மூன்று தலைமுறைகளாக வானத்தில் பறக்கும் குடும்பம்..!

வெண்ணிற சீருடை... தங்க நிற ஜரிகை வேலைப்பாடுள்ள தொப்பி... இலகுவாக உந்தித் தள்ளிச் செல்லும் நாலு சக்கர பெட்டிகள்...
மூன்று தலைமுறைகளாக வானத்தில் பறக்கும் குடும்பம்..!

வெண்ணிற சீருடை... தங்க நிற ஜரிகை வேலைப்பாடுள்ள தொப்பி... இலகுவாக உந்தித் தள்ளிச் செல்லும் நாலு சக்கர பெட்டிகள்... இவைகள்தான் விமான ஓட்டிகளின் அடையாளங்கள். மூன்று தலைமுறைகளாக விமான சேவையில் ஈடுபட்டு வரும் குடும்பம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?

தாத்தா, அப்பா, அம்மா, மகன், மகள் என்று ஒரு குடும்பத்தில் அனைவருமே வானூர்தியை ஓட்டும் சேவையில் ஈடுபட்டு வருவது ஒரு சாதனைதான். தாத்தா பைலட் ஆனதில் தொடங்கி, பேரன், பேத்தி பைலட் ஆனது வரையில் இவர்கள் நூறு ஆண்டுகளாக வானில் பறந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக "விமானம் ஓட்டும்' அனுபவத்தை மணிக்கணக்கில்தான் சொல்வார்கள். சரியாகச் சொன்னால் இதுவரை எட்டு லட்சத்து 76 ஆயிரம் மணி நேரம் இந்தக் குடும்பத்தினர் வானில் பறந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் ஏழு விமானிகளில் ஒருவர் ரோஹனின் தாத்தா கேப்டன் ஜெய் தேவ் பாஸின். 1954 -இல் தேவ் பாஸின் கமாண்டர் ஆனார். அவரது மகன் ரோஹித் பாஸினும் விமான ஓட்டிதான். மருமகள் நிவேதிதா ஜெயின் அப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான ஓட்டியாக பணியில் சேர... ரோஹித் , நிவேதிதாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்குப் பிறந்தவர்கள் ரோஹன் (மகன்), நிஹாரிகா (மகள்). இவர்களும் பைலட்டுகள். அப்படி ஓர் அபூர்வப் பொருத்தம் இந்தக்குடும்பத்தில் இயல்பாக அமைந்துவிட்டது.

"விமானம் ஓட்டி வானில் பறப்பது என்னை வசீகரித்திருந்தது. சிறு வயதில் விமானத்தில் பயணம் செய்வது ரொம்பவும் பிடிக்கும். பிறகு அதுவே தொழிலாக அமைந்துவிட்டது . தோழி ஒருத்தியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்த என்னிடம் ஓடி வந்து, என் அப்பா வேலைக்கான நியமன ஆணையைத் தந்தார். அப்போதே வானில் பறக்கிற மாதிரி இருந்தது. இருபது வயதில் விமான ஓட்டியாக வேலையில் சேர்ந்தேன். இருபத்தாறு வயதில் கமாண்டரானேன். உலகிலேயே குறைந்த வயதில் போயிங் 737 விமானம் ஓட்டிய முதல் பெண் என்ற பெருமை கிடைத்தது. பிறகு ஏர்பஸ் விமானம் ஓட்டும் விமானியாக பதவி உயர்வு பெற்றேன். உலகில் முழுக்க முழுக்க பெண் விமானிகளால் ஓட்டப்படும் விமானத்திலும் விமானியாக இருந்திருக்கிறேன்''என்கிறார் ஐம்பத்திநான்கு வயதாகும் மருமகள் நிவேதிதா.

விமானியாக இருக்கும் போது தாய்மை அடைந்ததும், பிறகு குழந்தை பெற்றுக் கொண்ட முதல் பெண் பைலட் நிவேதிதாதான். இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து கொள்கை ரீதியான முடிவை எடுத்தது. "பல சமயங்களில் குழந்தைகள் வளர்ப்பு காரணமாக வேலையை ராஜினாமா செய்து விடலாமா என்று யோசித்ததுண்டு.. .. ஆனால் பணியில் இருந்த ஆர்வம் அப்படி செய்யவிடவில்லை.. அதே ஆர்வம், பிடிப்பு எனது வாரிசுகளுக்கும் போய்ச் சேர்ந்து அவர்களையும் விமானிகளாக்கியிருக்கிறது...''என்றார் நிவேதிதா பெருமையுடன்.

இவரின் மகன் ரோஹன், மகள் நிஹாரிகா. "நான் குழந்தையாக இருக்கும் போது அம்மா வேலைக்குச் செல்லும் போது பைலட் உடை அணிவதை மிகவும் வியப்பாகவும் உன்னிப்பாகவும் பார்ப்பேன். சாதாரண சுரிதாரிலிருந்து வெண்ணிற பளீச் சீருடைக்கு மாறும் போது அம்மாவின் தோற்றம் முழுமையாக மாறியிருக்கும். நானும் ஒரு நாள் அம்மா மாதிரி பைலட் சீருடை அணிய வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வேன்..அது இப்போது நிறைவேறிவிட்டது. எனக்கு சின்ன வயதில் அப்பா அம்மா மாறி மாறி பறந்து கொண்டிருப்பதால் அவர்களின் அருகாமை கிடைக்கவில்லை. அது ஒரு குறைதான். ஆனால் எங்களை வளர்க்க பெற்றோர் பெரும்பாடு பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. நானும், அண்ணனும் வளர்ந்து பறக்க ஆரம்பித்து விட்டதால் பெற்றோர்களிடம் இருந்த இடைவெளி பழக்கமாகிவிட்டது'' என்கிறார் நிவேதிதாவின் மகளான நிஹாரிகா. இவருக்கு இருபத்தாறு வயதாகிறது. நிஹாரிகா, இண்டிகோ விமான நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளாக விமானியாகப் பணி புரிகிறார். ஏர்பஸ் 320 விமானத்தை சைக்கிள் ஓட்டுவது போல ஓட்டுகிறார் நிஹாரிகா.
-கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com