திருப்பதியில் அமித் ஷாவிற்கு எதிராக போராட்டம்: வாகனம் மீது கல்வீச்சு!

திருப்பதியில் பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களை வீசியதால் பரபரப்பு
திருப்பதியில் அமித் ஷாவிற்கு எதிராக போராட்டம்: வாகனம் மீது கல்வீச்சு!

திருப்பதியில் பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட போது கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி ஆந்திராவிற்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அங்குள்ள அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்திலும் மத்திய அரசு நேர்மறையான நகர்வை முன்னெடுக்கவில்லை. இதனால் மோதல் ஏற்பட்டு மத்திய அரசில் இருந்து மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் வெளியேறியது. 

இந்நிலையில், கர்நாடகாவில் ஒரு மாத தேர்தலில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு பாஜக தலைவர் அமித்ஷா நேற்று இரவு திருப்பதி வந்தார். காலை 8 மணியளவில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். அவருடன் பாஜக கட்சியினரின் கார்களும் வந்தன.  

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் தெலுங்குதேசம் கட்சியினர் திரண்டு ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆந்திராவுக்கு 2014-ஆம் ஆண்டு மறுசீரமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரியதுடன், மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தையும் வழங்கவேண்டும் என கோஷமிட்டனர். அமித்ஷாவின் கார் அந்த பகுதியை கடந்தபோது கூட்டத்தில் இருந்த சிலர் கற்களை வீசினர். 

இதில் அமித்ஷாவின் கார் மீது கற்கள் விழவில்லை என்றாலும் அவருடன் வந்த ஒரு கார் மீது கல் விழுந்ததாக கூறப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கட்சியினரின் இத்தகைய ஒழுங்கீனமான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஒழுங்கீனமான நடவடிக்கைகளால் கட்சிக்குத் தீங்கிழைக்காதீர்கள். எல்லோரும் கட்சி கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும். கட்சியின் எந்த போராட்டத்திலும் மோதல்கள் அல்லது பதட்டங்களுக்கு இடமில்லை என்று நாயுடு கூறினார்.

சம்பவம் குறித்து பாஜகவினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது, கல்வீச்சு சம்பவம் குறித்து போலீஸ் விசாரித்து வருவதாக தெரிவித்த திருப்பதி நகர்ப்புற எஸ்.பி. அபிஷேக் மொஹந்தி, எங்களுக்கு முதல்கட்ட தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளது, உண்மைதன்மை குறித்து விசாரித்து வருகிறோம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com