அத்தியாயம் 50 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 43

நாமடி ஒலிகள், திராவிட மொழிகளில் காணப்படும் சிறப்புப் பண்பு கொண்ட ஒலியாகும். இவ்வொலிகளை மிக அதிகமாகப் பெற்று, பிற இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் இருந்து மாறுபட்டுத் தன்னை ஒரு இந்திய மொழியாக்கிக் கொண்டது.

திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

இந்தியாவில் வாழும் இனமக்களில் தமிழ்ச் சமூகத்தைச் தேடுவதற்கு முக்கியப் பங்களிப்பது மொழியாகும். இன்றளவில் பேசும் மொழி கொண்டு மக்களினத்தை இனம் பிரிப்பது தவறான முடிவுகளைத் தரும் என்று மொழியியல் வல்லுநர்களும் மானுடவியலாளர்களும் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர். இருந்தும், இந்தியாவின் இரு பெரும் இனக்குழுக்களான தமிழ் - தமிழ் கிளைக் குடிகள் மற்றும் ஆரியம் - ஆரியக் கிளைக் குடிகளை அறிய, இருபெரும் மொழிகளான தமிழும் ஆரியமும் கொண்டே பகுக்கப்படுகிறது.

தவறான முடிவுகளைத் தரும் என வாதிடுவோர், இன்று குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் வாழும் ‘பில்’ இனக்குழுவினரைக் காட்டுவர். தமிழ் இலக்கியத்தில் ‘வில்லவர்’ என்று அழைக்கப்படும் இனக் குழுவினரே, தமிழ் ‘வ’கரம் ‘ப’கரமாக வடவழக்கில் திரியும் விதிப்படி, பில்லவர் என்றும் ‘பில்ஸ்’ என்றும் குறிக்கப்படுகின்றனர். கொல்லிமலைத் தலைவர்கள் ஆதன் ஓரி, வல்வில் ஓரி ஆகியோர், இக்குழுவின் தமிழகத்தின் ஒரு பிரிவுத் தலைவர்களாகலாம்! தமிழ் இனக்குழுவினைச் சார்ந்த இம்மக்கள், இன்று தமிழையோ தமிழின் கிளைமொழி ஒன்றையோ பேசுவதில்லை. குஜராத், மகாராஷ்டிரா சார்ந்த உள்ளூர் கிளைமொழிகளைப் பேசும் இவர்கள், தாய்மொழியின் சாயலை கொஞ்சமும்கூட கொண்டிருக்கவில்லை என்பர் மொழியறிஞர்கள். போலவே, பஞ்சதிராவிடர் என அழைக்கப்படும் தென்திராவிட நாட்டின் ஐந்து பகுதிகளில் அதாவது, தமிழ்நாடு -கேரளம் உள்ளிட்டது; ஆந்திரம், கர்நாடகம், மாகராஷ்டிரம் மற்றும் கூர்ச்சர்மான குஜராத் மாநிலங்களில் குடியேறிய ஆரியர், தம் தாய்மொழியான ஆரியத்தை இழந்து, குடியேறிய நிலமொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மகாராஷ்ட்ரி, குஜராத்தி எனவும், இன்னும் பிற்காலத்தில் மலையாளம், துளு என புழங்கி அவற்றை தாய்மொழியாகவே கொண்டிருப்பதும் சான்றாகக் கொள்ளலாம்.

இம்முரண்பாடு எதிரொலித்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், தமிழ், ஆரிய மொழி அடையாளங்களுடன்தான் இருபெரும் இனங்களும் வகுத்து அறியப்படுகின்றனர். இதன் கால்வழியே சென்று இத்தேடல் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் வழக்குப்பட்டுள்ள மொழிகளை,

1. தமிழ் என்ற திராவிட மொழிகள்

2. இந்தோ - ஆரிய மொழிகள்

3. ஆஸ்திரோ - ஆசிய மொழிகள்

4. சைனோ - திபேத்திய மொழிகள்

என நான்கு மொழிக் குடும்பங்களாக வகைப்படுத்தி மொழியியலாளர் காண்பர். இந்த மொழிக் குடும்பங்கள், இந்திய மொழிக் குடும்பங்கள் என குறிப்பிடப்படுகின்றன.

மானுடவியலாளர்களும் சரி, மொழியியலாளர்களும் சரி சைனோ - திபேத்திய மொழி பேசும் இனமக்களை இந்தியாவில் வாழும் இனமக்களாகத் தனித்து அடையாளம் காண்பதில்லை. இவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லாததாலும், திராவிட, ஆஸ்திரோ மக்களைப்போலவோ, அவர்களின் மொழியைப் போன்றோ அத்தனை பெரிய அளவு தாக்கத்தை இந்திய மொழி வரலாற்றிலோ அல்லது நாகரிக வளர்ச்சியிலோ ஏற்படுத்தவில்லை என்ற துவக்ககாலச் சிந்தனை இன்னும் நீடிக்கிறது எனலாம். ஆனால், சைனோ - திபேத்திய மக்களின் மொழியின் பங்களிப்புகள் கணிசமானவை என மெய்ப்பித்து வரப்படுகின்றன. இந்நிலையில், இந்தியாவில் வாழும் 5-வது இனக்குழுவினராகப் பகுத்துக் காண்பது அவசியம். இதில், மொழியியலாளர்கள் முன்னோடிப் பார்வையுடன் சைனோ - திபேத்திய மொழியை, ஆரியருக்கு முந்திய இந்தியாவில் வழக்கில் இருந்த மொழிகளில் ஒன்றாகக் கொள்வர்.

மேலாட்டமாகப் பார்த்தால், முந்தைய அத்தியாயத்தில் கண்ட இந்தியாவில் வாழும் நான்கு இன மக்களின் வழக்கு மொழிகளே, முதல் மூன்று மொழிகள் என்பது பெயரளவிலேயே புலப்படும்; நான்காவதான சைனோ - திபேத்திய மொழி, இமயமலைச் சார்பு நிலங்கள் மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வழக்குப்பட்டுள்ள மொழி ஆகும்.

தமிழ் என்ற திராவிட மொழிக் குடும்பத்துக்குரியவர்களைத் தேடும்முன், பிற மூன்று மொழிக் குடும்பத்தினர் குறித்தும், உலகின் பல்வேறு மொழியினங்கள் குறித்தும் ஒரு பருந்துப்பார்வை அவசியமாகிறது. திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகங்களைத் தேடும், பின்னர் வரும் அத்தியாயங்களில் இம்மொழிகள் குறித்த செய்திகளை உள்வாங்கிக்கொள்ள அது உதவும்.

உலக மொழியினங்கள்

இன்றைய உலகில், சுமார் 5000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன என்பது பெரும்பான்மையோர் கருத்து. மொழியிலாளர் தாம் அடையாளமாகக் கைக்கொள்ளும் மொழி எது, கிளைமொழி எது என்ற வகைப்பாட்டின்படியும், ஒரே மொழி இடத்துக்கு இடம் பெயர் மாற்றம் கொண்டிருப்பதாலும், இந்த எண்ணிக்கை 7000 வரை மாறுபடுகிறது. உறுதி செய்த எண்ணிக்கை இந்நாள் வரை எட்டப்படவில்லை.

உலக மொழிகளை இன அடிப்படையில்,

1. இந்தோ - ஐரோப்பிய மொழிகள் (Indo-European Language)

2. சைனோ - திபேத்திய மொழிகள் (Sino-Tibetan Language)

3. செமிட்டோ - ஹெமிட்டிக் மொழிகள் (Semito-Hemitic Languages)

4. உராலில் - அல்டய்க் மொழிகள் (Uralic Atlantic Languages)

5. திராவிட மொழிகள் (Dravidian Languages)

6. ஆப்பிரிக்க மொழிகள் (African Languages)

7. மலேயா - பாலினேசியன் மொழிகள் (Malayo-Polynesian Languages)

8. அமெரிக்க - இந்திய மொழிகள் (Amarico-Indian Languages)

9. ஆஸ்திரோ - ஆசிய மொழிகள் (Austro-Asiatic Languages)

10. பாப்பன் மொழிகள் (Paupan languages) எனவும்,

ஜப்பான் (Japan), பாஸ்க் மொழிகள் (Basque Languages) ஆகிய மொழிகளைத் தனி மொழிகளாகவும் கருதும் இன்றைய ஆய்வுகள் உள்ளன.

(இந்தோ - ஆரியர்களின் புலம் பெயர்வு விளக்கப்படம் மு.பொ.ஆ.4000 முதல் 1000 வரை)

இந்தோ - ஐரோப்பிய மொழிகள்

இந்தோ - ஆரிய மொழிகள் குறித்து அறியும்முன்னர், அதன் மூலமான இந்தோ - ஐரோப்பிய மொழி குறித்தும், அதன் பெயர் விளக்கத்தையும் காணலாம். இந்தோ - ஐரோப்பிய மொழிகளும், மக்களும் யார் என்ற கேள்வி முக்கியமானது. ஒருவேளை, அது நமது திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடுவதற்கு உதவாமல் இருக்கமுடியாது; தேடுதலின் அடிப்படைகளை உருவாக்கிக்கொள்ள அடித்தளமாக அமைவதைத் தவிர்க்கமுடியாதும் இருக்கலாம்.

மு.பொ.ஆ.4000 அளவில், யூரல் மலைப் பகுதியில் இந்தோ - ஐரோப்பிய மக்கள் வாழ்ந்து வந்தனர் என்றும், அங்கிருந்து இம்மக்கள் பலவேறு காலகட்டங்களில் பல்வேறு வழியாக பல்வேறு இடங்களுக்குச் சென்று வாழத் தலைப்பட்டனர். அவ்வாறு குடியேறிய மக்களின் மொழியே, பின்னர் படிப்படியாகப் பல்வேறு மாற்றங்களை அடைந்து, இன்று இந்தோ - ஐரோப்பிய மொழிகள் என பல்வேறு மொழிகளாக உருப்பெற்றன என மொழியறிஞர்களின் கருத்தை எடுத்துகாட்டுவார் ச. அகத்தியலிங்கம்.*1

‘இந்தோ - ஐரோப்பியன்’ என்ற சொல், ஒரு இனமொழிகளுக்கு உரிய பெயராக பொ.ஆ.18-ம் நூற்றாண்டில் சூட்டப்பட்டது. இச்சொல், இந்தியாவையும் ஐரோப்பாவையும் இணைத்துள்ளதால், இவ்விரு இடங்களிலும் பெருவாரியாகப் பேசப்படும் மொழிகளைச் சுட்டி நிற்கிறது. இது ஐஸ்லாண்டிக் மொழி பேசப்படும் ஐஸ்லாந்து முதல் அனைத்து ஐரோப்பா - ஆசியா உள்பட இந்தியாவின் கிழக்கெல்லையான அசாமி மொழி பேசப்படும் அசாம் மாநிலம் வரையும், தெற்கே இலங்கை, மாலத்தீவுகள் உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பில் பேசப்படும் ஒரு இனமொழிகளைக் குறிப்பதாகும். துவக்கத்தில், இம்மொழிக் குடும்பத்தை ஜெர்மானிய அறிஞர்கள் ‘இந்தோ - ஜெர்மானிய மொழிகள்’ என்றும் குறிப்பிட்டனர். மாக்ஸ் முல்லர் இதனை ‘ஆரியன் மொழிகள்’ எனக் குறிப்பிட்டார். யூரல் மக்கள் ஆசியா மைனர் பகுதியில் குடியேறிய பிறகு ஹிட்டடைட் மொழி உருவானது கொண்டும், அண்மைக் காலங்களில் ஹிட்டடைட் மொழி பற்றிய அறிவு வளர்ந்துவரும் நிலையில், ‘இந்தோ - ஹிட்டடைட் மொழிகள்’ என்றும் அழைக்கத் தலைப்பட்டுள்ளனர். உலகளவில் ‘இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம்’ என்பதே பரவலாகக் கையாளப்படுகிறது. ஒரு மொழியாகத் தொடங்கிய இம்மொழி, இன்று 11 பெரும் பிரிவுகளாகவும், 140-க்கும் அதிகமான மொழிகளாகவும் கிளை பிரிந்து வளர்ந்து காட்சியளிக்கிறது. கிரீக், லத்தீன், லத்தீனின் பேச்சு வழக்கில் இருந்து உருவான ப்ரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், ருமேனியன், இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்யன், ஸ்லாவிக், பால்டோ, சிலாவிக், அல்பேனியன், ஆர்மீனியன், இந்தியாவின் வடமொழி மற்றும் இவற்றின் கிளைமொழிகள் இம்மொழிக் குடும்பத்தில் அடங்கும்.

இந்தோ - ஐரோப்பிய மொழிகள், ‘மேற்கு இந்தோ - ஐரோப்பிய மொழிகள்’ என்றும் ‘கிழக்கு இந்தோ - ஐரோப்பிய மொழிகள்’ என்றும் இரு பிரிவாகப் பகுத்து அறியப்படுகின்றன. மேற்கு மொழிகளை ‘கொன்றம் மொழிகள்’ என்றும் கிழக்கு மொழிகளை ‘சதம் மொழிகள்’ என்றும் குறிக்கப்படுவதும் உண்டு. நூறு என்ற பொருளில் உள்ள அடிப்படைச் சொல்லின் முதல் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு சதம் மொழிகளும் (சதம் = நூறு), ‘க’கரம் அல்லது அதன் உரசொலியாக உள்ள ‘ஹ’கரத்தை கொண்ட மொழிகள் கொன்றம் மொழிகள் என்றும் பகுக்கப்படுகின்றன. ‘இந்தோ - ஆரிய மொழிகள்’ சதம் மொழிகள் என்ற கிழக்கு இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் அடங்கும்.

இந்தோ - இரானிய மொழிகள்

இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில், சதம் பிரிவான கிழக்குப் பிரிவில் ஒரு பெரும் உட்பிரிவு ‘இந்தோ - இரானிய மொழிகளாகும்’. இம்மொழிக் குடும்பம் இரு கிளைகளைக் கொண்டது. அவை - 1. இரானியன் மொழிகள், 2. இந்தோ - ஆரியன் மொழிகள் என்பன. மு.பொ.ஆ.2500 ஆண்டுகளை ஒட்டிய காலப்பகுதியில், இன்றைய இரான் பகுதியில் வந்து குடியேறிய இந்தோ - ஐரோப்பிய மக்களின் மொழியிலிருந்து, குடியேறிய மக்களால் தோன்றிய மொழியே இந்தோ - இரானிய மொழி என அழைக்கப்படுகிறது.*2 இந்தோ - ஆரிய மொழிகள் மற்றும் இரானிய மொழிகள் பற்றி ‘இவற்றுள் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு மற்றொன்று பற்றித் தெரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது’ என்ற பரோவின் கூற்று, இவ்விரு இனமொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைக்கான காரணங்களை விளக்குகிறது. மிகுந்த ஒற்றுமை கொண்டுள்ள இவ்விரு மொழிகளும், பிரிவதற்கு முன்னால் ஒன்றாக இருந்ததால்தான் இவை இரண்டையும் இணைத்து இந்தோ - இரானிய மொழிகள் என மொழியிலாளர் குறிக்கின்றனர்.

இரானிய மொழி - அவஸ்தன் மொழி – ரிக் வேத மொழி

இரானிய மொழி - அவஸ்தன் மொழி – ரிக் வேத மொழி ஆகியவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகள் கவனிக்கத்தக்கதாக உள்ளன. ரிக் வேத மொழிக்கும், பழைய இரானிய மொழியெனக் கொள்ளப்படும் பழைய பெர்சியன் மொழிக்கும், மு.பொ.ஆ.6-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சொராஸ்டியம் சமயத் தத்துவத்தைக் கூறும் அவஸ்தன் நூலில் உள்ள மொழிக்கும், இக்காரணத்தாலேயே இது அவஸ்தன் மொழி என குறிக்கப்படுகிறது. வேத மொழியைப் புரிந்துகொள்ள அவஸ்தனும், பழைய பெர்சியனும் இன்றியமையாத உதவியைப் புரிந்துள்ளன. மொழி அமைப்பிலும் இம்மூன்றுக்கும் உள்ள ஒற்றுமையை மொழியியலாளர்கள் கண்டுள்ளனர். ஆர்யா என்ற சொல் பழைய இந்தோ - இரானிய மொழியிலேயே உள்ளது எனக் கருதலாம் எனவும், ரிக் மொழியிலும், அவஸ்தன் மொழியிலும் ஆரியா என்ற சொல் இவ்விரு இனக்குழுவையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் எடுத்துக்காட்டுவார் காடகே (Gatage) என்ற மொழியியலாளர்.*3

இரானிய - ஆரிய மொழிகளின் ஒற்றுமைக் கூறுகள்

சதம் மொழிகளில் ஒன்றான இந்தோ - ஆரிய மொழிக்கும், இரானிய மொழிகளையும் இணைக்கும் வகையில், 57–க்கும் அதிகமான ஒற்றுமைக்கூறுகள் உள்ளன என்று மொழியியல் வல்லுநர் பெனெ (J.Y.Payne) தெரிவிக்கிறார்.*4 இம்மொழிகள் காட்டும் ஒற்றுமையும் தொடர்பும் வேறு எந்த இந்தோ–ஐரோப்பிய மொழிகளிலும் காணமுடியாதவை என்று சொற்களஞ்சியத்தை அடிப்படையாகக் கொண்டு பரோ காட்டுவார்.

இந்தோ - இரானிய மொழிகள் என ஒன்றாக இருந்த மொழிதான், நாளடைவில் இரானிய மொழிகள் என்றும் இந்தோ - ஆரிய மொழிகள் என்றும் பிரிந்தன. மு.பொ.ஆ.2000-1500-ம் ஆண்டுகளை ஒட்டிய காலகட்டத்தில், இந்தோ-இரானிய மொழி பேசிய மக்களில் ஒரு பிரிவினர், இரானிய நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து இந்திய நாட்டில் குடியேறியதால்தான், ஏற்கெனவே மாறுபட்ட கிளை மொழிகளாக இருந்தவை தனித்தனி மொழியாகத் வளரத் தலைப்பட்டன.*5

இந்தோ - ஆரிய மொழியும் கிரேக்க மொழியும்

இந்தோ - ஆரிய மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் 27 ஒற்றுமைகள் உள்ளன என்றும், சிவாலிக் (Syvalic) மொழிக்கும், இந்தோ - ஆரிய மொழிக்கும் 24 தொடர்புகள் உள்ளன என்றும், பால்டிக் மொழிகளுக்கும் (Baltic) இந்தோ - ஆரிய மொழிக்கும் 22 ஒற்றுமைகள் உள்ளன எனவும் பெனெ (J.Y.Payne) சான்று காட்டுகிறார்.*6

இரானிய மொழிக் குடும்ப மொழிகள் குறித்த அறிமுக அளவில் அறிமுற்பட்டால்…

இரானிய மொழி, மேற்கு மற்றும் கிழக்கு என பெரிய பிரிவாகவும், தென்மேற்கு வடமேற்கு என்று மேற்குப் பிரிவு இரு கிளையாகவும், தென்கிழக்கு வடகிழக்கு என கிழக்குப் பிரிவு இரு கிளையாகவும் மொத்தம் நான்கு கிளைகளாகப் பகுத்து அறியப்படுகிறது. தென்மேற்குப் கிளையில் இரான் நாட்டு பெர்சியன் மற்றும் லூரி, ஆப்காஸ்தானின் தாரி, ரஷ்ய நாட்டின் தாஜிகி போன்ற மொழிகளும், வடமேற்கு கிளையில் துருக்கி, இரான், இராக், சிரியா நாடுகளின் குர்டிஷ் மொழியும், இரான், பாகிஸ்தானில் பேசப்படும் பலோச்சி மொழியும், துருக்கியில் பேசப்படும் சாசா மொழியும் அடங்கும். தென்கிழக்கு கிளையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பேசப்படும் பஷ்டோ மொழியும், பலூச்சி மொழியும், வடகிழக்கு கிளையில் ரஷ்யாவின் ஓசெத்தெவும், காக்கசஸ் மொழியும் அடங்கும்.

இந்தோ - இரானிய மொழிகளின் பண்புகள்

இந்தோ - இரானிய மொழிகளின் பண்புகள் குறித்து ச.அகத்தியலிங்கம் அவர்கள் தொகுத்துக் கூறுவது, ஆரிய மொழி குறித்த ஐயப்பாடான கூறுகளை விளக்கிக்கொள்ள உதவும். ‘கி.மு.1500-ஐ ஒட்டி, இந்திய நாட்டின் மேற்குப் பகுதி வழியாக வந்த ஆரியர்கள், வட இந்தியாவில் மேற்குப் பகுதியைச் சார்ந்த பஞ்சாப் மாகாணத்தில் காலடி வைத்து நுழைந்தனர். இரானிய நாட்டில் சில காலம் உறைந்து பின்னர் வந்த நிலையில், இந்தோ - இரானிய மொழிப் பண்புகள் பலவற்றைக் கொண்டே இம்மொழி இருந்தமை காணலாம்’. அவர் மேலும் எடுத்துக்காட்டும்பொழுது, ‘சம்ஸ்கிருத மொழியிலும், அவஸ்தன், பழைய பெர்சியன் மொழியிலும் காணப்படும் ஆர்யா (Arya), ஐர்யா (Airya) போன்ற பல சொற்கள் இப்பண்பினைக் காட்டும் என்பர். இதனால்தான், சம்ஸ்கிருத மொழியில் மிகப்பழைமையானவையாகக் கருதப்படும் ரிக் வேதம் போன்றவற்றில், இந்தோ - இரானிய மொழிப் பண்புகள் பல காணப்படுகின்றன’ என்றும், ‘ரிக் வேதம் பற்றிக் கூறும்பொது, சில அறிஞர்கள் அதன்கண் உள்ள 6-வது பகுதி இந்தோ - ஆரிய மக்கள் இந்நாடு வருவதற்கு முன்பே ஆக்கப்பட்டுவிட்டது எனக் கருதுவர். இதன்கண் காணப்படும் இரானியப் பண்புகள்தான் இதற்குக் காரணம் எனக் கருதலாம் என்பர்’. இதனை மறுக்கும் கீத் அவர்களின் கூற்றான, ‘இது உண்மை எனக் கருத முடியாது சில பழைய பண்புகள் உள்ளனவேயன்றி அவை அங்கு ஆக்கப்பட்டன எனக் கூறுவதற்கில்லை’ என்பதையும் எடுத்தளிக்கிறார்.*7

இந்தோ - ஆரிய மொழியில் தமிழ் என்ற திராவிடப் பண்புக் கூறுகள்

இந்தோ - இரானிய மொழிக்கூறுகளும், இந்தோ - ஆரிய மொழிக்கூறுகளும் ஒற்றுமை கொண்டிருப்பது போலவே, இந்தோ - ஆரிய மொழியில் தமிழான திராவிடப் பண்புக் கூறுகள், இம்மொழி இந்தியப் பகுதியில் காலூன்றியபொழுது கலந்தன. திராவிட மொழிகள் அல்லது அப்பொழுது இந்திய நாட்டில் வாழ்ந்த மொழிகளின் தாக்கத்தால் நாமடி ஒலிகளைப் (Retroflex Consonat = இதனை ‘வளைநா ஒலிகள்’ எனவும் குறிப்பர்) பெற்று, புதிய வடிவத்தைக் கண்டது இந்தியா ஆரியம். நாமடி ஒலிகள், திராவிட மொழிகளில் காணப்படும் சிறப்புப் பண்பு கொண்ட ஒலியாகும். இவ்வொலிகளை மிக அதிகமாகப் பெற்று, பிற இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் இருந்து மாறுபட்டுத் தன்னை ஒரு இந்திய மொழியாக்கிக் கொண்டது.*8

எந்த ஒரு மொழியும், அதனைப் பேசும் மக்கள் கடந்துவந்த, தற்பொழுது நிலைபெற்ற இடத்தில் தனக்கு முன் அங்கு வழக்கில் உள்ள மொழிக்கூறுகளை ஏற்றே நிலைபெறும் என்ற மொழி வளர்ச்சியின் பொது விதியின்படி, இந்திய ஆரியம், திராவிடத்தின் சிறப்புப் பண்புக்கூறான நாமடி ஒலியன்களைப் பெற்றே வளர்ந்துள்ளது என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. மொழித் தொல்லியலின் அடிப்படையில், இது மு.பொ.ஆ. 1500-க்குப் பிறகு நிகழ்ந்தது என்பதுதான் முக்கியமானது.

இங்கு உலக மொழிகளின் காலகட்டம் குறித்த ஆய்வுகள் குறித்து அறிய முற்படும்பொழுது, ஹோமா எரக்டஸ் மற்றும் ஹோமோ நியாண்டர்தலீசிஸ் (Homo Eractus and Homo Neandarthelesis) இன மக்கள், மொழி என்ற ஒன்றை அறிந்திருக்கவில்லை என்பர். ஹோமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ் (Homo Sapiens Sapiens) இனம்தான், மொழிக்கூறுகளைக் கொண்ட ஒலிகளை எழுப்பி செய்திகளையோ, கருத்துகளையோ பரிமாறத் துவங்கியது என்பர். ஹோமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ் இனத்தை தற்கால உருவ மனிதன் என்று குறிப்பிடலாம். இவனை ‘Anatomically Modern Human (AMH)’, அதாவது ‘AMH மனிதன்’ என்றும் குறிப்பர். ‘தற்கால மனிதன்’ என்பது தற்கால உருவ மனிதனுக்கு மாற்றாகவும் தமிழில் ஆளப்படுகிறது.

(யூரல் மலைப் பகுதியும் இந்தியாவும்)

ஒருபொதுக் கருத்துப்போக்கில், தற்காலத்து மனித இனம் இன்றைக்கு 1,40,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவினான் என்பது மானுடவியலாளர்களாலும், தொல்லியலாளர்களாலும் ஏற்கப்பட்டு வருகிறது. இம்மனிதன் பல்வேறு பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்து நிலையாக வாழத் தலைப்பட்ட காலகட்டம் குறித்து சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, காலகட்டம் கீழ்க்கண்டவாறு கணிக்கப்பட்டுள்ளது.

தற்கால மனிதன், தன் முன்னோடி இன மக்களை, இன்றைக்கு 50,000 முதல் 30,000 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் பூண்டோடு அழித்தான் (exterminated) என்பர்.

தற்கால மனிதனின் மொழி, குறிப்பாக அவனது தாய்மொழி இன்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருக்கொண்டது என்றும், தற்கால மனிதன் ஆப்பிரிக்காவை விட்டு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்வதற்குத் தென்னிந்தியா முக்கியக் காரணியாக இருந்தது என்றும், தென்னிந்தியாவின் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கப்பல் தொழில்நுட்பத் தொல்லியல் மட்டுமே இதனை நிறுவுவதற்கு போதிய வலுவுடன் உள்ளது என்பர்.*9

இந்தப் புலப்பெயர்வு காலகட்டத்தின் பின்னணியில், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தோற்றம் பரவல் குறித்த காலகட்ட ஆய்வுகள் கீழ்க்கண்டவாறு உள்ளன.

மொழியிலாளர்கள் காட்டும் இக்காலகட்டங்களின் பின்னணியில், இந்தோ-ஆரிய மொழிகளைப் பற்றியும், அம்மொழி பேசும் மக்களையும் பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் ஒரு பருந்துப்பார்வையை கொள்வோம். அதற்குமுன், மேலே குறிப்பிட்ட காலகட்டங்களில், நான்கு முக்கியக் காலகட்டத்தை நினைவில் கொள்வோம். அவை:

  1. தற்கால மனிதனின் தாய்மொழி தோற்றம் : 50,000 ஆண்டுகளுக்கு முன்
  2. இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் தோற்றம் : மு.பொ.ஆ 5000 - 4000-க்குப் பின்
  3. இந்தோ - இரானிய மொழிகளின் தோற்றம் : மு.பொ.ஆ.2500-க்குப் பின்
  4. இந்தோ - ஆரிய மொழி தோற்றம் : மு.பொ.ஆ.1500-க்குப் பின்.

(தொடரும்)

மேற்கோள் எண் விளக்கம்

1. முனைவர் ச.அகத்தியலிங்கம், இந்திய மொழிகள்-1, 2000, ப.52. 

2. Comrie Bernard, 1987, The World’s Major Languages, Groomhelm, London, p.519. 

3. Gatage, A.M, Historical Linguistic and Indo-Aryan Languages, University of Bombay, Bombay, 1962.  

4.  J.Y.Payne, இரானிய மொழிபற்றிய கட்டுரையை முன்குறிப்பிட்ட Comrie Bernard, 1987, The World’s Major Languages, Groomhelm, London, நூலில் காண்க.

5. முனைவர் ச.அகத்தியலிங்கம், இந்திய மொழிகள்-1, 2000, ப.61.

6. J.Y.Payne, முன்குறிப்பிட்ட கட்டுரை.

7. முனைவர் ச.அகத்தியலிங்கம், இந்திய மொழிகள்-1, 2000, ப.64.

8. மேலது. ப.65.

9. P. Ramanathan, Hypothesis of Proto-Dravidian Province of Indus Civilization, article_new in, “Indus Civilization and Tamil Language, Ed, N.Marxia Gandhi, Department of Archaeology, Government of Tamil Nadu, 2009, pp.82-83.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com