மாமல்லபுரம் சிற்பங்களுக்கு ரசாயனக் கலவை பூசும் பணி தொடக்கம்: பார்வையாளர்களுக்கு 15 நாள்கள் அனுமதி இல்லை

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கற்சிற்பங்களை கடல் காற்று உப்பு படிம பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் வகையில், அவற்றிற்கு ரசாயன கலவை பூசும் பணி தொடங்கியுள்ளது.
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கடற்கரை கோயில் உள்ளே செல்ல முடியாமல் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள்.
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கடற்கரை கோயில் உள்ளே செல்ல முடியாமல் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள்.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கற்சிற்பங்களை கடல் காற்று உப்பு படிம பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் வகையில், அவற்றிற்கு ரசாயன கலவை பூசும் பணி தொடங்கியுள்ளது. இதனால், பார்வையாளர்கள் 15 நாள்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
செங்கல்பட்டை அடுத்த மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. பல்லவ மன்னர்களின் ஆட்சியையும், சிற்பக்கலை ஆர்வத்தையும் பறைசாற்றும் விதமாக பல்லவர்களின் கலைநயத்தால் உருவாக்கப்பட்ட கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்சுணன் தபசு, பழைய கலங்கரை விளக்கம், வராகி மண்டபம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட 32 வகையான புராதன சின்னங்கள் இங்கு உள்ளன.
இவற்றில் கடற்கரை கோயில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. யுனெஸ்கோவால் உலக புராதனச் சின்னமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பின்போது, ராட்சத அலைகள் தாக்கியும் இக்கோயில் சேதமின்றி தப்பியது.
தற்போது, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் மாமல்லபுரத்தில் உள்ள கற் சிற்பங்கள் பராமரிக்கப்பட்டு, பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 28 ஆண்டுகளுக்கு முன், இந்த கடற்கரை கோயிலில் மூன்று புறமும் கடல் உள்புகும் நிலை ஏற்பட்டது.
அப்போது கோயிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கோயிலைச் சுற்றி பெரிய அளவிலான பாறாங்கற்கள் கொட்டப்பட்டு, பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. அந்த கற்கள் கடல்நீர் உள்புகாமல் கோயிலை பாதுகாத்து வருகின்றன.
இருப்பினும் உப்பு கலந்த கடல் காற்றினால் கோயிலும், சிற்பங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கடல்காற்றினால் உப்பு படிந்து, அரித்த இடங்களில் சிறு சிறு துளைகள் ஏற்பட்டு மழைநீர், மாசுகள் உள்புகுந்து பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க தொல்லியல் துறையினர் ஆண்டுதோறும் ரசாயன கலவை பூச்சுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் கற் சிற்பங்கள், கடற்கரை கோயில், பஞ்ச பாண்டவர்களின் ரதங்களான ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட முக்கிய கற்சிற்பங்ககளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ரசாயன கலவை பூசும் பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டும் தற்போது தொல்லியல் துறையின் வேதியியல் பிரிவு வல்லுநர்கள் ரசாயன கலவை பூச்சு பணியினை மேற்கொண்டுள்ளனர். கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட சிற்பங்கள் முழுவதும் சுத்தமான நீரில் ரசாயன கலவை கலக்கப்பட்டு பூசப்படுகிறது.
அதன்படி, உப்பு படிமங்களை அகற்ற காகிதக் கூழுடன், சிலிகான், பாலிமர் ரசாயன கலவை கலந்து பூசப்படுகிறது. உப்பு படிந்திருக்கும் தன்மையைப் பொருத்து அதிகபட்சமாக 15 நாள்கள் வரை இக்கலவை பூசப்பட்டு, உப்பு படிமங்கள் அகற்றப்படும். இப்பணியில் 15}க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், இப்பணி நடைபெறும் 15 நாள்களும் (பிப்ரவரி 5} வரை) மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com