அத்தியாயம் 53 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 46

சம்ஸ்கிருத மொழியில் இருந்து பிராகிருத மொழிகள் தோன்றவில்லை என்றும் பழைய இந்தோ -  ஆரிய பேச்சு மொழியில் இருந்துதான் இவை தோற்றம் கொண்டன

திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

முந்தைய அத்தியாயம் முழுவதும், இந்திய ஆரியர் யாவர் மற்றும் இந்திய ஆரியர் அல்லாதார் யாவர் என்ற முதற் கருதுகோளை முன்வைத்து நடத்திய தேடுதலாக அமைந்தது. அதில், ரிக் காலத்திலேயே ஆரியர் - திராவிடர் கலப்புக்கான உறுதியான சான்றுகள் ரிக்கில் அகச்சான்றாக கிடைத்துள்ளது குறித்து தெளியப்பட்டது. இங்கு இரண்டாவது கருதுகோளை முன்வைத்து தொடங்குவோம்.

2. ஆரிய மொழி பேசியோர் மற்றும் ஆரிய மொழி அல்லாத மொழிகளைப் பேசியோர் யாவர் என்கிற அடையாளம்

ஆரிய மொழியைப் பேசியோர் யாவர் என்பதில் அடையாளம் காண்பதில் மூன்று காலகட்டங்களைக் கணக்கில் கொள்ளவேண்டி உள்ளது. 1. ஆரியர் சிந்துப் பகுதி நுழைவுக்காலம்; 2. ரிக் படைப்புக் காலம், 3. ரிக்குக்குப் பிறகான காலம்.

  • ஆரியர் சிந்துப் பகுதி நுழைவுக்காலம்

ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்தது முதல் ரிக் படைப்புக்காலம் வரையிலான முதல் இரண்டு மூன்று நூற்றாண்டுகளை, (ஏறத்தாழ மு.பொ.ஆ. 1700 - 1500 அல்லது மு.பொ.ஆ.1500 - 1300 எனக் கொள்ளலாம்) ஆரியரின் சிந்துப் பகுதியின் நுழைவுக்காலம் எனலாம். இக்காலத்தில், இந்தோ - ஆரிய மொழியை ஆரிய இனத்தின் பல்வேறு குழுவினர் மட்டும் பேசினர் எனக் கொள்ளலாம். ரிக் காலத்தில் இந்தோ - ஆரிய மொழியே கிழக்கு, மேற்கு என கிளை மொழிகளைக் கொண்டிருந்தது என்ற மொழியியலாளர்களின் சான்றுப்படி, இந்தோ - ஆரியர் சிந்துப் பகுதியின் நுழைவுக் காலத்திலேயே பேச்சுவழக்கில் கிளை மொழிகளுடன் இருந்தனர் என்பதை அறிந்துகொள்ளலாம். வெவ்வேறு கூட்டங்களாக, வெவ்வேறு காலகட்டங்களில் ஆரியர் வந்தனர் என்பதால், அவர்களிடையே சிற்சில மாற்றங்களுடன்கூடிய மொழிவழக்கு இருந்தது என்பது இயற்கையானதே.

இக்காலத்தில், இவர்களது புரோகித மொழி தனியாக இருந்ததா என்ற அறிய சான்றுகள் இல்லை. ஆனால், ரிக் மொழி தனிப் பண்புகளுடன் இருப்பதால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தள்ளிவிட முடியாது. யாகச் சடங்களின்பொழுது துதிக்கும் மொழி இவர்களுக்குள் மரபுவழிபட்டு தலைமுறைகளுக்கு மனனமொழியாக கடத்தப்பட்டு வந்திக்க வேண்டும். எவ்வாறாயினும், சிந்துப் பகுதியின் நுழைவுக் காலத்தில் இந்தோ - ஆரிய மொழியைப் பேசியவர்கள் ஆரிய இனத்தினரின் கிளையினராக மட்டுமே இருந்தனர் எனலாம்.

  • ரிக் படைப்புக் காலம்

ரிக் படைப்புக் காலம், ஆரியர்களின் சப்த சிந்துப் பகுதியில் குடியேற்றக் காலத்துடன் இணைந்தது. இக்காலத்தில் பேச்சு வழக்கும், புரோகித அல்லது இருடிகளின் வழக்கும் பெரிதும் மாறுபாடு கொண்டது. இம்மொழியைத்தான் சமய மொழி என்றும் முன்னர் சுட்டப்பட்டது. இந்தோ - ஆரிய மொழி ரிக் வேத மொழியாக அதன் இருடிகளிடையும், படித்த அல்லது சமூகத்தில் மேல் மட்டத்தில் இருந்தவர்களிடம் மட்டுமே வழக்கில் இருந்தது. அல்லது அவர்களால் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இருந்தது. மற்றபடி அது, பொதுமக்களிடத்தில் புழக்கத்தில் இருந்தமைக்கான சான்று இல்லை. ஆரியப் பண்பாட்டின் சமூகப் பின்புலத்தில், மொழிப் பயன்பாட்டை வைத்துப் பார்க்கும்பொழுது, ரிக் வேத மொழியைக் கற்பதிலிருந்து பெண்களும், அச்சமூகத்தின் நால்வகை வர்ணத்துக்கு உள்பட்ட ஆரியச் சூத்திரர்களுக்கும் விலக்கிவைக்கப்பட்டிருந்தனர் என்பது வெளிப்படையாக உள்ளது. அதன் காரணமாக வீட்டிலோ, பொது இடத்திலோ ரிக் வேத மொழி பயன்பாட்டில் இருக்கவில்லை என்ற உண்மையை அறியலாம். இதனால், ரிக் படைப்புக் காலத்தில் மக்களின் பேச்சுவழக்கில் பிராகிருதங்கள் உருவாகியிருந்தன என்பது இயற்கையானது. அதனையே மொழியியலும் வழியுறுத்தும். ரிக்கில் பெண்கள் இயற்றிய படைப்புகள் இடம் பெற்றிருப்பது உண்மையே. ஆனால், அது ஒட்டுமொத்த சமூகத்தைப் பிரதிபளிப்பதாக இல்லை என்பதை முன்னர் காட்டிய விலக்குகள் தெளிவிக்கின்றன.

{pagination-pagination}ரிக் வேத காலப் பிராகிருதங்கள்

துவக்கத்தில் அல்லது சப்த சிந்துப் பகுதி குடியேற்றக் காலத்திலும், அதற்குச் சற்று முன்னரான காலத்திலும், பொதுப் பயன்பட்டில் இந்தோ - இரானிய மொழியுடன் குடியேற்ற இடத்து உள்ளூர் மொழி(கள்) கலந்து, பிராகிருத மொழி ஒன்று உருவாகி, அதுவே ஆரிய இனக் குழு மக்களின் பேச்சு வழக்கு மொழியாக அமைந்தது. இப்பேச்சு வழக்கு மொழியை இருடிகள் உள்பட நால்வகை வர்ணத்தாரும் பயன்படுத்தினர். இருடிகள் அல்லது படித்த மேல்மட்ட சமூகத்தினர், தனித்தபோக்குடன் சமய மொழியாக வளர்ந்திருந்த ரிக் வேத மொழியுடன் பொதுமக்களுடன் உரையாடியிருக்கப் போவதில்லை. இதனால், அச்சமூகத்தின் பெரும்பான்மையான பெண்கள், வைசியர் மற்றும் சூத்திரர்களின் மொழியாக பிராகிருதம் தனித்து வளர்ந்தது; கிளைத்தது என்பது தவறான முடிவாக இருக்க முடியாது.

மேய்த்தல் சமூகம், ஆண் தலைமையிலான சமூகமாக இருப்பதால், வேட்டை மற்றும் வேளாண்மைச் சடங்குகளில் பெண்களின் பங்களிப்புபோல் தனியான சடங்கு சார்ந்த பெண் மொழி போன்றவை ரிக் மொழியில் இடம்பெறவில்லை எனத் துணியலாம். இக்காலத்தில், ஆரிய மொழியானது ஆரியர் / தமிழ் - திராவிடர் இனக்கலப்பினால், முன்னர் கண்டவாறு ஆரிய ஆரிய இனக் குழுவுக்கு மட்டும் உரியதாகாமல், ஆரியத்தை அதாவது பிராமணியத்தைத் தழுவிய பிற இனக்குழுவினரும் பயன்படுத்தும் மொழியாகிறது. சமய சார்பிலான புரோகித / இலக்கிய மொழியிலேயே இம்மாற்றம் நிகழ்ந்தது வெளிப்படையாக உள்ளதால், பேச்சுவழக்கில், அதாவது பிராகிருதங்களில் இது இன்னும் கூடுதலான மாற்றங்களுடன் இருந்தது என்ற முடிவுக்கு வருதல் எளிதானது. இந்த வகையில், பிராகிருதங்கள் யாவரின் பேச்சுவழக்காக மாறுவதற்கான வலுவான அடித்தங்களுடன் வளர்ந்தது.

  • ரிக்குக்குப் பிறகான காலம்

ரிக் மொழி மற்றும் பிராகிருதங்கள் என இரண்டு கிளை பிரிந்து வடஇந்தியா முழுவதும் வளர்ந்தது. இக்காலத்தில் ஆரியர், உழுவித்துண்ணும் வேளாண் தொழிலுக்கு மாறிய காலகட்டமாகும். இக்காலத்திலும், இவர்கள் பெண்கள், பிற குடியினரின் வேளாண் சடங்கு மொழிகளை அறிந்தும் அதனைப் பொதுமொழியாக்காமல், முன்னோர் வழக்கப்படி, சமயம் சார்ந்த புரோகித மொழியாகவே அதனை அமைத்துக்கொண்டனர். இதனைப் பிற வேதங்கள் மற்றும் தொடர்ந்து இயற்றப்பட்ட பிராமணங்கள், ஆரண்யங்கள் முதலான புரோகிதப் படைப்புகளில் காணலாம். செம்மை சம்ஸ்கிருத்ததிலும் பெண் மொழி, மற்றும் பிற இரு வர்ணத்தினரின் பேச்சு மொழி அதிகமும் இடம்பெறவில்லை. இதனை, பிற்காலத்தில் காளிதாசன் உள்ளிட்டோர் எழுதிய நாடகங்களில் எதிரொலிக்கக் காண்கிறோம். அவற்றில் பெண்களும், சூத்திரர்களும் செளரசேனி மற்றும் மகாராஷ்ட்ரீ போன்ற பிராகிருதத்தில் பேசவும், பாடவும், பிறர் குறிப்பாக படித்த, மேல்மட்டத்து மக்களின் மொழியாக செம்மை சம்ஸ்கிருதம் உள்ளது கவனிக்கத்தக்கது. இது அன்றைய சமூகத்தில் மொழிகளின் பயன்பாட்டின் காய்த்தல் உவத்தலற்ற பிரதிபலிப்பாகும்.

செம்மை சம்ஸ்கிருத மொழிக்காலப் பிராகிருதங்கள்

பொதுமக்களின் பேச்சுவழக்கில் இருந்து விலகியே இருந்த செம்மை சம்ஸ்கிருதம், காலப்போக்கில் பிராகிருத மொழிகள் வளர வளர, மக்கள் மொழியாக வாழமுடியாமல் போனது. இது சற்று ஏறத்தாழ, ரிக் மொழி, பொதுமக்களின் பேச்சுவழக்கில் இருந்து விலகி, பேச்சு மொழிகளான பிராகிருதங்களின் வளர்ச்சியில் மக்கள் மொழியாக வாழமுடியாமல் போன நிலை போன்றதே. ஆனால், இலக்கியங்கள் தொடர்ந்து செம்மை சம்ஸ்கிருதத்தில் செழிப்பாகப் படைக்கப்பட்டன. ரிக் காலத்தில் பிராகிருத மொழிகளில் இருந்து இலக்கியம் பிறந்ததா என்பதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், செம்மை சம்ஸ்கிருத்ததின் காலத்தைத் தொடர்ந்து, பிராகிருத இலக்கியங்கள் சமயம் சார்ந்தும், சமய சார்பற்றும் படைக்கப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன. சமயம் சார்ந்த பிராகிருதப் படைப்புகள் சமணம், பெளத்தத்தைச் சார்ந்தவைகளாக உள்ளது கவனத்தில் கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம்.

மேற்கண்டவற்றின் அடிப்படையில், ரிக் வேத மொழியை பேசியோர், ரிக்கை புணைந்த இருடிகளும், படித்த மேல்மட்டத்து மக்களாக இருக்க, பிறர் அல்லது பொதுமக்கள், இருடிகள் உள்பட பேச்சு வழக்கில் இந்தோ - இரானிய மொழியுடனும், தமிழ் / திராவிடர் உள்பட பிற இனக் குழுவினரும் உள்ளூர் மொழிகளுடன் கலந்து உருவான பிராகிருத மொழியைப் பேசினர் எனக் கொள்ளலாம்.

இந்த வகையில், இந்தோ - இரானிய மொழி இந்தியாவில் நுழைந்து, பொதுமக்களின் பேச்சுவழக்கற்ற ரிக் மொழியாகவும், பொதுமக்களின் பேச்சுவழக்கு பிராகிருதங்களாகவும் கிளைத்தன எனக்கொள்வது பொருத்தமாக இருக்கிறது.{pagination-pagination}

பிராகிருத்தின் மூலம் எது என்ற தேடுதல்

பிராகிருதம் வளர வளர, அதன் மீதான உரிமைப் பிரச்னைகள் எழுந்த காலத்தில், ரிக் மொழியில் இருந்து பிராகிருதங்கள் பிறந்தன என்ற கருத்து மையப்படுத்தப்பட்டது. ஆனால், மேற்குறிப்பிட நிகழ்வுகள் ரிக் வேத மொழியிலிருந்து பிராகிருத மொழிகளின் தோற்றம் கண்டன என்பதைவிட, முதற்கட்டத்தில் இந்தோ - ஆரிய மொழி பேசியவர்கள் உள்ளூர் மொழிகளுடன் கலந்து, திரிந்து, மொழிபெயர்த்து பிராகிருதம் உருவானது என்ற உண்மையினை அடையச் செய்கின்றது. இதன்காரணமாக, பிராகிருதங்களில் அன்று வெகுவாகக் கலந்த தமிழ் / திராவிடத்தின் சாயல் அதிகமும் ஏற்றிக்கொண்டு, அதனை திராவிடத்துக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தது. இதனை பின்னர் விரிவாக் காண்போம்.

இலக்கணிகளான ஹேமச்சந்திரா, மார்கண்டேயா, தண்டின் போன்றோர், சம்ஸ்கிருத மொழியிலிருந்து பிராகிருத மொழி(கள்) தோன்றின என திட்டவட்டமாகக் கூறிச் சென்றுள்ளனர். ஹேமச்சந்திரா இதனை வழியுறுத்தி, “பிராகிருத மொழிக்கு சம்ஸ்கிருதமே அடிப்படை” என்பார். இன்னும் சிலர், “சம்ஸ்கிருத மொழியில் இருந்து பிராகிருதமும், பிராகிருதத்திலிருந்து அபிப்பிரம்சா மொழியும் உருவானது” என்றும், தண்டின் இதனை சிறிது மாற்றி, “சம்ஸ்கிருதத்தில் இருந்து சிறந்த பிராகிருத மொழி உருவாகியுள்ளது என்றும், அதிலிருந்து அபிப்பிரம்சா மொழி வந்தது” என்றும் விளக்கியுள்ளார். இங்கு, சிறந்த பிராகிருதம் என்பது மகாராஷ்ட்ரீ மொழி ஆகும். ஆனால், பிராகிருத மொழியின் தோற்றம் பற்றிய இந்த எல்லா விளக்கங்களும் பொருந்தாது உள்ளதை காணமுடியும். பொருந்தாத கருத்து என்பதை, நமி சாது உள்பட சிலர் எடுத்துரைத்து, விதிவிலக்காகக் காட்சியளிக்கின்றனர்.

விளக்கம் காணமுடியாத மூலம் கொண்ட பிராகிருதச் சொற்கள் தரும் பிரச்னை

பிராகிருத மொழிகளில் காணப்படும் பல்வேறு சொற்களை, சம்ஸ்கிருத மொழியிலிருந்து மூலம் விளக்கமுடியாத நிலை காணப்படுகிறது. இதனால், சம்ஸ்கிருத மொழியில் இருந்து பிராகிருத மொழிகள் தோன்றவில்லை என்றும் பழைய இந்தோ -  ஆரிய பேச்சு மொழியில் இருந்துதான் இவை தோற்றம் கொண்டன என நிறுவப்பட்டது.

தேசி சொற்களின் குணங்கள்

பிராகிருத மொழியில் வழக்கில் உள்ள சொற்களை “தற்சமம்” என்றும் “தற்பவம்” என்றும் “தேசி” என்றும் பிரித்து ஆய்வது மரபாக உள்ளது. இம்மூன்றையும், இலக்கணிகள் இவ்வாறு விளக்கியுள்ளனர் - தற்சமம் என்பது சம்ஸ்கிருதத்தில் இருந்து, அதில் உள்ளவாறே எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் எடுத்துக்கொள்வது; தத்பவம் என்பது சில ஒலி விதிகளால் மாற்றிக்கொள்வது; தேசி என்பது பிராகிருத மொழியில் மட்டும் காணப்படுவது. அதாவது, அதற்கே உரியது. பிராகிருத மொழியில் காணப்படும் சொற்களில் பெரும்பாலானவை, இரண்டாவது வகையைச் சார்ந்ததாயினும், தேசிச் சொற்களும் உள்ளமை, பிராகிருத மொழி சம்ஸ்கிருத்தத்தில் இருந்து உருவானது என்ற கொள்கைக்கு பொருந்தாத உண்மையைப் புலப்படுத்தும். இதனால், பிராகிருத மொழி சம்ஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும், அன்று வழங்கிய பேச்சு மொழிகளின் வளர்ச்சியின் போக்கில் உருவானவை என்றும் அறுதியானது*1.

இதன் பின்புலத்தில், சப்த சிந்துப் பகுதியில் அல்லது ரிக் வேத காலத்தில், ஆரிய - திராவிடக் கலப்பில், தமிழ் / திராவிடமயமாதல் விளைவால், அம்மொழியில் உருவான மாற்றங்கள் குறித்து “பிராகிருத மொழியில் நேர்ந்த பெரிய மாறுதல்கள் அம்மொழிகளை இந்தோ - ஐரோப்பிய குடும்ப மொழிகளிலிருந்து வேறுபடுத்தி, திராவிட மொழிகளுக்கு நெருக்கமாகக் கொண்டுசென்றமை” என்று ஐராவதம் மகாதேவன் சுட்டிக்காட்டுவது*2 கவனிக்கத்தக்கதாகிறது.

மேலும், மொழி ஆய்வுகளில் இந்தோ - ஆரிய மொழியினை இரண்டாகப் பகுத்துக் காணவேண்டி உள்ளது. ஒன்று, ரிக் கால இருடிகள் மொழி; மற்றொன்று, மக்கள் வழக்கு மொழி. ரிக் கால இருடிகள் மொழியில் தமிழ்மயமாதல் நிகழ்ந்துள்ளதை அறிய முடிவதைப் போலவே, சிறிது, முண்டா மொழிக்கூறுகளின் தாக்கத்தையும் ரிக் மொழி பெற்றுள்ளதையும் கவனத்தில் கொள்வோம். இதே, தாங்கங்கள் மக்களின் பேச்சுவழக்கு மொழியிலும் காண வேண்டும். இத்தாக்கங்களை அறிய ஆவணங்கள் இல்லை என்றாலும், பிராகிருத மொழி இலக்கணங்கள் பெருமளவில் உதவுகின்றன. இதனைப் பின்னர் ஆய்வோம். இலக்கியங்களைவிட மொழியின் இலக்கணங்கள் இன்னும் துலக்கமாக சமுதாய மாற்றங்களைத் தெரிவிக்கும் சான்றுகளாக உள்ளன. ஏனெனில், இலக்கணம் முன்பே எழுதப்பட்ட இலக்கியங்களின் அடிப்படையிலும், அவ்விலக்கணம் எழுதப்பட்ட காலத்தில் வழங்கப்பெறும் மொழி வழக்காறுகளின் அடிப்படையிலும் எழுதப்படும் படைப்பு என்பது வெளிப்படையானது.{pagination-pagination}

ரிக் வேத மொழிக்கோ, ரிக் கால பிராகிருத மொழிகளுக்கான இலக்கணமோ பின்னர் எழுதப்படவில்லை. பாணினியின் செம்மை சம்ஸ்கிருத இலக்கணமானது, ரிக் காலத்தில் இருந்து, அஷ்டாத்தியாயிக் காலம் வரையிலான சமுதாய மாற்றங்களை தெரிவிப்பதாக உள்ளது. அஷ்டாத்தியாயின் ஒரு குறை என்றால், அது பேச்சுமொழிக்கு முக்கியத்துவம் அளிக்காததுதான். ஆனால் தொல்காப்பியம், வழக்கையும், செய்யுளையும் நாடியது. அதாவது, பேச்சு மொழிக்கும் (வழக்கு), இலக்கியத்துக்கும் (செய்யுள்) முக்கியத்துவம் அளித்தது.

ரிக் கால ஆரிய மக்களின் பேச்சு மொழியான பிராகிருத மொழிகள் அன்று எப்பெயர்கொண்டு விளங்கியது என்பதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், பிற்காலத்தில்கூட பிராகிருத மொழிகள் எந்தனை என்பதில் இலக்கணிகள் உள்பட மொழியியலாளர் தம்முள் எண்ணிக்கையில் மாறுபட்டுள்ளனர். போலவே, சில மொழிகளை பிராகிருத மொழியாகக் கொள்வதிலும் தம்முள் முரண்பட்டுள்ளனர். கிளை மொழிகள் உள்பட ஐம்பதுக்கும் அதிக எண்ணிக்கையிலான மொழிகளை பிராகிருதம் கொண்டுள்ளதை அறியமுடிகிறது. சம்ஸ்கிருதம் ஒழிந்த எல்லா மொழிகளையும் பிராகிருதங்களாகக் கூறப்படுவதும் உண்டு.

இவற்றுள், சிறந்த பிராகிருத மொழியாக “மகாராஷ்டிரீ” கருதப்படுகிறது. இதனால்தான், பிராகிருத மொழியின் முதல் இலக்கணியான வரருசி, “பிராகிருத பிரகாசா”வில் மகாராஷ்ட்ரீக்கு முக்கியத்துவம் அளித்து, ஒன்பது இயல்களை இதற்காக ஒதுக்கியுள்ளார் என்பர்*3.

சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருதம் ஆகியவற்றின் பெயர் ஆய்வுகளைத் தெளிந்து, நம் தேடுதலை தொடர்வோம். சம்ஸ்கிருதம் என்றால் “செய்யப்பட்டது, செயற்கையானது, இயற்கையற்றது போன்ற விளக்கங்கள் கொண்டது. பிராகிருதம் என்றால், “இயற்கையானது, சாதாரணமானது, கொச்சையானது, வட்டார வழக்கு போன்றது” என்ற விளக்கத்தைத் தருவர்.

சம்ஸ்கிருதத்தில் இருந்து வட்டரங்களுக்கு ஏற்பவும், காலத்துக்கு ஏற்பவும் பல்வேறு பிராகிருத மொழிகள் உருவானது என்பது பொதுக்கருத்தாக உள்ளது. அதாவது, தாயும் சேயும் போன்றதுதான் சம்ஸ்கிருதமும், பிராகிருதமும் என்பர். இங்கு சம்ஸ்கிருதம் என்று தெரிவிக்கப்படுவது ரிக் வேத மொழி ஆகும். ரிக் வேத மொழி பொதுமக்களின் பேச்சுமொழியாக இருக்கவில்லை என்பது பற்றி மொழியியலாளர்களின் ஆய்வு முடிவுகள் முன்னர் விளக்கப்பட்டது. இதனால், ரிக் மொழியில் இருந்து பேச்சுவழக்கான பிராகிருதங்கள் உருவாகியிருக்க முடியாது. இந்தோ - ஆரிய மொழி பண்டைய அகன்ற இந்தியப் பகுதிக்கு வரும்பொழுது சந்தித்த பூர்வீக மக்களின் மொழிகளுடன் ஏற்பட்ட தொடர்பால், வட்டரங்களுக்கு ஏற்பவும், காலத்துக்கு ஏற்பவும் பல்வேறு பிராகிருத மொழிகள் உருவானது என வரலாற்றுப்போக்கில் நிறுவலாம்.

(தொடரும்)

மேற்கோள் விளக்கம்

  1. ச. அகத்தியலிங்கம், இந்திய மொழிகள், ப. 200.
  2. முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும், (மொழிபெயர்ப்பு - பெ.பா.ரா. சுப்பிரமணியன்) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, 2010, ப. 9. 
  3. Pischal, Comparitive grammer of Prakirit Language, (translated by Subhadra Jha), Motilal Banarasidass, Delhi, p.1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com