தமிழ்நாட்டில் ஒரு மினி பஞ்சாப்..!

அபிராமம் பேரூரிலிருந்து செம்மண் சாலையில் மூன்று கி.மீ. பயணிக்கும்போது வழி நெடுக கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் சீமைக் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும்  கட்டாந்தரை நிலப்பரப்பு மட்டுமே.
தமிழ்நாட்டில் ஒரு மினி பஞ்சாப்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்போதுமே வறட்சியின் நிரந்தர ஆட்சிதான்.  
அபிராமம் பேரூரிலிருந்து செம்மண் சாலையில் மூன்று கி.மீ. பயணிக்கும்போது வழி நெடுக கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் சீமைக் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும்  கட்டாந்தரை நிலப்பரப்பு மட்டுமே. அங்கு வீசும் வெப்பக் காற்று, வல்லந்தை கிராமத்தை  நெருங்கும்போது  திடீரென்று குளுமை கலந்து வீசுகிறது.   
காரணம், வல்லந்தை கிராமத்தில் இருக்கும் "அகல் (மகா) பண்ணை'.   
இந்த பச்சை "அகல் பண்ணை', பஞ்சாப் உழவர்களுக்குச் சொந்தம். 

"என்ன... தமிழ்நாட்டில் இருக்கும் பண்ணைக்கு பஞ்சாப் உழவர்கள் சொந்தக்காரர்களா..?' அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருசேர தாக்குகிறது. 

ஆம்..! கூட்டு வேளாண்மையில் நம்பிக்கையுள்ள சுமார் பதினைந்து உழவர்கள் மூவாயிரம்  கி.மீ. தொலைவிலிருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் தங்கள் விலை நிலங்களை விற்றுவிட்டு, தமிழ்நாட்டின் வல்லந்தை கிராமத்திற்கு வந்து நீரின்றி காய்ந்து கிடக்கும் சுமார் நானூறு ஏக்கர் மலட்டு பொட்டல் காட்டினை பொன்விளையும் பூமியாக மாற்றியிருக்கிறார்கள்.

"உழைத்தால் நிச்சயம் முன்னேற்றம் உண்டு.. தரிசு நிலத்திலும் தங்கத்தைப் பெறலாம்..' என்பதை அனுபவத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கும் இந்த பஞ்சாப் உழவர்கள், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கே ஒரு முன் உதாரணம். 

அறுபத்தேழு வயதானாலும் ஆஜானுபாகுவாக இருக்கும் விவசாயி மன்மோகன் சிங்கிடம் உரையாடினோம்:
"ராமேஸ்வரத்தில் ஒரு சீக்கிய கோவில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னால் ராமேஸ்வரத்திற்கு நானும் என் நண்பர்களும் இந்தக் கோவிலுக்கு வந்திருந்தோம். பஞ்சாபில்  வேளாண்மையை விரிவாக்கம் செய்ய நிலம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் ஆகாச  விலை. சிறு விவசாயிகள் அந்த விலை கொடுத்து நிலம் வாங்க முடியாது. எங்கள் மதப் பிரிவின் குரு, தமிழ்நாடு சென்று நிலம் வாங்கி அங்கே என்ன பயிரிடலாமோ அவற்றைப்  பயிரிட்டு வளருங்கள்.. வாழ்க்கையில் முன்னேறுங்கள்'' என்று வழி காட்டினார்.

கமுதி வட்டத்தில் வல்லந்தையில் நிலம் மலிவு விலைக்கு விற்பதாக விசாரணையில் தெரிய வந்தது. விருப்பமிக்க ஆறு பேர் சேர்ந்து சுமார் நானூறு ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டோம். ஒரு ஏக்கர் பத்தாயிரம் ரூபாய் விலையில் வாங்கினோம். இது 2007-இல் நடந்தது. இந்த நிலத்தில் சீமைக் கருவேல மரங்கள் காடுகளாய் விரிந்து கிடந்தன. தினமும் காலை முதல்  மாலை வரை  சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றினோம். நிலத்தை இயந்திரத்தால் ஆழமாக உழுது கற்கள், பாறைகளை அகற்றினோம். கீழ்மண்ணை  மேலாகவும், மேல் மண்ணை கீழாகவும் புரட்டிப் போட்டோம்.

தொடக்கத்தில் மின்னிணைப்பு கிடைக்கவில்லை. துளைக் கிணற்றின் மோட்டார் வேலை செய்ய மின்சாரம் வேண்டுமே.. மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரை வாங்கினோம். பிறகு மின் இணைப்புகள் கிடைத்தன. இயந்திரங்களின் உதவியால்  நிலப்பரப்பைச் சமப்படுத்தினோம். இந்த ஆரம்ப வேலைகளை முடிக்க மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது. அதற்குள் இன்னும் பஞ்சாப் நண்பர்களைச் சேர்த்து ஏறக்குறைய ஐநூறு ஏக்கர் நிலத்தை அக்கம்பக்க கிராமங்களில் மேலும் வாங்கிப் போட்டோம். 

மதுரை வேளாண்மைக் கல்லூரி பேராசிரியர் ஆறுமுகம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அடிக்கடி சந்தித்து அவரிடமிருந்து ஆலோசனைகள் பல பெற்றோம். தண்ணீர் இல்லை என்று உள்ளூர்வாசிகள் சொன்ன நிலத்தில்  ஆய்வு செய்து தண்ணீர் இருக்கும் இடங்களைக் கண்டுபிடித்து, ஆங்காங்கே ஆழ்துளைக் கிணறுகள் உருவாக்கினோம். தொடக்கத்தில் நூறு ஏக்கர் நிலத்தில் தென்னை, மா, கொய்யா, நெல்லி, முந்திரி, பாதாம், சப்போட்டா, நாவல் மரங்களை நடுவதென்று தீர்மானிக்கப்பட்டது. வறண்ட  பூமிக்குப் பொருத்தமானது சிக்கனமான சொட்டு நீர் பாசனம்தான் என்பதைத் தெரிந்து கொண்டோம். அதற்கான நீர் தெளிக்கும் கருவிகள், உபகரணங்களை வாங்கினோம். தீர்மானித்தது போலவே மரங்களை நட்டோம். குழந்தைகள்போல் பார்த்துப் பார்த்து வளர்த்தோம். ஒரு பக்கம், காய்கறி செடிகள், வெள்ளரி, பூசணி, பரங்கிக்காய், தர்ப்பூசணி, பப்பாளி போன்றவற்றை நட்டு வளர்த்து.. காய்ப்பதை விற்று வாழ்க்கையை ஓட்டினோம். சென்ற இரண்டு ஆண்டுகளாகத்தான் எங்கள் உழைப்பு முழு பலனைத் தர ஆரம்பித்திருக்கிறது. நல்ல லாபம் கிடைத்து வருகிறது.  

எங்களின் "அகல் பண்ணை' உள்ளூர்வாசிகள் கண் முன் நடந்த யாகம். ஒரு பரிசோதனை. அதன் மகத்தான வெற்றியைக் கண்ட பிறகு  உள்ளூர்வாசிகள் தங்கள் நிலங்களை நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். மரங்களைப்  பராமரிப்பதில் அவர்களுக்கு உதவுகிறோம். 

எங்கள் தாயகம் பஞ்சாப்பாக இருந்தாலும் நாங்களும் தமிழர்கள்தான். உள்ளூர்வாசிகளுடன் பொங்கல், தீபாவளி கொண்டாடுகிறோம். பஞ்சாப் பண்டிகைகளைக் கொண்டாடும்போது உள்ளூர்வாசிகளை விருந்தினராக அழைக்க மறப்பதில்லை.'' என்கிறார் மன்மோகன் சிங்.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com