தமிழ் இதழ்களுக்கென்றே நூலகம் 

சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் சேமிக்கும் பழக்கம் இருக்கும். அஞ்சல் அட்டை, அஞ்சல் தலைகள், புத்தகங்கள் சேகரிப்பு என தங்களுக்கு
தமிழ் இதழ்களுக்கென்றே நூலகம் 

சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் சேமிக்கும் பழக்கம் இருக்கும். அஞ்சல் அட்டை, அஞ்சல் தலைகள், புத்தகங்கள் சேகரிப்பு என தங்களுக்கு ஏற்ற சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். ஆனால், அவர்களிடமிருந்து சற்று வித்தியாசமானவராகத் திகழ்கிறார் திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த க. பட்டாபிராமன். பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்றவர். 
தனது 12 வயதில் நாளிதழ்கள், நூல்களைச் சேகரிக்கத் தொடங்கி ஏறத்தாழ சுமார் 60 ஆண்டுகளாக அப்பணியில் ஈடுபட்டு வருகிறார் க.பட்டாபிராமன். தற்போது தமிழ் இதழ்களுக்கென்ற தனித்துவமான நூலகத்தையும் அமைத்திருக்கிறார். திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெருவில் உள்ள இவரது வீட்டின் பெரும்பான்மை பகுதிகள் நூல்கள்மயமாகவே காணப்படுகிறது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஆய்வாளர்கள் என பலரும் ஆர்வலமாக வந்து செல்கின்ற நிலையில், தமிழ் இதழ்களுக்கான நூலகத்தை வீட்டின் மூன்றாவது தளத்துக்கு மாற்றியிருக்கிறார் பட்டாபிராமன்.
தொடர்ந்து வெளிவரும், ஏற்கெனவே வந்து தற்போது தொடராத தமிழ் இதழ்களின் குறைந்தபட்சம் ஒரு பத்திரிகையாவது இங்கு பார்க்கும் வசதியையும் பட்டாபிராமன் ஏற்படுத்தியிருக்கிறார். இந்தநூலகத்தில் தற்போது தொடரும் இதழ்கள், நாளிதழ்கள், அயலக இதழ்கள் என 3000}மும், தொடராத இதழ்கள் 3200}க்கும் மேலும் உள்ளன. மேலும், 3400 நூல்கள் பல்வேறு தலைப்புகளில் இந்த நூலகத்தில் உள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட தொடராத இதழ்கள், தொடரும் இதழ்கள் தொகுப்புகள் 50,000}க்கும் மேல் உள்ளன.
கவிதை, இலக்கியம், மரம்} சுற்றுச்சூழல், தமிழ் இதழியல் நூல்கள், சான்றோர்கள் வரலாறு, நகைச்சுவை, கணினி, பொது அறிவு, சுயமுன்னேற்றம், மாணவர் நூல்கள், கிறிஸ்தவ நூல்கள், சமண நூல்கள், இஸ்லாமிய நூல்கள், ஆன்மிக நூல்கள், சுற்றுலா வழிகாட்டி நூல்கள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகளின் நூல்கள், உலகத்தமிழ் மாநாடுகளின் மலர்கள், இதழ்கள், வெளியிடப்பட்ட மலர்கள், பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட மலர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களின் தொகுப்பு மலர்கள், அரிய சங்கங்கள் வெளியிட்ட மலர்கள், ஆங்கில நூல்கள், 120 தமிழ் இதழ்களின் வகைப்பாடுகள் போன்றவை நூலகத்தை அலங்கரித்து வருகின்றன.
இதைத் தவிர வேளாண், உணவு, சிறுதொழில் போக்குவரத்து, ஆவணங்கள், நெசவு, தொழில்கள், வணிகம், நிதி, பங்கு வர்த்தகம், பொறியாளர் கட்டுமானம், பதிப்பு, தொழில் நிறுவனங்கள், இல்ல இதழ்கள், தொண்டு நிறுவனங்கள், ஏற்றுமதி தொழில், வேலைவாய்ப்பு போன்ற பிரிவுகளில் தொடரும் இதழ்கள், வங்கிகள், வங்கி அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்களின் இதழ்கள், பொது, சன்மார்க்கம், சமூக மத நல்லிணக்கம் சார்ந்து வந்து கொண்டிருக்கும் இதழ்கள், அரசியல் கட்சிகளின் பல்வேறு இதழ்கள், அரசியல் விழிப்புணர்வு, புலனாய்வு இதழ்கள், கொள்கை விளக்க இதழ்கள், சிறுவர், மாணவர்களுக்கான இதழ்கள், மகளிர், மருத்துவ நூல்கள், நகைச்சுவை, சுயமுன்னேற்ற} தன்னம்பிக்கை இதழ்கள், நுண்கலைகள் குறித்த இதழ்களும் இந்த நூலகத்தில் குவிந்துள்ளன.
திருக்குறள், கவிதை, இலக்கியம், நவீன இலக்கியம், தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள் வரலாற்றை விளக்கும் இதழ்கள், தனித்தமிழ் இதழ்கள், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற நூல்களுடன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, குவைத், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, நார்வே போன்ற வெளிநாடுகளிலிருந்து வெளியான 4000 இதழ்கள் நூலகத்தில் உள்ளன.
தொடராத இதழ்கள் பிரிவில் 3500}க்கும் மேற்பட்ட இதழ்கள், நாளிதழ்கள், பருவ இதழ்களின் மலர்கள் 700, 5000 பருவ இதழ்களின் இணைப்புகள், 150 ஆங்கில இதழ்களும் தனித்தனி பிரிவில் வைக்கப்பட்டிருக்கின்றன. 
"அரிய நூல்களாகக் கருதப்படும் 900}க்கும் மேற்பட்ட நூல்கள், 2000}க்கும் மேற்பட்ட அரிய இதழ்கள், 1958 ஆம் ஆண்டிலிருந்து யாரும் சேகரிக்காத 200}க்கும் மேற்பட்ட நாளிதழ்கள் இந்த நூலகத்தில் வைத்துள்ளேன். ஒரு பத்திரிகைக்கு ஒன்று வீதம் நாளிதழ்களை இங்கு பார்க்கலாம்.
உறுப்பினர்களிடம் சந்தா சேகரிக்கப்படுவதில்லை. இதுவரை 125}க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நூலக்தை பராமரிக்க உதவியாளர், பகுதி உதவியாளர், துப்புரவுப் பணியாளரையும் நியமித்து, அவர்கள் மூலமாக நூலகத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றேன்.
தமிழகத்தில் முதன்முதலாக 1965} ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியாளர் படிப்பில் படித்த போதே 650 பத்திரிகைகளைக் கொண்டு பத்திரிகைக்காட்சி நடத்திய நான், 1974 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வள்ளலார் விழாவில் 2000 பத்திரிகைகளைக் கொண்டு கண்காட்சி நடத்தினேன். அதைத் தொடர்ந்து 2500 இதழ்களைக் கொண்டு 1976}இல் செகந்திராபாத்திலும் காட்சி நடத்தினேன்.
முதன் முதலாக 300 கிலோ எடை கொண்ட 4000 பத்திரிகைகளை விமானத்தில் கொண்டு சென்று 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உலக எழுத்தாளர் மாநாட்டில் கண்காட்சி நடத்தினேன். இதே ஆண்டிலும் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டிலும் கண்காட்சி நடத்தப்பட்டது.
மலேசிய நாட்டில் கோலாலம்பூரில் திருமுறை மாநாடு, மலேசியா பல்கலைக்கழத்தில் பாரதியார் விழா, மலேசியன் இந்தியன் காங்கிரஸ் சார்பில் நேதாஜி மண்டபம் ஆகிய இடங்களிலும், கங்கைப்பட்டாணி, பினாங்கு, பட்டர்வொர்த், ஈப்போ, பகாங், தைப்பிங் ஆகிய நகர்களிலும் காட்சிகளை நடத்தியிருக்கிறேன்.
12 வயதில் உறவினரின் மளிகைக்கடைக்கு எடைக்கு வரும் பழைய பேப்பர்களை வாசிக்கத் தொடங்கிய போது சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 1958 ஆம் ஆண்டில் தொடங்கிய பணி இன்றுவரை இருக்கிறது. ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன்பு வந்த நெல்லை அத்தியாச்சாதீன நற்போதகம், 110 ஆண்டுகள் பழைமையான ஞானத்தூதன், பாரதியார் கொண்டு வந்த இந்தியா, திரு.வி.க.வின் தேசபக்தன், குடியரசு, பகுத்தறிவு, லோகேபகாரி, ஆனந்த போதினி போன்ற பழைமையான நூல்கள் என்னிடம் உள்ளன.
நூலகத்தில் பணியாற்றுவோருக்கு ஊதியம் உள்ளிட்ட செலவுகள், நூலகச் செலவுகள் என ஆண்டுக்கு ரூ.1.44 லட்சம் செலவாகிறது. நூலகத்துக்குத் தனியே வரவு இல்லை என்றாலும், என் பணியைத் தொடராது பணியாற்றி வருகின்றேன். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3000 நூல்கள், 2000 பத்திரிகைகள் வாங்கப்பட்டன. நூலகத்தை 3000 பேர் பயன்படுத்தியிருக்கின்றனர். தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நான் நடத்திய புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டோர்இதுவரை சுமார் 1 லட்சம் பேர் இருக்கும்'' என்கிறார் பட்டாபிராமன்.
தினமணி நாளிதழின் 10 ஆண்டு கால தலையங்கத்தை தனியே பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பட்டாபிராமன், கட்டுரைகளையும் பாதுகாத்து வைத்திருக்கிறார். மேலும், 10 ஆண்டுகளில் நாளிதழ்களில் வெளிவந்த முக்கியச் செய்திகளின் பக்கங்களையும் பொக்கிஷமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் பட்டாபிராமன்.
அரிய பொக்கிஷங்களை பாதுகாத்துவைக்கும் இடம் அருங்காட்சியகம் என்றழைக்கப்படுவதுபோல, யாரும் செய்ய முயலாத, மற்றவர்களைக் காட்டிலும் தன்னை சற்று வித்தியாசப்படுத்தி 60 ஆண்டுகளாக இதழ்கள் சேகரிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, தற்போது தமிழ் இதழ்களுக்கான நூலகத்தையும் தொடங்கி நடத்தி வரும் பட்டாபிராமனை நியூசியம் என்றுதான் அழைக்க வேண்டும்.
- கு.வைத்திலிங்கம்
படங்கள் : எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com