360 டிகிரி

செல்போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் இருக்க வேண்டுமா? இதைத் தவிர்க்க சில எளிய வழிகள்

செல்போன் பேட்டரி  சார்ஜ் தீராமல் இருக்க...
செல்போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் இருக்க வேண்டுமா? இதைத் தவிர்க்க சில எளிய வழிகள்:
வைபரேட் எனும் எதிரி: போன் வைபரேட் மோடில் இருந்தால் பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். அதனால் முடிந்த அளவு வைபரேட் மோடை கட் செய்வது நல்லது. அதேபோன்று ஸ்மார்ட் போன் கீபேடில் டைப் செய்யும்போது சத்தம் கொடுக்கும். ஹேப்டிக் ஸ்பீட் பேக் எனும் பொறியையும் நிறுத்தி வைக்கவேண்டும்.  வால் பேப்பர்கள், ஸ்மார்ட் போன் அமோல்டட் டிஸ்ப்ளே கொண்டதாக இருந்தால், கருப்பு நிற வால் பேப்பர்களைப் பயன்படுத்தினால் பேட்டரி சார்ஜ் அதிகம்
செலவாகாது.

ஆன்ட்ராய்டு அப்டேட்:  ஸ்மார்ட் போன் செயல்பாட்டை அதிகரிக்க கூகுள் நிறுவனம் அவ்வப்போது இயங்குதளத்துக்கான அப்டேட்களை அளிக்கும். ஒவ்வோர் அப்டேட்டுகளையும் தவறாமல் இன்ஸ்டால் செய்வது பேட்டரியின் ஆயுளைக் குறிக்கும்.

கை கொடுக்கும் ஏர்பிளேன் மோட்: ஸ்மார்ட் போனில் உள்ள ஏர்பிளேன் மோட் ஆப்ஷன் உங்கள் வெளியுலகத் தொடர்பை மட்டுமல்ல; வீடியோ போன்ற மல்டி மீடியா ஆப்ஸ்களுக்குத் தேவையான பேட்டரி சார்ஜை அதிக நேரம் அளிக்கவல்லது. நெட்வொர்க் சரியாக இல்லாத இடங்களில் நீங்கள் பயணம் செய்யும்போது ஸ்மார்ட்போன் ஆன்டெனா அதிகப்படியான பேட்டரி பயன்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதால் அதுபோன்ற நேரங்களில் மொபைலை ஏர்பிளேன் மோடுக்கு மாற்றிவிடுங்கள்.

ஜி.பி.எஸ், வைஃபை மற்றும் புளுடூத்: தேவையற்ற நேரங்களில் ஜி.பி.எஸ். புளுடூத் போன்றவற்றை ஆஃப் செய்து விடுங்கள். அதேபோல மொபைல் நெட்வொர்க் வழியாக இணையத்தில் இணைத்திருந்தால், வைஃபை இணைப்பைத் துண்டித்து விடுங்கள்.
-ஆர்வி

எந்த ராகம் எதற்கு?
ஆபேரி ராகம்: கவர்ச்சியான ராகம்.  மனத்தில் நிறைவு, மனச்சிக்கல்களை எளிதில் கரைக்கும். உயர் அதிகாரிகளுக்கும், மாணவர்களுக்கும் தங்களது வேலையையும், படிப்பையும் தொடங்கும்போது  இந்த ஆபேரி ராகத்தைக் கேட்க வைக்கலாம்.

ஹிர் பைரவ்: மனதை உருக்கும், மன அழுத்தம், உடற்பளு நிறைந்த வேலைக்கு அருமருந்து. ஷாப்பிங் மால், அலுவலகங்களில் மென்மையாக ஒலிக்கும் இசை இதுதான் ஹிர் பைரவ்.

ஆனந்த பைரவி: உயர் ரத்த அழுத்தம், பைல்ஸ் நோயாளி, அறிவுத்திறன் தேர்வு எழுதுபவர்களுக்கும், மருத்துவமனை வரவேற்பு அறைகளிலும் இந்த ஆனந்த பைரவி ஒலித்தால் பலனுண்டு.

ஆரபி ராகம்: ரெளத்திரத்தை அடக்க ஆரபிராகத்தை ஆராதிக்கலாம். 

ஆசாவேரி ராகம் :  தன்னம்பிக்கையைப் பெருக்கவும், தலைவலி,  மன உளைச்சல், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் ஆசாவேரி  ராகம் அற்புதமானதாகும்.

சோனா ராகம்:  சோம்பிக் கிடக்கும் சோம்பேறி மனிதர்களை சோனா ராகம் சுண்டியெழ வைத்து விடும்.

பாகேஸ்வரி ராகம்: தூக்கம் வராமல் தவிப்பவர்கள் பாகேஸ்வரி ராகத்தை கேட்கலாம்.
தொகுப்பு: மேட்டுப்பாளையம் கே. அசோகன்

பேரீச்சம்பழத்தின் நன்மைகள்
• மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பேரீச்சம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும்.

• காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையைப் பெற பேரீச்சம்பழம் எடுத்துக்கொள்வது நல்லது.

• தினமும் படுக்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும், இரண்டு பேரீச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம் பெறும். மேலும் புதிய ரத்தமும் உண்டாகும். இதனால் தோல் பகுதிகள் மிருதுவாகவும் வழவழப்பாகவும் இருக்கும். கண் சம்பந்தமான கோளாறுகளும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் நீங்கும்.

• உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்துத் தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும்.
எச். சீதாலெட்சுமி

• நெப்போலியன் தன் கண் புருவத்துக்கு அடர்த்தியான "கண்மை" போட்டுக்கொண்டாராம். எல்லோரும் அவர் கண்களைப் பார்த்தே பேசவேண்டும் என்பதற்காகவாம். எல்லோரையும் நடுங்க வைத்த நெப்போலியன், பூனையைக் கண்டால் பயந்து நடுங்கி பீதியடைந்து வெல வெலத்துப் போய் நின்று விடுவாராம்.

• வின்ஸ்டன் சர்ச்சில் அபார நினைவாற்றல் படைத்தவராம். ஒருவர் எவ்வளவு நேரம் பேசினாலும், அவர் பேசிய ஒரு சொல் விடாமல் திரும்பச்சொல்லும் ஞாபக சக்தி கொண்டவராம். முழுநீள ஷேக்ஸ்பியர் நாடகத்தை முழுமையாக ஒப்பிக்கும் ஆற்றல் பெற்றவராம்.
- மா.உலகநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com