காசி எனும் வாரணாசி...ஓர் ஆன்மிகப் பயணம்...

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஓர் அனுபவத்தை நமக்கு கற்றுத் தரும். பயணிக்காமல்
காசி எனும் வாரணாசி...ஓர் ஆன்மிகப் பயணம்...

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஓர் அனுபவத்தை நமக்கு கற்றுத் தரும். பயணிக்காமல்
ஓர் இடத்திலேயே முடங்கிக் கிடந்தால் அனுபவமும் கிடைக்காது வாழ்வதற்கான அர்த்தமும் புரியாது. பயணிப்பதற்கு தூரம், காலம், நேரம் தேவையில்லை. எங்கும் பயணிக்கலாம்; எப்போது
வேண்டுமானாலும் பயணிக்கலாம். பண வசதி இருப்பவர்கள் உலக நாடுகளை சுற்றி பார்ப்பார்கள்.
அதிக வசதி இல்லாமல் இருப்பவர்கள் குறைந்தபட்சம் நமது தேசம் முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டாலே போதும் பல நாடுகளை சுற்றி வந்ததற்கு அது சமம் என கருதுகிறேன்.
பொழுதுபோக்கு சுற்றுலா, கலாசார சுற்றுலா, தொழில் நிமித்தமாக பயணிப்பது, ஆன்மிகச் சுற்றுலா, கல்விக்காக பயணிப்பது என ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நாம் பயணிப்பதற்கு பல பெயர்களை வைத்துக் கொள்கிறோம்.
எதோ ஒரு பயணம், எங்கோ ஒரு பயணம் வருடத்தில் ஒரிரு முறையாவது, வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு குடும்பத்துடன் நாம் பயணிக்க வேண்டும்.
அப்படி, நான் அண்மையில் பணிக்கு சில நாட்கள் ஓய்வு கொடுத்துவிட்டு குடும்பத்துடன் வட இந்தியாவில் உள்ள காசி நகருக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தேன்.
ஒவ்வொரு ஹிந்துவும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது காசி நகருக்கு புனிதப் பயணம் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படிப்பட்ட நகருக்கு இரண்டு முறை சென்று திரும்பியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 2015-ஆம் ஆண்டு முதல்முறையாக அங்கு சென்றேன்.
வாராணசி, காசி, பனாரஸ் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் புனித நகரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சிவனின் அனுக்கிரகம் இருக்கும் ஊர் என்று கூறப்படும் இந்தக் காசியை கோயில் நகரம் என்றும் கூறலாம்.
எங்கு திரும்பினாலும் கோயில்கள். குறுகிய சந்துக்களில் எப்போதோ கட்டப்பட்ட வீடுகள். அந்த வீடுகளுக்கு நடுவே சின்ன சின்னதாய் கோயில்கள். வெளிர்நீலம், வெள்ளை ஆகிய வண்ணப்பூச்சிகள் பூசப்பட்ட வீடுகள். இனிப்பு பலகாரக் கடைகள். பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பல புதிய முகங்களின் தரிசனங்களும் காசி நகரில் காணக் கிடைக்கும்.
ஆங்காங்கே மாடுகள் திரிந்து கொண்டிருக்கும். பார்ப்பதற்கே நாம் வேறு ஓர் உலகத்துக்கு வந்திருப்பது போன்று தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த காசி நகரம் உள்ளது. இமயமலையில் தோன்றும் கங்கை நதி இந்த நகரம் வழியாக பாய்ந்தோடுகிறது. பல அறிவியல் தன்மைகளை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும் கங்கை நதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த நதிக்கரையை யொட்டி, 50-க்கும் மேற்பட்ட படித்துறைகள் உள்ளன. அவற்றில், ஹரிச்சந்திரா , மணிக்கர்னிகா ஆகிய 2 படித்துறைகள் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.
அதற்குக் காரணம், இந்த இரண்டு படித்துறைகளிலும் பெரும்பாலான நேரங்களில் பிணங்கள் எரிந்து கொண்டேதான் இருக்கும். இறப்புக்கு பிறகு, கங்கை கரையையொட்டி உள்ள
இந்த 2 படித்துறைகளில் உடல் எரியூட்டப்பட்டு சாம்பலை கங்கை நதியில் கரைத்தால் ஆத்மாக்குமுக்தி கிடைக்கும் என்று காலம் காலமாக ஹிந்துக்களால் நம்பப்பட்டு வருகிறது.
கோயில் நகரம்:

அங்கிருக்கும் பல கோயில்கள் கடைகள், வீடுகளுக்கு மத்தியில் உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலே பல்வேறு கடைகள் மற்றும் வீடுகளுக்கு மத்தியில்தான் இருக்கிறது.
தென் இந்தியாவில் இருப்பது போல் அங்கு கோயில்கள் மிகப் பெரிய அளவில் கலை நயத்துடன்பிரமாண்டமாக இருப்பதில்லை. காசி நகரில் எங்கு திரும்பினாலும் கோயில்கள் இருப்பது போல், பீடாக் கடைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றன.
எந்த அளவுக்கு பக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு போதையும் நிரம்பிய நகரம் காசி என்று கூறினால் வியப்பதற்கல்ல.
ஆம், நம்மூரில் எங்கு திரும்பினாலும் தேநீர் கடைகள் இருப்பது போன்று அங்கு பீடாக் கடைகளும், பாங்கு கடைகளும் இருக்கின்றன.
கங்கா ஆரத்தி:

காசியில் மற்றொரு சிறப்பம்சம் கங்கை நதியை வணங்கும் வகையில் தினந்தோறும் கங்கா ஆரத்தி எடுக்கப்படும். விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள தசா அஸ்வமேதா படித்துறையில் இந்த ஆரத்தி காண்பிக்கப்படும்.
தசா அஸ்வமேதா படித்துறையை சிவனை வரவேற்பதற்காக பிரம்ம தேவன் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இன்னொறு தகவலின்படி, இங்கு நடைபெற்ற அஸ்வமேத யாகத்தில் 10 குதிரைகளை பிரம்ம தேவன் பலி கொடுத்ததாகவும் கதைகள் கூறப்படுகின்றன.
மணிகர்னிகா படித்துறை: மணிகர்னிகா படித்துறையில் பார்வதி தேவி தனது காதணியை தொலைத்துவிட்டு அதை சிவபெருமானிடம் தேடச் சொன்னதாக கதை ஒன்று நெடுங்காலமாக கூறப்பட்டு வருகிறது. சிவன் எப்போதும் அங்கு இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பார்வதி தேவி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, அந்தப் படித்துறையில் பிணங்கள் எரியூட்டப்பட்ட பிறகு, அந்த ஆத்மாக்களிடம் காதணியை நீங்களாவது கண்டீர்களா ? என்று சிவபெருமான் கேட்டு வருவதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக அந்த படித்துறையில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு அவர்களின் உறவினர்கள் வரிசையில் காத்து நிற்கிறார்கள்.
உடல்களை சிதையூட்டும் விறகுக் கடைகள் இந்தப் படித்துறைகளை சுற்றி அதிகமாகக் காணப்படுகிறது.
பைரவர் கோயில்: காசியில் பார்க்க வேண்டிய இடங்கள் மிக அதிகமாக உள்ளன. அவற்றில் கால பைரவர் ஆலய தரிசனம் அவசியம். ஆம், மரணமே இவரைக் கண்டால் பயம் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
இதுதவிர ராம்நகர் கோட்டை, இந்துப் பல்கலைக்கழகம், துர்கா தேவி கோயில், பட்டுப் புடவைகள் தயாரிக்கும் இடம் என நாம் காண வேண்டிய இடங்கள் பல உள்ளன.
சாரநாத்: காசியில் இருந்து சில கி.மீ. தொலைவில் சாரநாத் உள்ளது. இவ்வூரில் உள்ள மான் பூங்காவில் அமைந்துள்ள ஒரு மரத்தடியில் புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதை போதித்தார்.
இந்த நகரில் மிகப் பெரிய புத்தர் சிலைகளும், அசோகத் தூண் (ஸ்தூபி) மற்றும் சில கோயில்களும் உள்ளன. இங்குள்ள அருங்காட்சியகமும் தவறாமல் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
நம்மூரில் உள்ள மாமல்லபுரம் போன்ற மிகச் சிறிய ஊர் தான் சாரநாத். ஒரே நாளில் அனைத்து முக்கிய இடங்களையும் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம்.
தூசி நகரமாகிய காசி: காசி நகருக்கு கடந்த முறை சென்றிருந்தபோது இருந்ததைக் காட்டிலும் இந்த ஆண்டு (2017) மிக மோசமாக இருந்தது என்று கூற வேண்டும். எந்த சாலையும் சரியில்லை. எங்கு பார்த்தாலும் தூசிகள் இருந்த வண்ணம், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்ல வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது இந்த காசி நகரம்.
'தூய்மை இந்தியா' எனும் திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான காசியா இப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காசி நகருக்கு படையெடுத்து வருவதால் மக்கள் நெருக்கடி மிக அதிக அளவில் இருக்கிறது. அந்த நகருக்குள் பேருந்து வசதி கிடையாது.
எங்கு செல்ல வேண்டுமானாலும் சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, பேட்டரி கார் வாகனங்களில்தான் செல்ல வேண்டும். சாலைகளும் மேடு, பள்ளங்களுடன் காணப்படுகின்றன.
காசி நகருக்கு செல்ல விரும்புவர்களும், அங்கு செல்பவர்களும் பெரும்பாலும் வயது முதிந்தவர்கள் மட்டுமே. ஆனால், அவர்கள் இதுபோன்ற சாலைகளில் பயணிக்க நேரிட்டால் அவர்களின் நிலை?
தற்போது அந்த மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசாவது ஏதாவது வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
திரிவேணி சங்கமம்:

காசியில் இருந்து சில மணி நேரங்களில் சென்றுவிடக் கூடிய இடம் அலகாபாத் நகரில் உள்ள திரிவேணி சங்கமம். இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என 3 முக்கிய நதிகளும் ஒன்று கூடுகிறது.
அலகாபாத் நகரில்தான் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்தார். அவரது மகளும், இந்தியாவின் முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தி, பிரதமர் வி.பி.சிங் ஆகியோரும் பிறந்த ஊர் அலகாபாத் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள நேரு இல்லம் பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நகரில் பார்வையிடுவதற்கு பல்வேறு இடங்களும், கோயில்களும் உள்ளன.
அயோத்தி: இந்த முறையில் அயோத்தி நகருக்கும் சென்று திரும்பினேன். அப்பப்பா எவ்வளவு சோதனை செய்வார்களோ ராமர் ஜென்ம பூமியை பார்ப்பதற்கு? பலகட்ட சோதனைக்கு பிறகு ராமர் கோயில் இருந்த இடத்தைப் பார்த்தோம்.
புத்த கயை:

பிகார் மாநிலத்திலுள்ள புத்த கயை நகருக்கும் சென்றோம். புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் அமைந்துள்ள இடம் மிக மிக அமைதியாக உள்ளது. அங்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் அங்கேயே தங்கிவிடலாமா? என்ற எண்ணம் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அங்கு வெளிநாட்டவர்கள் பலரும் காவி உடை அணிந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுகின்றனர்.
சில வெளிநாடுகளில் புத்தருக்கு கோயில்கள் உள்ளன. அந்தந்த நாடுகளில் இருப்பதைப் போன்றே கயை நகரைச் சுற்றிலும் புத்தருக்கு கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்தக் கோயில்கள் அனைத்தும் அனைத்து காணத் தவறவிடக்கூடாதவை.
உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் ஹிந்தி மொழியே பேசப்படுகின்றன. ஹிந்தி தெரிந்தவர்களுடன் சுற்றுலா சென்றால் மொழிப் பிரச்னையை சமாளிக்கலாம்.
மொத்தத்தில் ஆன்மிகச் சுற்றுலா மிகச் சிறப்பாக அமைந்தது. காசி, கயை போன்ற வட இந்திய நகரங்களுக்கு முடிந்தால் ஒரு சுற்றுலா சென்று வாருங்கள்.


-க.தி.மணிகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com