அப்பாவைப் பார்க்கணும்! 2

"அப்புறம் ஆள் இல்லாமலும் இருக்கலாம். இயற்கையாகவோ விபத்திலோ செத்துப் போயிருக்கலாம். நீ ஆளைக் கண்டுபிடிக்கிறதும் கஷ்டம்
அப்பாவைப் பார்க்கணும்! 2

சென்ற இதழ் தொடர்ச்சி...
"அப்புறம் ஆள் இல்லாமலும் இருக்கலாம். இயற்கையாகவோ விபத்திலோ செத்துப் போயிருக்கலாம். நீ ஆளைக் கண்டுபிடிக்கிறதும் கஷ்டம். விந்து வித்த விசயம் வெளியே தெரிந்தால் மான அவமானம், கஷ்டம், கேவலம்ன்னு நெனைச்சி, எங்களிடம் அவன் கொடுத்தது போலி முகவரியாய் இருக்கலாம். அடுத்து அந்த ஆள் இன்னைக்கு மனைவி மக்களுடன் குடும்பமாய் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் அவரை நீ என்ன சொல்லி பார்ப்பே? பார்த்து என்ன செய்ய முடியும் ? பிரயோசனம்? அருண் சில விசயங்கள் தெரியாமல் இருக்கிறதுதான் நல்லது''
"சார்... நீங்க சொல்றது எல்லாம் சரி. அத்தனையும் நானும் யோசிச்சேன். எனக்கு ஆள் எப்படி இருந்தாலும் கவலை இல்லே. நான் பார்க்கணும். அதான் என் ஆசை, வெறி''
"இது ரொம்ப பிடிவாதம். தீக்குள் விரலை வைக்கும் சமாச்சாரம். வலிய கஷ்டத்தை விலைக்கு வாங்கும் வேலை. வேணாம். வீண் முயற்சி. விட்டுடு.'' 
"முடியாது சார். நான் என் அப்பாவைப் பார்க்கணும்.''
சதாசிவத்திற்கு அவன் பிடிவாதம் எரிச்சலைத் தந்தது.
"போடா என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளுவது எளிது. ஆனால் பின் விளைவுகள்? இப்படிப்பட்ட ஆட்கள் ஏதாவது ஒரு திட்டம், முடிவோடுதான் வந்து இருப்பார்கள். அந்த முடிவு விபரீதமாக இருந்தால்? தன்னைக் கொலை செய்யலாம், இந்த கட்டடங்களுக்குக் குண்டு வைக்கலாம். சதாசிவத்திற்கு அடுத்து நினைத்துப் பார்க்கத் துணிவில்லை. 
"ஆளை அவன் வழிக்கே வந்து திருப்பி அனுப்புவதுதான் சரி' - முடிவிற்கு வந்தார். 
"சரி. ஆளைஎப்படித் தேடுவே?'' கேட்டார். 
"நீங்க கொடுக்கிற முகவரியைத் தேடிப் போவேன். அங்கே இல்லேன்னா இருக்கும் இடம் தேடிப் போவேன். அங்கேயும் இல்லேன்னா என் தேடுதல் தொடரும். எப்படியும் கண்டு பிடிப்பேன் சார் ?''
"எங்கேயும் இல்லே. கண்டுபிடிக்க முடியலைன்னா என்ன செய்வே?'' 
"முயற்சி செய்த திருப்தி இருக்கும் சார்.''
"அந்த திருப்தியோட நீ இப்போ இப்படியே திரும்பிப் போ.'' 
"அது முடியாது சார்... முதல் அடியிலேயே முடியாது திரும்பிப் போக மனசு ஒத்துக்காது'' 
"நீ தலை கீழாய் நின்னாலும் என்கிட்ட இருந்து எதுவும் பெயராது. என்ன செய்வே?''
"பெயரும் சார்.''
"எப்படி ?''
"என் ஆசை சரியா, தப்பா சார் ?''
"ரெண்டும் இருக்கு. அதுல பிடிவாதம் ரொம்ப ரொம்ப அதிகம்.''
"இந்த மாதிரி செயற்கைக் கருத்தரிப்பில் பிறந்த குழந்தைக்கு ஒரு தாய் தன் குழந்தைக்கு தகப்பன் கிடையாது. ஆண் துணை இல்லாமல் சுயமாய்ப் பெத்த குழந்தை. இவனுக்கு தன் பெயரைத்தான் தலை எழுத்தாய்ப் போடுவேன்ன்னு கோர்ட்டுல கேஸ் போட்டு வெற்றியடைஞ்சிருக்காங்க. ஒரு பெண் தாய்க்கு அந்த உரிமை இருக்கும்போது அப்படிப் பிறந்த எனக்கு, ஒரு குழந்தைக்கு தன் தகப்பன் யாருன்னு தெரிய ஏன் உரிமை, ஆசை இருக்கக் கூடாது?'' அருண் நிறுத்தி நிதானமாகச் சொல்லி சதாசிவம் முகத்தைப் பார்த்தான்.
அவர் முகத்தில் சிந்தனைக் கோடுகள் மெல்ல படர்ந்தன. 
தொடர்ந்தான்: 
"அப்படி ஒரு கேசை நான் இந்த மருத்துவமனை மேல் போடுவேன். அப்படி போட்டா... நீங்க கோர்ட்ல படி ஏற வேண்டி வரும். குழந்தைக்கு அப்பாவைத் தெரிஞ்சுக்க உரிமை உண்டு. ஆனாஅப்பான்னு உரிமை, உறவு கொண்டாட முடியாதுன்னு கண்டிப்பா தீர்ப்பு வரும். அப்படி வந்தால் நீங்க அப்போ எனக்குத் தேவையானதையெல்லாம் கொடுக்க வேண்டி வரும். அப்படியே நான் ஜெயிக்கலைன்னாலும் அந்த கேஸ் முடியும் வரை நீங்க கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாய் அலைய வேண்டி வரும். அப்படி அலையும்போது தொலைக்காட்சி மீடியாக்கள் உங்களைச் சும்மா விட்டு வைக்காது. நீங்க கோர்ட்டுக்கு அலையுறதை எடுத்துக் காட்டும். விவரம் கொடுக்கலாமா? கூடாதான்னு விவாதம் செய்யும். இந்த வெளிச்சம் உங்களுக்கு நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும். அதெல்லாம் தேவை இல்லேங்குறதுதான் என் அபிப்பிராயம்'' சொல்லி நிறுத்தினான்.
சதாசிவம் நேராய் அவனை உறுத்துப் பார்த்தார். 
"சார்... இந்த சமாச்சாரத்தை இன்னும் கலாட்டாவாய்ப் பிரபலப்படுத்தலாம். இப்படின்னு நான் விலாவாரியாய் மனு எழுதி கலெக்டர் கிட்ட கொடுக்கலாம். நடவடிக்கை இல்லேன்னு தீக்குளிக்கிற மாதிரி மண்ணெண்ணெய்யை ஊத்தி கலாட்டா நாடகம் நடத்தலாம். இல்லே டெலிபோன் டவர் மேல ஏறி தற்கொலை செய்துக்குவேன்னு மிரட்டலாம். எப்படிச் செய்தாலும் என்னை கைது செய்து இப்படித்தான்னு கேஸ் போடுவாங்க. இந்த கலாட்டா, கைதுனால இந்த மருத்துவமனை மானம், மரியாதை எல்லாம் அதலபாதாளத்துல விழுந்து வியாபாரம் சரிந்து தலை நிமிர பல வருசங்களாகும்'' நிறுத்தினான். 
சதாசிவத்திற்கு வேர்த்தது. 
"நீங்க முரண்டு பிடிக்காமல் நான் கேட்ட விவரங்களைக் கொடுத்தால் நான் வெளியில எதுவும் சொல்லாமல் காதும் காதும் வைச்ச மாதிரி வேலையைப் பார்ப்பேன். கலாட்டா, கைது, கோர்ட், கேசுக்கெல்லாம் வேலையே இருக்காது'' அருண் நிறுத்தி நிதானமாக 
ரொம்ப தெளிவாகச் சொன்னான். 
சதாசிவம் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தார். 
"நான் தேடிப் போற ஆள் ஆத்திரப்பட்டு நீங்க விதிகளை மீறி செயல்பட்டதாய் உங்க மேல வழக்குப் போட வாய்ப்பிருக்கும்ன்னு நீங்க பயப்பட வேணாம். நான் விவரம் சொன்னால்தானே அவருக்குத் தெரியும். சொல்ல மாட்டேன். கேட்டாலும் சொல்ல மாட்டேன். ஒரு கணிப்பில் அப்படி போட்டால் அவர் தன் சொந்த வாழ்க்கைக்குச் சூனியம் வைச்ச கதை. போட வாய்ப்பில்லே'' நிறுத்தினான். 
சதாசிவத்திற்குள் வேர்வை அடங்கியது. 
அதே நேரம் " இவனை எப்படி நம்புவது?' என்றும் உள்ளுக்குள் கேள்வி எழுந்தது.
"அருண் உனக்கு விவரம் கொடுத்தால்எனக்கு எந்த வில்லங்கமும் வராதுன்னு உன்னை எப்படி நம்புறது?'' நேரடியாகவே கேட்டார்.
"அதுக்கு நான் என்ன செய்யணும்?'' இவன் அவரைத் திருப்பிக் கேட்டான். 
"நான் சொல்லும் விவரத்தை யாருக்கும் தெரிவிக்க மாட்டேன். இது சம்பந்தமா இந்த மருத்துவமனை தொழில், புகழுக்கு எந்தவித இடையூறு, களங்கம் வந்தால் அதுக்கு நான் பொறுப்புன்னு உன் கையால் எழுதிக் கொடு.'' 
"தாராளமாய் சந்தோசமாய் எழுதி தர்றேன் சார்'' - சொன்னான். 
சதாசிவம் தன் மேசை இழுப்பறையைத் திறந்து அதிலிருந்து ஒரு தாளை எடுத்து அவனிடம் நீட்டினார். 
அருண் பேனா எடுத்து கடகடவென்று அதில் அவர் சொன்னபடி எழுதி கையெழுத்துப் போட்டு சதாசிவத்திடம் நீட்டினான். 
வாங்கிப் படித்துப் பார்த்த அவருக்கு திருப்தி. முகம் தெளிவாகியது.
உடன் அவர், அருணிடம் ஒரிஜினல் டாக்குமெண்டுகளைக் கேட்டு வாங்கிஅதிலுள்ள பெயர், தேதி விவரங்களைக் கணினியில் தட்டி."இதோ அவர் பேர், விலாசம் இதை முதலும் கடைசியுமாய்ப் பார்த்து எழுதிக்கோ. நாளைக்கு வந்தா கெடைக்காது. ஏன் நீ வெளியே போய் உள்ளே வந்தால் கிடைக்காது'' - சொல்லி கணினியை அவன் பக்கம் திருப்பினார். 
"இந்த இடைவெளி நேரத்தில் இது என்ன இடக்கு முடக்கு? அருண் திடுக்கிட்டான்.
"ஏன் சார்?'' என்று கேட்டான்.
"நாளைக்கு உன்னை மாதிரி இன்னோர் ஆள் முளைக்கக் கூடாது. அப்படியே முளைச்சாலும் கேட்கிற எந்த விவரங்களும் எங்கேயும் கிடைக்காம செய்யப் போறேன்.''
"புரியலை?''
"விந்து கொடுத்தவங்க பெயர் விலாசம், அதை இன்னார் கரு அணுவோடு சேர்த்த மொத்த விவரங்களையும் அழிக்கப் போறேன். ஏன்? இன்னார் உயிரணு இன்னாருக்குச் சேர்க்கிறோம் என்கிற விவரம் அதை செய்யும் டாக்டருக்கே தெரியாது. அவருக்குத் தேவை குழந்தை வேண்டி வருகிறவர்களுக்குத் தேவையான ஆண், பெண் உயிர் அணு. அவ்வளவுதான். அப்படி இருந்தால்தான்உன்னை மாதிரி முளைச்சு வர்ற ஆட்களிடம் இதோ பார் எதுவும் கிடையாதுன்னு, தைரியமாய் எடுத்துக்காட்டி நாங்களும் பயமில்லாம இருக்கலாம். இந்த தொழிலும் ஆரோக்கியமா வளரும்'' - சொன்னார்.
" தன்னால் இந்தப் பிரச்னை, இவர்களுக்கு ஒரு நல்ல முடிவு தோன்ற அருண் கணினியைப் பார்த்தான். 
"ஜெரால்டு'' தன் அப்பாவின் பெயரை முதன் முதலாக வாய்விட்டு உச்சரித்தான். தன் சட்டைப் பையிலிருந்த சின்ன டயரியை எடுத்துஅதிலிருந்த விலாசத்தை நிறுத்தி, நிதானமாய் அழுத்தி எழுதினான். 
3
அடுத்த நாள் மதியம் சேலம் பேருந்து நிலையத்தில் இறங்கினான். வழக்கம் போல் வாடகைக் கார்கள் நிற்கும் இடத்திற்குச் சென்றான்.
"காரா சார் ?'' - கேட்டு இளைஞன் வலிய வந்தான்.
"ஆமா''
"எங்கே சார் போகணும்?''
"கணபதி நகர்''
"எந்த கணபதி நகர்?''
"சேலத்துல எத்தினி கணபதி நகர் இருக்கோஅங்கே எல்லாம் போகணும்''
"வேண்டுதலா சார்?''
"இல்லே. ஓராளைத் தேடணும்''
"கையில விலாசம் இருக்கா?''
"இருக்கு''
"காட்டுங்க''
அருண் தன் பாக்கெட் டைரியை எடுத்து பிரித்துக் காட்டினான். 
வாங்கி ஒரு விநாடி பார்த்த அவன், "உட்காரு சார்'' சொல்லி அதை அவனிடம் திருப்பினான்.
"இடம் தெரியுமா?''
"தெரியும். பின் கோடு இருக்கு. இது நாப்பது வருசத்துக்கு முன்னாடி புதுசா மொளைச்ச முதல் கணபதி நகர். ஏற்காடு போற வழி. மலை அடிவாரத்தில் இருக்கு.'' சொல்லி அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
அருணும் அமர்ந்தான். 
கார் விரைந்தது.
34, பிள்ளையார் கோயில் தெரு, வீடு முன் நின்றது. 
வீடு சுமாராக இருந்தது.
அருண் இறங்கினான். 
"இருக்கணுமா சார் ?'' ஓட்டுநர்.
ஒரு விநாடி யோசித்த அருண், "இருக்கணும்'' என்று அந்த வீட்டு படி ஏறினான். 
கதவு சாத்தி இருந்தது. அழைப்பு மணி அழுத்தினான்.
வேட்டி, கை வைத்த பனியனில் 50 வயதில் ஒருவர் கதவு திறந்து வெளியே வந்தார்.
அவர் அறிமுகமில்லாத இவனைப் பார்த்து விழித்தார். 
"இவர்தான் தன் அப்பாவா?' - அருணுக்குள் ஓடியது.
"சார் நான் சென்னையிலிருந்து வர்றேன். ஜெரால்டு'' இழுத்தான். 
"இங்கே அப்படி யாரும் இல்லே'' பதில் சொல்லிய அவர் இவன் அப்பா இல்லை என்பதை உறுதி செய்தான். 
"சார் வீட்டு நம்பர் முப்பத்தி நாலு பழைய நம்பரா புது நம்பரா?''
"ஒரே நம்பர்தான்.''
"இது உங்க சொந்த வீடா, வாடகையா ?''
"சொந்த வீடு''
"நீங்க கட்டினீங்களா?''
"கட்டல. வாங்கினேன்... இந்த வீடுதான். நான் சூசைராஜ்கிட்ட வாங்கினேன். அவருக்கு ஜெரால்டுன்னு ஒரு பையன் இருந்தான். அவன் வேணுமா?''சட்டென்று அவர் நினைவு வந்தவராய்ச் சொன்னார்.
அருணுக்கு மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்.
"ஆமாம் சார்'' என்றான் பிரகாசமாய்.
"அவுங்க வீட்டை என்கிட்ட வித்துட்டு அப்போ கோயம்புத்தூர் போயிட்டாங்க.'' 
"அந்த விலாசம்?''
"ஏன் என்ன விசயமா அந்தப் பையனைப் பார்க்கணும்?''
"எதிர்பாராத கேள்வி. என்ன சொல்வது ?' என்று ஒரு விநாடி திகைத்த அருண்,
"ஜெரால்டு. என் அப்பாவோட நண்பர் சார். எங்க நிலம் சம்பந்தமா அவரைப் பார்க்கணும்'' பொய்யைப் பொருத்தமாகச் சொன்னான். 
"அந்த ஜெரால்டை நீங்க பார்த்திருக்கீங்களா?'' மனுசன் இவனைத் திருப்பிக் கேள்வி கேட்டார். 
"இல்லே சார். அப்பா எதுவும் சொல்லாம பொசுக்குன்னு போய்ட்டார். பழைய குப்பைகளை அலசிப் பார்க்கும்போதுதான் தெரிஞ்சுது இவர்கிட்ட எங்களுக்குச் சொந்தமான நிலம் இருக்கும் விசயம். அதான் தேடிப் புறப்பட்டேன்.'' 
"அப்படியா?''
"சார் விலாசம்?'' அருண் மீண்டும் ஞாபகப்படுத்தினான். 
"எனக்கும் அந்தக் குடும்பத்தைப் பத்தி அவ்வளவாய்த் தெரியாது. இங்கே வீடு வாங்கும் விசயமாய் அலைஞ்சிக்கிட்டிருக்கும்போது புரோக்கர் மூலமா சூசைகிட்ட வந்தோம். வேலை முடிஞ்சுது. உள்ளே வாங்க. பத்திரத்துல இருக்கும். பார்க்கலாம்.'' சொல்லி உள்ளே சென்றார்.
அருணும் அவரைத் தொடர்ந்தான்.
இருவரும் ஹாலுக்குள் நுழைந்தார்கள். 
"உட்காருங்க தம்பி. வீட்ல யாரும் இல்லே. நானும் என் மனைவியும் மட்டும்தான். அவ கோயிலுக்குப் போயிருக்காள்.'' சொல்லி அவர் அடுத்து இருந்த அறைக்குள் நுழைந்தார். 
இந்த கலியுகக் காலத்திலும் முன்பின் தெரியாத ஒருவனை வீடு உள்வரை அழைத்து உபசரித்தது அருணுக்கு நினைக்கவே நெகிழ்ச்சியாக இருந்தது.
சோபாவில் அமர்ந்தான். வீட்டில் வேறு எவரும் இல்லை என்பதற்கடையாளமாய் இடம் அமைதியாய் இருந்தது. 
சுவர்களில் திருப்பதி வெங்கடாசலபதி, முருகன் காலண்டர் படங்கள் மாட்டி இருந்தன. 
உள்ளே சென்றவர் பத்திரத்துடன் திரும்பி வந்தார். இவன் அருகில் வந்து அமர்ந்து பத்திரத்தின் முதல் பக்கத்தைப் பிரித்தார். 
அதில் இரண்டு புகைப்படங்கள் ஒட்டி பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 
"இது நான். இவர் சூசைராஜ். இவர்கிட்டே இருந்துதான் இந்த வீட்டை வாங்கினேன்.'' அவர் புகைப்படங்களை அடையாளம் காட்டி சொன்னார்.
அருண் சூசைராஜ் முகத்தை உற்றுப் பார்த்தான். 
"ஏறக்குறைய இவர் சாயலில்தான் தன் அப்பா இருப்பார்' நினைத்தான். 
"சார். நீங்க இவர் பையன் ஜெரால்டைப் பார்த்திருக்கீங்களா?'' அருண் அவரைக் கேட்டான்.
"இந்த வீடு பத்திரப்பதிவு அன்னைக்குத்தான் ஆளை நேராப் பார்த்தேன். பணத்தை அவன் கையில கொடுத்தேன். கரூர்ல படிச்சான் போல. நல்ல அழகா லட்சணமா இருந்தான்.''
"பையன் அப்பா சாயலா, அம்மா சாயலா சார் ?'' 
"தெரியலை. முப்பது வருசத்துக்கு முன் ஒரே ஒரு தடவைப் பார்த்தது. சரியா ஞாபகம் இல்லே. முகம் மறந்து போச்சு. மேலும் அப்போ இருந்த பத்திரப்பதிவு அவசரத்துல ஆளை சரியாவும் கவனிக்கலை. இப்போ எப்படி இருக்கான்னு தெரியலை. சாரி இருக்கார்ன்னு தெரியலை. இன்னும் சொல்லப் போனா ஆள் இருக்காரா... இல்லையா... தெரியலை.''
"என்ன சார் சொல்றீங்க?'' அருண் துணுக்குற்றான். 
"நான் முப்பது வருசத்துக்கு முன்னாடி பார்த்த முகம். சந்தித்த மனிதர்கள். அதுக்கப்புறம் அவுங்களுக்கும் எனக்கும் தொடர்பு இல்லே. அதனால் ஆள் இந்த முகவரியில்தான் இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியாது. அன்னைய நிலைமை. பத்திரத்தில இந்த விலாசம் இருக்கு. அங்கே இது சொந்த வீடா? வாடகை வீடா? தெரியாது. காலச்சக்கரம் அங்கே போய்அதுக்கப்புறம்அவுங்க வேற வீடு, இடம் மாறி இருக்கலாம். என்னால முடிஞ்ச உதவி. இருக்கிற விலாசத்தை எழுதிட்டுப் போங்க. தேடிப் பாருங்க. கெடைச்சா உங்க அதிர்ஷ்டம்.'' என்றார். 
அறிமுகமில்லாத ஆள் இந்த அளவிற்கு உதவி செய்வார் என்று அருண் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. 
அந்தப் பத்திரத்தைப் பார்த்து அதிலுள்ள விலாசம், 50, ரோஸ் நகர் பச்சாபாளையம், கோவை எழுதினான். 
நன்றி தெரிவித்து விட்டு வந்து காரில் ஏறினான்.

அருண் சலிக்காமல்அடுத்த நாள் காலை 9.00 மணிக்குக் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினான். 
மறுபடியும் வாடகைக் கார்.
கார் செல்வபுரத்தைத் தொட்டு பேரூரைத் தாண்டியது. 
கைபேசி ஒலித்தது.
ஒட்டுநர் எடுத்து, "ஹலோ சொல்லுப்பா ?'' என்றபடி வளைவில் திருப்பினான்.
சுதாரிப்பதற்குள்எதிரில் வந்த லாரி. 
கண்விழிக்கும் போது தலையில் கட்டுடன் அருண் மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தான். அருகில் அழகான ஐம்பது வயது ஆள் நின்று கொண்டிருந்தார்.
இவன் விழிப்பை எதிர்பார்த்து காத்திருந்த அவர், "தம்பி நான் ரோட்டுல வரும்போது என் கண்ணுக்கு எதிரே நடந்த விபத்து. நான்தான் உங்களைக் கொண்டு வந்து இந்த மருத்துவமனையில் சேர்த்தேன். கவலைப்படாதீங்க. சின்ன விபத்துதான். உங்க போன், பர்ஸ், பையெல்லாம் என்கிட்ட பத்திரமா... இதோ உங்க கட்டிலுக்கு அடியில இருக்கு'' சொன்னார்.
" சார் டிரைவர்?'' அருண் இழுத்தான். 
"அவருக்கும் லேசான காயம்தான் பக்கத்து அறையில் இருக்காரு. வண்டிக்கும் அதிகம் சேதமில்லே. உரசல்தான். உங்க உறவினர் யாருக்காவது சேதி சொல்ல உங்க கைபேசியை ஆராய்ஞ்சேன், அம்மான்னு நம்பர் இருந்துது. அடிச்சேன் வந்துக்கிட்டு இருக்காங்க'' கூடுதல் தகவலையும் சொன்னார்.
"ரொம்ப நன்றி சார்... உங்க பேர் ?''
"ஜெரால்டு''
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த பரவசம். கண் முன் காட்சி. அருணால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கொஞ்சமும் யோசிக்காமல் பரவசமாய்.
"சார் நீங்க பச்சாப்பாளையமா?'' சடக்கென்று கேட்டான். 
அவருக்கும் ஆச்சரியம். 
"ஆமாம். எப்படித் தெரியும்?'' அவர் இவனைத் திருப்பிக் கேட்டார்.
"உங்களைத்தான் சார் தேடி வந்தேன்.'' 
"என்னையா ஏன்?''
"இவர் வேறொரு ஜெரால்டாய் இருந்தால்? அருணுக்குள் சட்டென்று சுதாரிப்பு வந்தது.
"சார் நீங்க இதுக்கு முன்னாடி சேலத்துல இருந்தீங்களா ?'' கேட்டான். 
"ஆமா''
"உங்க அப்பா பெயர் சூசைராஜா?'' 
"ஆமாம்.''
அடுத்த விநாடி அருணுக்குள் அவரை, "அப்பா' என்று அழைக்க ஆசை. வார்த்தைகள் வாய் வரை வந்தது. " சட்டென்று அழைத்து ஏமாறக் கூடாது' என்று சுதாரித்து அடக்கிக் கொண்டான். ; 
"நீங்க கரூர்ல இருந்தீங்களா?'' - அருண் அடுத்தக் கேள்வியைக் கேட்டான். 
"ஆமாம். அங்கே படிச்சேன்''
"அப்போ நான் தேடி வந்த ஆள் கண்டிப்பா நீங்கதான் சார்''
"என்னப்பா சொல்றே?'' நின்று கொண்டிருந்த ஜெரால்டு கட்டில் ஓரம் அவன் அருகில் அமர்ந்தார்.
"அங்கே உள்ள அன்னை தெரசா மருத்துவமனை உங்களுக்குப் பழக்கமா?''
ஜெரால்டு முகத்தில் சின்ன அதிர்ச்சி. 
" இல்லே'' 
"தொடர்பு இருக்கு சார். நல்லா யோசிச்சு சொல்லுங்க?''
"....''
"நீங்க படிக்கும்போதுவிளையாட்டாவோ, அத்தியாவசியமாவோ, அவசியமாவோ அன்னைத் தெரசா மருந்துவமனைக்கு விந்து தானம் செய்திருக்கீங்க''
"வந்து வந்து''
"அதுல பொறந்தவன் சார் நான்.''
"தம்பி'' ஆயிரம் வோல்டேஜில் அதிர்ந்தார். 
"என் அம்மா பேர் காயத்ரி சார். அனாதை. படிச்சி முன்னுக்கு வந்தவங்க. ஆரம்பத்திலிருந்தே பெண்கள் அனாதை ஆசிரமத்தில் சேர்ந்து வளர்ந்ததினால ஆண்கள் மேல் அவுங்களுக்குப் பிடிப்பு, ஈர்ப்பு கிடையாது. அதனால் கலியாண ஆசை கிடையாது. ஆனா துணைக்குப் குழந்தை பெத்துக்க ஆசைப் பட்டாங்க. அன்னை தெரசா மருத்தவமனைக்குப் போனாங்க. அங்கே உங்க உயிரணு உதவியால் நான் உருவானேன். பெத்தாங்க, வளர்ந்தேன். இதுதான் சார் என் பிறப்பு சுருக்கம்'' நிறுத்தினான். 
கேட்ட ஜெரால்டிற்கு வேர்த்தது. 
"பயப்படாதீங்க சார். எனக்குள் அப்பா இல்லியேன்னு ரொம்ப ஏக்கம், மன உளைச்சல். அதுக்காகத்தான் கஷ்டப்பட்டு தேடி வந்தேன். மத்தப்படி உங்க சொத்து சுகம், ஒட்டு உறவு எதுவும் எனக்குத் தேவை இல்லே. நம்ம சந்திப்பு இன்னைக்கு, இந்த நிமிசத்தோடு அத்துப் போச்சு. இது சத்தியம்'' சொன்னான்.
ஜெரால்டிற்குள் கொஞ்சம் தெம்பு தைரியம் வந்தது, 
"தம்பி அந்த மருத்துவமனையில் என்னைப் பத்தின விவரம் சொன்னாங்களா?'' கேட்டார்.
"இல்லே சார்.'' 
"பின்னே எப்படி என் விவரம் உங்களுக்குத் தெரியும்?''
"எப்படியோ தெரியும் சார்'' 
"அருண்''
"பின்னால என்னால உங்களுக்குத் தொந்தரவு, கஷ்டம் இருக்காது. அப்புறம் எதுக்கு சார் அந்த விவரம் உங்களுக்கு?''
"அதுக்கு இல்லே அருண்அடுத்து உன்னைமாதிரி ஓர் ஆணோ, பெண்ணோ என்னைத் தேடி வரமாட்டாங்கன்னு என்ன நிச்சயம் ?''
"கவலைப்படாதீங்க. அதுக்கு வாய்ப்பே இல்லே. என்னை மாதிரி இதுவரை யாரும் இப்படி தேடி கண்டுபிடித்ததாய் தகவல்கள் இல்லே. ஒரு வேளை அது எனக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். அது ஏதோ லட்சத்துல ஒருத்தனுக்குள் ஏற்பட்ட ஆசை, தாகமாய் இருக்கலாம். அதில் நான் ஒருத்தன். அவ்வளவுதான் சார்''
"இல்லே அருண்'' இழுத்தார். குரல் நடுங்கியது.
"பயமே வேணாம் சார். இது சம்பந்தமா இனி யாரும் உங்களைத் தேடி வரமாட்டாங்க. அன்னை தெரசா மருத்துவமனையில் நீங்க கொடுத்த உயிரணுக்கள் உபயோகப்படுத்தியது போக மிச்சம் இருக்குமேயொழிய மத்தப்படி கொடுத்தவங்க பத்தின விவரங்கள் இருக்காது.''
"எப்படி சொல்றே?'' 
"டாக்டர் சதாசிவம் என்னை மாதிரி ஒரு பிரச்னை இனிவரக் கூடாது என்பதற்காக என் கண் முன்னாலேயே தங்கள் கணினியில் உள்ள உங்களை மாதிரி விந்து கொடுத்த பேர், விவரங்களை மொத்தமா அழிச்சுட்டாரு. இனி பிள்ளைகளுக்காக அதை உபயோகப்படுத்தும் டாக்டர்களுக்கே யார் உயிரணுன்னு தெரியாது, இனி இந்த மாதிரிஇது போன்ற எந்த மருத்துவமனையிலும் நடக்கக் கூடாது என்பதற்காக மத்த மருத்துவமனைகளுக்கும் தகவல்கள் அனுப்பிட்டாரு. அதனால் கவலையே படாதீங்க.'' என்றான். 
ஜெரால்டுக்கு இப்போதுதான் நிம்மதி பெரு மூச்சு வந்தது. என்றாலும் 
"நிஜமாவா சொல்றே?'' என்றார்.
"ஆமாம் சார். இது சத்தியம்'' சொல்லி அருண் ஜெரால்டு வலது கையின் மேல் தன் வலது கையை வைத்து சத்தியம் செய்தான். 
ஜெரால்டு முகம் இப்போது இன்னும் நன்றாகத் தெளிவானது.
அதை கவனித்த அருண்
"சார் ஒரே ஒரு சின்ன ஆசை'' அந்தக் கையை எடுக்காமலேயே கெஞ்சலாய்க் கேட்டான்.
"என்ன அருண்?''
"கடைசியும் முதலுமாய் நான் உங்களை அப்பான்னு ஒரு முறை அழைச்சிக்கலாமா?'' தயவாய்ப் பார்த்தான்.
"கூப்பிடு அருண்'' சொல்லி ஜெரால்டு அவன் கையை இறுக்கிப் பிடித்தார்.
அருண்அப்பாவிற்கென்று சேர்த்து வைத்து வைத்திருந்த மொத்த உணர்ச்சி, தாக்கங்களையெல்லாம் ஒன்று திரட்டி, " அப்பா...'' மெல்ல அழைத்தான். 
ஜெரால்டு தன்னையுமறியாமல் கண் மூடினார்.
குரல்... தொலைந்த பிள்ளையின் தொலை தூர குரலாக காதுகளில் ஒலித்தது. 
அப்படியே... அவர் கண்ணோரங்களில் நீர் துளிர்த்தது. 
துடைத்துக் கொண்ட ஜெரால்டு , "சரி அருண். நான் வர்றேன். உங்க அம்மா. அதோ வந்துக்கிட்டிருக்காங்க'' சொல்லி அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு எழுந்தார்.
அருண் திரும்பிப் பார்த்தான். 
காயத்ரி தூரத்தில் இவன் கட்டிலை நோக்கி வந்து கொண்டிருந்தாள். 
ஜெரால்டு அருண் நெற்றியில் அழுந்த முத்தமிட்டுஅகன்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com