான புதிப்பிப்புப் பணியானது 300 ஆண்டுகள் இடைவெளியில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று மக்கே கருதுகிறார். “முதலில் அமைக்கப்பெற்ற நகரத்தின் காலம் ஏறத்தாழ மு.பொ.ஆ. 2800 என்றும், ஏழாம் முறை அமைக்கப்பெற்ற நகரத்தின் காலம் மு.பொ.ஆ. 2500 ஆக இருக்கலாம்” என்கிறார் அவர்.*5 மற்றொரு சான்றாக, ஹரப்பா நகர அகழாய்வுகள் அதனை எட்டு அடுக்குகளைக் கொண்ட நகரம் என்பதை வெளிப்படுத்தியுள்ளன. அதாவது, மு.பொ.ஆ. 3500 முதல் மு.பொ.ஆ. 2750 வரை ஏறத்தாழ 750 ஆண்டுகால இடைவெளியில் எட்டுமுறை புதுப்பிக்கப்பட்டிருப்பதை தெளிவிக்கிறது.*6

மக்கேவின் அடிப்படையில், மு.பொ.ஆ. 2500 முதல் மு.பொ.ஆ. 1500 வரையிலான 1000 ஆண்டுகளுக்கு சிந்துப் பகுதியில் நிலமட்ட உயர்வு, அதாவது இயற்கை சீற்றம் ஏதும் உருவாகவில்லை என்பதை அடையமுடிகிறது. அல்லது அவர்கள் வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு, மு.பொ.ஆ. 1500 ஆண்டுகள் வரையில் அவ்விடத்தை விட்டு அகலாமல், அருகருகே பல்வேறு நகரங்களை தொடர்ச்சியாக அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர் எனலாம். இதற்கான சாத்தியங்களை வணிகப் பொருளாதார வளமும், மருத நில விளைச்சல் வழங்கிய செலுமையான பொருளாதர வளமும் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

இவ்வகையான பொருளாதார வளத்தை வழங்கிய சிந்து மற்றும் அதன் துணை ஆறுகளே அதன் வீழ்ச்சிக்குக் கூடுதல் காரணமாக இருந்துள்ளது. ஒரு விவரம், சிந்து ஆறு இந்நாள் வரை பதினெட்டு முறை தன் போக்கை மாற்றிக்கொண்டுள்ளது என்பதும், வெகு அண்மையில் (1928 வரை), மொஹஞ்சதாராவுக்கு ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் ஓடிக்கொண்டிருந்த சிந்து, தற்பொழுது மொஹஞ்சதாரோவுக்கு ஒரு மைல் தொலைவுக்குள் ஓடுகிறது.

சிந்து தரும் இடையூறை நன்கு அறிந்தே, சிந்துப் பகுதியின் கட்டடக் கலையின் தொழில்நுட்பம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பருத்த சுவர் தொழில்நுட்பத்தைக் காணலாம். அணியணியாக கட்டப்பட்டுள்ள அதன் கட்டடங்கள் யாவும், மூன்றரை அடி முதல் ஆறு அடி வரை உள்ளன. இவை தேவைக்குத் தக்கவாறும், நில வேறுபாடு, நீர் அழுத்தத்தைக் கணக்கில் கொண்டும், மேன்மாடங்களைக் கணக்கிட்டும் கட்டப்பெற்றன எனலாம்.

இதன் வளமான காலத்தில், தென்னிந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு முக்கியமானது. குறிப்பாக, கோலார் தங்கச்சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தங்கம், சிந்துவெளி மக்களிடையே பயன்பாட்டில் இருந்துள்ளது. மேலும், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பச்சை நிறக் கல் மைசூர் பகுதியிலிருந்தும், உயர்தரமான ‘அமெசான்’ வகை பச்சைக் கல் நீலகிரியில் இருந்தும், சங்கு மற்றும் முத்து முதலியவை சங்க காலத்தில் பாண்டி நாடு என்று அறியப்பட்ட தமிழகப் பகுதிகளில் இருந்தும் அம்மக்கள் இறக்குமதி செய்திருக்க வேண்டும் என அறியப்பட்டுள்ளது. இவ்வகையான வணிகத்தொடர்பு, அகண்ட இந்தியாவின் உள்நாட்டு வணிகம் என்றே குறிப்பிட வேண்டும். இது வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே தென்னிந்திய பெருங் கற்படை பண்பாட்டுக்கு முன்னரே நல்ல தொடர்பு இருந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

ஆனால், இத்தொடர்பை வேறு பார்வையிலிருந்தும் அணுகவேண்டி உள்ளது. தென்னிந்தியப் பொருட்கள் மிகுதியாக சிந்துப் பகுதியில் கிடைத்தாலும், வணிகத்தால் செழிப்படைந்திருந்த சிந்துப் பகுதியின் உற்பத்திப் பொருட்கள் தென்னிந்தியாவில் கிடைக்காதுள்ளதை கவனிக்க வேண்டும். குறிப்பாக, சிந்துவெளி முத்திரைகள் எவையும் இதுவரை தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்படவில்லை. இந்நிலையில், சிந்துவெளிப் பகுதியின் அயலக வாணிபம் கவனிக்கத்தக்க சிறப்பான சில கூறுகளை வழங்குகிறது.

மொஹஞ்சதாரோவில் கிடைக்கும் தனித்துவமான சலவைக் கல் முத்திரைகள் போன்ற முத்திரைகள் ‘ஏலம்’ நாட்டில் மிகப்பரவலாகக் கிடைத்துள்ளன. சலவைக் கல் மூலப்பொருட்கள் சிந்துப் பகுதியில் கிடைப்பதில்லை. ஆனால், அவ்வகை சலவைக் கல் மீது சிந்துவெளிப் பண்பாட்டுக்குரிய வேலைப்பாடுகள் செய்து கிடைப்பதால், அம்மூலப்பொருட்கள் ஏலம், சுமேரியா நாடுகளில் இருந்து சிந்துப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.*7

சிந்துவெளி முத்திரைகள், சிந்துவெளி நாகரிகம் நிகழ்ந்த சமகாலத்தில் நிகழ்ந்த மெசபடோமிய நாகரிகத்தின் ஊர்களான கிஷ், டெல்அஸ்மர் என்னும் இடங்களில் கிடைத்துள்ளன. இவை சிந்துப்பகுதி மெசபடோமியாவில் நிகழ்த்திய வாணிபத் தொடர்பை வெளிச்சமாக்குகின்றன. டெல்அஸ்மரில் கண்டெடுக்கப்பட்ட நீள் உருளை முத்திரை, சிந்துவெளிக்கு உரியதாகும். அதில் பொறிக்கப்பட்டுள்ள யானை, காண்டாமிருகம், முதலை போன்றவை சுமேரியாவில் இல்லாதவை என்பதும் இதன் சிந்துத் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

அதுபோலவே ஒருவகை வெளிறிய பச்சைக் கல்லால் செய்யப்பட்ட பாத்திரம் ஒன்று, பாய் வடிவ வேலைப்படுகளுடன் மொஹஞ்சதாரோவில் கிடைக்கின்றன. இத்தகைய பாத்திரங்கள் சுமேரிய நாகரிகம் நிகழ்ந்த நகரங்களில் கிடைத்துள்ளதும் இவ்விரு பகுதிகளுக்கும் இடையேயான வணிகத் தொடர்பைக் காட்டுகின்றன. இராக் பகுதியில் மு.பொ.ஆ. 2800 – 2500-ம் ஆண்டுகளுக்குரிய பொருள்களுடன் கிடைத்த உடல்பகுதியில், முட்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மண் பாத்திரங்கள் சிலவும் கிடைத்துள்ளன. அவை, இந்தியப் (சிந்து) பகுதிக்கு உரியவை என்று கருதப்படுகிறது. இவ்வாறே, பண்டைய எகிப்துடனான சிந்துப் பகுதியின் வணிக உறவுகளை வெளிப்படுத்தும் பல ஏற்றுமதி, இறக்குமதிச் சான்றுகளை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிந்துப் பகுதி, தென்னிந்தியாவில் கொண்டிருந்த ஆழமான தாக்கத்தை அதன் எழுத்துகள் அல்லது அந்த எழுத்துகளை ஒத்த எழுத்துகள் சிந்துவெளி நாகரிகம் நலிவுற்ற பின்னர், பரவலாகத் தென்னிந்திய பெருங் கற்படைப் பண்பாட்டுக்கு உரிய ஈமச்சின்னங்களிலும், பாறை ஓவியங்களிலும் காணக் கிடைக்கின்றன. இன்று நமக்குக் கிடைத்துள்ள தொல்பொருட்களைச் சான்றாகக் கொண்டால், இவை மத்திய நிலை அல்லது இடைநிலைப் பெருங் கற்படைக் காலத்தைத் தொடர்ந்துதான் கிடைத்து வருகின்றன. கீழ்நிலைப் பெருங் கற்காலப் பண்பாட்டுக்கு உரிய, அதாவது மு.பொ.ஆ. 1500 முதல் மு.பொ.ஆ. 700 வரையிலான இவ்வகைச் சான்று இன்றுவரை கிடைக்காத நிலை உள்ளது. இது நமது தொன்மையான எழுத்துமொழியின் மீது பல கேள்விகளை எழுப்புவதுடன், மு.பொ.ஆ. 1500 முதல் மு.பொ.ஆ. 700 வரையிலான கால இடைவெளியை நிரப்பும் புதிய ஆய்வுகளையும் வேண்டுகின்றன.

இக்கால இடைவெளியில், தொல்காப்பியம் தமிழ் மரபாகக் காட்டும் திணை வாழ்வியல் நன்கு வேறூன்றி இருந்ததையும், இலக்கண இலக்கிய மரபுகளையும் வெளிப்படுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது. இவை மு.பொ.ஆ. 1500 முதல் மு.பொ.ஆ. 700 வரையிலான கால முதல்நிலை என்ற கீழ்நிலைப் பெருங் கற்காலப் பண்பாட்டுக்கு உரியன எனலாம்.

தென்னிந்தியாவில் ஆரியர் வரவு என்பது மு.பொ.ஆ. 300 அல்லது ஓரிரு நூற்றாண்டுகள் முன்பின்தான் நிகழ்ந்தன என்பது சமூக, பண்பாட்டுத் தளத்தில் மட்டுமல்லது, தொல்லியல் சான்றுகளாலும் அடையமுடிகின்ற உண்மையாகும். இக்காலகட்டத்தில், “இறுதி நிலை அல்லது மேல் நிலைப் பெருங் கற்படைக் காலம்” என்ற மூன்றாம் நிலை பெருங் கற்படைப் பண்பாடு தென்னிந்தியாவில் நடந்துவருகிறது.

தென்னிந்தியாவின் பெருங் கற்படைப் பண்பாட்டின் இரு பெருங்கூறுகள், உண்மையில் இதே காலகட்டத்தில் உருவான இருபெறும் தனித்த பண்பாட்டு வெளிச்சங்கள் இரும்பும், கருப்பு சிவப்பு மட்பாண்டங்களும் ஆகும். சிந்து / ஹரப்பன் பண்பாட்டில் அதன் இறுதிக் காலகட்டத்தில் தாழிவகை ஈமச்சின்னங்களும் கருப்பு சிவப்பு மட்கலன்களின் பயன்பாட்டையும் கொண்டிருந்ததை அறிய முடிந்தாலும், இவற்றுக்கு இடையே தொடர்ச்சியை மெய்ப்பிக்க முடியாது உள்ளது.

இவ்வுண்மையுடன், சிந்துப் பகுதியின் மருதப் பண்பாடோ, நகரப் பண்பாடோ, உலோக, சுரங்கத் தொழில்நுட்பங்களோ தென்னிந்தியாவில் பாதிப்பை உருவாக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகிறது.

(தொடரும்)

மேற்கோள் சான்றுகள் -

1. பெ. மாதையன், தமிழிச் செவ்வியல் இலக்கியங்கள் காலமும் கருத்தும், ‘தொல்காப்பியம் சங்க இலக்கியம் - திணையியல் நோக்கு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2011, ப. 99.

2. கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைய தமிழ்ச் சமூகம் வரலாறுப் புரிதலை நோக்கி, 1988, ப.44.

3. பெ. மாதையன், மேலது.

4. Sir John Marshall, Mohenjo-Daro and Indus Civilization, Vol.1, pp.102-103. 

5. Dr. Mackay, Further Excavation Mohenjo-Daro, Vol.1, p.7.

6. Vat. M.S, Excavations at Harappa, Vol-1, pp.3-21.

7. Dr. Mackay, Further Excavation Mohenjo-Daro, p.639.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com