உப்பு வைத்தியம், ஒளி வைத்தியம், இசை வைத்தியம்!

உப்பளங்களில் பாய் விரித்த மாதிரி உப்பைப் பார்த்தவர்கள், மைசூர் ஹெப்பல் இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் உள்ள
உப்பு வைத்தியம், ஒளி வைத்தியம், இசை வைத்தியம்!

உப்பளங்களில் பாய் விரித்த மாதிரி உப்பைப் பார்த்தவர்கள், மைசூர் ஹெப்பல் இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் உள்ள ஹிமாலயன் சால்ட் கிறிஸ்டல் குகையைப் பார்த்தால் வியப்படைவீர்கள்.  இங்கே உப்பை வைத்தே வைத்தியம் செய்கிறார்கள்.  கூடவே உதவிக்கு ஒளி. ஓம் என்ற ஓசை.

குளிர்சாதன வசதி கொண்ட இந்த அறை (குகை)க்குள் செல்ல காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே சென்றால் போதும்.  உள்ளே ஹாய்யாக சாய்ந்து உட்கார்ந்துகொள்ள, வசதியாக நாற்காலிகள் இருக்கின்றன.   

சுவரில் பதித்திருக்கும் செங்கல் வடிவக் கல் உப்பு.  தரையில் பதித்திருக்கும் சதுரவடிவ டைல்கல் உப்பு.  அறையின் வெளிச் சுவர், பாறாங்கல் போன்ற சின்னச் சின்னப் பாறைகள்!  மேலே உப்புக் கல் தூவப்பட்ட கூரை.  

நெட்டுக்குத்தாக, சிறு ஓடை போன்ற அமைப்பிலிருந்து சலசலவென்று மெலிதாகக் கேட்கும் ஒலி. மேலிருந்து கீழே பாயும் நீரின் ஒலியின் இடையே ஓம் ஒலி ஒலிக்கிறது! 

இந்த உப்பு வைத்தியத்தை "ஹாலோ தெரபி' என்று சொல்கிறார், இதன் நிர்வாக இயக்குநர் பி.ஆர். பய்.  "ஹாலோஸ்' என்றால் கிரேக்க மொழியில் உப்பு என்று அர்த்தமாம். இந்த உப்பு வைத்தியத்தை போலந்து, ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்!" என்கிறார் பய்.

கடலில் உள்ள உப்பில் டாக்ஸின்களும், கேடு விளைவிக்கும் கழிவுகளும் கலந்திருக்கும்.  ஹிமாலய உப்புக் கற்களில் அவை இருக்காது.  மனித உடலில் இருக்கும் 84 இயற்கை அம்சங்கள் யாவும் இதிலும் இருக்கின்றன. இதன் தனிப்பட்ட விசேஷமே, அதிர்வு அலை சக்தியை அளிக்கிறது என்பதுதான்.

அமைதியாக இங்கே உட்கார்ந்திருந்தால், மனித உடல் இந்த உப்பின் மிக நுண்ணிய அம்சங்களை வெறும் சுவாசிப்பினாலேயே கிரகித்துக்கொண்டுவிடுகிறது. இதன் மூலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் அமைதி கிடைக்கிறது.  இது இயற்கையான, மருந்துகள் இல்லாத சிகிச்சை முறை. மூச்சு (ரெஸ்பிரேடரி) சம்பந்தமான கோளாறுகளுக்கு எல்லாம் இது பயன் தருகிறது என்கிறார் பய்.  45 நிமிடங்கள் இங்கே அமர்ந்திருந்தால், வெளியே நான்கு நாட்கள் கடல் காற்று வாங்கியதற்கு சமம் என்கிறார்!  

அமெரிக்கா, போன்ற நாடுகளில் இம்மாதிரி உப்புக் குகைக்குள் உட்கார்ந்திருப்பதால் என்ன பலன் கிடைக்கிறது என்று கணித்திருக்கிறார்கள்; நீங்கள் முன்பைவிட சீராகவும், எளிதாகவும் மூச்சு விட முடியும்.  தும்மலும், இருமலும் குறைந்து போகும்.  உங்கள் மூச்சுக் காற்று போகிற-வருகிற வழி சுத்தமாக இருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். சரும நோய்கள் இருந்தால், அவற்றைப் போக்குவதில் ஓரளவு பலன் இருக்கும். பாஸிடிவ் எண்ணங்கள் சுரக்கும்.  ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை எளிதாகக் கையாண்டு, மன நிம்மதியை மேம்படுத்திக்கொள்ளலாம்! இவை தவிர, இவர் தயாரித்து விற்கும் சில பொருள்கள் எல்லாமே உப்பை அடிப்படையாகக் கொண்டவை. 

பய்க்கு வயது எழுபதைத் தாண்டிவிட்டது.  ஆனாலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இவரது தொழிற்பேட்டையில், ஓர் அங்கமாக இதை நடத்தி வருகிறார்.  ஓர் அமர்விலிருந்து, ஐந்து, பத்து, இருபது, முப்பது அமர்வுகள் வரை உப்பு வைத்தியம் செய்கிறார்.  அவற்றுக்கு ஏற்றாற்போல் கட்டணமும் உண்டு!

"பிரச்னைகள் இருந்தால்தான் இங்கே சிகிச்சை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.  முன் தடுப்பு முறையிலும் சிகிச்சை பெறலாம் என்கிறார் பய். நோய் வந்த பின் வருவதைக் காட்டிலும், நோய் வருவதற்கு முன் வந்து இந்த அனுபவத்தைப் பெறலாம்!" என்கிறார். 
- சாருகேசி  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com