அத்தியாயம் 62 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

பெருங் கற்படைப் பண்பாட்டில் மனித வளமை சர்ந்த வழிபாடும், கால்நடைகளின் வளமை சார்ந்த வழிபாடும் சந்திக்கும் புள்ளி அல்லது, அம்மரபின் தொடர்ச்சியை காட்டுபவையாகப் புதிர்ப்பாதைச் சின்னங்கள் விளங்குகின்றன.

சடங்கும் வழிபாடும் ஒரே பொருளைக் கொண்ட இருவேறு சொற்கள். இன்று வழிபாடு என்பது சமயம் சார்ந்த பூசைரீதியான ஒன்று என்ற பொருளில் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உண்மையில் இன்றைய பூசைரீதியான நிகழ்வுகள் யாவும் சடங்குகளே. எனில், சமயம் சார்ந்த பூசைரீதியும், சமயம்சாரா சடங்குரீதியும் ஒரே பொருளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

மேய்த்தல் சமூகத்தின் சமயம் சாராத நம்பிக்கை சார்ந்த தொல்குடிச் சடங்காக விலங்குப் பலியைப் பார்க்க வேண்டும் எனில். அச்சடங்கு எதில் அடங்கும் என்ற கேள்வி எழுகிறது. அது வழிபாடு என்றே பொருள் படும். சரியாகக் கூற வேண்டும் என்றால், சமயம் சாராத நம்பிக்கை சார்ந்த தொல்குடிச் சடங்கு என்பது மேய்த்தல் சமூகத்துக்கு மட்டும் உரிமையானது அன்று. அனைத்துத் திணை வாழ்க்கை சமூகங்களும் தம்தம் வாழ்வியல், இடம், பொருள் சார்ந்து பல்வகைப்பட்ட சமயம் சாராத நம்பிக்கை சார்ந்த தொல்குடிச் சடங்குகளை மேற்கொண்டு இருந்தன; மேற்கொண்டு வருகின்றன. காலப்போக்கில், சில சடங்குகள் கைவிடப்பட்டிருக்கின்றன என்பதையும் அறியமுடிகிறது. சமயம் சாராத நம்பிக்கை சார்ந்த தொல்குடிச் சடங்குகளின் புத்தாக்கம், எல்லா சமூகத்திலும் வளர்ச்சி அடைந்துள்ள நிலையை நாம் காணமுடிகிறது.

அது, மந்திரம். மந்திரம் என்பது மாந்ரீகம் மற்றும் தாந்ரீகம் என்ற பெயர்களாகவும் குறிக்கப்படும். இவற்றுக்கும் சமயங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. தாந்ரீகம் என்ற சொல்லானது தந்திரம் என்றும் வழக்குப்படும். மாந்ரீகமும் தந்திரமும் ஒன்றா என்ற கேள்விக்கு, ஒன்றான பொருள் மயக்கத்தை நாம் தற்காலத்தில் வழங்கி வருகின்றோம் என்று பதில் கிடைக்கும் என்று தோன்றுகிறது. நம்முடையே உள்ள மாயம் என்ற மற்றொரு சொல்லையும் நாம் நிலைவில் கொண்டு விளக்கம் பெற வேண்டியவர்களாக உள்ளோம். பொதுவில், தாந்ரீகம், மாந்ரீகம் மற்றும் மாயம் என்ற மூன்றும் ஒன்றுபோலதான பொருளில் நவீன பயன்பாடு உள்ளது. இவை ஒன்றுபோலான பொருள் கொள்வதற்கு அடிப்படைக் காரணம் உள்ளது. அது, இவை யாவுமே சமயம் சாராத நம்பிக்கை சார்ந்த தொல்குடிச் சடங்குகளைக் குறித்து நிற்பவை. சமயம் சார்ந்த சடங்கள் ஒரு புறமும், சமயமற்றச் சடங்கள் ஒருபுறமும் தொகுக்கப்பாட்ட காலகட்டத்தோடு, இம்மூன்றின் பொருள் மயக்கம் ஒன்றுபோலாக இருக்கின்றன. மந்திரத்தையை மாயவித்தை என்றும் தற்கால ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சன்னியாசிக் கற்கள், மேய்த்தல் சமூகத்தினரின் மாயவித்தை வழிபட்ட ஒருவகை நம்பிக்கை சார்ந்த வழிபாடு. இவ்வழிபாட்டில், சமூகத்தின் நன்மையே முன்னிறுத்தப்படுகிறது. சன்னியாசிக் கல் வழிபாட்டுக்கும், நடுகல் வழிபாட்டுக்கும் உள்ள தொடர்பும் வேறுபாடும் குறித்து ஆய்வு நிகழ்த்தப்படுவது அவசியமாகிறது. இவ்விரண்டு வழிபாடுகளும் மேய்த்தல் சமூகத்தினரால் மேற்கொள்ளப்படுபவை என்பது ஒற்றுமையின் கூறு. சன்னியாசிக் கல் வழிபாடு என்பது கால்நடைகளின் வளமை சார்ந்தது என்பதும், நடுகல் வழிபாடு மனிதவளம் அல்லது குலத்தின் சமூகத்தின் நலம் சார்ந்து நிகழ்த்தப்படுவது என்பதும் வேறுபாட்டின் கூறாகிறது. நடுகற்கள், பெருங் கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சி என்னும்பொழுது, கால்நடைகளின் வளமை சார்ந்த வழிபாடுகள் பெருங் கற்காலத்திலும் இருந்திருக்கும். ஒருவேளை, அச்சின்னமும் பெருங் கற்கால சின்னங்களைப் போலவே எழுப்பப்பட்டிருக்கலாம்.{pagination-pagination}

பெருங் கற்படைப் பண்பாட்டில் மனித வளமை சர்ந்த வழிபாடும், கால்நடைகளின் வளமை சார்ந்த வழிபாடும் சந்திக்கும் புள்ளி அல்லது, அம்மரபின் தொடர்ச்சியை காட்டுபவையாகப் புதிர்ப்பாதைச் சின்னங்கள் விளங்குகின்றன. நமக்குக் கிடைத்துள்ளவற்றுள், பெருங் கற்படைப் பண்பாட்டோடு இணைந்து வெளிப்பட்டுள்ள சின்னகொத்தூர் புதிர்ப்பாதை மற்றும் வெதரம்பட்டி புதிர்ப்பாதை ஆகிய இரண்டினுள், சின்னகொத்தூர் வழிபாடு நீங்கிய நிலையில் உள்ளபொழுது, வெதரம்பட்டி இன்றளவும் வழிபாட்டின் களமாக விளங்குகிறது. வெதரம்பட்டி புதிர்ப்பாதையானது குழந்தை வரம் தரும் வழிபாடாக மனித வளமை சார்ந்தும், கால்நடைகளின் வளமை சார்ந்து, பொங்கல் அன்று கால்நடைகள் கொண்டுவந்து அதன் முகப்பில் நிறுத்தப்படுவதும் இந்தப் பண்பாட்டின் நீட்சியை நமக்கு அடையாளப்படுத்துகிறது. இந்தவகையில், மேய்த்தல் சமூகம் பெருங் கற்படைப் பண்பாட்டில் இருந்து நடுகல் பண்பாட்டுக்கு நுழையும்பொழுது, கால்நடை வளமை சார்ந்த வழிபாடுகளை சன்னியாசிக் கல் வழிபாடாக வெளிப்படுத்தியுள்ளது வெளிச்சமாகிறது.

வெதரம்பட்டி புதிர்பாதை

தென்னிந்தியாவைப் பொருத்தஅளவில், பெருங் கற்படைப் பண்பாடு நிகழ்ந்த மு.பொ.ஆ. 1500 முதல் பொ.ஆ. 250 வரையிலான காலகட்டத்தின் நடுப்பகுதியில், வரலாற்றுக் காலம் துவங்கிவிடுகிறது. இன்று தமிழி எழுத்துகளின் காலம் பொ.பொ.ஆ. 500 அளவில் ஏறத்தாழ இருக்கும்பொழுது, இதற்கு முன்னர் கீறல் குறியீடுகளின் காலம் நிலவிவந்தது. சிந்துப் பகுதியின் சிந்துவெளி எழுத்துகளை ஒத்த எழுத்துகள், தமிழி எழுத்துகளோடு ஒத்த எழுத்துகள் என இரு எழுத்துமுறைக்கும் இடைப்பட்ட கால எழுத்துருவாக உள்ள கருத்தைப் பரிமாறும் எழுத்துருக்களே என இன்று காணமுடிகிறது.

சன்னியாசிக் கற்களில் இடம்பெறும் எழுத்துகள், இன்று வட்டெழுத்துக்களை ஒத்த எழுத்துகளாக இருப்பினும், சில குறியீடுகள் சிந்துவெளி மற்றும் கீறல் குறியீட்டு எழுத்துகளை ஒத்தவையாக இருக்கின்றன. ஆகையில், இதிலும் ஒரு மரபுத் தொடர்ச்சியைக் காணமுடிகிறது. சிந்துவெளி எழுத்து மற்றும் கீறல் எழுத்துகள் பயன்பாட்டில் இருந்த பெருங் கற்படைப் பண்பாட்டுக் காலகட்டத்தில்தான் பெரியகோட்டப்பள்ளி மற்றும், ஆண்டிமலை கோலகுண்டு எழுத்தோவியப் பாறைகள் சன்னியாசிக் கற்களின் இன்றைய பயன்பாட்டை பெருங் கற்படைக் காலத்தில் செய்துள்ளன. சன்னியாசிக் கற்களுக்கும், பெரியகோட்டப்பள்ளி ஓவியப் பாறைக்கும் உள்ள தொடர்புகள் விளக்கப்பட்டுள்ளது.*1

ஆண்டிமலை – கோலகுண்டு பாறை ஓவியம்

பெரியகோட்டப்பள்ளி பாறை ஓவியம்

தொல்குடிச் சிந்தனையைத் தொடர்ந்து, நவீன காலத்திலும் கடத்தி வரும் சமூகத்திலிருந்து மாயவித்தை சடங்கை முழுமையாக விலக்கிவைத்துக்கொள்ள முடியாது. அதன் பகுதியாகத்தான், நடுகல் வழிபாட்டில் உள்ள பலிச்சடங்கையும், சன்னியாசிக் கல் வழிபாட்டில் உள்ள பலிச்சடங்கையும் பார்க்கவேண்டி உள்ளது. தற்காலத்தில், பலிச்சடங்குகள் வேள்வியில் இருந்து விலகியிருந்தாலும், வேள்வி வழிபாட்டின் துவக்ககால முக்கியப் புள்ளியே, அதாவது ரிக் வேதத்தின் சடங்கு பலிதான்; விதவிதமான பலிதான்.{pagination-pagination}

நடுகல் வழிப்பாட்டில் பலி

நடுகல்லுக்கும் மேய்த்தல் சமூகத்துக்குமான தொடர்பு குறித்து மீண்டும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. நடுகல் வழிபாடு என்பது குலத்தின், அல்லது சமூகத்தினரின் வளமை சார்ந்த வழிபாடு என்பது முன்னரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆவி வழிபாடு தொல்நம்பிக்கையின் பார்ப்பட்டது. ஆதியில் மனித சமூகம், போரில் மாண்டவர்கள், சமூகத்துக்காக மாண்டவர்கள், தம்தம் மூதாதையரின் ஆவியை ஒரு மரத்திலோ, சந்தியிலோ, மலைக் குகைகளிலோ நிலைநிறுத்தி வைக்கமுடியும் என்று நம்பினர். அதன் தொடர்ச்சியாக, ஆவியைக் கல்லில் நிறுத்திவைக்க முடியும் என்ற நம்பிக்கையும் நிலைபெற்றது. அது, நடுகல்லாகப் பரிமாணம் கொண்டது.

நடுகல் வழிபாட்டில் நடைமுறையில் உள்ள பலிச்சடங்கு குறிப்பிடப்பட வேண்டியதாக உள்ளது. தொல் பழங்கால ஓவியங்களில் மாடுபிடிச் சண்டையும், அச்சண்டையில் மாண்ட வீரர்களையும் வரைந்து வைத்திருப்பதைப் பார்க்கமுடியும். இது நடுகல் வழிபாட்டின் தொடக்கம் என்று கொள்ளலாம்.*2 இவ்வகை ஓவியங்களை, கிருஷ்ணகிரி மாவட்டத்து மல்லப்பாடி, தென்னார்க்காடு மாவட்டத்து செத்தவரை, கோவை மாவட்டத்து வெள்ளெருக்கம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்கள் காட்டுகின்றன. மதுரை மாவட்டத்துச் சிறுமலை, தகடூர்ப் பகுதியில் வழக்கில் உள்ள மந்து அல்லது மன்று கூடுதல் என்ற வழிபாடும் நடுகல் வழிபாட்டின் எச்சமாவே உள்ளது என்பர்.*3

குடவாவில் கீரத்தனாரின் அகநானூறு பாடல்*4

வில் ஏர் வாழ்க்கை விழுத் தொண்டை மறவர்

வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்

நடுகல் பீலிசூட்டி, துடிப்படுத்து

தொப்பிக்கள்ளோடு துரூஉப் பலி கொடுக்கும்

என்று, நடுகல்லுக்கு மறிக்குட்டியை பலியிட்டுப் படைத்து வழிபட்ட நிகழ்ச்சியை விவரிக்கிறது. தற்காலத்திலும், இவ்வழிபாட்டில் ஆட்டுப்பலி என்பது பரவலாகக் காணமுடிகிற ஒன்றே.

சன்னியாசிக் கல் வழிபாட்டில் பலி

சன்னியாசிக் கல்லை ஒரு களமாகக் கொண்டு, மேய்த்தல் தொழில் சமூகத்தினராலும், கால்நடைகளை வீட்டில் வளர்க்கும் மக்களாலும் நிகழ்த்தப்படும் பலிச் சடங்கே சன்னியாசிக் கல் வழிபாடு என அழைக்கப்படுகிறது. மதத்தின் எந்தச் சாயலும் அற்ற இந்தச் சடங்கு, தொல்குடியின் நம்பிக்கை சார்ந்த ‘மாயவித்தை’யின் அடிப்படையில், தற்காலச் சமூகத்தினரால் ஒரு மரபாகப் பின்பற்றப்படுவது. இதற்கும் மதத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இப்பலிச் சடங்கின் நோக்கம் வளமை சார்ந்தது. அது தங்களின் கால்நடைகளின் எண்ணிக்கைப் பெருக்கம் மற்றும் நோய்நொடி அற்ற அவற்றின் நலம் சார்ந்த வளமைச் சடங்கு. இதில் பிரதிபலிப்பது ‘மாயவித்தை’. இச்சடங்கு, சமூகங்களுக்கு இடையே அல்லது, பிரதேச குணம் சார்ந்து சிற்சில வேறுபாடுகளுடன் நிகழ்த்தப்படுகிறது. ஆனால், அனைத்திலும் ஒரு பொதுக்குணம் உண்டு.

சன்னியாசிக் கல் வளமைச் சடங்கின் பொது குணங்கள்

தமிழர் திருநாளாம் மாட்டுப் பொங்கல் அன்று, பொதுவாக “சன்னியாசிக் கல் வளமைச் சடங்கு விழா” எடுக்கப்படுகிறது. அல்லது கால்நடைகள் கொள்ளை நோயால் பாதிக்கப்படும்பொழுது இவ்விழா எடுக்கப்படுகிறது.*5 விழா நாளன்று, சன்னியாசிக் கற்களும், இடையிலுள்ள வாய்க்கால் பகுதியும் சுத்தம் செய்யப்படுகின்றன. மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களைக் கொண்டு தொடக்க பூசை செய்யப்படுகிறது. தொடக்க பூசைக்குப் பிறகு 101, 501, 1001, என்ற எண்ணிகையில் குடங்களில் தண்ணீர் எடுத்துவரப்பட்டு, மந்திர எழுத்து பொறித்துள்ள கல் மீது ஊற்றி பூசை செய்கின்றனர். இப்பூசையின்போதும், மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஊற்றப்படும் நீர், இரு கற்களுக்கும் இடையே வெட்டப்பட்ட வாய்க்காலில் நிறைந்து நிற்கிறது. பிறகு சன்னியாசிக் கல்லுக்கு ஆடு பலியிடப்பட்டு, பலியிடப்பட்ட ஆட்டின் தலையை வாய்க்காலில் புதைத்து, வாய்க்காலை மூடிவிடுகின்றனர். சில இடங்களில், வாய்க்கல் அமைப்புடன் அறை போன்று பள்ளம் தோண்டப்பட்டு, மேற்சொன்ன வழிபாட்டுச் சடங்கை நிகழ்த்துகின்றனர்.{pagination-pagination}

சில இடங்களில் ஆடு, கோழி, பன்றி என மூன்று உயிர்கள் பலி தரப்பட்டும் இந்த வளமைச் சடங்கு நிகழ்த்தப்படுகின்றது. இப்பூசை இப்போது ‘முப்பூசை’ என்று குறிக்கப்படுகிறது. சில இடங்களில் சன்னியாசிக் கற்களுக்கு முன்னால் அக்னிக் குண்டம் வைக்கப்படுகிறது. கால்நடைகள் சன்னியாசிக் கற்களுக்கு இடையில் ஓட்டிவிடும் முன் அக்னிக் குண்டத்தில் வேப்ப இலைகள் கொண்டு தீ மூட்டப்படுகிறது.*6 பின்னர், ஊரில் உள்ள எல்லாக் கால்நடைகளையும் அழைத்துவந்து, பூசை செய்து பலியிட்டு மூடப்பட்ட கால்வாய் மீது இரு கற்களுக்கு இடையே ஓடவிடுவர். இந்த வளமைச் சடங்கின் மூலம், கால்நடைகளுக்கு வருகின்ற நோய் தீரும் என்ற நம்பிக்கையும், கால்நடைகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.*7

(தொடரும்)

மேற்கோள் எண்கள் விளக்கம்

1. பார்த்திபன். த, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு, சங்ககாலம், ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி, பக்.221-222.     

2. பூங்குன்றன்.ஆர், செங்கம் நடுகற்களில் தொறுப்பூசல், தொல்குடி, அரசியல், புதுமலர் பதிப்பகம், கோவை, 2001, ப, 14.

3. சாந்தலிங்கம். சொ, மன்று - ஒரு வரலாற்றுப் பார்வை, தொல்லியல் கருத்தரங்கு மலர், தொகுதி-2, ப.149.

4. அகம்.35:6-9

5. Rajan.K, South Indian Memorial stores, Mano Pathippagam, Thanjavur, 2000, p.136.

6. மேலது.

7. சுப்பிரமணியன், மு.கு.நூ., ப.188. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com