பிடித்த பத்து: மெல்லிசைக்கலைஞர் "அபஸ்வரம்' ராம்ஜி தனக்குப் பிடித்த பத்து குறித்து விவரிக்கிறார்:

கொல்லூர் மூகாம்பிகை கோயில்: இந்தக் கோயிலில் தரிசனம் செய்வது , மரியாதைக்குரிய எம்.ஜி.ஆரைப் பார்த்து எனக்கு வந்த ஆசை .
பிடித்த பத்து: மெல்லிசைக்கலைஞர் "அபஸ்வரம்' ராம்ஜி தனக்குப் பிடித்த பத்து குறித்து விவரிக்கிறார்:

காதை அடைத்துக் கொள்ள பஞ்சு
கொல்லூர் மூகாம்பிகை கோயில்: இந்தக் கோயிலில் தரிசனம் செய்வது , மரியாதைக்குரிய எம்.ஜி.ஆரைப் பார்த்து எனக்கு வந்த ஆசை . சுமார் 38 ஆண்டுகளுக்கு முன், "ஒரு மிகப் பெரிய நடிகர் , அரசியல்வாதி , கலியுக கர்ணன் - இவரே இந்த கோயிலுக்குப் போகிறாரே' என்கிற ஆச்சர்யத்தில் மட்டுமே நான் முதல் அடி எடுத்து வைத்தேன் .

அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சென்று கொண்டிருக்கிறேன். கொல்லூர் அன்னை என்னுடைய பல முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறாள்.

என் குடும்பம் : சாதாரணமாக எல்லோருக்கும் அமையாத ஒரு மிகப் பெரிய குடும்பத்தை விட்டுச் சென்றவர் என் தந்தை டைரக்டர் கே. சுப்ரமணியம். 1930 களில் தன் திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்து சாதித்துவிட்டுச் சென்ற மாமனிதர். எங்கள் குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை பிரபலங்கள், கலை உலகில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதத் துவங்கினால் பத்து பக்கம் வேண்டும்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் : என்னோட படிப்பு. ஆரம்ப காலத்தில் நான் கலை உலகில் வேரூன்றத் தேவையான பணத்தை சம்பாதிக்க கடவுள் காட்டிய வழி . 1967-இல் படித்து முடித்து வெளியே வரும்போது, ஒரு பட்டத்தையும் ஒரு மனைவியையும் (ஆமாம் படிக்கும்போதே லவ்வு ) என்னிடம் ஒப்படைத்த என் தொழில்-முறை படிப்பு. சொந்தமான தொழில் துவங்கி சென்னை சபையர் தியேட்டர் வளாகத்தில் என்னுடைய முதல் உணவகத்தையும் , தென் இந்தியாவின் முதல் "டிஸ்கோ'வையும் , 1971-இல் அரங்கேற்றிய அனுபவம் . பிறகு தொடர்ந்து ஒரு சைனீஸ் உணவகம் மற்றும் இட்லி ஷாப் என்ற தென்னிந்திய உணவகத்தையும் நடத்த கற்றுக் கொடுத்த படிப்பு.

அபஸ்வரம் இசைக் குழு : 1969 முதல் மேற்கத்திய இசைக்குழுக்களை நடத்தி வந்த என்னை, இந்த உலகிற்கு அடையாளம் காட்டி, எனக்கு "அபஸ்வரம் ராம்ஜி' என்ற பட்டத்தை வாங்கித் தந்த இசை குழு. 1976 ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம் . அன்று தான் இந்த இசைக் குழுவை அரங்கேற்றினேன். கழுதையை சின்னமாக வைத்தது , நிகழ்ச்சிக்கு வந்தவர்களை காதில் அடைத்துக்கொள்ள பஞ்சு கொடுத்தது, போன்றவையெல்லாம் ரசிகர்களையும், மீடியாக்களையும் வெகுவாகக் கவர்ந்தன. மெல்லிசை நிகழ்ச்சிகளை நகைச்சுவை கலந்து பரிமாறிய பாணி எல்லோருக்கும் பிடித்துவிட்டது.

பத்திரிகைத் துறை : நான் படித்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டம் மூலமாக எனக்கு வந்த முதல் அழைப்பு தேசிகனிடமிருந்து. இந்தியன் Cookery என்ற சமையல் பற்றிய மாதாந்திர பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றேன். அதே நிறுவனம் துவங்கிய பத்திரிகை "மங்கையர் மலர்'. இதன் ஆசிரியராக 5 வருடங்கள் பணியாற்றினேன். இந்த பத்திரிகை கல்கி குழுமத்திடம் விற்கப்பட்ட பிறகு, "இதயம் பேசுகிறது' மணியன் என்னை அழைத்து, "மயன் " என்கிற யூத் இதழின் ஆசிரியராக்கினார். என் டாப் 10இல் எனக்கு "அறிவாளி மற்றும் நகைச்சுவையாளன்' போன்ற தோற்றங்களை ஏற்படுத்திக் கொடுத்த துறை இது.

ரேடியோ மற்றும் தொலைக்காட்சி : 1970 களின் ஆரம்பத்தில் நான் அகில இந்திய வானொலியில் இளைஞர்கள் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தேன். அதே நேரம் எஸ்.வி. சேகரின் தந்தை வெங்கட்ராமன் "ஷிபாக்கா கீத மாலை" என்ற நிகழ்ச்சியை வழங்க வாய்ப்பளித்தார் . இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் புகழ் பெற்ற நிகழ்ச்சி. இதை தமிழில் இரண்டு வருடங்கள் நான் நடத்தி இருக்கிறேன். 1975 ஆகஸ்ட் 15 -இல் துவங்கப்பட்ட, சென்னை தூர்தர்ஷனில், நான் 18ஆம் தேதி என் முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினேன். தொடர்ந்து பல ஆண்டுகள் தூர்தர்ஷனிலும் பிறகு சாட்டிலைட் சேனல்களிலும் என்னுடைய பங்களிப்பு நிறைய இருந்தது.

இசை மழலை : "நாம் எதற்காக இந்த உலகில் பிறந்திருக்கிறோம் " என்ற என்னுடைய பல நாள் சந்தேகத்திற்கு கிடைத்த விடை இது. இந்தியாவில் முதல் முறையாக முற்றிலும் குழந்தைகள் பாடும் புரொபஷனல் கச்சேரியை 2000-ஆம் ஆண்டு மே 14இல் துவங்கினேன். கமல்ஹாசன் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியை, படிப் படியாக மெருகேற்றி, கர்நாடக சங்கீதம், பக்தி பாடல்கள், வாத்திய இசை, என்று பல்வேறு பரிமாணங்களில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் என் குழந்தைகள் பாடினார்கள். பாடிக்கொண்டிருக்கிறார்கள். 18 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளாக பாடத் துவங்கிய பலர் இன்று முன்னணி கர்நாடக சங்கீத கலைஞர்களாகவும் , திரை பின்னணிப் பாடகர்களாகவும் , இசை அமைப்பாளர்களாகவும் இருப்பது எனது பாக்கியம் .

முகநூல் - (Facebook): விளையாட்டாக சில ஆண்டுகளுக்கு முன்பு இதில் நுழைந்தேன்.
இந்த ஊடகத்தின் மூலம் இன்று எனக்கு 4,500 முழு நட்புகளும், 12,000க்கும் மேற்பட்ட சிறு நட்புகளும் கிடைத்திருக்கின்றன . என் நட்புகள் பலரும் என்னை விட அறிவாளிகள் . என்னை நான் சரியாக நகர்த்த அவர்கள் உதவி இருக்கிறார்கள் . மற்ற ஊடகங்களில் வருவதற்கு முன் பல செய்திகளை முந்தித் தருவது முகநூல் மட்டுமே. தினமும் தவறாமல் சுமார் 2 மணி நேரம் முகநூலுக்காக ஒதுக்குகிறேன்.

திரைப்படத் தயாரிப்பு : இரண்டு படங்களை தயாரித்து , எழுதி பெரிதாக எதையும் சாதிக்கவில்லை . "இது நமக்கு சரிப்படாது' என்று ஓடி வந்துவிட்டேன். இப்பொழுது "நல்ல படங்கள்' என்று என் முகநூல் நட்புகள் பரிந்துரைக்கும் படங்களை தியேட்டரிலும், மற்ற படங்களை பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

கடவுள் கொடுத்த வரம் : எல்லோருக்கும் வாழ்வில் " இவர்களை என்னிக்காவது ஒரு முறை சந்திப்போமா?' என்கிற ஒரு ஆசை இருக்கும். நான் ஆசைப்பட்ட, உலகின் 20 மிகப் பெரிய பிரபலங்களில் , 19 பேருடன் நான் நெருக்கமாகப் பழகி அளவளாவும் ஒரு பெரிய குடுப்பினையை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான். அந்த லிஸ்டில் உள்ள - சில நெருங்கிப் பழகிய விஐபிக்கள், டாக்டர் அப்துல் கலாம் , தியாகராஜ பாகவதர் , எம் .எஸ் . அம்மா , எம்.ஜி.ஆர்., சிவாஜி, என் . எஸ் . கிருஷ்ணன் , டி . ஆர் . மகாலிங்கம், ஜி . ராமநாதன் , எம்.எஸ்.வி., இளையராஜா , ரஜினிகாந்த் , கமல்ஹாசன், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா போன்றவர்கள். என்னுடைய ஒரே ஒரு நிறைவேறாத ஆசை "சச்சின் டெண்டுல்கர்'.
-சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com