அத்தியாயம் 55 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 48

ஆரிய சமூகத்துள் பல குழுக்கள் இருந்ததும், அவர்கள் ரிக் காலத்திலேயே தம்முள் பகைகொண்டு மோதிக்கொண்டிருந்தார்கள் என்பதும் வெளிப்படையானது.

திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

கடந்த ஐந்து அத்தியாயங்கள், திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகம் வடஇந்தியாவில் மட்டும் இருந்ததோ என்ற ஐயப்பாட்டை வாசகர்கள் / நண்பர்கள் மத்தியில் எழுப்பியுள்ளதை அறிகிறேன். இப்பகுதியின் முடிவுவரை காத்திருங்கள் என அவர்களுக்குப் பதில் அளித்ததையே இங்கும் பதிவிடுகிறேன். சங்க இலக்கியத்துக்கு முற்பட்ட இலக்கிய ஆதாரம் வடஇந்தியப் பகுதியில் வேத இலக்கியமாக கிடைப்பதாலும், காலவரிசைக்கிரமத்துக்கு உதவுவதாக உள்ளதாலும் வடஇந்தியப் பகுதி ஆதாரங்களை முதலில் ஒருங்குபடுத்திக்கொள்ள முனைந்துள்ளேன்.

*

வேத இலக்கியத்தை நாம் அணுகி, சரியான புரிதலை அடைய வேண்டியவர்களாக உள்ளோம். அதுவே இன்று மொழிவழி இன அடையாளம் இழந்து, பண்பாட்டு அடையாளத்தில் கரைந்துபோன வட இந்திய திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தை அடையாளப்படுத்தும் காரணியாகிறது. இதன் வழி இனி பயணிப்போம்.

வேத இலக்கியம் என்பதன் வரையறை

வேதங்கள் என்பது மூன்றா நான்கா என்ற விவாதங்களுக்குப் பிறகு நான்கு என வரையறுத்தபின், பொதுவாக வேதம் என்பது ரிக், யசூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கை மட்டும் குறித்து நிற்கும் என்று நினைத்தால் அது அறியாமையே. இந்த நான்கு வேதங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் மற்றும் சூத்திரங்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வேதங்கள் என்றே அகன்ற பொருளில் கொள்ளப்படும்*1. இவற்றுள் சில பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்களில், நான்கு வேதங்களில் ஒன்றின் தொடர்பைக் காணமுடியும். இதனால், ரிக் பிராமணம், ரிக் ஆரண்யம், ரிக் உபநிடதம் என அது விரிவடையும் தொடர்பை கொள்கிறது. பிறகு, அந்நிலையே வேதம் என்பதன் பொருளாகிறது. இதனால், வேதம் நான்கு என்ற பொதுப்புத்தியில் பதிந்த வரையறைக்கு அப்பால், கட்டமைக்கப்பட்ட வேத நூல்களின் இயக்கம், பொதுத்தளத்தில் பிற்கால உரைநூல்களிலும், உரைக்கு உரைநூல்களான பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்களிலும் விரிந்துள்ளது என்பதைத் தெளிந்து தொடர்வோம்.

வேத காலத்தின் வரையறை

பொதுத்தளத்தில் விரிந்த வேத இலக்கியத்தின் வரையறையைக் கொண்டுதான், வேத காலத்தின் அறிவியல்பூர்வமான வரையறையையும் அதன் உட்பகுப்புகளையும் பற்றி பார்க்கவேண்டி உள்ளது. வேத காலம் என்ற பதம், நான்கு வேதங்களான ரிக், சாம, யசூர், அதர்வணம் எழுதப்பட்ட காலகட்டத்தைக் குறிப்பது என்று பொருள் அமைந்தாலும், அது உண்மையல்ல. அதற்குப்பின் தோன்றிய பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் மற்றும் சூத்திரங்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதப்பட்ட காலகட்டம் முழுவதும் வேத காலமாகக் கொள்ளப்படும். இதனால், வேதகாலம் என்பது மு.பொ.ஆ.1500 முதல் மு.பொ.ஆ.600 வரையிலான 900 ஆண்டுகள் என கணக்கில் கொள்வர்.

வேத காலத்தை இரு பெரும் பிரிவாகப் பிரிப்பர். அது - 1. முன் வேத காலம், 2. பின் வேத காலம். முன் வேத காலத்தை ரிக் வேதம் மட்டும் எழுதப்பட்ட காலம் என்றும், அது மு.பொ.ஆ.1500 முதல் 1000 ஆண்டுகள் வரையிலானது என்றும் குறிப்பிடுவர். சிலர் இக்காலகட்டத்தை மு.பொ.ஆ.1200 முதல் 1000 ஆண்டுகள் வரை எனக் கொள்வர்*2. பின் வேத காலத்தை ரிக் நீங்கிய, சாமம், யசூர், அதர்வணம் ஆகிய பிற மூன்று வேதங்களும், உடன், பல்வேறு பிராமணங்கள், ஆரண்யங்கள், சூத்திரங்கள், மற்றும் உபநிடதங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதப்பட்ட காலம் என்பர். அது, மு.பொ.ஆ.1000 முதல் 600 வரையிலான காலகட்டம் ஆகும். பின் வேத காலத்தின் காலவரையறையில் ஆசிரியர்களிடையே முரண்பாடுகள் இல்லை. ஆனால், பிராமணங்கள், ஆரண்யங்கள், சூத்திரங்கள், மற்றும் உபநிடதங்கள் பெயரில் உள்ள எல்லா ஆக்கங்களும் இக்காலகட்டத்தில் அடங்குபவை அல்ல. அவை, அவ்வப்பெயர்களில் பொ.ஆ.1000 வரையிலும்கூட எழுதப்பட்டுள்ளன. பிராமணங்களில் முக்கியமான பிராமணங்கள் மு.பொ.ஆ.500-க்கும் மு.பொ.ஆ.200-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டன என்றும், வடமொழி இலக்கிய, இலக்கண ஆசிரியர்கள் சிலர் கருதுவர். போலவே, பிராணங்களுக்குப் பின், ஆரண்யங்கள்; ஆரண்யங்களுக்குப் பின், சூத்திரங்கள்; சூத்திரங்களுக்குப் பின் உபநிடதங்கள் என வரிசைக்கிரமமாக படைப்புகள் எழுந்தன என்பதும் ஒரு பொது வரையறையே அன்றி முற்றானது அல்ல என்றும், அவை காலவரிசையில் மாறிமாறி அமைவதாக உள்ளன என்றும் காட்டுவர்.

இவ்விரு பெரும்பிரிவு எதன் அடிப்படையில் பகுக்கப்பட்டது என ஆசிரியர்கள் வெளிப்படையாகத் தெளிவாக்குவதில்லை. இதற்கு, பாடுமொழியின் வேறுபாடு, பாடுதொணியின் வேறுபாடு, பாடுபொருளின் வேறுபாடு என சில காரணிகள் அடிப்படையாக அமைந்திருப்பதை உணரமுடிகிறது. சென்ற ஐந்து அத்தியாயங்களில் நாம் கண்ட சில காலப்பகுப்புகளை இதனுடன் இணைத்துக் காண வேண்டிய அவசியம் உள்ளது. அவை -

1. பழைய இந்தோ - ஆரிய மொழிக் காலம் (மு.பொ.ஆ.1500 -  மு.பொ.ஆ.600)

2. ஆரியர்கள் குடியேற்றக் காலங்கள் -  

கட்டம்: 1. வடமேற்குப் பகுதி – ரிக் சப்த சிந்துப் பகுதி.

கட்டம்: 2. குரு, பாஞ்சாலம்

கட்டம்: 3. வாரணாசி, கோசலம் (குரு, பாஞ்சாலத்தில் இருந்தும், மறுபடி வடமேற்கில் இருந்து பெயர்ந்தவர்கள்)

கட்டம்: 4 வடஇந்தியா, இமயமலைச் சார்புப் பகுதிகள், மால்வா, மகத நாடுகள். (குரு, பாஞ்சாலத்தில் இருந்தும், மறுபடி வடமேற்கில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் பெயர்ந்தவர்கள் மற்றும் விராதயர்கள்).

கட்டம்: 5. தென்னிந்தியா (விந்தியத்துக்குக் கீழ்).

கட்டம்: 6. வங்கம் மற்றும் ஒரியப் பகுதி.

இவற்றுள், முதல் நான்கு குடியேற்றக் கட்ட காலங்களில், வேதங்கள் எனக் குறிப்பிடும் முன் வேத கால நூல்கள் மற்றும் பின் வேத கால நூல்கள் அனைத்தும் எழுதப்பட்டன. இக்காலகட்டத்தில், தென்னிந்தியா, வங்கம், மற்றும் ஒரியப் பகுதி நீக்கலாக, பிற பண்டைய இந்தியப் பகுதிகள் முழுவதும் இப்படைப்புகள் சமய ஆக்கங்களாகப் பரவின. இந்த வகையில், இந்த ஆக்கங்கள் தாம் பரவிய இடத்தின் தாக்கங்களையும், மரபுகளையும் ஏற்றுக்கொண்டு தம் வாழ்வியலுக்கான அடிப்படைகளையும் நெறிமுறைகளையும் தங்கள் ஆரிய மரபு சார்ந்து உருவாக்கிக்கொண்டன. இது, ஐரோப்பிய ஆரியத்துக்கு மாறான அல்லது சிறிதும் தொடர்பற்ற இந்திய ஆரிய சமயமாக வளர்ந்தது. இந்திய ஆரிய சமயம், பிராமணியம் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்திய ஆரிய சமயம், சிலகாலம் உணவு உற்பத்தி சாராத தொழிலில் இருக்கும் வரை, குறிப்பாக வேளாண் தொழிலையும் நில உடமையையும் கைக்கொள்ளும் வரை பிராமணியத்தைத் தழுவியர்களைத் தம்முள் ஏற்றுக்கொண்டது. அதன்மூலம் வெகுவாக வளர்ந்தது. இது, பொ.ஆ.400-500 வரையில் தொடர்ந்தது. பிறகு பிராமணியம் பிறப்பின் அடைப்படையில் ஆனது.

வடமேற்கில் இருந்து குரு, பாஞ்சாலப் பகுதியில் ஏற்படுத்திய முதல் குடியேற்றக் காலகட்டம் முதலே, மேய்த்தல் தொழிலை மெள்ள மெள்ள கைவிட்டு, உணவு உற்பத்தி சார்ந்த குடிகளாக இம்மக்கள் மாறத் தொடங்கினர். குறிப்பாக, உழுவித்து உண்ணும் குடிகளாக மாறத் தொடங்கினார்கள். உழுதுண்ணும் குடிகளாக இவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை. மு.பொ.ஆ.4000-ல், யூரல் மலைப் பகுதியில் துவங்கி, மேய்ச்சல் நிலம் தேடி பல பகுதிகளுக்குப் ஸ்டெப்பி பகுதி வரை பரவி, இரானில் தங்கி மேலும் கிழக்கு நோக்கிய பயணத்தில் மேலும் 2500 ஆண்டுகள் செலவழித்து, மு.பொ.ஆ.1500 அளவில் வடமேற்கு இந்தியாவை அடைந்து, சப்த சிந்துப் பகுதியில் தம் கடைசி தொழுவத்தை அமைத்தனர் என வரலாற்றுப் போக்கினைக் கொண்டு நிறுவலாம். இக்காலகட்டத்துக்குப் பிறகு, தொழுவம் என்பது குழுவின் மந்தையை மேய்த்தலுக்குப் பிறகு குவிக்கும் இடம் என்பது மாறி, வீட்டில் பின்பகுதியில் குடும்பத்தினரின் அன்றாடத் தேவைகளை வழங்கும் பசுக்களைக் கட்டும் இடம் என்ற பொருளில் ஆனது.

இந்த இடப்பெயர்வுக்கு முன்னரே, இவர்கள் தங்களை நான்கு பிரிவு தொழில் முனைவோராக பகுத்துக்கொண்டிருந்தனர். ரிக்கில் பிற்காலப் பாடல்களைக் கொண்ட 10-வது மண்டலத்தில் புருச சூக்தம் என்ற ஒரு இடத்தில் மட்டும் (ரிக்.10.-90-2), வர்ணம் பற்றிய குறிப்பு இருந்தாலும், அது அன்றைய அவர்களது சமுதாய அமைப்பை புரிந்துகொள்ள உதவுகிறது. அதேசமயத்தில், முதல் ஒன்பது மண்டலங்களில் வர்ணம் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்பதையும் நினைவில் கொள்வோம்.

புருச சூக்தத்தின் இந்த வரிகளுக்கு “இந்தப் புருசரில், முகம் பிராமணன், இரு கைகளும் சத்திரியர், அவருடைய தொடை வைசியன், அவருடைய கால்களில் இருந்து சூத்திரன் தோன்றினான்” எனப் பொதுவாகப் பொருள்கொள்ளப்படுகிறது. ம.ரா.ஜம்புநாதன், “பிராமணன் அவன் வாயாய் இருந்தான். அவனுடைய கைகளில் இருந்து ரஜன்யன் கற்பிக்கப்பட்டான். அவனுடைய வாமங்கள் வைசியனாயிற்று. அவனுடைய பாதங்களில் இருந்து ஏனையோர் பிறந்தனர்” என மொழிபெயர்ப்பார்*3. ஆங்கிலத்தில், “The Brahaman was his mouth, of both his arms was the Rajayas made. His thighs became the Vaisyas, from his feet the Sudra was produced” என்று கிரிஃபித் (RT.Griffith) மொழி பெயர்ப்பார். தற்பொழுது வழக்கில் இருக்கும் பொருள் விளக்கங்களின் அடிப்படையில், இதனில் குறிப்பிடப்படுவோரை கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்.

1. புரோகிதர் - தங்கள் மூத்தோரை வேண்ட, தங்கள் கடவுளரை வேண்ட, அதற்காக கிரியைகளைப் புரிய - அதனால், குரு அல்லது முதன்மை இடத்தைப் பெற்றனர். கல்வியும் கேள்வியும் இவர்கள் உடமையாக இருந்தது.

2. சத்ரியர் - இடப்பெயர்வின்போது தங்களின் கால்நடை முதலான உடைமைகளைப் பாதுகாப்புக்குத் தம்மை வித்திட்டுக்கொண்டவர்கள்.

3. வைசியர் - மேய்த்தல் சமூகத்தின் பால், நெய், தயிர் போன்றவற்றின் உபரி உற்பத்தியை தம் சமூகத்துக்குள்ளும், அண்டை சமூகத்துக்குள்ளும் பண்டமாற்றம் செய்த வணிகர். பொதுவில், இவர்கள் பங்களிப்பு குறைவு என்பதால், இவர்கள் எண்ணிக்கையும் குறைவே.

4. சூத்திரர் - வேலையாட்கள். தொடர்ச்சியான இடப்பெயர்ச்சி காரணமாக, மேலே குறிப்பிட்டபடி 2500 ஆண்டுகளுக்கும் மேலான இடப்பெயர்ச்சி காரணமாக, தொழுவம் அமைப்பது, பிரிப்பது, குடியிருப்புகளை அமைப்பது, பிரிப்பது, வண்டி ஓட்டுவது, புரோகிதருக்கு காணிக்கையாக்கிய கால்நடைகளை மேய்ப்பது என சமூகத்துக்குத் தேவையான பணிகளைச் செய்பவர்களாக விளங்கியோர்.

இந்த நான்கு பிரிவும், துவக்கம் முதலே பிறப்பின் அடிப்படையில் இருந்ததா எனத் தெரியவில்லை. அவை சாதியாகக் கெட்டிப்பட்டிருந்ததா எனவும் தெரியவில்லை. ரிக்கை சான்றாகக் கொண்டால், குருமார்களே, போர்புரியும் சத்திரியராகவும் இருந்துள்ளதை தெளியமுடிகிறது. உதாரணம் - வசிட்டர், விசுவாமித்திரர், பரத்வாஜர் போன்றோர் மதகுருமார்கள் மட்டுமல்லாமல், படை நடத்திச் சென்ற போர்வீரர்களாகவும் இருந்தனர். இதனை ஆரிய இனக் குழுக்களுக்குள் நடந்த “பத்து மன்னர்கள் யுத்தம்” தெளிவாகக் காட்டுகிறது.

இது, வர்ணப் பாகுபாடு என்பது பிறப்பின் அடிப்படையில் துவக்கத்தில் இல்லை என்பதை சுட்டுகிறது. கல்வி கேள்வியில் சிறந்தோர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு புரோகிதர் ஆயினர்; உடல் வலிமையிலும், ஆயுதங்களைக் கையாள்வதிலும் தேர்ச்சி பெற்றோர் சத்திரியராக சமூகத்தால் தேர்வாயினர் எனவும், பண்டமாற்றும் தொழிலில் தேர்ச்சியுடையோர் வைசியராகத் தேர்வாயினர். உடல் உழைப்பிலும் சிறந்தவர் அல்லது தம்மால் ஆகும் உடலுழைப்பைச் செலுத்துவோர் சூத்திரராக சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்டனர். சூத்திரர்களே, சமூகத்தில் எண்ணிக்கையில் மிகுதியானவர்கள். சூத்திரர்கள், போர்க்காலங்களில் ஆயுதம் ஏந்திப் போர் புரிபவர்களாகவும் இருந்தனர். ஆனால், அவர்கள் சத்தியராகக் கருதப்படவில்லை. குருமார்களான வசிட்டர், விசுவாமித்திரர், பரத்வாஜர் போன்றோர் “பத்து மன்னர்கள் யுத்த”த்தில் படைக்குத் தலைமையேற்று போர் புரிந்தது, தம் கூட்டத்தைக் காத்தது என முக்கியப் பங்காற்றியிருந்தாலும், அவர்கள் சத்திரியராகக் கருதப்படவில்லை. இவ்வாறு, ஆரியர்கள் தம்முடைய ஒரு முழுமையான சமூகத்தைக் கட்டமைத்துள்ளனர்.

இங்கு, சமூகம் என்று குறிப்பிட்டாலும், அது ஒவ்வொரு குழுவுக்கும் பொருந்தும். ஆரிய சமூகத்துள் பல குழுக்கள் இருந்ததும், அவர்கள் ரிக் காலத்திலேயே தம்முள் பகைகொண்டு மோதிக்கொண்டிருந்தார்கள் என்பதும் வெளிப்படையானது. குழுவைக் காப்பவராக சத்திரியரில் இருந்து ஒருவர் தலைவராகத் தேர்வானார். அத்தலைவர், காலப்போக்கில் அரசர் நிலையை அடைந்தார். அவரை வழிநடத்துவோராக குருமார்கள் இருந்தனர். குருமார்கள் உள்ளிட்ட பிற மூன்று பிரிவினரும், தலைவனுக்கு/அரசனுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் குருமார்கள், குழுவில்/சமூகத்தில் செல்வாக்குக் கொண்டவர்களாக இருந்தனர். துவக்கத்தில், குருமார் பதவியோ, தலைவன் பதவியோ மரபு வழிப்பட்டதாக இருக்கவில்லை. இதனால், தலைவன் தேர்வில் குருமார்களின் பங்களிப்பும், குருமார்களின் தேர்வில் தலைவனின் பங்களிப்பும் முக்கியமானதாக விளங்கியது. இதனால் குழுவில்/சமூகத்தில் இவ்விரு முக்கியப் பதவியும் சமமாக இருந்தது. குருமார்கள், பொருளாதாரத் தேவைக்கு தலைவர்களை அண்டியே இருந்தனர். குல மரபு பொதுஉடைமை வாழ்வியல் நீடித்திருந்த வரை, இந்த அமைப்பு அதாவது பிறப்பு அடிப்படையிலான ஒன்றாக மாறவில்லை. குல மரபு வீழ்ச்சியடைந்து தனியுடைமை பெருகிய காலத்தில், இந்த அமைப்பு பிறப்பு அடிப்படையிலானதாக மாறுகிறது என்றும், மேய்த்தல் வாழ்வியலில், நிலவுடைமை அற்ற நாடோடி நிலையில் இருந்து, உணவு உற்பத்தி சார்ந்த, நிலவுடைமை பெற்ற, ஓரிட நிலை வாழ்க்கை வாழத் துவங்கியபொழுதுதான், இது பிறப்பின் அடிப்படையிலான சாதி அமைப்பாக வலிமை கொள்கிறது என, வரலாற்றுப்போக்கில் இருந்து மாற்றங்களை நிறுவிக்கொள்ளலாம்.

இம்மாற்றங்களின் துவக்ககால எச்சங்களை நாம் ரிக்கில் அடையாளம் காணமுடியும். இருந்தும், இரண்டாம் குடியேற்றக் காலமான குரு, பாஞ்சால குடியேற்றம் இதனை வளர்த்து, ஆரியர்கள் உணவு உற்பத்தி சார்ந்த சமூகமாக மாறிய பிற வடஇந்தியக் குடியேற்றக் காலகட்டங்களில் கெட்டிப்பட்டது. வேலையாட்களின் மிகுதியான தேவைப்பாடு, சூத்திரர்கள் தம் நிலையில் இருந்து மாற்றம் பெறுவதை நிராகரித்தது. அவர்களை நிலவுடைமைச் சமுதாயமாக மாறாமல் தடை செய்தது.

குப்தர் காலத்தில் நிலவிய பொருளாதார அமைப்பு, இந்நிலையினை மிகத்தெளிவாகக் காட்டுகிறது.

ஆரிய இனக் குழுக்களுள் முதலில் மூன்று வகைப்பட்ட பிரிவுகளே இருந்தனவென்றும், அவை - 1. சத்திரியர் என்ற யுத்தம் செய்வோர், இவர்கள் ரஜன்யா என்றும் குறிப்பிடப்பட்டனர். 2. குருமார்கள் என்ற பூசாரிகள். 3. பொதுமக்கள்*4. நான்காவது பிரிவான சூத்திரர்கள் பிற்காலத்தில் தோன்றுகின்றனர் என்றும், ஆரியர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட இனக்குழுக்களின் ஒன்றின் பெயரிலிருந்து அந்தச் சொல் பெறப்பட்டது என்றும் வரலாற்று ஆசிரியர் சிலர் கருதுகின்றனர்*5. இப்பிரிவில், நாம் பொதுவாக அறியும் வைசிய பிரிவு இல்லை. பொதுமக்களில் ஒருசாரார் பிற்காலத்தில் வணிகத்தில் சிறக்க, அவர்கள் தனிப்பிரிவாயினர் எனலாம். இதே காலகட்டத்தில், பொதுமக்கள் என்ற பிரிவு என்ன ஆயிற்று கேள்வி எழுப்ப வேண்டியவர்களாக உள்ளோம்.

சூத்திரர்களின் பெருக்கம், இவர்களுள் பொதுமக்களின் பணியான உணவு உற்பத்தி, உணவு தேடும் வேலையை செய்வதிலிருந்து விலகியிருக்கச் செய்தது எனலாம். இதனால், இவர்களுக்குள் இருந்த தொழில் செய்வோர் மறையத் தொடங்கினர் எனக் கருத முடிகிறது. பிற்காலத்தில், இங்கு ஆதியில் இருந்து ஆட்சி புரிந்த, இனக் குழுத் தலைவர்கள், அரசர்கள் ஆகியோரை தம் மரபுப்படி சத்திரியர் உரிமை அல்லது அந்தஸ்து வழங்கி அவர்களுக்கு அண்டியவர்களாகவும், அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் புரோகிதம் அல்லது மதச்சடங்குகளை செய்வோராகவும் மட்டும் மாறிய நிலையில், பிராமணிய-ஆரியர்கள் மட்டும் நிலைத்து குருமார்கள்/பூசாரிகள் என்ற பிரிவில் மட்டும் நிலைத்த நிலையைக் காணலாகிறது. இதன் காரணமாக, “மகன் கவிஞனாகவும், தந்தை மருத்துவராகவும், தாய் சோளம் அரைப்பவளாகவும்” இருந்த ஆதி குடும்ப அமைப்பை பிற்காலத்தில் காண முடிவதில்லை. இதனால், ரிக் வேத காலத்தில் தொழில்ரீதியான தரப் பிரிவுகள் எல்லா நேரமும் ஒன்றுபோல இருக்கவில்லை.

இந்த நிகழ்வுகளை ஒட்டிய வாழ்வியல் மாற்றங்களைத்தான், இந்தோ-இரானிய மொழியில் இருந்து வேத மொழி பிரிந்து செம்மை சம்ஸ்கிருத மொழி உருவாக்கம் வரையிலான இலக்கிய ஆக்கங்களின் பாடுபொருள் வேறுபாட்டிலும், மொழி வேறுபாட்டிலும் நாம் எதிரொலிக்கக் காண்கிறோம்.

(தொடரும்)

மேற்கோள் குறிப்பு

1. கா. கைலாசநாத குருக்கள், வடமொழி இலக்கிய வரலாறு, நர்மதா பதிப்பகம், சென்னை, 1981, ப.19.

2. பரோ. மு.கு.நூ. ப.35.

3. ரிக் வேதம், (மொ.பெ) ம.ர. ஜம்புநாதன், அலைகள் வெளியீட்டகம், 2004, ப.486-487.

4 (1). டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும், (தமிழில்), நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், 2006, ப.154,

4 (2). டி.என். ஜா, பண்டையக்கால இந்தியா ஒரு வரலாற்றுச் சித்திரம், (தமிழில்), பாரதி பதிப்பகம், சென்னை, 2011, ப.57.

5. மேலது இரண்டும் (4 (1), 4 (2) மற்றும், ராகுல சாங்கிருத்தியாயன், ரிக் வேத கால ஆரியர்கள், (தமிழில்), நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், 2008, ப.39.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com