சபரிமலை யாத்திரை...

பயணங்களில் பல விதங்கள் உண்டு. அதில், ஆன்மிகப் பயணம் நமக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
சபரிமலை யாத்திரை...

பயணங்களில் பல விதங்கள் உண்டு. அதில், ஆன்மிகப் பயணம் நமக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும், சபரிமலை யாத்திரை மேற்கொள்வது தனிச்சிறப்பு மிகுந்த ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்துகொண்டு, ஒரு மண்டலம் விரதம் இருந்து புனித யாத்திரையை ஐயப்ப பக்தர்கள் மேற்கொள்வார்கள்.
மற்ற பயணங்களை போல் அல்ல சபரிமலை பயணம். இதில் சிறிய பாதை, பெரிய பாதை என 2 வழிகள் உள்ளன. பெரிய பாதை என்பது 48 மைல் தொலைவு கொண்டதாகும்.
கல், முள் என்று மிக கடினமான பாதையைக் கொண்டது. எருமேலியிலிருந்து சபரிமலை வரை கிட்டத்தட்ட 75 கி.மீ. இருக்கும். சிறிய பாதை சில கி.மீ. தொலைவு மட்டுமே. எனவே, பல பக்தர்கள் சிறிய பாதையில் அதிகமாக சென்று வருகின்றனர்.

நான் இதுவரை எட்டு முறை சபரிமலைக்கு சென்று வந்திருக்கிறேன். கடந்த ஆண்டு (2017) ஒன்பதாவது முறையாகச் சென்று திரும்பும் பாக்கியம் எனக்கு கிட்டியது. சபரிமலைக்குச் செல்வது என்பது மிகவும் புனிதமான ஒரு செயல் என்று கருதுகிறேன். பெரும்பாலும் சிறிய வழிப் பயணத்தில் சென்றே உண்மையின் உருவாக வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பனை இதுவரை தரிசனம் செய்திருக்கிறேன். இளமை காலத்தில் நான் முதன்முதலாக மாலை அணிந்து சென்றபோது, பெரிய பாதையில் சென்றதாக நினைவு இருக்கிறது. ஆனால், விவரம் அறிந்து இதுவரை பெரிய பாதையில் நான் சென்றதில்லை.

கடந்த டிசம்பர் மாதம் எழும்பூரில் இருந்து கொல்லம் ரயிலில் கேரள மாநிலம், செங்கனூர் சென்றோம். ரயில் சுமார் அரை மணி நேரம் தாமதம் என்பதால் அதிகாலை 4.30 மணியளவில் செங்கனூர் சென்றடைந்தோம். அங்கிருந்து எருமேலிக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. ஆனால், பம்பை செல்வதற்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்ற கணக்கில் அடிக்கடி வந்துகொண்டிருந்தது.

ஐயப்பனின் அறுபடை வீடு: தமிழகத்தில் முருகனுக்கு அறுபடை வீடு இருப்பது போல், கேரளத்தில் ஐயப்பனுக்கு சபரிமலை, எருமேலி உள்பட அறுபடை வீடுகள் உள்ளன. இந்த முறை அறுபடை வீட்டுக்கும் சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், செங்கனூரில் இருந்து எருமேலிக்கு நேரடி பேருந்து வசதி இல்லை என்று தெரிந்ததும் கேரள அரசின் போக்குவரத்துத் துறை மீது அதிருப்தி அடைந்தேன். அங்கு நம்மூர் போல் அல்ல; அந்த மாநிலம் மலைகள் நிறைந்தது என்பதால் நாம் நினைப்பது போல் எல்லாம் பேருந்து வசதி இருக்காது என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
அங்கு விசாரித்து பார்த்தபோது, கோட்டயத்திலிருந்து எருமேலிக்கு அடிக்கடி பேருந்து வசதி உண்டு என்பதை அறிந்து "அடடா கோட்டயத்தில் ரயில் நின்ற போதே இறங்கியிருக்கலாமோ" என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.
பின்னர், அங்கிருந்து பம்பா செல்லலாம் என ஒரு மனதாக முடிவெடுத்தோம். இந்த முறை எனது தாயார் முதல்முறையாக மாலை அணிந்து உடன் வந்தார். எனது உறவினரும், நண்பருமான ஹரிஹரன் உள்பட 3 பேர் மட்டுமே இந்த முறை சென்றோம்.

பசுமை சூழ்ந்த கேரளம்: கேரளம் என்றாலே பசுமைதான். கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளத்துக்கு நான் எப்போது சென்றாலும் பேருந்துப் பயணத்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து செல்வதையே விரும்புவேன். ஜில்லென்ற காற்று முகத்தை வருடி, தலை முடியை கோதிவிட்டுச் செல்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணரும்போது மட்டுமே அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

வளைந்து, வளைந்து மலைப் பாதையில் சென்றதால் அவ்வப்போது தலைசுற்றல் வந்தது. அண்டை மாநிலத்தில் இருந்தாலும் அதுபோன்ற ஓர் எண்ணம் எழாத வகையில், தமிழ் குரல்கள் மட்டுமே பேருந்து முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.
சென்னையிலிருந்து வந்த ஒரு அன்பர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து காரசாரமாக தன்னுடன் வந்தவர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார். வழியில் உணவுக்காக பேருந்து நின்றது.

தேநீரை அருந்திவிட்டு அப்படியே செல்லிடப்பேசியில் சில புகைப்படங்களையும் எடுத்தோம். சரியாக, 9 மணியளவில் பம்பா சென்றடைந்தோம். மயக்கம் வருவதுபோல் இருந்ததால், பேருந்தைவிட்டு இறங்கியவுடன் லெமன் சோடா அருந்தினோம்.
(கேரளத்தின் பிரதான காலை உணவான புட்டு+கடலை கறி மற்றும் லெமன் சோடாவுக்கும் நான் அடிமை)

நாம் ஏற்கெனவே ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள ரசீதையும், நமது அடையாள அட்டையையும் பம்பா நதியின் முன்பு, அந்த மாநில போலீஸார் அமைத்துள்ள சிறப்புக் கவுண்ட்டரில் காண்பித்தால், அதில் சீல் ஒன்றை பதிவு செய்து தருகிறார்கள்.
பம்பையில் புனித நீராடி விட்டு, இறைவனை வேண்டிக் கொண்டு இருமுடியை தலையில் சுமந்து சிறிய பாதை வழியாக சபரிமலை ஏறத் தொடங்கினோம்.

கன்னிமூல கணபதி: மலை அடிவாரத்தில் முதலில் வரும் கன்னிமூல கணபதி திருக்கோயிலில் தேங்காயை உடைத்துவிட்டு மலையேறத் தொடங்கினோம். மலையடிவாரத்தில் நாம் கொண்டு செல்லும் பைகள் ஸ்கேன் சோதனைக்கு உள்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மலையேற அனுமதிக்கப்படுகிறோம்.

ஒரு கட்டத்தில் தாயாருக்கு மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது. எனினும், அந்த இடத்தில் நிர்வாகம் ஏற்படுத்தியிருந்த மருத்துவ குடிலில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் யாத்திரையைத் தொடர்ந்தோம். முதலில் நீலிமலை. இந்த மலையை ஏறுவது சற்று கடினமாகவே இருக்கும். இருப்பினும், சரண கோஷங்களை எழுப்பிக் கொண்டே தொடர்ந்து ஏறிச் சென்றால் பெரிதாக எதுவும் தெரியாது. அடுத்தது அப்பாச்சிமேடு. அதைக் கடந்தால் சமதளம் வந்துவிடும். அதைத் தொடர்ந்து, சபரி பீடம், சரங்குத்தி ஆகிய இடங்களைக் கடந்து செல்ல வேண்டும்.
சபரிமலைக்கு முதல்முறையாக வருபவர்கள் சரங்குத்தியில் தாங்கள் கொண்டுவரும் மரத்தாலான வேல், சரம் ஆகியவற்றை குத்திவிட்டுச் செல்ல வேண்டும்.

அதையடுத்து, இரு பாதைகள் வருகின்றன. ஒருபாதையில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களையும், மற்றொரு பாதையில் முன்பதிவு செய்யாதவர்களையும் போலீஸார் பிரித்து அனுப்புகின்றனர். இதன்மூலம், முன்பதிவு செய்தவர்கள் சற்று விரைந்து செல்ல முடியும். பிற்பகல் 1 மணியுடன் கோயில் நடை சாத்தப்பட்டதால் அங்கேயே நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, தன்னார்வ இளைஞர்கள் பக்தர்களின் தண்ணீர் தாகத்தை போக்கிக் கொண்டிருந்தனர்.

தன்னார்வலர்களாக தமிழக மாணவர்கள்: தூத்துக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞருடன் கலந்துரையாடினேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், தமிழகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னார்வலர்களாக இங்கு வந்திருக்கிறோம் என்று கூறினார். அவர்களை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அழைத்து வந்திருக்கிறது.
அவர்கள் அனைவரும் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு பணிக்கு உள்படுத்தப்படுவதாக அறிந்தேன். ஆகாஷ் போன்ற இளைஞர்களால் அங்கிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும் என்பது நிதர்சனம்.

3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, 18 படி ஏறி சுவாமி தரிசனம் செய்தோம். பின்னர், மஞ்ச மாதா சன்னதிக்கு பின்புறம் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் அருகே ஓய்வெடுத்தோம். அன்றைய தினம் நெய் அபிஷேகம் செய்ய இயலாது என்பதால் அங்கு தங்க முடிவு செய்தோம். மறுநாள் காலை நெய் அபிஷேகத்தை முடித்துக் கொண்டு மலையில் இருந்து இறங்கத் தொடங்கினோம். சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முதலுதவி சிகிச்சை மையங்கள், கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி என அனைத்தும் சிறப்பாக இருந்தது.

மலையிலிருந்து இறங்கி பம்பா வந்து சேர்ந்தோம். முதல்முறையாக எனது தாயார் வந்திருக்கிறார் என்பதால், எருமேலிக்குச் செல்ல முடிவு செய்தோம். எருமேலியில் நாங்கள் சென்ற சமயம் கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. பின்னர், அன்னதான கூடத்தில் உணவு அருந்திவிட்டு, வாவர் சுவாமி கோயிலுக்குச் சென்று திரும்பினோம்.

பந்தள ராஜா: அங்கிருந்து பந்தளம் செல்ல முடிவு செய்தாேம். ஆனால், நேரடி பேருந்து வசதி இல்லை. பத்தனம்திட்டா நகருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து செல்ல வேண்டும் என்று ஒருவர் யோசனை வழங்கி வழிகாட்டவும் செய்தார். அவர் கூறியபடி, அங்கிருந்து ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையும், பாண்டிய வம்சாவளியினருமான மன்னன் ராஜசேகரனின் அரண்மனைக்குச் சென்றோம். மாலை நேரத்தில் சென்றதால் அந்தக் கோயிலும் நடை சாத்தப்பட்டிருந்தது. திறக்கும் வரை காத்திருந்தோம்.
முன்னதாக, அரண்மனையை சுற்றிப் பார்த்த எங்களுக்கு, திருவாபரணப் பெட்டியை தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
கேரள மாநிலத்தில் கோயில்களில் பெரும்பாலும் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது என்பது நியதி.
சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, ஆறு ஒன்றைக் கடந்துசென்றால் சிவன் கோயில் இருக்கும் என்பது தெரியவந்தது. அங்கு சென்றோம். வழியில் ஒரு பெரிய தொங்குபாலம் ஆற்றுக்கு நடுவே இருந்தது.

பதைபதைப்பை ஏற்படுத்திய ஆட்டோ பயணம்: பந்தளத்திலிருந்து அச்சன்கோயிலுக்கு 35 கி.மீ. என்று கூகுள் செய்து தெரிந்துகொண்டேன். மாலை வேளை என்பதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருக்கும் என்று கருதி ஆட்டோவில் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஆட்டோ ஓட்டுநரிடம் அச்சன்கோயிலுக்கு செல்வது எப்படி என்று வினவியபோது, அடூர் வரை சென்று அங்கிருந்து நீங்கள் அச்சன்கோயிலுக்கு பேருந்தில் செல்லலாம் என்றார். பின்னர், அடூருக்கு ரூ.200 ஆகும் என்றார். நான் அச்சன்கோயில் வரை எவ்வளவு என்றபோது ரூ.400 என்றார். சரி. மாலை 6 மணி ஆகிவிட்டதே பேருந்தில் சென்றால் நேரம் ஆகிவிடும். அங்கு கோயில் நடை சாத்திவிடப்போகிறார்கள் என்று கருதி, ஆட்டோவில் செல்லலாம் என்று கூறினேன்.
ஆனால், எடுத்த எடுப்பில் ஹரிஹரன் வேண்டாம் என்று மறுத்தார். ஆட்டோ ஓட்டுநரை பார்த்தால் எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று என்னை எச்சரித்தார். மனிதரை மனிதர் முதலில் நம்ப வேண்டும் என்று வசனம் பேசிவிட்டு வா செல்லலாம் நேரம் ஆகிறது என்று சற்று விளக்கிச் சொன்னேன்.

ஆனால், ஆட்டோ ஓட்டுநரோ நேராக ஒரு கடைக்குச் சென்று ஆட்டோவை நிறுத்தினார். ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள் என்றேன். மலையாளம் ஓரளவு பேசத் தெரியும் என்பதால், அவர் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. "அச்சன்கோயில் வனப்பகுதி என்பதால் நான் திரும்பி தனியாக வர வேண்டியிருக்கும். அதனால் என்னுடன் நண்பர் ஒருவரை அழைத்துக் கொள்கிறேன்" என்றார். அவர் வர 5 நிமிடம் ஆகும் என்றும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

சரி என்று நாங்களும் பொறுமை காத்தோம். அதற்கு இடைப்பட்ட வேளையில், என்னிடமும், ஹரியிடமும் எங்கு வேலை பார்க்கிறீர்கள் என்று அவர் விசாரித்தார். சாதாரணமாக கேட்பதற்கும் விசாரிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
ஹரி என்னிடம் அவரை கவனி என்பது போல் ஜாடை செய்தார். அப்போது எனக்கு லேசாக மனதில் சந்தேக உணர்வு எழுந்தது.
உடன் வேறு அம்மாவும் வந்திருப்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு தோன்றியது.

அவரது நண்பர் 10 நிமிடங்கள் கழித்து வந்தார். கைப்பேசியுடன் இணைக்கும் வகையிலான சிறிய ஒலிப்பெருக்கியை எடுத்துக் கொண்டார் ஆட்டோ ஓட்டுநர்.
பத்திரிகையில் பணிபுரிந்து வருவதால் பல்வேறு நிகழ்வுகளை தினமும் படித்தும், பார்த்தும் வரும் எனக்கு மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு பதற்றம் உருவாகியது. இருப்பினும், ஐயப்பனை மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். அப்போது, கூகுள் வரைபடத்தை பயன்படுத்தலாம் என்று சட்டென்று ஒரு யோசனை மனதில் உதித்தது.

ஹரியின் கைபேசி ஏற்கெனவே சார்ஜ் இல்லாமல் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனது கைபேசியிலும் 40 சதவீதம் சார்ஜே இருந்தது. வரைபடத்தில் அச்சன்கோயில் செல்லும் வழியைத் தேர்வு செய்தேன். அடூர் வரை சரியாக சென்ற ஆட்டோ, அதன்பிறகு திசை மாறியது. 7 மணியை கடந்துவிட்டதால் இருள் சூழத் தொடங்கியது. அதற்கு நடுவில் ஒலிப்பெருக்கியில் பாடலை வேறு அதிக சப்தத்துடன் ஒலிக்கவிட்டு அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். சரி, இனிமேலும், பொறுமை காக்க முடியாது என்று ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். எங்கு செல்கிறீர்கள் என்றேன். "என்ன கூகுள் மேப்பா? புனலூர் செல்கிறேன்" என்றார். நான் அச்சன்கோயில் தானே செல்ல வேண்டும் என்றேன் என்று பதில் கேள்வி எழுப்பினேன்.

இதையடுத்து, எதையோ சொல்லி மழுப்பிய அவர், ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றில் நிறுத்தி அங்கிருந்த ஆட்டோகாரர்களிடம் ஏதோ விசாரித்தார். திரும்பி வந்தபோது தனது சீருடையான காக்கி சட்டையையும் கழற்றி ஆட்டோவில் எறிந்தார் (உள்ளுக்குள் அவர் கலர் சட்டை அணிந்திருந்தார்). எங்களிடம் வேறு ஒரு வழி இருக்கிறது அதில் செல்லலாமா? என்று வினவினார்.
எனக்கு மனதில் ஏதோ சரியாக படவில்லை. அப்போது, ஒரு பேருந்து குறுக்கிட்டது. அது புனலூர் செல்லும் பேருந்து என்பதை அறிந்தேன். உடனடியாக, அந்தப் பேருந்து நிற்கும் அடுத்த நிறுத்தத்தில் எங்களை இறக்கிவிட்டு விடுங்கள் என்றேன். அவரும், இறக்கிவிட்டார். 35 கி.மீ. ஆகியிருக்கிறது என்றார். எனக்கு சட்டென்று கோபம் தலைக்கேறியது.

அச்சன்கோயில் செல்ல முடியாது என்று முன்பே கூறியிருக்க வேண்டியதுதானே. நாங்கள் பேருந்திலேயே சென்றிருப்போமே என்று கூறினேன். மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்குள், ரூ.300 கொடுத்துவிட்டு இறங்கு என்று ஹரி வற்புறுத்தினார்.
அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு இறங்கி தாயாரின் முகத்தை பார்த்தேன். பெருமூச்சு விட்டார்.

அங்கிருக்கும் ஒரு காவலரிடம் நடந்ததை விளக்கினேன். அவரோ, அச்சன்கோயில் வனப் பகுதி. இந்த நேரத்தில் செல்ல முடியாது என்றார். கோயிலும் முன்னிரவே மூடப்பட்டு விடும் என்பதை பின்னர் அறிந்தேன். அந்த ஆட்டோ ஓட்டுநர் எதற்காக எங்களை இதுபோல் அலைக்கழிக்க நினைத்தார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. அவர் சந்தேகிக்கும்படி நடந்துகொண்டுவிட்டார் என்பதே வருத்தம். மொழி தெரியாத மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றால், குறிப்பாக இரவு நேரங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை எனக்கு இந்த அனுபவம் கற்றுக்கொடுத்திருக்கிறது.


சற்று குழப்பம் அடைந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் அங்கிருந்து தென்காசி பேருந்தில் ஏறினோாம். அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை ஆகிய எஞ்சிய 3 அறுபடை வீடுகளை தரிசிக்க முடியவில்லை. தென்காசிக்கு இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து மறுநாள் காலை வந்து சேர்ந்தோம். மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து திருப்பரங்குன்றம் சென்றோம். மலையைக் குடைந்து கட்டப்பட்டிருந்த அறுபடை வீடுகளில் ஒன்றான அந்தக் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, அங்கிருந்து மற்றொரு அறுபடை வீடான பழமுதிர்ச்சோலை சென்றோம். அழகர் கோயிலும் அங்குள்ளதால் கள்ளழகரையும் தரிசித்தோம். சென்னை மாநகரப் பேருந்துகளில் விரும்பம்போல் பயணம் செய்யும் ஒரு நாள் பயணச்சீட்டு ரூ.50-க்கு வழங்கப்படுவதுபோல், மதுரை போக்குவரத்தும் அந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பயணச்சீட்டை கொண்டு இரவு 10 மணி வரை பேருந்துகளில் ஏறி இறங்கலாம். பின்னர், மதுரை பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து சென்னை வந்தடைந்தோம். பயணம் இனிதே நிறைவுற்றது.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com