இயற்கையோடு இணைந்த காணிக்காரர்கள்!

அறிதிறன்பேசிகளே உலகம் என்றாகிவிட்ட இன்றைய சமுதாயத்திற்கு சவால் விடும் வகையில் இயற்கையோடு இணைந்த வாழ்வை,
இயற்கையோடு இணைந்த காணிக்காரர்கள்!

அறிதிறன்பேசிகளே உலகம் என்றாகிவிட்ட இன்றைய சமுதாயத்திற்கு சவால் விடும் வகையில் இயற்கையோடு இணைந்த வாழ்வை, தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரவருணியின் பிறப்பிடமான பொதிகை மலையடிவாரத்தில் வாழ்ந்து வருகிறார்கள் காணியின மக்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் பூர்வீக குடிகளாகப் போற்றப்படும் இம் மக்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் மட்டுமன்றி கேரளத்திலும் வசித்து வருகிறார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு மலைபடு பொருள்களை வரியாகச் செலுத்தி வந்த காணிக்காரர்கள், சொக்கம்பட்டி ஜமீன், ஊத்துமலை ஜமீன், ஊர்க்காடு ஜமீன், சிங்கம்பட்டி ஜமீன்களின் ஆளுகைக்குள்ளும் சில நாள்கள் இருந்தனர்.

ஆங்கிலேயர் கோலோச்சிய பிறகு, 1912-ஆம் ஆண்டில் தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் காணிக் குடியிருப்புகள் வந்தன. பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் தேக்கு, சந்தனம், அகில் உள்ளிட்ட மதிப்புமிகு மரங்களை அதிகளவில் நடுவதற்கும், பராமரிக்கவும் காணிக்காரர்களின் பங்களிப்பு பெரிதும் உதவியது. ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர், பாசன நீராதாரமாகத் திகழும் பாபநாசம் அணை கட்டுவதற்கு காணிக்காரர்களின் உழைப்பு அதிகம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்க காலத்தில் 13 இடங்களில் தனித்தனி குழுக்களாக காணிக்காரர்கள் வசித்து வந்தனர். இஞ்சிக்குழிக் காணி, சேப்பார் காணி, உள்ளார் காணி, வாடிவிளைக் காணி, வரட்டையாறு காணி, பெருமாள் காணி, பொதிகையடிக் காணி, மாவடிக் காணி, பேயார் காணி, மேலக்கெளதலைக் காணி, சிற்றாறு காணி, கிடாவெட்டிப்பாறை காணி, கொடமாடிக் காணி பகுதிகளில் 30 முதல் 300 குடும்பத்தினர் வரை தனித்தனி குழுக்களாக மொத்தம் 1,112 காணியின குடும்பத்தினர் வசித்தனர். அம்மை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காணி மக்கள் பலரும் கன்னியாகுமரி, கேரள வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். இதனால் இப்போது காணியின மக்கள்தொகை வெகுவாகக் குறைந்துவிட்டது.

இஞ்சிக்குழிக் காணிக் குடியிருப்பு, மைலாறு காணிக் குடியிருப்பு, தருவட்டாம்பாறை காணிக் குடியிருப்பு, அகஸ்தியர் காணிக் குடியிருப்பு ஆகியவற்றில் 250-க்கு உள்பட்ட குடும்பத்தினர் மட்டுமே இப்போது வசித்து வருகிறார்கள். காணிக் குடியிருப்பின் தலைவராக மூட்டுக்காணியும், அடுத்த நிலையில் மூதவனும் திகழ்கின்றனர். உடல் பலவீனம், மன பலவீனம் தீர்க்கும் மருத்துவராக பிலாத்தியும், மக்களை ஒருங்கிணைத்தல், பிற காணிக் குழுக்களுக்கு தகவல் தெரிவித்து பதில் அறியும் பணிகளை விளிகாணியும் செய்கிறார்கள். 

வீடுகளை பத்தி என்று அழைக்கும் காணிகள், விருந்தினர்களை உபசரிக்க தனி அறையைப் பயன்படுத்துகிறார்கள். காடுகளில் கிடைக்கும் மரங்கள், தரவம்புல், வேய் இலை, வேய் போன்றவற்றைக் கொண்டு கூரை அமைக்கிறார்கள். அதிகபட்ச நாகரிக வீடுகளாக சிமென்ட் ஓடு கூரைகளையே காணமுடிகிறது. ஊர் மக்கள் ஒன்றுகூட பாட்டம்பிரை என்ற திறந்தவெளி கூரைக்கூடமும் அமைக்கிறார்கள். கொடுதி என்ற பெயரில் புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மகர நாள்களில் வரசித்தி கரும்பாண்டி அம்மனுக்கு திருவிழா நடத்துகிறார்கள்.  பாறைச்சாவு, புலிச்சாவு, அகஸ்தியர் அப்பன், தம்பிரான், கருமிமுத்தி, நீலம்மை இசக்கி, ஆயிரவல்லி, முருத்துவு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இயற்கை தெய்வங்களையும் வழிபடுகிறார்கள்.

காணிகளின் தனித்துவமாக கொக்கரை இசைக் கருவி திகழ்கிறது. இரும்புக் குழாய் வடிவில் நடுவில் சிறு இடைவெளியுடன் காணப்படும். அதனுடன் ஒரு கம்பி இணைக்கப்பட்டிருக்கும். இரண்டையும் உரசும்போது ஏற்படும் வித்தியாசமான ஒலியுடன் சாற்றுப்பாட்டுகளைப் பாடி இறை வழிபாடுகளைச் செய்கிறார்கள். வழிபாடு, மருத்துவம், கொண்டாட்டம் என அனைத்திலும் சாற்றுப்பாட்டுகள் இடம்பிடிக்கின்றன. ராயி சாற்று, கார்த்திகை சாற்று, மதிலுவச்சு சாற்று, தீவு சாற்று, பியப்புச் சாற்று, பொங்கல்சாற்று, மணத்தரை சாற்று, தெய்வச் சாற்று, கொடுதி சாற்று, துடிச்சாற்று என சாற்றுகளின் பட்டியல் நீள்கிறது. நாட்டுப்புறவியல், தமிழியல் துறை மாணவர்கள் பலர் சாற்றுப்பாட்டு ஆய்வுகளைச் செய்து கட்டுரைகளைப் படைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

பொதிகை மலையில் கிடைக்கும் காய், கனி வகைகளை காணிகள் சாப்பிடுகிறார்கள். கவலைக்கிழங்கு, நூரான்கிழங்கு, வெத்திலை வள்ளிக் கிழங்கு, பரண்டை (தெள்ளுக்காய்), சளப்பனைக்காய், தேன் வகைகள், மரச்சீனி கிழங்கு, சேப்பங்கிழங்கு, கரும்பு, வாழை ஆகியவற்றையும் அரிசியைக் குறைந்த அளவிலும் உணவாகப் பயன்படுத்துகிறார்கள். கிழங்கு மற்றும் மாமிசங்களை பச்சை இலைகளில் சுற்றி தீயில் இட்டு வேகவைத்து சாப்பிடுவது இன்றளவும் தொடர்கிறது. விவசாயம், தேன் எடுத்தல், மீன்பிடித்தல், மூங்கில் கூடை பின்னுதல் தொழில்களை பலர் செய்கிறார்கள். மரச்சீனி கிழங்கு, சோளம், தினை, வாழை, பலா, மா, தென்னை, பாக்கு, குறுமிளகு, வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை பயிர் செய்கிறார்கள்.

வேட்டையில் கைதேர்ந்தவர்களான காணிக்காரர்கள், அதற்காக பல்வேறு பொறிகளைச் செய்வதிலும் சிறந்து விளங்குகிறார்கள். வில் பொறி (காணிகளின் மொழியில் வியா), பரண் பொறி (டாலு), கல் பொறி (பெருப்பு), கல் வைத்த வில்பொறி (கல் வியா), பாலப்பொறி (ஊற்று வியா), மறைமுகப்பொறி (அடி வியா), தொங்கு பொறி (தூக்கு வியா), கயறுப் பொறி (கன்னி வைத்தல்), குடில் பொறி (கொடுங்கை) ஆகியவை மூலம் வேட்டையாடுகிறார்கள். அரிவாள், கத்தி உள்ளிட்ட  ஆயுதங்களுடன் கோப்பு கத்தி, அருப்பாத்தி போன்ற பிரத்யேக ஆயுதங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

மருத்துவக் குணம் மிகுந்த தேனை சேகரித்து விற்பனை செய்வதே காணிகளின் பொருளாதாரத்திற்கு உதவுகிறது. மலைத்தேன், பாறை இடுக்கில் இருக்கும் பொந்துத்தேன், கொம்புத் தேன், சிறுதேன் போன்றவற்றை சேகரிக்கிறார்கள். காட்டில் கிடைக்கும் ரெட்டிப்பனை நார் மூலம் தாடிமுள்ளை என்ற கூடு கட்டி மீன் பிடிக்கிறார்கள். அரிசி பஞ்சம் ஏற்படும் காலங்களில் மூன்று வேளையும் மரச்சீனிக்கிழங்கும், மீனும் சாப்பிடுவதை வழக்கப்படுத்தியுள்ளனர்.

தங்கம் மீது மோகம் இல்லாதவர்களாக பெண்கள் உள்ளனர். மஞ்சளை திருமாங்கல்யமாகவும், காடுகளில் கிடைக்கும் கொட்டைகளை அணிகலன்களாகவும் அணிவதையே விரும்புகிறார்கள். நாட்டுமருந்து வகைகளைக் கொடுத்தே குழந்தைகளின் நோய்களைக் குணமாக்குகிறார்கள். மகப்பேறு காலங்களில் 10 நாள்களுக்கு பத்திய சாப்பாடு கொடுப்பதோடு, 11-ஆவது நாளில் துணி துவைத்தல், தண்ணீர் எடுத்தல் போன்ற கடின வேலைகளைக் கொடுக்கிறார்கள். உணவு முறையாலும், மூதாட்டிகளின் ஊக்கத்தாலும் பெண்கள் எளிதாக தைரியப்படுகிறார்கள். 

குற்றம் செய்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையும் வினோதமாக உள்ளது. குற்றஞ்சாட்டப்படுபவரை பெரியவர்கள் முன்னிலையில் விசாரிக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குனியக்கல் என்ற பெயரில் குனிந்தே நிற்க வைக்கும் தண்டனை அளிக்கப்படுகிறது. 

திருநெல்வேலி மாவட்ட காணிக்காரர்களின் குழந்தைகளுக்குக் கல்வியறிவு அளிக்கும் வகையில் 1956-ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை அவரது சொந்த செலவில் சுமார் 80 குழந்தைகளை பெற்றோரின் ஒப்புதலோடு அழைத்துவந்து கல்வியறிவு புகட்டினார். பொதிகை மலை ஆதிவாசிகள் இல்லம் என்ற பெயரில் செயல்பட்ட இந்த இல்லத்தால் கல்வி பெற்றவர்கள் பலரும் அரசு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதன்பின்பு பாபநாசம் கீழ்அணையில் 1958-ஆம் ஆண்டில் உண்டு உறைவிடப்பள்ளி அரசு மூலம் செயல்படத் தொடங்கி, இப்போது உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்துள்ளது. தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இன்றைய நவநாகரிகமும், சொகுசு வாழ்க்கையும் கிடைக்கும் என்ற நிலை இருந்தும்கூட இயற்கை மீதான தீராத காதலால் மரங்களுக்கும், மலைகளுக்கும் மத்தியில் மன நிம்மதியான வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறார்கள் காணியின மக்கள். தங்களின் கலாசாரம், வாழ்க்கை முறைக்கு இடையூறுகள் அளிக்காமல் தொடர்ந்து வசிக்க அரசுகள் உதவ வேண்டும் என்பதே காணியின மக்களின் எதிர்பார்ப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com