தெரிந்த பெயர், தெரியாத விவரம்: பத்மநாபபுரம் அரண்மனை

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை.  பல நூற்றாண்டு  நிகழ்வுகளை உள்ளடக்கிக் கொண்டு ஒரு வரலாற்றுச் சின்னமாக காட்சியளிக்கிறது. 
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: பத்மநாபபுரம் அரண்மனை

* கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை.  பல நூற்றாண்டு  நிகழ்வுகளை உள்ளடக்கிக் கொண்டு ஒரு வரலாற்றுச் சின்னமாக காட்சியளிக்கிறது. 

* கேரள  கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பத்மநாபபுரம் அரண்மனையும் அதன் வளாகமும். வேணாட்டு மன்னர்களின் அரண்மனையாக  வரலாற்று  ஆவணங்களில்  குறிப்பிடப்படுகின்றது.

* கல்குளத்தில்  நீராழிகட்டு  என்று கூறப்படுவது தாய் கொட்டாரம் ஆகும். 

* கேரளத்திற்கே உரிய   கட்டடக் கலைகளும் , நுணுக்கமான மர வேலைப்பாடுகளும், கண்ணைக் கவரும்  சுவர் ஓவியங்களும்  பத்மநாபபுரம் அரண்மனையின் ஒவ்வொரு பகுதியிலும்  கடந்த கால வரலாற்று நினைவுகளைப் பறைசாற்றுகின்றன.

* கட்டடக் கலைஞர்களுக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும் மிகச் சிறந்ததோர் ஆய்வுக் கூடம்.  இங்குள்ள  உப்பரிகை  மாளிகையை அமைத்தது  மார்த்தாண்ட வர்ம மகாராஜா  என்று கூறப்படுகிறது.  

* இவர் இவ்வரண்மனையை பெருமாள் அரண்மனை என்ற நிலையில் , ஸ்ரீ பத்மநாபசுவாமிக்கு திருப்படிதானம் செய்தும்,  நாடு முழுவதும் ஸ்ரீ பத்மநாபனுக்கு  சமர்ப்பித்தும்  பின்னர் பத்மதாசனாக  ஆட்சி செய்ததாகவும்,  அதன்பின் கல்குளம்  என்னும் இடப்பெயரையும், உடையார் வளாகம்  என்னும் வீட்டுப் பெயரையும் முறையே பத்மநாபபுரம் என்றும் பத்மநாபபுரம் அரண்மனை என்றும் பெயர் மாற்றம் செய்திருப்பதாக அரண்மனை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. 

* பத்மநாபபுரம்  அரண்மனை 6 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள கட்டடங்கள் ஒரே காலத்தில்  கட்டப்பட்டவை அல்ல. கடைசியாக  கட்டட வேலை நடந்தது  சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில்  என  கூறப்படுகிறது.

* அரண்மனையில் நான்கு மாடியுள்ள உப்பரிகை மாளிகையின் கீழ்பகுதியில்  கருவூலம் அமைந்திருந்தது.  உணவு சமைக்கும்  இடமும்,   ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு உணவு அளிக்கும் இடமும்  அந்தக் காலத்திலேயே இணைத்துக்  கட்டப்பட்டிருந்தன

* அரண்மனையிலுள்ள எல்லா இரு நிலை கட்டடங்களும்  இரண்டாவது மாடி ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.  ஏதேனும்  ஒரு கட்டடத்தின் இரண்டாவது மாடியில் ஏறினால்  கீழே இறங்காமலேயே பிற எல்லா இரண்டாவது மாடிகளுக்கும்  செல்லத்தக்க வகையில்  அமைப்பைக் கொண்டது. 

* இங்குள்ள பூமுக மாளிகை, வேப்பமூடுஅரண்மனை,  தாய் கொட்டாரம்,  பெரிய ஊட்டுப்புரை , ஹோமப்புரை, புதிய அரண்மனை,  உப்பரிகை மாளிகை,  ஆயுதசாலை,  தெற்குத் தெரு அரண்மனை, பந்தடிக்களம் அரண்மனை, அம்பாரி முகப்பு,  சந்திரவிலாசம்,  இந்திரவிலாசம், ஒப்பனை அறை, நவராத்திரி மண்டபம்,  சிறிய மடப்பள்ளி, தேவாரகெட்டு தேவசம்,  தெற்கு அரண்மனை ஆகியவை முக்கிய கட்டடங்கள் ஆகும்.

* வேலைப்பாடுகளுடன்  கூடிய  மிக அழகான முகப்பு உள்ளது,. மணி மேடை  கட்டடத்தின் மிக உயரமான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நாழிகை மணியை  உருவாக்கியவர் தமிழரே. இம்மணியின் ஓசை மூன்று கி.மீ. சுற்றளவுக்குக் கேட்குமாம்.

* தாய் அரண்மனையில்  அழகானதும்  கவர்ச்சியாகவும் காணப்படுவது  ஏகாந்த மண்டபம். திருவிதாங்கூர்  மன்னர்கள்  ஆண்டுதோறும் 41 நாள்கள் ஏகாந்த பஜனை நடத்துவதுண்டு. சபரிமலை  மண்டல காலத்தில் இப்பஜனை  நடந்துள்ளது. ஆட்சி காரியங்களிலிருந்தும்,  எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுபட்டு  அரசர் இம்மண்டபத்தில் பஜனை இருப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.  

* அரண்மனை வளாகத்தில் ஒரே சமயத்தில்  2 ஆயிரம் பேர் உணவு  அருந்திவிட்டு வெளியே குளத்தில் சென்று  கைகழுவும் வகையில்  கட்டமைப்பு  அமைக்கப்பட்டுள்ளது. 

* நவராத்திரி மண்டபத்திற்கு மேற்கு பக்கத்திலுள்ள கட்டடத்தின்  இரண்டாவது மாடியில் உள்ள பெரிய மண்டபத்தில்தான் ஆயுதசாலை இருந்து வந்தது.   இம்மண்டபத்தில்  ஜன்னல்களே கிடையாது.  இரு வாசல்கள்  மட்டுமே உள்ளன.  

* வெள்ளைக்காரர்களுக்கு எதிராக  வேலுதம்பி தளவாய் நடத்திய  வரலாற்றுச் சிறப்பு மிக்க  போராட்டம் தோல்வி அடையும் வரை அந்த ஆயுதசாலையில்  பல்லாயிரக்கணக்கான  போர்க் கருவிகள் இருந்தனவாம்.   தற்போது,  பல்வேறு வகையான வாள்கள்,  காயங்குளம்  ராஜாவின் உடைவாள்,  அம்புலப்புழை தம்புரானின்  உடைவாள் ,  மனிதனை உள்ளே அடைப்பதற்குரிய இரும்புக் கூண்டு ஆகியவை மட்டுமே எஞ்சியுள்ளன. அவை அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளன.

* வளாகத்தில் தொல்பொருள் கண்காட்சிக் கூடம்  உள்ளது. இங்கு மர சிற்பங்கள், கற்சிலைகள், செப்பேடுகள், பழைய காசுகள், ஆயுதங்கள்,  ஓவியங்களின் நகல்கள்  ஆகியவை காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கீழ் செயல்பட்டு  வருகிறது.

* இங்குள்ள தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன்  நவராத்திரி  பூஜையில் பங்கேற்க புறப்படும் நிகழ்ச்சி   இரு மாநிலங்களை  இணைக்கும் விழாவாக பத்மநாப
புரம் அரண்மனையில் நடைபெற்று வருகிறது.  

* திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க  யானை மீது  பத்மநாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் , அலங்கரிக்கப்பட்ட  பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, குமாரகோவில் வேளிமலை  குமாரசுவாமி ஆகிய விக்ரகங்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது.  விக்ரகங்கள் கொண்டு செல்வதற்கு முன்பாக  பத்மநாபபுரம் அரண்மனை  உப்பரிகை மாளிகையில் மன்னரின் வாள் எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

* இந்நிகழ்ச்சியில்  கேரள அமைச்சர்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழக  அரசு உயர் அதிகாரிகள் இன்றளவும்  கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.       
 -வேலாயுதம் பிள்ளை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com