ஒரு தந்தை..! இரண்டாயிரம் மகள்கள்..!

தந்தையர் தினத்தை ஒட்டி அகமதாபாத்தை சேர்ந்த மகேஷ் சவானிக்கு அவரது 708 மகள்களிடமிருந்து வாழ்த்துகள் வந்து குவிந்துவிட்டன.
ஒரு தந்தை..! இரண்டாயிரம் மகள்கள்..!

தந்தையர் தினத்தை ஒட்டி அகமதாபாத்தை சேர்ந்த மகேஷ் சவானிக்கு அவரது 708 மகள்களிடமிருந்து வாழ்த்துகள் வந்து குவிந்துவிட்டன. ஒருவருக்கு 708 மகள்களா.. அது எப்படி சாத்தியம் .. என்று அதிசயிக்க வேண்டாம்...
சந்தேகிக்கவும் வேண்டாம்...

தந்தையை இழந்த பெண்களுக்குத் தந்தை ஸ்தானத்தில் இருந்து பல ஆண்டுகளாக திருமணம் நடத்தி வருகிறார். நாற்பத்தெட்டு வயதாகும் மகேஷ், இதுவரை தந்தையை இழந்த 708 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு மணப்பெண்ணிற்கும் நான்கு லட்சம் ரூபாய் வீதம் செலவு செய்திருக்கிறார்.

இந்த ஆண்டு மேலும் 251 தந்தையை இழந்து நிற்கும் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறார் .

தங்களுக்கு மகேஷ் தந்தை ஸ்தானத்திலிருந்து திருமணம் செய்து வைத்ததினால், ஒவ்வொரு வருடமும் தந்தையர் தினம் அன்று அந்தப் பெண்கள் நன்றி உணர்வுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பலர் வாழ்த்துடன் பரிசுப் பொருள்களையும் அனுப்பி வருகின்றனர்.

வைர வியாபாரம் மற்றும் ரியல்எஸ்டேட் அதிபரான மகேஷுக்கு சில பள்ளிகளும் சொந்தம்.

மகேஷின் அண்ணனும் தொழில் அதிபர்தான். ஆனால் திடீரென்று அண்ணன் மாரடைப்பினால் இறந்து விட, அண்ணனின் இரண்டு மகள்களுக்குத் திருமணம் நடத்த வேண்டிய பொறுப்பு மகேஷிடம் வந்து சேர்ந்தது .

"திருமணத்திற்காக அண்ணிக்கு ஏற்பட்ட சிரமங்களை நான் புரிந்து கொண்டேன். பணம் ஒரு பிரச்னை இல்லை என்றாலும், கல்யாணம் சிறப்பாக நடக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை நேரில் கண்டேன். பொருளாதார வசதி, பலரை வைத்து திருமண வேலைகளை செய்து முடிக்கக் கூடிய வசதி, செல்வாக்கு இருக்கும் நாமே இப்படி சிரமப் படும்போது, தந்தையை இழந்த பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள்... எத்தனை பேர் திருமணம் செய்து கொள்ள முடியாமல் கன்னியாக நிற்கிறார்களோ... அவர்களின் நிலைமையை நினைத்துப் பார்த்தேன்.. மனதுக்குள் கிலி.. அவர்களுக்கும் உதவ வேண்டும்.. என்று தீர்மானித்தேன்.

2008-இல் தந்தையை இழந்த, வயதுக்கு வந்த மகள்களுக்குத் திருமணங்கள் நடத்தி வைக்க ஆரம்பித்தேன். அது ஐம்பதாகி, நூறாகி, இரு நூறு ஆகி... இப்போது 708 ஆக உயர்ந்திருக்கிறது.

நான் நடத்தும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடிந்ததும் பல மாணவிகள் சான்றிதழ் வாங்க வருவார்கள். தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லையா? என்று கேட்டால், அப்பா இறந்து விட்டார்... மேலே படிக்க வசதியில்லை... என்பார்கள். தந்தையை இழந்த மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் வாங்காமல் படிக்க வைக்கிறோம். தந்தையை இழந்த மாணவர்கள் என்றால் பத்தாம் வகுப்பு வரை அவர்களது கல்விக் கட்டணத்தை நாங்கள் ஏற்கிறோம்.. என்று சொல்லும் மகேஷ் இதுவரை 8400 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் 392 கல்லூரி மாணவிகளுக்கும் உதவியுள்ளார்.

எனக்கு மகள் இல்லை. இரண்டு மகன்கள்தான்.. ஆனால் சுமார் இரண்டாயிரம் மகள்கள் என்னை வாய் நிறைய "அப்பா' என்று அழைக்கிறார்கள்'' என்று நெகிழ்கிறார் மகேஷ் சவானி.
-கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com