அத்தியாயம் 57 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

உபநிடதங்களே வேதத்தின் கடைசி என்றும், அதனால் அது வேத அந்தம் (இறுதி) வேதாந்தம் என்று பெயர் பெற்றது.
அத்தியாயம் 57 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

திராவிட என்ற தமிழ்க் குடும்ப மொழிகள் இடத்துக்கு இடம், குழுவுக்குக் குழு, தனித்தனிப் பெயருடன் தனித்தனி மொழியாக அடையாளம் கண்டு நுட்பமாக ஆய்வு செய்யப்பட்டதுபோல், இந்தியாவில் நுழையும்போதிருந்த ஆரிய மொழி, இந்திய-ரிக் மொழி மற்றும் பாணினி மொழி ஆகிய இரு வேறுபட்ட சம்ஸ்கிருத மொழிகள், பிராகிருதங்கள், பாணினி சம்ஸ்கிருதத்தில் இருந்து கிளை பிரிந்த நவீன இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்று நுட்பமாக தனித்தனி அடையாளம் தரும் பெயர்கள் பெருவழக்குக்கு வரவில்லை.

சம்ஸ்கிருதம் என்ற ஒரு சொல், இரு வேறுபட்ட மொழிகளுக்கும் பொதுப் பெயர் சுட்டியாக உள்ளது. பிராகிருதம், முக்கிய ஆறு மொழிகளுக்கும், பிற 50-க்கும் மேற்பட்ட கிளை மொழிகளின் பெயர்களுக்குப் பொதுச் சுட்டியாக உள்ளது. இவ்வழக்கு, ஆரிய மொழிகளின் வரலாற்றை புதிர் நிறைந்ததாகவும், புரிதல் மயக்கம் தருவதாக்குவதும், எளிய வாசிப்பில் பிடிபடாத பல சூச்சுமங்கள் கொண்டதாகவும் மருளச் செய்துவிடுகிறது. இன்னும், இப்பெயர் வழக்குகள் அதற்குக் காலதேச வர்த்தமான எல்லைகளைக் கடந்த நிலையை அளித்துவிடுகிறது. எனவே மொழியாளர்கள், வாசகர்கள் காலதேச வர்த்தமானத்தை கருத்தில் கொண்டுதான் இதன் பேதத்தை அறிந்து விளக்கிக்கொள்ளவேண்டி உள்ளது.

தற்காலத்தில்கூட, இந்தி மொழி என்ற மொழி இந்தியுடன், கரிபோலி, ஹரியானி, பிராஜ், பாக்கா, கனெளஜி, புண்டரி ஆகிய கிளை மொழிகளை இணைத்தே சுட்டப் பயன்படுகிறது. இந்தி மொழி பேசுவோரில் இம்மொழிகளைப் பேசுவோரையும் இணைத்தே இன்றைய எண்ணிக்கை குறிப்பிடப்படுகிறது என்பது, இதன் பெயர் மரபின் பண்டைய போக்கின் வழிபட்டே என உறுதியாகிறது.

இவ்வாறுள்ள ஒரு மரபின் அடிப்படையில்தான், ரிக்குக்குப் பிறகான சூத்திரங்கள் வரையிலான இலக்கியங்கள், வேதங்கள் என்ற பெயரில் அடையாளம் பெற்றுள்ளன. ரிக்குக்குப் பிறகான இலக்கியங்களின் எண்ணிக்கை மிக அதிகம். அது சாமம், யசூர், அதர்வம் ஆகிய பிற மூன்று வேதங்களையும், அவ்வற்றுக்கான பிராம்மணங்களையும் ஆரண்யங்களையும், உபநிடதங்களையும், சூத்திரங்களையும் கொண்டவை என முன் அத்தியாயத்தில் குறிப்பிட்டோம். உபநிடதங்களே வேதத்தின் கடைசி என்றும், அதனால் அது வேத அந்தம் (இறுதி) வேதாந்தம் என்று பெயர் பெற்றது. இருந்தும், பின்னர் செய்யப்பட்ட சூத்திரங்களையும் வேதத்தின் பட்டியலில் இணைத்துப் பார்க்கும் மரபை, பிராமணிய வரலாறு உருவாக்கியுள்ளது. எவ்வாறாயினும், பின்வேத நூல்கள் ரிக்கின் தொடர்ச்சி என்றுதான் தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன.

இந்தவகையில், வேத கால இலக்கியத்தின் இரு காலகட்டங்களையும் சேர்த்து முக்கிய நூல்கள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன*1.

{pagination-pagination}

பின்வேத காலம்

ரிக் வேதத்துக்குப் பிறகு இயற்றப்பட்ட பிற சாமம், யசூர், அதர்வ வேதங்களும், பிராமணங்கள் முதல் உபநிடதங்கள் வரையும் எழுதப்பட்ட காலமே பின்வேத காலமாகும். பின்வேத காலப் படைப்புகள், ரிக்கின் நீட்சியாக எழுதப்பட்டவை. இவை ரிக்கின் பகுதிகளையும் கொண்டிருக்கும்; புதியனவும் கொண்டிருக்கும். ரிக்கின் பகுதிகள் இதற்கு மரபின் சாயலைத் தர, புதியன ரிக் மரபில் இருந்து விலகிய புதிய சமூகம் உருவாகியிருப்பதைக் காட்டும். இக்காலகட்டத்தில் உருவாகியிருந்த சமூகம், அடிப்படையில் தாம் பரவிய இடத்தின் உள்ளூர் மரபுகளில் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தது. அவை குறிப்பாக, யசூரிலும் அதர்வத்திலும் எதிரொலிக்கின்றன.

சாமம்

பின்வேத காலத்தின் துவக்கம், இரண்டாவது வேதத் தொகுப்பான சாம வேதத்தில் இருந்து துவங்குகிறது. (யசூரை இரண்டாவதாகக் கருதுவதும் உண்டு). சாமம் என்பதற்குப் பண் என பொருள். சடங்குகளின்போது இசைப்பதற்கு வசதியாக இவை அமைக்கப்பட்டுள்ளன. ஆரியர்களுக்குள் ரிக் காட்டாத இசையின் வளர்ச்சி பற்றிய சில செய்திகளை சாம வேதம் காட்டுகிறது. உத்கரர்கள் என்ற தனிப்பட்ட வகை புரோகிதர்களுக்கு, சடங்குகளின்போது பாட வழிகாட்டும் நூலாகவும் சாமம் கருதப்படுகிறது.

இதன் படைப்புக் காலகட்டம் மு.பொ.ஆ.1000 முதல் மு.பொஆ.800 வரை என்பர். இக்காலகட்டத்தில், இரண்டாம் கட்டமாக குரு, பாஞ்சாலம் ஆகிய பகுதிகளுக்குக் ஆரியர்களின் குடியேறுதல் நிகழ்ந்தது என்ற சமூக நிகழ்வையும் நினைவில் கொள்வோம். இவர்களுக்குள் இப்புதிய பகுதி ஏற்படுத்திய மாற்றங்களைச் சாமம் எதிரொலிக்கிறது என்பது குறித்த ஆய்வு விரிவுபடவேண்டி உள்ளது.

இவர்களுள் இப்பகுதி ஏற்படுத்திய தாக்கங்களில் வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஒன்று, ராமனின் வரலாறு. இப்பகுதியில் பூர்வ மக்களிடையே வழக்கில் இருந்த ராமனின் வீரம் பற்றிய கதைப்பாடல் இவர்களை வெகுவாகக் கவர்ந்தது. ராமனின் வீரச் செயல்கள் அவர்களது மரபணுக்களுக்குள்ளும் தங்கத் தொடங்கின; தலைமுறை தலைமுறைகளுக்குத் தொடருவதானது. ஆனால், ராமன் பற்றிய செய்திகள் சாமத்தில் இடம்பெறவில்லை. அவை பிற்கால இதிகாசங்களிலேயே வெளிப்பட்டன. மேலும் இவை, செம்மை சம்ஸ்கிருதத்தில்தான் எழுத்தாக்கம் பெற்றன.

ஆக்க முறை

ரிக் வேதத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சூக்தங்கள், சாமத்தில் மிகையாக உள்ளன. ஆகையால், சாமத்துள், 75 பாடல்கள் அதாவது, சூக்தங்கள் மட்டும் புதிய பாடல்கள் என்று கருதப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை 85 என்றும், மொத்தமுள்ள 1875 சாம மந்திரங்களில் 1725 மந்திரங்கள் ரிக்கில் இருந்து தொகுக்கப்பட்டவை என்றும், மற்ற மந்திரங்கள் யசூர், அதர்வத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை என்றும் ம.ரா.ஜம்புநாதன் குறிப்பிடுவார்*2. எனில், சாமத்தின் பெரும்பகுதி ரிக் வேதத்தின் மறுஆக்கங்களாகவே உள்ளன என்பது உறுதிப்படும். இவையும், ரிக்கின் எட்டு மற்றும் ஒன்பதாம் மண்டலங்களில் இருந்து வருபவையாக உள்ளன. இதுவே, காலத்தால் மூத்ததான இரண்டு முதல் ஏழு வரையான மண்டலங்களைத் தொடராமல், பிற்கால கருத்துகளைத் தொடர்பவையாக ஆக்கப்பட்டதற்கு அகச் சான்றாகின்றன. எட்டாம் மண்டலம், அதை இயற்றிய கன்வர் - அங்கீரசு இருடிகளின் பாடல்களைக் கொண்டது என்றாலும், அவை பழைமையில் இரண்டாம் நிலையிலேயே வைத்து எண்ணப்படுவது கவனிக்கத்தக்கது. இது பாடுபொருள் சார்ந்த வகைப்பாடாகவே உள்ளது. இம்மண்டலத்தில், பூர்வகுடிகளின் காலத்தால் மூத்த உள்ளூர் மரபுகளின் பதிவுகள் உள்ளன.

அதர்வத்தின் பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளது என்ற குறிப்பு இதன் வேத காலமுறையை எப்படி ஏற்பது என்ற கேள்வியை எழுப்புவது இயற்கையே. தொகுப்புக் காலத்தின் விளைவுகளே இவை. காலமும் வரிசையும் பெரும் எண்ணிக்கை கொண்டு தீர்மானிக்கப்படுவது என்பது நினைவுகொள்ளத்தக்கது. இதுபோன்று ஒரு விளைவே, ரிக்கின் பத்தாவது மண்டலமும், கிலங்களும் என்பது இதன் உண்மையை நிறுவும். மேலும், கிரிஃபித் தெரிவிப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு பக்கமாக உள்ளது. அவர், ‘‘ரிக் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்ட பல பாடல்கள் மதச் சடங்கு செய்வதற்கு ஏற்றவாறு இங்கு –சாமத்தில்- மாற்றி அமைக்கப்பட்டுள்ள. இப்படி தொகுக்கப்பட்ட பாடல்கள், பல அதிக முக்கியத்துவம் வாய்த்தவையாகவும், சில குறைந்த முக்கியத்துவம் உடையதாகவும் உள்ளன. சில பாடல்கள், ரிக் வேதப் பாடல்களைப்விட பழைமைவாய்ந்தவைகளாக உள்ளன’’ என்பார்.*3

{pagination-pagination}

தொகுப்பு முறை

ஆர்ச்சிகம் மற்றும் உத்தரார்ச்சிகம் என இரு பிரிவாக உள்ள சாமத்தின் தொகுப்பு முறை கவனிக்கத்தக்கது. முதல் பிரிவான ஆர்ச்சிகம், ‘‘பூர்வார்ச்சிகம்’’ என்றும் அழைக்கப்படும். பூர்வ ஆர்ச்சிகம் என்பது ஆதி ஆர்ச்சிகம் எனப் பொருள் தருவதாகும். இது, ஆறு பகுதிகளைக் கொண்டது. ஒன்று முதல் ஐந்து வரையிலான பகுதிகள் ஒவ்வொன்றும் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கின்றன. ஆறாவது பகுதி ஒன்பது பாடல்களை மட்டும் கொண்டது. இவை அக்னி, சோமா, இந்திரன் ஆகிய தெய்வங்களைப் பாடுகின்றன. அக்னி, முதல் 12 பத்துப் பாடல்களிலும், நடுவில் உள்ள 34 பத்துப் பாடல்கள் இந்திரன் மீதும், இறுதி 11 பத்து, சோமாவின் மீதும் உள்ளன.

இரண்டாவது பகுதியான உத்தரார்ச்சிகத்தில் ஒன்பது பாடல்கள் உள்ளன. உத்தரார்ச்சிகம் என்பது பிற்கால ஆர்ச்சிகம் என்று பொருள்படும். இதில், முதல் பிரிவில் அதாவது, பூர்வார்ச்சிகத்தில் காணக்கிடைக்கும் பல பாடல்கள் உள்ளன. இதனைக் கொண்டு, இப்பகுதி, காலத்தால் பிந்தியது எனக் கணிக்கப்பட்டுள்ளது. உத்தரார்ச்சிகத்தில் பலவகை வேள்விகளை அடிப்படையாகக் கொண்டுதான் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முழுப் பாடல்களும் உத்தரார்ச்சிகத்தில் காணப்படுகின்றன. இப்பாடல்களில் அமைத்துப் பாட வேண்டிய ராகங்கள், பாடுபவருக்கு ஏற்கெனவே தெரிந்திருத்தல் அவசியம். இதிலிருந்தும், பூர்வார்ச்சிகத்தைக் காட்டிலும் உத்தரார்ச்சியம் காலத்தால் பிந்தியது என நிறுவுவர். மேலும், உத்தரார்ச்சிகத்தில் வரும் சில பாடல்களின் ராகங்கள் பூர்வார்ச்சிகத்தில் கூறப்படுவதில்லை. இதுவும் பூர்வார்ச்சிகத்தின் மூத்த தன்மையை வலியுறுத்துகிறது. எனினும், இரண்டும் தனித்து இயங்கவல்லவை அல்ல எனக் காட்டப்படுகிறது. அதாவது, உத்தரார்ச்சிகம் இன்றியே பூர்வார்ச்சிகம் மட்டும் கூற வேண்டிய எல்லாவற்றையும் நிறைவாகச் செய்யவல்லதன்று என்பார் கா. கைலாசநாத குருக்கள்.

ரிக் வேத சங்கிதைகளில் காணப்படாத 75 பாடல்களும், சில வேள்வி முறை கூறும் ஏனைய நூல்களில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. சிலவற்றை, இன்று அகப்படாத ஏனைய சாகைகளில் இருந்து எடுத்து, இருக்கு வேதத்தில் இருக்கும் பகுதிகளுடன் கலந்து அமைத்துள்ளனர். ரிக் வேதத்தில் எடுக்கப்பட்டு சாம வேதத்தில் இடம்பெற்ற பகுதிகளின் பாடல்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதை வெவ்வேறு நிலைகளில் காணமுடிகிறது. இவை, மிகவும் பழைய சாம சங்கிதைகளில் இருந்து எடுக்கப்பட்டனவா என சந்தேகிக்கப்பட வைக்கின்றன. காரணம் எதுவுமின்றி, வேண்டுமென்றோ அன்றி,  தானாக நிகழ்ந்த திரிபினாலோ இவ்வகை வகை வேறுபாடுகள் தோன்றி இருக்கலாம் என ’ஒளப்ரெச்ட்’ என்பவர் தெரிவிப்பதை எடுத்துக்காட்டுகிறார் கைலாசநாத குருக்கள்*4. மேலும் இவர், இசை அமைக்கும் நோக்குடன் பாடல்களைப் பிரித்து வகுக்கும்போது, இவ்விதம் திரிபுகள் நிகழ்வது இயற்கையே என்கிறார். உண்மையில், இத்திரிபுகள் மூலத்தின் பொருளில் இருந்து விலகி வழங்கிய மாற்றங்கள் குறித்து ஆய்வுகள் விரியவில்லை.

ஆர்ச்சிகத்துடன் இரு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ‘‘கிராமகேய கானம்”. இன்னொன்று, “அரண்ய கானம்”. அரண்ய கானப் பகுதியுள் உள்ளவை பயங்கரமானவையும், தீமை விளைவிக்கக்கூடியதாகவும் உள்ளன. இவை, கிராமங்களில் படிக்கத்தகாதவை. இதைப் படிப்பவர்கள், காடுகளில் ஒதுக்குப்புறங்களில் வைத்தே படிப்பர். இதனால், இதனை ஆரண்ய கானம் என்றும் வியாக்கியானம் செய்வர். இதனை கிரிஃபித் தனது ஆங்கில மொழிபெயர்ப்பு முன்னுரையிலும் தெரிவிக்கிறார்*5 என்பதும் ஆய்வுக்குரியதே.

இதைவிட, இன்னும் இரு பிரிவுகள் உண்டு. அவை, உஹகானம் என்றும் உஹ்யகானம் என்றும் குறிக்கப்படுகின்றன. இவை யாகங்களில் பயன்படும்வகையில் அமைந்தவை. இவை இரண்டும், முன்னர் குறிப்பிட்ட கிராமகேய கானத்துக்கும், அரண்ய கானத்துக்கும் தொடர்புகொண்டு இருப்பவையே*6.

{pagination-pagination}

கிராமகேய கானம் என்பதில், கிராமத்துக்குரிய பொருள் விளங்குவதுபோல், அரண்ய கானத்தின் பொருள் தெளிவற்று உள்ளது. விளக்கம் பெறாநிலையிலேயே உள்ளதாகத் தோன்றுகிறது. அரண்ய என்பது, கோட்டை, மதில் சூழ்ந்த அரணுக்குரிய என்ற பொருள் தரும் சொல்லாகும். இது, மேய்த்தல் சமூகத்தினரான ஆரியர் கிராமங்களிலும்; அவர்களின் பகைவர்களான தாசர்களும், தசுக்களும் கோட்டையிலும், மதில் சூழ்ந்த அரணிலும் வாழ்ந்தனர் என்பது வரலாறு உணர்த்தும் செய்தியாகும். இது நுட்பமான பொருளில், கிராமப்பகுதியைச் சேர்ந்தவர்க்கு உரியது; கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்க்கு உரியது என்ற பொருள் தருகிறது. இவை சாமத்தில் தொகுக்கப்பட்டன என்பது, அன்றைய சமூகத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளதாகக் கருதலாம். பயங்கரமான மந்திரங்கள் என்று குறிப்பிடப்படும் இவற்றில் பிற பகுதி மந்திரங்களில் இருந்து வேறுபாடு அற்றவைகளாவே ஒலிக்கின்றன. பிற்கால கருத்துருவங்கள்தாம், இதனை பயங்கரமானதும், கிராமங்களில் பாடத் தகுதியற்றதாகவும் ஆக்குகிறது. அது, கலப்புற்றவர்களால் சாமத்தில் இடம்பெற்றதா அல்லது கலப்புறாது வெளியில் இருந்த மக்களால் பின்தொடரப்பட்ட ஒன்றால் கவரப்பட்டவர்களால் இடம் பெற்றதா என்றும் அல்லது முன்னர் குறிப்பிட்டது ஆரண்யகம் தாமோ என்றும் ஆய்வுகள் இனிதான் விரிவடைய வேண்டும்.

(தொடரும்)

மேற்கோள் குறிப்புகள்

1. இத்தொகுப்பில் வேறு சிலவும் இடம்பெறலாம். தொகுப்புபவரின் நோக்கம் சார்ந்தும் அமையலாம். எவ்வாறாயினும், இத்தொப்பு குறித்து ஒரு முக்கிய குறிப்பு தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவால் வழங்கப்படுகிறது. “ஈசா. சுக்ல அதவது வெள்ளை யசூரின் கடைசியில் வருகிறது. ஐதரேய, கெளசிதகி, கேன, பிரகதாரண்யகம், தைத்திரிய ஆகியவை உபநிடதங்கள், பிராம்மணம் அல்லது ஆரண்யகம் ஆகியவற்றின் கீழ் வந்தாலும், மற்றவை அப்படி அல்ல. ஒருவேளை மறைந்துபோன பிராம்மணங்கள் ஆரண்யங்கள் ஆகியவற்றின் கீழ் வரலாம். மைத்ரி, மாண்டூக்கியம் ஆகியவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை”. இந்தியத் தத்துவ இயல் - ஓர் எளிய அறிமுகம், ப.75.

2. சாம வேதம், தமிழ் - ஆங்கிலம், தமிழில் ம.ரா.ஜம்புநாதன், ஆங்கிலத்தில் கிரிஃபித், அலைகள் வெளியீட்டகம். சென்னை, 2005, ப.607.

3. மேலது, ப.vii

4. கா.கைலாசநாத குருக்கள், மு.கு.நூ. பக்.134.

5. சாம வேதம், தமிழ் - ஆங்கிலம், தமிழில் ம.ரா.ஜம்புநாதன், ஆங்கிலத்தில் கிரிஃபித், அலைகள் வெளியீட்டகம். சென்னை, 2005, ப. vii

6. கா.கைலாசநாத குருக்கள், மு.கு.நூ. பக்.134.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com