அகமதாபாத்தின் நவராத்திரி - சாந்தகுமாரி சிவகடாட்சம் 

இந்தியாவின் மேற்குப் பகுதியில் அகமதாபாத் இடம் பெற்றிருக்கிறது. அதன் நடுவில் சபர்மதி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
அகமதாபாத்தின் நவராத்திரி - சாந்தகுமாரி சிவகடாட்சம் 

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 16
இந்தியாவின் மேற்குப் பகுதியில் அகமதாபாத் இடம் பெற்றிருக்கிறது. அதன் நடுவில் சபர்மதி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் கரையில் அமைந்திருக்கும் சபர்மதி ஆஸ்ரமத்தைப் பார்த்துவிட்டு, வெளியே வந்தேன். மகாத்மா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுகின்ற அந்த ஒற்றைக் கிழவரின் குரலுக்கு அடிபணிந்து, இங்கேதானே மக்கள் கூடி உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தனர்?. அவர்கள் நடமாடிய அந்த புனித மண்ணில் நிற்கிறேன் என்பதே எனக்கு மெய்சிலிர்ப்பைத் தந்தது.
இந்த முறை நான் அகமதாபாத்திற்கு வந்தது, அங்கே ஒன்பது நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காகத்தான் என்றால் மிகையாகாது. பூகம்பம், வெள்ளம், கனமழை என எவ்வளவுதான் இயற்கையின் சீற்றத்திற்கு இலக்கானாலும் குஜராத் மக்களின் உற்சாகம் மட்டும் ஒருபோதும் குறைவதில்லை.
குஜராத்தின் நவராத்திரியில் நடனமே பிரதானமாக விளங்குகிறது. கார்பா, தாண்டியா நடனங்கள் இங்கே முக்கிய பங்கு வகிப்பதால், இந்த நடனங்களைக் கற்றுத்தரும் பள்ளிகள் தெருவெங்கும் முளைவிட ஆரம்பித்து விடுகின்றன. ஒவ்வொரு குஜராத்தியும் குறைந்தது ஒரு மாதகாலம் இந்த நடனத்தில் பயிற்சி பெறுகிறார். கற்றுக் கொள்ளும் நடனங்களை உற்சாகமாக ஆடவேண்டும் என்பதற்காக "ஃபிட்னஸ் சென்டர்'களில் சேர்ந்து உடலையும் ஆரோக்கியமாக தயார்படுத்திக் கொள்கின்றனர்.
நவராத்திரி விழாவில் ஆடுவதற்காக குஜராத்தில் ஆண்களும், பெண்களும் தங்களை அலங்கரித்துக்கொள்ளும் பாங்கைப் பார்த்து அசந்துபோனேன். இரவு ஏழு மணிக்கு கைகளில் தாண்டியா நடனம் ஆடுவதற்குத் தேவையான அழகிய கோலாட்டக் குச்சிகளை ஏந்திக்கொண்டு பெண்களும், தாண்டியா கொம்போடு ஆண்களும் வீதிகளில் சாரை சாரையாக நடந்து வந்தபொழுது அந்த வானத்து விண்மீன்களே தரையில் இறங்கி வந்துவிட்டனவோ என்ற மயக்கத்தைத் தந்தனர்.
பெண்கள் "சானியா சோளிஸ்' என்று அழைக்கப்படுகின்ற பாதம் வரை நீள்கின்ற பாவாடை, சட்டை மற்றும் துப்பாட்டாவோடும் ஆண்கள் "கப்னி பைஜாமா' மற்றும் குட்டை "குர்த்தா'வோடும் காட்சி அளித்தனர். பெண்களின் சானியா சோளிஸ்ஸில் செய்யப்பட்டிருந்த வேலைப்பாட்டைப் பார்த்து வாயடைத்துப் போனேன்.

சின்னச் சின்ன வண்ணத் துணித்துண்டுகளை இந்தப் பாவாடைகளில் வைத்துத் தைத்து, அதைச்சுற்றி அழகிய எம்பிராய்டரி வேலைப்பாடுகளை செய்து, மத்தியில் கண்ணாடித் துண்டுகளைப் பதித்து இருக்கிறார்கள். அந்த இரவு வேளையில் இதை அணிந்துகொண்டு, பெரிய பெரிய மைதானங்களில் ஒளியைக் கக்கும் நியான் விளக்கு வெளிச்சத்தில் அந்த பெண்களும் ஆண்களும், உடைக்கு ஏற்ற நகைகளோடு சுழன்று, சுழன்று ஆடும் அழகைப் பார்க்க நிஜமாகவே கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
அகமதாபாத்தில் "லா கார்டன்' என்ற ஒரு மார்க்கெட்டில் நவராத்திரிக்காகவே, மக்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக கடைவிரிக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்து இதயங்கள் நிச்சயமாக ஒரு துடிப்பை இழக்கும்.
வெள்ளை உலோகத்தினால் ஆன மாலைகள், காது கம்மல், ஜிமிக்கி, நத்து, நெத்திச்சுட்டி, வளையல்கள், அழகிய குஞ்சலங்களோடுகூடிய நெக்லஸ்கள், சானியா சோளிகளில் இதில் ஒன்றுபோல மற்றொன்று இருக்காது என்று வியாபாரிகள் சத்தியம் செய்யாத குறையாக தெரிவிக்கிறார்கள். சிறுமி முதல் நடுவயதைத் தாண்டியவர்வரை அணியும் வகையில் எத்தனை விதமான ஆடைகள், அவைகள் வெளிப்படுத்திய ஜொலிப்பில் மதி மயங்கினேன்.
இவை எல்லாமே கார்பாவுக்காகவும், தாண்டியா வுக்காகவும்தான். அது என்ன "கார்பா?' நடனம்தான் என்றாலும் பெயரின் அர்த்தம்? அழகிய வேலைப்பாடுள்ள மண்பாண்டம், அதில் துளைகளும் உண்டு. இந்த பானைக்குப் பெயர்தான் கார்பா. இந்தப் பானையின் உள்ளே தீபத்தை ஏற்றி வைத்து பெண்களும், ஆண்களும் சுற்றி நின்று ஆடுவதுதான் கார்பா நடனம்.
ஆடும்போது துர்க்கையைப் போற்றிப் பாடுகிறார்கள். கார்பாவிலுள்ளே இருக்கும் ஜோதி இந்த ஜகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தையும் காக்கும் சக்தியாக துர்க்கையின் ரூபமாக இருப்பதாக ஐதீகம்.
ஜி.எம்.டி.சி. மைதானத்தில் ஆண்களும், பெண்களும் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, ஒரு குஜராத்தி பெண் என் கையைப் பிடித்து இழுத்து ஆடச் சொன்னாள். சரி என்று நானும் அந்த துர்க்கையை மனதில் வணங்கி கொஞ்ச நேரம் ஆடினேன். நடனக்கலையோடு, பக்தி கைகோர்த்துக் கொள்ளும் அந்த நேரம் மனதைக் குதூகலிக்க வைத்து, இறையருளில் கலக்கவைக்கிறது.
தாண்டியா நடக்கின்ற பல மைதானங்களில் பாலிவுட் பாடல்களுக்கு இளைஞர்கள் ஆடுகிறார்கள். மேனக் சவுக் மற்றும் பாட்ரா போர்ட் போன்ற இடங்களில் சினிமா பாடல்களைத் தவிர்த்து, குஜராத்தின் நாட்டுப்புறப் பாடல்களுக்கு மக்கள் ஆடுகிறார்கள். இங்கே பெண்கள் தங்கள் தலைகளில் மண்பானைகளை வைத்துக்கொண்டு கார்பாவைச் சுற்றி பானைகள் கீழே விழுந்துவிடாமல் ஆடுகிறார்கள். பொங்கல் சமயங்களில், நான் சிறுமியாக இருந்தபோது மூங்கில் கூடைகளை வைத்து அதைச்சுற்றிப் பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி கும்மி அடித்து ஆடியது என் மனதில் நிழலாடியது.
நவராத்திரி விழா கொண்டாடப்படும் ஒன்பது நாட்களும் அரிசி, கோதுமை கலக்கப்படாத "பெரார்' என்று வழங்கப்படும் உணவையே உட்கொள்கிறார்கள். இது தவிர பழங்கள், வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு என அளவாக சாப்பிடுகின்றனர். குஜராத்தின் உணவுகளான ஜவ்வரிசியால் செய்யப்படும் சபுதானா கிச்சடி, கடலைமாவு மற்றும் தயிரைக்கொண்டு தயாரிக்கப்படும் (Khandvi) கான்ட்விக்கு என் நாவு அடிமைப்பட்டுப் போனது.
இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்து நடுஇரவையும் தாண்டி நடனமாடி, காலையில் அலுவலகம் சென்று மீண்டும் இரவு தேவதைகளாக அலங்கரித்துக் கொண்டு நடனமாடி துர்க்கையை வணங்கி நவராத்திரியைக் கொண்டாடும் குஜராத்திகளின் எனர்ஜியை வர்ணிக்க வார்த்தைகள் தொலைந்து போகின்றன.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிப் பெண்களை துர்க்கையின் அம்சமாகப் பாவித்து, அவர்களை பூஜிக்கிறார்கள். இதை மஹாநவமி கன்யா பூஜை என்று அழைக்கிறார்கள். சிகப்பு, நீலம், மஞ்சள், பச்சை, சாம்பல், ஆரஞ்சு, வெள்ளை, பிங்க், ஆகாயநீலம் என்று நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கு ஒன்பது விதமான உடைகளை அணிகிறார்கள். வானவில்லாக நம்மை மயக்கி, மகிழ வைத்து பக்தியில் திளைக்க வைக்கும் அகமதாபாத்தின் நவராத்திரியை, எண்ணிப் பார்க்கும்போதே உள்ளம் சும்மா அதிருது இல்ல!.
(தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com