மனசு ஆமோதிக்கிற ஓர் உணர்வு!

"எனக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த கதை புது அனுபவமாக இருக்கும். கதை, களம், படப்பிடிப்புத் தளம் எல்லாவற்றிலும் புதுமையை விட, எளிமை இருப்பதுதான்
மனசு ஆமோதிக்கிற ஓர் உணர்வு!

"எனக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த கதை புது அனுபவமாக இருக்கும். கதை, களம், படப்பிடிப்புத் தளம் எல்லாவற்றிலும் புதுமையை விட, எளிமை இருப்பதுதான் இதில் எனக்கே பிடித்த அம்சம். ஒரு இளைஞனுக்கு பொறுப்பு இருக்கிற அதே நேரத்தில், இந்த சமூகத்தின் மீது வெறுப்பும் இருப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். வாழ்க்கை பயணம் என்பது எப்போதுமே தத்துவார்த்தமான முடிவை கொண்டது. இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும். எந்த விதமான பயணத்துக்கும் ஒருவன் தயாராக இருக்க வேண்டும் இதுதான் லைன்.'' -சிநேகமாய் சிரிக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்ப்பவர் இப்போது "இவன் தந்திரன்' மூலம் கதை சொல்ல வருகிறார்.

படத்தின் உள்ளடக்கம் பற்றி இன்னும் பேசலாமே...?

ஒரு தேசம் அதன் இளைஞர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. அதுவும் இளைஞர்களை பெரும்பான்மையாக கொண்ட இந்திய சமூகத்தில் இது பெரும் பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் இளைஞர்கள் இப்போது எத்தனை பேர் இருக்கிறார்கள். வேலையையே சந்தோஷமாகவும் காதலாகவும் அனுபவிக்கும் இளைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லாமல் போனதுதான் இங்கே துரதிருஷ்டம்.  நல்ல படிப்பு, நிறைய மதிப்பெண் இருந்தும் கண் காணாத நாடுகளில் வேலையின் துயரம் கடப்பவர்கள் எத்தனை பேர். இங்கே நமக்கு உரிய ஒரு வேலை கிடைத்து விடாதா...  என ஏங்கும் இதயங்கள் எத்தனை எத்தனை இருக்கின்றன. நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மீது கோபம் வருவது இயல்புதான். குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிற பிரச்னைகள்தான் முதன்மை அம்சம். மற்ற எல்லாவற்றையும் விட, கல்வியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை. அதே வேளையில் ஒட்டு மொத்த வெறுப்பையும் வீசாமல், அன்பையும் அக்கறையையும் முன் வைக்கிற கதை. 

காதலும், காமெடியும்தான் உங்களது திரை பாணி வடிவம்... இப்போது திடீரென்று வேறு மன ஓட்டத்தில் பேசுறீங்க...?

ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால், வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா என்று தோன்றும். அப்படி என் வாழ்க்கையில் நான் சந்தித்த சுவாரஸ்யங்கள் இந்தப் படத்தின் கதை. சொல்லப் போனால் எனக்கு கற்பிக்கப்பட்ட கல்வி. அதன் நியாய, தர்மங்களும் இதில் இருக்கும். ஏதேதோ யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஓர் உணர்வு எழும். மனசும் அதை ஆமோதிக்கிற மாதிரி இருக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் நம்மை எடுத்துச் செல்லும். அப்படியான ஓர் உணர்வுதான் இந்த சினிமா. பி.இ. படித்து விட்டு இருக்கிற ஒரு இளைஞன் கௌதம் கார்த்திக். அவர் பயின்ற கல்வி, கற்ற பாடங்கள், பெற்ற அனுபவங்கள் என நிறைய இருக்கும். இந்த கதைக்கு எது உண்மையோ... எது நேர்மையோ... அதுதான் படம். 

படத்துக்குப் படம் விதவிதமாக உருவெடுப்பவர் கௌதம் கார்த்திக்...இதில் அவர் பங்கு எப்படி கை சேர்ந்திருக்கிறது...?

கௌதம் கார்த்திக் அவரின் அப்பாவைப் போல். எந்தக் கதைக்கும் செட் ஆவார். "கிழக்கு வாசல்' மாதிரியும் கதை சொல்லலாம். "உள்ளத்தை அள்ளித்தா' மாதிரியும் கதை செய்யலாம். அப்படித்தான் கௌதமை நான் பார்த்தேன். இது ஒரு எளிய இளைஞனின் கதை. பி.இ. படித்த ஒருவன் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள் விற்கிறான் என கதாபாத்திரம் முடிவானதுமே, கௌதம் கார்த்திக் முன் நின்றார்.  இப்போது எல்லாம் முடிந்து படத்தின் "ரஷ்' பார்க்கும் கௌதம் கார்த்திக் எத்தனை பொருத்தமானவர் என்று தோன்றுகிறது. சமீபத்தில் வந்த "ரங்கூன்' அவருக்கு ஒரு நிலையான இடம் தந்துள்ளது. அந்த இடத்திலிருந்து அவரை மேலே ஒரு படி கூட்டிச் செல்லும் படமாக இது இருக்கும். ஷ்ரத்தா ஸ்ரீநாத்... கன்னடத்தில் "யூ-டர்ன்' என்று ஒரு படம் நடித்தார். மணிரத்னம் சாரின் "காற்று வெளியிடை' படத்தில் ஒரு முக்கியமான ரோலில் வந்தார். அவர்தான் இதில் ஹீரோயின். ரொம்பவே திருப்தியாக வந்திருக்கிறது அவர் ரோல். இந்த இரண்டு பேருக்குமான காதல் உணர்வுகள் ரொம்பவே எதார்த்தமாக வந்து சேர்ந்திருக்கிறது.  

பாடல்களை அவகாசம் எடுத்து உருவாக்குவது உங்களது தனி பாணி...?

நிவாஸ் கே.பிரசன்னாதான் இசை. இசைக்காக எந்த அர்ப்பணிப்பையும் செய்ய தயாராக உள்ள இளைஞன். ஆனால், இதில் வழக்கமாக ஐந்தாறு பாடல்களை பார்க்க முடியாது. இரண்டே பாடல்கள்தான். அதுவும் கதையின் ஓட்டத்தோடு பயணிக்கிற மாதிரி இருக்கும். இந்த கதையின் எதார்த்தம் எங்கும் நொடித்து விடக் கூடாது என்பதில் கவனம் வைத்து பாடல்களை வைத்திருக்கிறேன். அதே வேளையில் இசைக்கு வலிமையான இடங்கள் படத்தில் உண்டு. அது பின்னணி இசையாக உங்கள் இதயம் தொடும். ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராமின் சீடர் யு.என்.மோகன். அவரும் தன் பங்கிற்கு உழைப்பை தந்து உதவியிருக்கிறார். பாடல், ஒளிப்பதிவு, நடிப்பு என எல்லா அம்சங்களும் ஒருங்கிணைந்த நல்ல படம் இது. 

-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com