செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை: தெரியாத செய்திகள் 

செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதைக்காக காத்திருந்தது ஓராண்டு... இரண்டாண்டல்ல..! எட்டு ஆண்டுகால காத்திருப்பு...!
செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை: தெரியாத செய்திகள் 

செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதைக்காக காத்திருந்தது ஓராண்டு... இரண்டாண்டல்ல..! எட்டு ஆண்டுகால காத்திருப்பு...! இருப்புப் பாதையை அகலப்படுத்த வேண்டும் என்பதற்காக சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து, மீண்டும் ஓட ஆரம்பித்திருக்கிறது.
 புனலூருக்கும் செங்கோட்டைக்கும் இடையே உள்ள தொலைவு 49 கி.மீ. சிறிய தூரம் என்றாலும், இருப்புப் பாதை மலைக் குகைகளுக்குள் கடந்து போக வேண்டும் என்பதால் பாதையை அகலப்படுத்தும் வேலைகள் மெல்ல மெல்லவே நடந்தன. சமீபத்தில் (மார்ச் 31) அன்று வெள்ளோட்டமாக தாம்பரம்-கொல்லம் தொடர்வண்டி இயக்கப்பட்டது.
 அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் முதல் புகைவண்டி இருப்புப் பாதை கொல்லம்-செங்கோட்டை பாதைதான். 116 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப் பாதையின் சிறப்பு 13 வளைவுகள் கொண்ட பாலம்தான். இரண்டு மலைகளை இணைக்கவே 103 மீ நீளமுள்ள இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தில் அநேக திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
 1900-இல் தொடங்கப்பட்ட இந்த இருப்புப் பாதை வேலைகள் சுமார் ஒண்ணேகால் கோடி ரூபாய் செலவில் இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்த்தியானது. அன்றைய சென்னை மாகாணம், திருவாங்கூர் சமஸ்தானம், தென்னிந்திய ரயில்வே கம்பெனி இணைந்து இந்த இருப்புப் பாதையை நிர்மாணித்தன. ரயில் போக்குவரத்துக்காக இந்தப் பாதை அர்ப்பணிக்கப்பட்டது 1904 ஜூன் 1-இல். இந்தத் தேதியை திருவாங்கூர் அரசர் "மூலம் திருநாள் மஹாராஜா', வெகு முன்னதாகவே அறிவித்திருந்தார். ஆனால் நாட்கள் நெருங்கியபோது, ஆரியங்காவு குகை இடிந்து விழுந்து பாதை சேதம் அடைந்து மூடிப் போனது. வண்டியை இழுக்கும் எஞ்சின் செங்கோட்டையில் நிற்க... எஞ்சினை எப்படி கொல்லம் கொண்டு போவது என்று ரயில்வே பொறியாளருக்கு தலை சுற்றியது. மன்னர் அறிவித்த தேதியில் புகைவண்டியை ஓட்டியாக வேண்டும் என்ற அழுத்தம் அவரை பதைபதைக்க வைத்தது. மன்னரின் கோபத்திலிருந்து தப்பிக்க எஞ்சினை தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொண்டு போய் அங்கிருந்து கடல் வழியாக கொல்லம் கொண்டு சென்றார். அதற்குள் ஆரியங்காவு குகையை சரிசெய்யும் வேலை அவசர கதியில் நடந்தாலும் சரிசெய்ய முடியவில்லை. வேறு வழியின்றி... ரயிலுக்கு "21 குண்டுகள் வெடித்து' ராணுவ மரியாதையுடன் மன்னர் பச்சைக் கொடி காட்ட... மன்னர் சொன்ன நாளில் புகைவண்டி கொல்லம் முதல் புனலூர் வரை ஓடியது.
 குகை வேலைகள் முடிய சில மாதங்கள் தேவைப்பட்டதால், 1904 நவம்பர் 26 அன்று ரயில் செங்கோட்டை வரை ஓடத் தொடங்கியது. இந்த இருப்புப் பாதை ஐந்து குகைகள் வழியாக செல்கிறது. அதில் ஆரியங்காவு குகை மட்டும் ஒரு கி.மீ. நீளம் கொண்டது. இந்த மாதம் கொல்லம்-சென்னை இருப்புப்பாதை அதிகாரபூர்வமாக நாட்டிற்கு மீண்டும் அர்ப்பணிக்கப்படும்.
 இந்த ரயில் பாதை புனர் ஜென்மம் எடுக்க மிகவும் பாடுபட்டவர் கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன். அதனால், தமிழகத்திலிருந்து கொல்லம் வரை சென்ற ரயில் தமிழகத்திற்குத் திரும்பும்போது, ரயில் எஞ்சினிலிருந்து பெட்டிகள் முழுவதிலுமாக பிரேமசந்திரனின் படங்களை ஒட்டியிருந்தனர், அந்தப் பகுதி பொதுமக்கள்..!.
 - சுதந்திரன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com