தெரிந்த பெயர், தெரியாத விவரம்: கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம்

கன்னியாகுமரி புராண, வரலாறு, கலாசார சிறப்புகள் மிக்க ஒரு புண்ணியத்தலம். உலக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம்

* கன்னியாகுமரி புராண, வரலாறு, கலாசார சிறப்புகள் மிக்க ஒரு புண்ணியத்தலம். உலக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.

* இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அலைகடலோரத்தில் அண்ணல் காந்தியின் நினைவு மண்டபம் அமைந்துள்ளது.

* காந்திஜியின் முப்பெரும் கொள்கைகளான அகிம்சை, சமாதானம், உண்மை ஆகியவற்றை உணர்த்தும் வண்ணம் மூன்று கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

* இந்த நினைவு மண்டபம் வட இந்திய கட்டடக் கலை நுட்பத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

* 1937-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வந்த காந்தி, குமரித்துறையில் நீராடி மகிழ்ந்தார்.

* அந்நாளில் கன்னியாகுமரி பற்றி காந்தி கூறியது, "முக்கடல்களும் கூடும் இடத்தை இங்கின்றி வேறெங்கும் காண முடியாது. புனித நீரான குமரித்துறையைச் சூழ்ந்துள்ள கடல்நீரும், குமரியன்னையைப் போலவே கன்னிப் பெண்ணாக இருக்கிறது. காரணம், இங்கு கப்பல்கள் வருவது கிடையாது''.

* 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி காந்தியின் அஸ்தி கன்னியாகுமரியில் கரைக்கப்பட்டது. கடற்கரையின் ஓரத்தில் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பிற்காலத்தில் இந்த நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.

* திருவிதாங்கூர் கொச்சி அரசால் 1956-ஆம் ஆண்டு இந்த மண்டபம் கட்டப்பட்டது. அதற்கு ஆன மொத்த செலவு மூன்றரை லட்சம் ரூபாய்.

* நினைவு மண்டபத்தில் ஒரு பிரார்த்தனைக் கூடம் அமைந்திருக்கிறது. மூன்று கோபுரங்களில் நடுவில் உள்ள கோபுரத்தின் உயரம் 80 .

* பிரார்த்தனைக் கூடத்தின் மேற்கூரை அரை வட்ட வடிவில் அழகாகத் திகழ்கிறது. கூடத்தின் நடுவில் பளிங்குக் கற்களாலான பீடம் உள்ளது. இதற்கு நேரே மேற்கூரையில் ஓர் துவாரம் காணப்படுகிறது.

* பீடத்தில், ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியன்று (அக்டோபர் 2-ஆம் தேதி) பகல் 12 மணிக்கு மட்டும் சூரிய ஒளி விழுகிறது. இந்த அரிய, அதிசய நிகழ்வு இந்த மண்டபத்தின் சிறப்பாகும். 

* பிரார்த்தனைக் கூடத்தில் மாதந்தோறும் காந்திக்கு பிடித்தமான பஜனைப் பாடல்கள் பாடப்படுகின்றன.

* காந்தி ஜெயந்தியன்று நாள் முழுவதும் சிறப்பு பஜனைகள் உண்டு. இதில், நாடு முழுவதிலும் இருந்தும் மக்கள் வந்து கலந்து கொள்கின்றனர்.

* கன்னியாகுமரியின் எழிலை கண்டு களிக்க வரும் சுற்றுலாப் பயணிகளும், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மனை வழிபட வரும் பக்தர்களும், காந்தி நினைவு மண்டபத்துக்கும் வருகை தந்து, காந்தியை நினைவு கூர்ந்து அவரது உயர்ந்த கொள்கைகளைப் போற்றி மகிழ்கின்றனர்.
- உ.ராமநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com