ஏழாவது "சரஸ்வதி'

டிசம்பர் கச்சேரி சீஸன் வந்தால்தான் விருது கொடுப்பது என்ற நியதி, "டாக்டர் சி.பி. ராமசுவாமி அய்யர் பவுன்டேஷனு'க்கு இல்லை போல.
சுமதி கிருஷ்ணன், சித்ரா விசுவேசுவரன், அருணா சாயிராம், பிரபா ஸ்ரீதேவன், நந்திதா கிருஷ்ணா
சுமதி கிருஷ்ணன், சித்ரா விசுவேசுவரன், அருணா சாயிராம், பிரபா ஸ்ரீதேவன், நந்திதா கிருஷ்ணா

டிசம்பர் கச்சேரி சீஸன் வந்தால்தான் விருது கொடுப்பது என்ற நியதி, "டாக்டர் சி.பி. ராமசுவாமி அய்யர் பவுன்டேஷனு'க்கு இல்லை போல. நவராத்திரி வருமுன்னே, சரஸ்வதி பெயரால் கலைஞர் ஒருவருக்கு ஒரு விருதை வழங்கிக் கௌரவித்துவிடுகிறார், அதன் இப்போதைய தலைவி டாக்டர் நந்திதா கிருஷ்ணா.
"2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சி.பி. ராமசுவாமி அய்யர் பவுன்டேஷன், முதல் நவராத்திரி இசை விழாவைத் துவக்கியது. துவக்கி வைத்தவர், முன்னாள் இந்திய தொலைக்காட்சி நிலையங்களின் டைரக்டர் ஜெனரல், பி.வி. கிருஷ்ணமூர்த்தி. இவர் இசை விமர்சகர் "சுப்புடு'வின் சகோதரர். அந்த ஆண்டு "சரஸ்வதி விருது' பெற்றவர், வயலின் இசைக் கலைஞர் எம். சந்திரசேகரன்!' என்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சுமதி கிருஷ்ணன். இவரும் இசைக் கலைஞரே. சங்கீத கலாநிதி டாக்டர் ஆர். வேதவல்லி அவர்களின் மாணவி. ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பு ஏற்றுச் செயல்படுபவர்.
"சரஸ்வதி' விருது, கலைகளின் கடவுளான சரஸ்வதியின் பெயரால் வழங்கப்படுகிறதோ என்ற நம் சந்தேகத்துக்கு விளக்கம் அளித்தார் டாக்டர் சுமதி கிருஷ்ணன்.
"அந்த நாளில் சி.பி. அவர்களின் "குரோவ்' வளாகம், இசை மையமாக இருந்தது. இங்கிருக்கும் கல்யாணக் கூடத்தில் ஏராளமான இசைக் கலைஞர்கள் சி.பி.யை இசையில் ரசித்து மகிழச் செய்திருக்கிறார்கள். இங்கேதான் 1970-களில் டி. முக்தாம்மா பதம்-ஜாவளிகள் எல்லாம் பலருக்கும் கற்றுக்கொடுத்தார். சி.பி.யின் புதல்வர் சி.ஆர். பட்டாபிராமனின் மனைவி சரஸ்வதி அவர்களின் நினைவாக வழங்கப்படுவதுதான் இந்த "சரஸ்வதி' விருது.
"சரஸ்வதி நன்றாகப் பாடுவார். வாய்ப் பாட்டு மட்டுமல்ல, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், ஹார்மோனியம், பியானோ என்று எல்லா வாத்தியங்களையும் வாசிப்பார். மேற்கத்திய இசையிலும், இந்திய இசையிலும் பயிற்சி பெற்றவர். 1977-இல், "பாரம்பரிய இசை' என்று அவர் தொகுத்த திருமணம் மற்றும் விழாக்கள் முதலிய முக்கிய நிகழ்ச்சிகளின்போது பாடப்
படும் பாடல்கள் நூலாக வெளிவந்தது. "கௌரி கல்யாண வைபோகமே' என்ற தலைப்பில் சென்னை லிப்கோ நிறுவனம் இதை வெளியிட்டது. பாடல்களுக்கு அவரே மெட்டமைத்திருக்கிறார். இதில் எல்லாம் அவர் ஒரு தனி அழகைக் கண்டார்!' என்கிறார் நந்திதா கிருஷ்ணா.
"நம் கலைகள்-கலாசாரங்கள் எல்லாம் கொண்டாடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் நந்திதா கிருஷ்ணா' என்கிறார் சுமதி கிருஷ்ணன். "அவர் காரணமாகத்தான் இங்கே இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் எல்லாம் நடை
பெறுகின்றன. சுற்றுச்சூழல், வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சி, கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆய்வு என்று கருத்துக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சிகள் தவிர, பாரம்பரிய சித்திரங்கள், ஓவியங்கள் எல்லாம், ஓவியர்களுக்கு
உதவுவதற்காக, காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இவை மட்டுமல்ல. இசைதொடர்பாக நிறைய இசை நிகழ்ச்சிகள் - குறிப்பாக இளைய தலைமுறைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் - வழங்கப்பட்டு வருகின்றன. செயல்-விளக்க உரைகள் எனப்படும் லெக்சர்-டெமான்ஸ்ட்ரேஷன் நிகழ்வுகள் பிரபலமானவை' என்கிறார் சுமதி கிருஷ்ணன். (இந்த ஆண்டு கொலு பொம்மைக் கண்காட்சியும் தொடங்கிவிட்டது. துணி பொம்மைகள், டெர்ரகோட்டா, கொண்டபள்ளி, எட்டிகோபகா பொம்மைகள் என்று பல இடங்களிலிருந்தும் கைவினைக் கலைஞர்கள் உருவாக்கியவை இதில் உண்டு!)
2011-இல் வயலின் கலைஞர் எம். சந்திரசேகரனுக்கு "சரஸ்வதி' விருது கொடுத்த பின் தொடர்ந்து, 2012-இல் சங்கீத கலாநிதி ஆர். வேதவல்லி, 2013-இல் மகாராஜபுரம் சீனிவாசன், 2014-இல் வீணை காயத்ரி, 2015-இல் டாக்டர் பத்மா சுப்ரமணியம், 2016-இல் சித்ரா விசுவேசுவரன் ஆகியோருக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில், இந்த ஆண்டு "சரஸ்வதி' விருது பெற்றவர் கர்நாடக இசைப்
பாடகி அருணா சாயிராம்.
சுமதி கிருஷ்ணன், சித்ரா விசுவேசுவரன், அருணா சாயிராம், முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், நந்திதா கிருஷ்ணா என்று மேடையில் பெண்களாக அமர்ந்திருந்தார்கள்.
பிரபா ஸ்ரீதேவன் மட்டுமே விதிவிலக்காகத் தமிழில் பேசினார். இயல்பான பேச்சு. இதுவரை விருது பெற்றவர்களைக் குறிப்பிட்டுவிட்டு, இந்த வரிசையில் அருணா சாயிராமுக்கு விருது வழங்குவது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
அருணா சாயிராம் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தாலும், வழக்கம் போல வெகு அடக்கமாக இருந்தார்.
"இந்த "சரஸ்வதி' விருதை ஏற்றுக்கொள்வதில் எனக்குப் பொறுப்பு மேலும் கூடியிருக்கிறது. அதிலும் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சரஸ்வதி பட்டாபிராமன் நினைவாக இதைப் பெறுவது பெரிய கௌரவம். பிருந்தா-முக்தாவிடம் எல்லாம் கற்றுக்கொள்ள முடியுமா என்று ஏங்கிக்கொண்டிருந்த இளம் பிராயத்தில், அவர்களே மும்பையில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்து கற்றுக்கொடுத்தது என் பாக்கியம்' என்றார். அருணா ஆரம்பத்தில் கற்றுக்கொண்டது அவர் தாயாரிடத்தில்தான்.
இலக்கியச் சிந்தனை அமைப்பாளரும், அருணாவின் நலம் விரும்பியுமான ப. லட்சுமணன் மேடை ஏறி வந்து, அருணாவுக்குத் தம் மரியாதையையும் பாராட்டையும் தெரிவிக்க, பொன்னாடை அளித்தார். இதை மிகப் பெரிய கௌரவமாகத் தாம் கருதுவதாக அருணா சாயிராம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞர் பேபி ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பாடகரைத் தேர்ந்தெடுத்தவரும் சுமதி கிருஷ்ணன்தான்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com