ஒய்.ஜி.பி. நூறு!

ஒய்.ஜி. பார்த்தசாரதி - மத்திய அரசு அதிகாரி - நாடகக் குழு நடத்தியவர் - நடிகர் என பன்முகங்கள் கொண்டவர். அவரின் நாடகக் குழுவின்
ஒய்.ஜி.பி. நூறு!

ஒய்.ஜி. பார்த்தசாரதி - மத்திய அரசு அதிகாரி - நாடகக் குழு நடத்தியவர் - நடிகர் என பன்முகங்கள் கொண்டவர். அவரின் நாடகக் குழுவின் நாடகங்களில் வைஜெயந்திமாலா, சோ, மௌலி, ஏ.ஆர்.எஸ்., சந்தியா, ஜெயலலிதா, லட்சுமி, விசு, ஜெய்சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்தனர். பிரபலங்களாக உயர்ந்தனர்.  ஒய்.ஜி. பார்த்தசாரதியின் பிறந்த நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

என் கணவர் - திருமதி ஒய்.ஜி.பி. : "என் கணவரைப் பற்றி பேச ஆரம்பித்தால் எனக்கு நேரம் காலம் போவதே தெரியாது. புது டெல்லியில் அவர் இருந்தார். நான் அன்றைய பாராளுமன்ற லோக் சபாவின் சபாநாயகராக இருந்த அனந்தசயனம் ஐயங்காரின்  இல்லத்தில் தங்கி இருந்தேன். அப்பொழுதே ஒய்.ஜி.பி. சிறு சிறு நாடகங்கள் நடத்துவார். அந்த நாடகங்களில் எனது தந்தையார் நடிப்பார். "ரிக்ஷாக்காரன்"என்ற நாடகத்தில் இவர் ரிக்ஷாக்காரனாக நடிப்பார். எனது தந்தையார் அதில் அமர்ந்து பயணம் செய்பவராக வருவார். அன்றே தனது வருங்கால மாமனாரை  இழுத்து வருகிறார் பாருங்கள் என்று இவரை கிண்டல் செய்வார்கள். ஆரம்பத்தில் என் வீட்டில் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க வில்லை. அதனால் நான் விரும்புகிறேன் என்பதால் என் தந்தை ஒரு வருடம் வரை காத்திரு. அப்பவும் இவர்தான் தேவை என்றால் நான் திருமணம் செய்து வைக்கிறேன் என்றார். நாங்கள் காத்திருந்தோம். அன்று இன்றுள்ளதுபோல் கைபேசி இல்லை. நானும் அனந்தசயனம்  ஐயங்காரும்  காலையில் நடைப்பயணம் செய்வோம். அங்கு வந்து என்னை சந்தித்து விட்டுச் செல்வார். பின் காத்திருந்து ஜூலை 8, 1948-இல்  கல்யாணம் நடந்தது.  அவர் ஸ்ரீலங்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டார்.  நான் சபாநாயகரிடம், "ராமாயணம் போல் மாற்றி அமைத்து விட்டார்களே!' என்று கூறினேன். "என்னது?' என்றார் அவர். "சீதை இந்தியாவில் இருக்க, ராமரை ஸ்ரீலங்காவிற்கு மாற்றி விட்டார்களே!' என்று கூற, 9 மாதம் கழித்து மீண்டும் மாற்றப் பட்டார். என்னை திருமணம் செய்யும் போது எனக்கு ஒரே ஒரு கட்டளை மட்டுமே  போட்டார். நான் சமையல் அறைப்பக்கம் போகக் கூடாது என்பதுதான். அவரது தாயாருக்கு பல்வேறு வகையான சமையல் தெரியும். அவரிடம் நான்  அந்த சமையலை எல்லாம் கற்றுக் கொண்டேன். அதைத்தான் நான் பத்திரிகையில் தொடராக எழுதினேன். அவர் மிகுந்த தயாள குணமுடையவர். எங்கள் வீட்டில் வேலைசெய்த பலருக்கும், அவர்களது குடும்பத்திற்கும் உதவியுள்ளார். அவரது சகோதரரின் குழந்தைகளுக்கு இவரே திருமணம் செய்வித்து, வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். எல்லோருடனும் அன்பாகப் பேசி அரவணைத்துக் கொண்டு போகும் பண்புள்ளவர். அவருக்கு குழந்தைகளை அடிக்கக் கூடாது. குழந்தைகளுடன் அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து பேசும் தன்மையுள்ளவர். 

அவர் இறப்பார்  என்று நான் கண்டிப்பாக நினைக்கவில்லை. ஆனால் பிறக்கும்  மனிதன் ஒரு நாள்  கண்டிப்பாக இறக்கத்தான்  வேண்டும் என்று தெரிந்தவர் ஒய்.ஜி.பி. அதனால், தான் மரணம் அடைந்தால் என்ன என்ன செய்யவேண்டும் என்று பட்டியலிட்டு ஒரு  சாசனம் (will) தயாரித்து வைத்துவிட்டே இறந்துள்ளார். அதில் தனது மனைவி பூவோடும்  பொட்டோடும் எப்பொழுதும் போல வாழவேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் விரும்பியதைத்தான் நான் இன்றும் செய்து வருகிறேன். 

எங்களுக்குள் சண்டை வந்ததில்லை என்று கூறினால் பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். "கணவன் மனைவி சண்டை இல்லாமலா?' என்று கேட்பார்கள். நாங்கள் விவாதம் செய்துள்ளோம். கோபம் வந்தால் நான் பேசுவதை நிறுத்திவிடுவேன். இரண்டு மூன்று நாட்கள் இப்படி இருந்தாலே அவருக்கு நான் கோபமாக இருக்கிறேன் என்று தெரியும். பின்னர் சமாதானமாகப் பேசி சகஜமாகிவிடுவோம்.  

நாடகமும்  UAA  வும்ஒரு கண் என்றால், நான் மறு கண் என்று தைரியமாகக் கூறலாம். ஒவ்வொரு நாடகம் நடக்கும் போதும் அவர் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். பின்னர் அவர் மாதிரி ஒரு ஜாலியான மனிதரைப் பார்க்க முடியாது. நாடகத்தின் ஒத்திகை பலவும் எங்கள் வீட்டின் மாடியிலேயே நடக்கும். யாராவது யோசனை சொன்னால், அது சரியாக வரும் என்றால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும். பலசமயம் நானே கூறியுள்ளேன். சரியில்லை என்றால் யாராக இருந்தாலும் அழகாக அவர்கள் மனம் புண்படாமல் "வேண்டாம்' என்பதை கூறிவிடுவார்.     

ஒய்.ஜி.பி.  ஒரு நல்ல மனிதர்.  அதனால்தான் அவர் ஒரு சிறந்த மனிதராக முடிந்தது என்று கூறலாம்.                                                                                               

ஏ.ஆர்.எஸ். : நான் பிலிப்ஸ் இந்தியாவில் வேலை செய்து கொண்டிருந்தேன். வருடம் தோறும் சுதந்திரநாளில் எங்கள் விற்பனையாளர்களுக்காக ஒரு நாடகத்தை நாங்களே மேடையேற்றுவோம். அதற்காக நகரத்தில் உள்ள புகழ்பெற்ற நாடகக் குழுவின் ஒரு நாடகத்தை அவர்களிடம் அதன் வசன புத்தகத்தை வாங்கி நடத்துவோம். அப்படி ஒரு நாள் நான் நடிக்க ஒய்.ஜி.பி. அவர்களின் சகோதரர் சுந்தர் பார்த்து என்னை ஒய். ஜி.பி. அவர்களை சந்திக்க அழைத்தார். நானும் சரி என்று போய் பார்த்தேன். அவர் கேட்ட கேள்விகளும் எனது பதில்களும்.
உங்களது சொந்த ஊர்? 
தஞ்சாவூர்.
தஞ்சாவூரில் திருவையாறு சென்றிருக்கிறீர்களா? 
இல்லை. 
இந்த கேள்விகளெல்லாம் தேவையில்லாதவை என்று யாருக்கும் தோன்றும். ஆனால் அவர் மனதில் என்ன நினைக்கிறார்  என்று பின்னர் தான் தெரிந்தது. "வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்  எங்கள் நாடகம் அங்கு உள்ளது. உங்களுக்கும் விடுமுறை நாள் தானே, வரலாமே''என்றார். ""சரி'' என்று அவருடன் கிளம்பினேன். காலையில்  ஏதோ ஓர் இடத்தில் பஸ் நிற்க, என்னை தனியாக அழைத்துக்கொண்டு சென்ற "பாச்சன்னா' ( இப்படித்தான்  அவரை பலரும் அழைப்போம்), ""எங்கள் குழுவின் மிக முக்கிய பாத்திரமேற்று நடிக்கும் நடிகர் வரமுடியவில்லை . நீங்கள் தான் அந்த வேடத்தை செய்யப்போகிறீர்கள். நான் இருக்கிறேன் கவலை வேண்டாம்'' என்று அவர் கூற நான் என்ன சொல்வது என்று புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பஸ்ஸிலேயே எனக்கு அவராலும், சாரி அவர்களாலேயும் வசனங்கள் சொல்லித் தரப் பட்டன. இன்று நான் நடிக்கிறேன் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஒய்.ஜி.பி. என்ற மாமனிதர்தான்.

விசு : அம்பத்தூரில் 1967 -இல் நாடகம் போட்டுக் கொண்டிருந்தோம். ஏ.ஆர்.எஸ்.  வந்து பார்த்து என்னை ஒய். ஜி பி. என்ற மிகச் சிறந்த மனிதரிடம் அழைத்துச் சென்றார்.  அவரது நாடகக் குழுவில் நாங்கள் இணைந்தோம். அவர் சரியாக பண்ணவில்லை என்றால் திட்டுவார். அடுத்த நிமிடமே தட்டிக் கொடுத்துவிடுவார். அவ்வளவு பெரிய நாடகக் குழுவில் எங்களை போன்றவர்களுக்கு பெரிய பாத்திரமெல்லாம் கிடைக்காது என்று தெரியும். பலசமயம் வருத்தப்படுவேன். அவர் என்னை எப்படி தேற்றுவார் தெரியுமா? ""நம் நாடகம் குறைந்த பட்சம் 100  முறை மேடையேற்றப்படும். எல்லா நாளும் எல்லோருமே வர மாட்டார்கள். பெரிய பாத்திரம் சின்ன பாத்திரம் என்று பார்க்காமல் எல்லா வசனமும் மனப் பாடமாக கற்றுக் கொள். அப்படி செய்தால் உன்னை யாரும் விட்டு விட முடியாது. வராதவர்கள் வேஷமெல்லாம் நீதான் போடணும்.  அப்ப நீதானே பெரிய ஆள்''. உண்மை, என்னைப் பொருத்த அளவில் அவர் எனக்கு இரண்டாவது தந்தை என்று கூறலாம். ஒய். ஜி பி. இறந்த போது, நான் அவரது பூத  உடலுடன் நடந்தே சென்றேன்.  அவர் உடலுக்கு தீவைத்து விட்டு எல்லோரும் போன பிறகு நான் எரியும் உடலை பார்த்து கேள்வி கேட்டேன். "அப்பாவும் இறந்து போய்விட்டார்கள். அண்ணனும் இறந்து போன பிறகு  உங்களைத் தானே அந்த இடத்தில் வைத்துப் பார்த்தேன். இப்போ நீங்களும் என்னை விட்டுப் போய்விட்டால் நான் என்ன பண்ணுவேன்..?' அவரது ஆன்மா  எரியும் தீயில் இருந்து எழுந்து வந்து என்னுடன் இணைந்தது  போலிருந்தது. அதற்குப்பிறகுதான் பல முன்னேற்றங்களை நான் ஒரு குடும்பத் தலைவனாக செய்து முடித்தேன்.

வாணி ஜெயராம்: ஆங்கிலத்தில் ஒய்.ஜி.பி (YGP) என்றால் எனக்கு யங் அட் ஹார்ட் (Young at Heart), ஜெம் அமோங் மென் (Gem among Men), பியூர் அஃபக்ஷன் அண்ட் வார்ம்த் (Pure Affection and Warmth)  என்றுதான் நான் சொல்வேன்.   எங்களது நட்பு சுமார் 45  ஆண்டு கால நட்பு. நான் ரெகார்டிங் செய்ய சென்னை வரும் போதெல்லாம் அவரது வீட்டில் தங்குவேன். அவர் மும்பை வரும்போதெல்லாம் எங்களது வீட்டில் தாங்குவார். அவரது குடும்பமும்   எங்களது குடும்பமும் இணைந்து விட்டால் அரட்டை கச்சேரிக்கு அளவே கிடையாது.  

காத்தாடி ராமமூர்த்தி: மேடை என்று வந்து விட்டால் அவர் ஒரு சிங்கம்.  கொஞ்சம் கூட காம்ப்ரோமைஸ் (compromise) செய்து கொள்ள மாட்டார். அவரது "திட்டு' உலகப் பிரபலம். மேடையில் தவறு செய்தால் பெரியவர்கள் சிறியவர்கள் என்று பார்க்காமல் திட்டு கிடைக்கும். ஆனால் அந்த திட்டு வாங்க எல்லோரும் விரும்புவார்கள். காரணம் மோதிரக் கையால் குட்டு பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பார்கள்.  

ஏவி.எம்.சரவணன்: நல்ல மனிதர், பண்பாளர். இவர் மத்திய அரசு பணியில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துணை கலெக்டராக பணியாற்றியவர். அப்பொழுதெல்லாம் படச்சுருள் (நெகடிவ்) இவரிடம் தான் வாங்க வேண்டும். திரை உலகத்தில் உள்ளவர்கள் எந்தவிதமான உதவி வேண்டும் என்றாலும் இவரை தாராளமாக அணுகலாம். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய திரைப்படக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர்.  

சிவசங்கரி: சிறு வயதில் இருந்தே அவரோடும் ,அவரது குடும்பத்தோடும் எங்களது பழக்கம் இருந்தது. என்னை சிறு வயதிலிருந்தே அவருக்கு தெரிந்ததால்,'ஏண்டி  பெண்ணே என்றே அழைப்பார். ஒருமுறை மலேசியாவில் நான் ஒரு இலக்கிய கூட்டத்திற்காக சென்றேன்.  அவரும் அங்கு நாடகம் போடுவதற்காக வந்திருந்தார். அங்குள்ள எல்லோருக்கும் முன் என்னை பார்த்து அதே "ஏண்டி பெண்ணே' என்று அழைத்து, "இவள் இன்று ஒரு பெரிய எழுத்தாளர். ஆனால் இவள் நடக்க ஆரம்பிக்கும் முன்னரே எனக்கு தெரியும்' என்றார். இவர் சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

நடிகை லட்சுமி : எங்களைப் பொருத்த அளவில் UAA  ஒரு நாடகக் குழு மட்டும் அல்ல, ஒரு தெய்வ  வீடு. அங்கு நடிப்பு மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை. வாய்க்கு ருசியாக பல தின்பண்டங்களும் தருவார்  திருமதி ஒய். ஜி.பி.   என்னைப் போலவே பலரும் அவரது அன்பிற்கும், அவரது சரியான வழிமுறைக்கும் கட்டுப்பட்டிருக்கிறோம். அதில் குறிப்பிடத்தக்கவர்கள், ஜெய் சங்கர், ஜெயலலிதா, சோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் சரியாக 7  மணிக்கு மேடைக்கு வரணும் என்றால் வரணும்.  ஆனால் இந்த "நேரம் தவறாமை' பின்னால் எங்கள் வாழ்க்கைக்கு மிகவும்  உபயோகமாக இருந்தது என்று சொல்லலாம். 

வைஜெயந்திமாலா: எனது திருமணத்தை தாய் தந்தையராக இருந்து நடத்திவைத்ததே ஒய்.ஜி.பி. யும் அவரது அன்பு மனைவியும் தான்.  எங்கள் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியமும் பாச்சன்னா இல்லாமல் நடந்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் அவரது பெயரில் உள்ள  மேடையில் நான் நடனம் ஆடும்போதெல்லாம் அவர்  இல்லாமல் இருக்கலாம். ஆனால்  என் மனதில் இன்றும், என்றும் வாழ்கிறார் என்று கூறுவேன்.

மெளலி: மின்சாரம் கண்ணுக்கு தெரிவதில்லை. அது போன்றுதான் எங்கள் அன்பு பாச்சன்னா. அவர், தன்  குடும்பத்திற்காக மட்டுமல்லாமல் என்னைப்போன்ற கலைஞர்களின் அன்பு மனங்களில் இன்றும் வாழ்கிறார். அன்று உத்யோகஸ்தர்களை நல்ல நடிகர்களாக மாற்றிய பெருமை அவரையே சேரும்''.
-சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com