அபா காந்தியின் ஆசை நிறைவேறுமா?: முனைவர் அ.பிச்சை 

வயது முதிர்ந்த நிலையிலும் காந்திஜியின் உள்ளம் தளரவில்லை; ஆனால் உடல் தளர்ந்திருந்தது.
அபா காந்தியின் ஆசை நிறைவேறுமா?: முனைவர் அ.பிச்சை 

வயது முதிர்ந்த நிலையிலும் காந்திஜியின் உள்ளம் தளரவில்லை; ஆனால் உடல் தளர்ந்திருந்தது. இறுதிக் காலத்தில் இருபெண்மக்களின் தோள்கள் மீது இருகைகளையும் வைத்துக் கொண்டே நடந்தார். அப்பெண்மக்கள் இருவரும் அவருக்குப் பேத்திகளே. அவர்களில் ஒருவர் அபா காந்தி; அடுத்தவர் மனுபென் காந்தி.
காந்திஜியின் சகோதரர் நரன்தாஸ் காந்தி - ஜமுனா தம்பதியரின் பேரப்பிள்ளைகளில் ஒருவர் கனுகாந்தி. கனுகாந்தியை அபா காந்தி மணந்ததால், அபா காந்தியும் அண்ணலின் பேத்தி ஆகும் பேறு பெற்றார்.
நரன்தாஸ் - ஜமுனா தம்பதியர் அண்ணலின் சபர்மதி ஆசிரமத்திலேயே வாழ்க்கையை நடத்தினர். இரண்டு வயதுக் குழந்தையான கனுகாந்தியும் ஆசிரமத்திலேயே வளர்ந்தார். "டாக்டர்' ஆகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது ஆரம்பகால ஆசை. ஆனால் மக்கள் சேவகன் மகாத்மாவுக்கு சேவை செய்வதே மேல் - என முடிவு எடுத்தார் கனுகாந்தி. ஆரம்பத்தில் கணக்கு எழுதுதல், கடிதம் எழுதுதல், தட்டச்சு செய்தல் - போன்ற காந்திஜி பணித்த பணிகளைச் செய்து வந்தார். தனது 15-ஆவது வயதிலேயே ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்தார்.
ஆனால் கனுகாந்தியிடம் ஓர் கலைத்திறன் மண்டிக்கிடந்தது. கேமராவைக் கையாளுதல், புகைப்படம் எடுத்தல், அதனை வகைப்படுத்திப் பாதுகாத்தல்- இதுவே அந்த அரிய திறன். அண்ணல் காந்தியின் அரிய செயல்பாடுகளைப் படம் பிடித்தால் என்ன? என்ற ஆவல் எழுந்தது. அனுமதி பெறாமல் அதைச் செய்ய முடியாதே! அதனை அறிந்த காந்தி, "அனுமதி தருகிறேன்; ஆனால் நான்கு நிபந்தனைகள்: போட்டோவுக்காக போஸ் கொடுக்கச் சொல்லக் கூடாது; இயற்கை வெளிச்சத்தில் மட்டுமே படம் எடுக்கப்பட வேண்டும்; இதற்காக என்னிடமிருந்தோ, சுதந்திர இயக்கத்திடமிருந்தோ எந்தவித நிதி உதவியும் எதிர்பார்க்கக் கூடாது; எடுத்த படங்களை எப்போதும் வியாபாரப் பொருள் ஆக்கக்கூடாது''- என்றார் மகாத்மா.
காந்திஜியின் காலடியிலேயே கனுகாந்தி வாழ்ந்ததால், மற்றவர்கள் காணாத காட்சிகளை எல்லாம்- 1938 முதல் 1947 வரை கவின்மிகு படங்களாக எடுத்துக் காத்துள்ளார். அந்தப் படங்களைப் பார்த்தால், அண்ணல் காந்தியை அருகில் இருந்து பார்த்த ஆத்மதிருப்தி நமக்கு வருகிறது.
1946-இல் புதுதில்லி கலவரபூமி ஆனபோது பங்கிநிவாஸ் - என்ற அரிசனக்காலனியில் காந்தி கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருக்க, அருகில் பண்டித ஜவஹர்லால் பணிவோடு அமர்ந்து, அண்ணலின் அறிவுரையைப் பெறும் காட்சி ஒன்று.
1939-இல் சேவா கிராம் ஆசிரமத்தில் "மைக்ராஸ் கோப்' மூலம் தொழுநோய் கிருமிகளை ஆழ்ந்து ஆய்வு செய்யும் காட்சி.
அதே ஆண்டு ஆசிரமத்தில் புதிதாக நிறுவப்பட்ட புதிய தொலைபேசி (Telephone) மூலம் முதன் முறையாக பேசும் காட்சி.
1940-இல் சாந்தி நிகேதனில் ரவீந்தரநாத் தாகூரிடம் ஆழ்ந்த உரையாடலில் உள்ள காட்சி.
ஒரு ரயில் பயணத்தின் போது கூடியிருக்கும் பெரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து "சகோதரர்களே! நான் நடத்தும் போராட்டத்திற்கு தாராளமாக நிதி தாருங்கள்' - என்று தன் இருகைகளையும் உயர்த்திக் கேட்கும் காட்சி.
அண்ணலின் புனித பாதங்களை அன்னை கஸ்தூரிபா தண்ணீரால் கழுவும் காட்சி.
தொழுநோயால் பாதிக்கப்பட்டுத் துன்புறும் சமஸ்கிருத மேதை ஆச்சார்யா பச்சூரி சாஸ்திரியின் புண்களைக் கழுவி அவற்றுக்கு மருந்திடும் காட்சி!
இவ்வாறு எடுக்கப்பட்டுள்ள படங்கள் சுமார் 700. இவற்றின் ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும்; காந்திஜியின் வரலாற்றை விளக்கும்.
இந்த அரிய, அற்புதமான படங்களை "சலீம் அரீப் காத்ரி' என்ற புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர், அபா காந்தியின் கையில் இருப்பதைக் கண்டார். அவற்றைக் கண்டு மகிழ்ந்து வியந்து சொல்லுகிறார்; "கனுகாந்தி நுண்ணறிவு மிக்கவர்; கவிதா மனமும் கலைத்திறனும் கொண்டவர்; வரலாற்று ஆர்வம் கொண்டவர்; ஆகவே தான் காந்திஜியின் தலைமையிலான இந்திய தேச விடுதலைப் போராட்ட வரலாற்றை புகைப்படங்கள் மூலம் ஒரு கலைக்கோவிலாக உருவாக்கியிருக்கிறார்'. - என்று, பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட படங்களில் பாழ்படாமல் இருந்த 450 படங்களில் 100 அரிய படங்களைத் தேர்ந்தெடுத்தார் கலைஞர் காத்ரி. அவற்றை அளவில் பெரியதாக மாற்றினார். அழகிய சட்டங்களுக்குள் வைத்தார். இப்பணியைச் செய்து முடிக்க 18 மாதங்கள் ஆயின, அப்படங்களை "கனுகாந்தியின் மகாத்மா'- என்ற புகைப்படக் கண்காட்சியை நடத்த விரும்பினார். இதற்கு ஆகும் செலவு 30,000/- பவுண்ட் என்று 1995-இல் கணக்கிடப்பட்டது. அத்தொகையை இங்கிலாந்தின் கலை மன்றமும் (Arts Council of England), இங்கிலாந்தின் காந்தியவாதிகளும் ஏற்றுக் கொண்டனர்.
இந்தியாவில் பிறந்த கலைஞர் காத்ரி இங்கிலாந்தில் வாழ்ந்ததால், அங்கேயே புகைப்படக் காட்சியை நடத்த விரும்பினார். அவர் விரும்பியபடி இங்கிலாந்தின் லெய்சிஸ்டர் நகரின் அருங்காட்சியகத்தில் (Leicester Country Museum) 1995-ஆம் ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை (29.07.1995 முதல் 01.10.1995) நடத்தினார். இந்தக் கண்காட்சி இதுவரை இங்கிலாந்தில் 2002 வரை 7 நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்து மக்கள் மட்டுமல்ல, அங்கு வரும் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அவற்றைக் கண்டுகளிக்கிறார்கள். மகாத்மாவின் மாண்பை, அன்பால், அகிம்சையால் அனைவரையும் வெல்லலாம் என்ற உண்மையை, இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் அண்ணல் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகளை - அக்கண்காட்சி காண்போர் கண்ணிலும், கருத்திலும் பதியவைக்கிறது.
அக்காலகட்டத்தில் லண்டன் நேரு மையத்தின் இயக்குநர் (Director of Nehru Centre, London) பதவியில் இருந்த மகாத்மாவின் பேரன் கோபால் கிருஷ்ணகாந்தி, இப்புகைப்படக் கண்காட்சி உருவாக ஊக்கமும், ஆக்கமும் அளித்தார். இந்தியாவிலிருந்த அபா காந்தியிடம், இலண்டனில் இருந்த கோபால் காந்தி "கண்காட்சி முயற்சி' பற்றி அடிக்கடி விளக்கி வந்தார். அவரது ஆலோசனையின் படி, "கனுகாந்தியின் மகாத்மா' என்ற கண்காட்சியை இங்கிலாந்தில் நடத்த எழுத்துபூர்வமான அனுமதியும் கலைஞர் காத்ரிக்கு அளித்தார், அபா காந்தி. அக்கண்காட்சி இலண்டன் லைசிஸ்டர் அருங்காட்சியகத்தில் 1995 ஜூலை 29-இல் திறந்து வைக்கப்பட்டது! என்ன பரிதாபம்! அதற்கு சில நாட்களுக்கு முன்னால் அபா காந்தி காலமாகிவிட்டார்! கணவர் கனுகாந்தியின் கண்காட்சியைக் காணமலேயே அபா காந்தி கண்மூடிவிட்டார்.
இக்கண்காட்சியை கோபால்கிருஷ்ண காந்தி பார்வையிட்டிருக்கிறார். தனது மனம் நிறைந்த பாராட்டுக்களையும் உள்ளார்ந்த உணர்வுகளையும் பார்வையாளர் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அப்போது இந்தியாவின் தூதராக இங்கிலாந்தில் இருந்த எல்.எம்.சிங்வி, கண்காட்சியைப் பார்வையிட்ட பின் கண்கலங்கி எழுதுகிறார்: "கனுகாந்தி வேறு நாட்டில், வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தால், அவர் மிக உயர்ந்த புகைப்படக் கலைஞராகப் போற்றப்பட்டிருப்பார்; உண்மைதான்; ஆனால் அண்ணல் காந்தியை படம் பிடிக்கும் பாக்கியம் அப்பொழுது அவருக்குக் கிடைத்திருக்காதே!
காந்திஜியின் செயலாளர்கள் மகாதேவ தேசாய், பியாரே லால் ஆகிய இருவரும் மகாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதி பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் கனுகாந்தியோ மகாத்மாவின் வாழ்க்கையை ஓர் அரிய புகைப்பட வரலாறாக (Photo-biographer of Gandhi) உருவாக்கி, அண்ணலை நம் கண் முன்னால் நடமாட வைத்துவிட்டாரே!'' - என்று உளமார உணர்ந்து மெய்சிலிர்த்துக் கூறுகிறார். 
இன்னொரு செய்தி! மகாத்மா பற்றிய 3 மணி நேர திரைப்படம் ஒன்றையும் கனுகாந்தி தயாரித்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அப்படம் சேதமடைந்துவிட்டதாக ஒர் தகவல். அது சரியா? அதனை மீண்டும் உயிர்ப்பிக்க இயலுமா என்றும் முயற்சிக்கலாம்!
இன்னொரு தாளாத சோகம்! கொடியவன், இந்து மத வெறியன், கோட்சே என்பவனால் மகாத்மா கொலை செய்யப்பட்ட (30.01.1948) அன்று கனுகாந்தி நவகாளியில் இருந்தார். ஆகவே அன்றைய அவலத்தையும், இறுதிப் பயணத்தையும் படமாக்க இயலவில்லை கனுகாந்தியால். அன்று ஓர் சபதம் எடுத்தார் கனுகாந்தி, "காந்தியைப் படம் எடுத்த கையால் காமிராவைக் கையாள மாட்டேன் - இனி எவர் படத்தையும் எடுக்க மாட்டேன்''- என்று. மகாத்மாவின் மறைவுக்குப் பின் அபாவும், கனுவும் இந்தியா முழுவதும் பயணித்தார்கள். காந்திய சித்தாந்தங்களைப் பரப்பி வந்தார்கள். எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இதய தாக்குதலால், கனுகாந்தி 20.02.1986 அன்று தனது 79ஆவது வயதில் காலமாகிவிட்டார். 
அபா காந்திக்கு இரு ஆசைகள் இருந்தன. ஒன்று - "கனுகாந்தியின் மகாத்மா கண்காட்சியைக் காண வேண்டும்.'' அது நிராசை ஆகிவிட்டது.
அடுத்த ஆசை - "கனுகாந்தியின் மகாத்மா என்ற புகைப்படக் கண்காட்சி இந்தியாவெங்கும் நடத்தப்பட வேண்டும்; அதனை என் தேசத்து மக்கள் கண்டு மகிழ வேண்டும், அதன் ஒரு பிரதி இந்தியாவில் நிரந்தரமாக இருக்க வேண்டும்!'' என்பது.
அதன் பிரதிகள் புதுதில்லி காந்தி கண்காட்சியகத்திற்கும் கொல்கத்தாவின் ஒர் அமைப்புக்கும் கிடைத்திருப்பதாகத் தகவல். ஆனால் கண்காட்சியை இந்திய தேச மக்களில் பெரும்பாலோர் இன்னும் காணவில்லையே! அபா காந்தியின் ஆசை இன்னும் முழுமையாக நிறைவேற வில்லையே!- என்ற ஏக்கம் மக்கள் மத்தியிலும், காந்தியவாதிகள் மனதிலும் உள்ளது!
மகாத்மாவின் 150-ஆவது பிறந்த நாள் அக்டோபர் 2, 2018-இல் வருகிறது. அந்த ஆண்டை அண்ணலின் 150-ஆவது பிறந்த ஆண்டாகக் கொண்டாட மத்திய மாநில அரசுகள் உரிய முயற்சிகளை உரிய நேரத்தில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அம்முயற்சிகளில் ஒன்றாக, கனுகாந்தியின் மகாத்மா கண்காட்சியை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்! காந்திஜியின் வரலாற்றை கனுகாந்தியின் புகைப்படங்கள் மூலம் நாம் அனைவரும் காண வேண்டும்! அதன் மூலம் அமரராகிவிட்ட அபா காந்தியின் கனவை நாம் நனவாக்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com