12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் "மகா மஸ்தகாபிஷேகம்'

கர்நாடகத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் சென்னராய பட்டண தாலுகாவில் உள்ள சிராவண பெலகோலாவில் 57 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் "மகா மஸ்தகாபிஷேகம்'

கர்நாடகத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் சென்னராய பட்டண தாலுகாவில் உள்ள சிராவண பெலகோலாவில் 57 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள கோமட்டீஸ்வரா சிலை, இந்தியாவில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

கி.பி. 981-ஆம் ஆண்டு கங்கா ராஜவம்சத்தைச் சேர்ந்த தளபதியும், அமைச்சருமான செüந்தர்யா, தனது தாயாரின் நினைவாக இந்தச் சிலையை நிறுவியதாகக் கூறப்படுகிறது. எவ்வித பிடிப்பும் இல்லாமல் உலகில் நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய சிலைகளில் இதுவும் ஒன்றாகும்.

கர்நாடகத்தில் கோமட்டீஸ்வரா என்றழைக்கப்படும் இவரை, ஜைன மதத்தினர் "பாகுபலி' என்றழைக்கின்றனர். பாகுபலி என்றால் என்றால் வலுவான கரங்களைக் கொண்டவர் என்று பொருள். இச்சிலையை வடிவமைக்க 12 ஆண்டுகள் ஆயிற்று என்பதால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேகம் நடத்தப்படுகிறது. மேலும் 12 என்ற எண் அதிர்ஷ்டமானது என ஜைனர்கள் கருதுகின்றனர். ஜைனர்கள் வரலாற்றின்படி கோமட்டீஸ்வரா எனப்படும் பாகுபலி தியானத்தின் மூலம் பிறப்பு, இறப்பு அற்ற பூரண விடுதலை பெற்ற ஆன்மாவாகக் கருதப்படுகிறார். யார் இந்த பாகுபலி?

அயோத்தியை அரசாண்ட இஷ்வாகு ராஜ வம்சத்தைச் சேர்ந்த ரிஷபந்ததாதா} சுனந்தா தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் ஒருவர் தான் பாகுபலி. ஜைன மதத்தின் முதலாவது ஆன்மிக குருவாகக் கருதப்படும் ரிஷபந்ததாதா துறவறம் செல்ல நினைத்தபோது தன்னுடைய ராஜ்யத்தை தனது 100 மகன்களுக்கும் பிரித்துத் தர தீர்மானித்தார். அவரது மூத்த மகன் பரதா, தன் சகோதரர்களுக்கு அளித்த ராஜ்யங்களை, அயோத்தியாபுரியைத் தலைநகரமாகக் கொண்ட தன்னுடைய ராஜ்யத்துடன் இணைத்துக் கொள்ள விரும்பினான். ஆனால் பாகுபலியைத் தவிர மற்ற 98 சகோதரர்களும் தங்களது ராஜ்யங்களை, தென்னிந்தியாவில் போதனாபுரைத் தலைநகராகக் கொண்ட பாகுபலியிடம் ஒப்படைத்துவிட்டு ஜைன துறவிகளாக மாறினர். தன் சகோதரனான பாகுபலியிடமிருந்து மொத்த ராஜ்யத்தையும் அபகரிக்க நினைத்த பரதா, பாகுபலி மீது படையெடுத்து வர தீர்மானித்தான்.

தேவையில்லாமல் சகோதரர்களிடையே நடக்கும் போரில் ஆயிரக்கணக்கில் வீரர்கள் மடிவதையும், சகோதரர்கள் ரத்தம் சிந்துவதையும் விரும்பாத இருபுறங்களிலும் இருந்த அமைச்சர்கள், ஆயுதம் இன்றி இரு சகோதரர்கள் மட்டுமே நேருக்கு நேர் கண்களைப் பார்த்து சண்டையிடுவது, நீரில் சண்டையிடுவது, மல்யுத்தம் செய்வது என ஆலோசனை வழங்கினர். மூன்றிலும் பாகுபலி, தன் மூத்த சகோதரன் பரதாவை வென்று வெற்றிவாகை சூடினார். சண்டையில் வெற்றி பெற்றாலும் இந்த உலகத்தின் மீது வெறுப்படைந்த பாகுபலி, துறவறம் மேற்கொள்ள தீர்மானித்தார். தனது ராஜ்யத்தை பரதாவிடம் ஒப்படைத்ததோடு, முற்றும் துறந்த துறவியாக ஆடைகளையும் களைந்து நின்ற நிலையில் தியானத்தின் மூலம் மோட்சம் அடைய விரும்பினார். ஓராண்டு காலம் மழை, வெயில் பாராமல் விஷ ஜந்துகள் தன் உடல் மீது ஏறுவதையும் பொருட்படுத்தாமல் நின்ற நிலையில் பாகுபலி தியானம் செய்து கொண்டிருந்தபோது செடி, கொடிகளும் அவரது கால்கள் மீது படர்ந்தன. ஓராண்டு காலம் முடிந்த கடைசி நாளன்று பாகுபலியைச் சந்திக்க வந்த பரதா, தன் ஆணவத்தை விட்டு அடக்கத்துடன் அவரை வணங்கி ஆசி பெற்றான். பாகுபலி தனது திடமான தியானத்தின் மூலம் இம்மை, மறுமை நிலையிலிருந்து விடுபட்டு தூய்மையான ஆன்மாவுடன் மோட்சத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது.

சிராவண பெலகோலாவில் அமைந்துள்ள பாகுபலி சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். இது தவிர கர்நாடகத்தில் 12-ஆம் நூற்றாண்டில் மைசூர் மாவட்டம் கொம்மட்டகிரியில் 20 அடி உயரத்திலும், 1430-ஆம் ஆண்டு உடுப்பி மாவட்டம் கார்கலாவில் 42 அடி உயரத்திலும், 1604-ஆம் ஆண்டு தட்சண கன்னடா மாவட்டம் 35 அடி உயரத்திலும், 1973-ஆம் ஆண்டு தட்சண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் 39 அடி உயரத்திலும் பாகுபலி சிலைகள் நிறுவப்பட்டன. 

சிராவண பெலகோலாவில் சந்திரகிரி, விந்தியகிரி என இரு மலைகள் உள்ளன. இதில் விந்தியகிரி மலையில் அமைந்துள்ள பாகுபலி சிலைக்குதான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆச்சார்யா பத்ரபாகு, அவரது சீடர் சந்திரகுப்த மெüரியா, ராஷ்ட்ரகூட ராஜ வம்சத்தின் கடைசி மன்னர் மான்யகேதா ஆகியோர் இங்கு தங்கி தியானம் செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.

இந்த ஆண்டு 88-ஆவது மகா மஸ்தகாபிஷேகம், பிப்ரவரி 17 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் நாள் 108 கலச நீர் அபிஷேகம் நடத்த பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து கடைசி  நாள் வரை 1,008 கலச நீர் அபிஷேகம் செய்யும்போது ஒவ்வொரு ஆன்மிக குருவின் பெயரிலும் பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். இப்படி அபிஷேகம் செய்வதன் மூலம் ஆன்மா பரிசுத்தமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டு மகா மஸ்தகாபிஷேகம் நிகழ்ச்சியை பிரம்மாண்டமான முறையில் நடத்த கர்நாட மாநில அரசு ஏற்பாடுகள் செய்திருப்பதால் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com