எல்லாமே சந்தோஷமாக அமையாது!

தமிழ் சினிமாக்களில் அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளை போல் அஞ்சலி அமெரிக்க ரிட்டர்ன் ஹீரோயின்... "கற்றது தமிழ்', "அங்காடித் தெரு', "எங்கேயும்
எல்லாமே சந்தோஷமாக அமையாது!

தமிழ் சினிமாக்களில் அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளை போல் அஞ்சலி அமெரிக்க ரிட்டர்ன் ஹீரோயின்... "கற்றது தமிழ்', "அங்காடித் தெரு', "எங்கேயும் எப்போதும்' என படத்துக்கு படம் கலங்க வைத்தவர், இப்போது "பலூன்', "பேரன்பு', "காண்பது பொய்', "காளி' என மீண்டும் பரபரப்பு சினிமாவுக்கு வருகிறார். விரல்கள் கோர்த்து, அடிக்கடி கன்னம் வருடிக் கொண்டு இதழ்களுக்கு முன் கண்கள் சிரிப்பது அஞ்சலியின் மோனலிசா மேனரிசம்...

அறிமுக காலக் கட்டங்களிலேயே நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர் நீங்கள். ஆனால் இப்போது தமிழ் சினிமாவுக்கு ஏன் முன்னுரிமை கொடுப்பதில்லை?
சின்ன வயதில் இருந்தே சினிமா ரொம்பப் பிடிக்கும். ஆனால், நான் ஒரு நடிகை ஆவேன் என்று நினைத்து பார்த்ததில்லை. என்ன, எங்கே என்று கூடத் தெரியாமல் இருந்த காலங்கள் உண்டு. பொழுதுபோக்காக மாடலிங் செய்ய ஆரம்பித்து, அதுவே பின்னர் சினிமா வாழ்க்கையாகி விட்டது என பொய் சொல்ல விரும்பவில்லை. பணம் அத்தியாவசியத் தேவையாக இருந்தது. அதற்கு சினிமா சரியான வழி என்று யோசித்து உள்ளே வந்தவள் நான். "கற்றது தமிழ்', "அங்காடித் தெரு' படங்கள் மாதிரி நிறைய படங்கள் என் நடிப்பை அடையாளப்படுத்தி காட்டின. அதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தன. அதே மாதிரிதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழி சினிமா வாய்ப்புகளும் வந்தன. எல்லாவற்றிலும் நல்ல சினிமாவுக்கான தேடல்கள் இருந்தன. சின்ன இடைவெளி. நடந்தது பற்றியெல்லாம் இப்போது பேசி ஒன்றும் இல்லை. எல்லாம் உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். "இறைவி', "தரமணி' படங்கள் அடுத்தடுத்து உதாரணங்களாக அமைந்தன. இப்போது "பலூன்' படத்தின் மூலம் தமிழுக்கு மறுபடியும் வருகிறேன். அதைத் தொடர்ந்து "பேரன்பு' ரிலீஸூக்கு காத்திருக்கிறது. "காண்பது பொய்' என்னை மட்டுமே அடையாளப்படுத்தும் கதையாக அமைந்து வருகிறது. இன்னும் கதைகள் கேட்டு வருகிறேன். அடுத்த ஒரு வருடத்துக்கு சென்னையில்தான் வாசம். சந்தோஷமாக இருக்கிறேன். 

 "பலூன்'... பேய், அனுமாஷ்யம் பாணியிலான படம் மாதிரி தெரிகிறது... 
ஆமாம், இது பேய் படம். நான் பேயா நடிக்கிறேனா என்பது பற்றியெல்லாம் இப்போது பேச முடியாது. ஒரு விதத்தில் இந்த கேரக்டர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இதில் கூடுதலாக ஜனனி சேர்ந்து நடித்திருக்கிறார். ஜனனி வந்த பிறகு படம் இன்னும் பெரிதாக வந்திருக்கிறது. டிரெஸ்ஸிங், லுக் என நான் ரொம்பவே அதிக கவனம் எடுத்து நடித்திருக்கிறேன்.  சமீபமாக வருகிற பேய் படங்கள் போல் இல்லாமல், இது புது விதமான படமாக இருக்கும். "எங்கேயும் எப்போதும்' படம் வந்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டன. இப்போது மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறேன். நிச்சயமாக இது  எனக்கு நல்ல ரீ எண்ட்ரி படமாக இருக்கும்.

மாடலிங், ஆர்ட், சினிமா என இந்த பயணம் நிறைவாக இருக்கிறதா... சக்சஸ் டிப்ஸ் என்ன?
எப்போதும் எல்லோரிடமும் கனிவாக இருக்க வேண்டும். எல்லாருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், லைட் பாய் வரைக்கும் ஆரம்பத்தில் இருந்த அதே மனதோடு இருக்க வேண்டும். நிறைய உழைக்க வேண்டும். வெற்றி - தோல்வி பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ள கூடாது. தினமும் நிறைய ஏமாற்றங்கள் கிடைக்கலாம். உன் முகம் சரியில்லை, உனக்கு நடிக்க வரவில்லை, ஹீரோயினாக நீ ஜெயிக்கிறது கஷ்டம் என என் முகத்துக்கு முன்னாடியே நிறைய வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றன. அதில் சின்சியர் கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றைக் கண்டுக் கொள்ள கூடாது. வருடத்தில் ஒரு மாதம் பெய்கிற மழைதான், மீதி பதினொரு மாதத்துக்கும் தண்ணீர் கொடுக்கும். அப்படி அவ்வப்போது கிடைக்கும் பாராட்டுகளை மட்டும் வைத்தும், எதையும் தாண்டி வர வேண்டும். 

ராமின் "பேரன்பு'வில் நடிக்கிறீங்க... அதில் என்ன ஸ்பெஷல்....
"கற்றது தமிழ்', "அங்காடித் தெரு', "எங்கேயும் எப்போதும்' மாதிரியான படங்களில் வந்த அஞ்சலியை நீங்கள் திரும்பவும் பார்க்கலாம். படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்போது படத்துக்கான பின்னணி இசை வேலைகள் நடந்து வருகின்றன. தணிக்கைக்குப் போய் வந்து விட்டால், படம் ரிலீஸþக்கு தயார்.  இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ரிலீஸ் ஆகிவிடும் என நினைக்கிறேன். படத்தைப் பற்றி ராம் சார்தான் பேச வேண்டும். எனக்கு தெரிந்த விஷயங்களை சொன்னேன் அவ்வளவுதான். அன்பு, பாசம், நேசம்தான் கதை.  படத்தில் மம்முட்டி சாருடன்  நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக எப்போதும் இருக்கும். அவர் ஒரு பெரிய ஸ்டார், அத்தனை படங்கள் நடித்தவர் என்பதைத் தாண்டி அவர் மிகப் பிரமாதமான நடிகர். நடிப்பை ஒரு கலையாக அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும். அவர் கூட வேலை செய்த அனுபவம் ஒரு ஆசிரியர் மாணவர் உறவாகத்தான் இருந்தது. அவர் நடிப்பிலிருந்து நிறைய நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். அடுத்த முறை நான் நடிக்கும் போது அவருடைய பாதிப்பு 
என்னிடம் இருந்து வெளிப்படலாம். 

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என பயணமாகி வருகிறீர்கள்... தமிழ் சினிமா பற்றி அங்கெல்லாம் என்ன பேச்சு இருக்கிறது?
இங்கே நிறைய திறமையாளர்கள், நிறைய திரைக்கதைகள் இருக்கிறதென பேசிக் கொள்வார்கள். அதை விட எளிய கதை சொல்லிகள் வளர்ந்து வருகிறார்கள் என்ற பேச்சும் உண்டு. அது உண்மைதான். "அறம்', "அருவி' மாதிரியான படங்களை பார்க்கும் போது, அது எவ்வளவு உண்மை என்பதை நானே உணர்கிறேன். உண்மையில் நிறைய புது முயற்சிகள் அங்கே நடக்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாக்களும் நன்றாகவே இருக்கின்றன.  பெரிய பட்ஜெட்டில் "மகாபாரதம்' அங்கே உருவாகி வருகிறது. மலையாள சினிமா வளர்ச்சிப் பாதையில்தான் போய் கொண்டிருக்கிறது. தெலுங்கு வேறு மாதிரியாக இருக்கிறது. அங்கே இருந்து வந்த நான், தென்னிந்தியாவின் எல்லா மொழிகளிலும் நடித்து விட்டேன் என்று சொல்லுவதில் பெருமையாக இருக்கிறது. 

தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சறுக்கல்... அதை நல்ல விதமாக அமைத்துக் கொள்ளவில்லை என்பதில் வருத்தம் இருக்கிறதா? 
சத்தியமாக இல்லை. வாழ்க்கையில் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடக்கும். "நான் சினிமாவுக்கு வருவேன். இவ்வளவு பெரிய நடிகையாவேன். அதன் மூலமான எனக்கு ஒரு லைஃப் வரும் என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. எல்லாமே எதிர்பாராமல் அமைந்ததுதான். நம் வாழ்க்கையில் எல்லாமே சந்தோஷமா அமையாது. சில விஷயங்கள் சந்தோஷத்தையும் சில விஷயங்கள் சங்கடத்தையும் தரும்.  இது ஒரு பயணம். சில சமயங்களில் அதில் எல்லாரும் இருப்பார்கள். சமயங்களில்  தனியாகவே பயணப்படவேண்டி இருக்கும். இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அப்படியே இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com