சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 17: கால்கிரியின் ஸ்டாம்பிட் திருவிழா

'கனடா', உலகில் மிகவும் ஈர்க்கக்கூடிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பாரக் ஒபாமா புகழ்ந்து கூறியிருக்கிறார்.
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 17: கால்கிரியின் ஸ்டாம்பிட் திருவிழா

'கனடா', உலகில் மிகவும் ஈர்க்கக்கூடிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பாரக் ஒபாமா புகழ்ந்து கூறியிருக்கிறார். இயற்கை அழகு கொஞ்சும் இந்த நாடு, தெற்கில் அமெரிக்க எல்லையில் தொடங்கி வடக்கில் ஆர்டிக் சர்க்கிள் வரை நீள்கிறது. முதல் முதலில் நான் கனடாவில் கால் பதித்தது டொரன்டோவில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காகச் சென்றபோதுதான். இரண்டாவது தடவை, வேன்கூவர் சென்று அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் சொகுசு கப்பலில் அலாங்காவுக்கு பயணப்பட்டேன்.
கனடாவின் இந்த இரண்டு நகரங்கள் என் கண்முன் கடைவிரித்த இயற்கையின் வெளிப்பாடுகள் அந்த நாட்டின் மீது தீராத காதலை ஏற்படுத்தியது. பலர் சொல்லியும், கேட்டும், படித்தும் கனடாவில் கொலுவிருக்கும் ராக்கி மலைத்தொடர்களைக் காண வேண்டும் என்ற ஆவலை மனதில் புதைத்து வைத்திருந்தேன்.
மொத்தம், நூறு தனித்தனி மலைத்தொடர்கள், 4,800 கி.மீ. பிரிட்டிஷ் கொலம்பியா தொடங்கி, கனடாவின் ஆல்பர்ட்டா (Alberta) என்று நீண்டு நடுவில் பல இடங்களை முத்தமிட்டு, முடிவில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் முடியும் இந்த மலைகள் அணைத்துச் செல்லும் தேசிய பூங்காக்கள், ஏரிகள், (Glacier) கிளேசியர் எனப்படும் பனிப்பாறைகள், அங்கே வாழும் பலவிதமான உயிரினங்கள், மரங்கள் "கடவுளே' எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று அவற்றைப் பார்க்கும்போது என் மனது கூவியது.
ஜேஸ்பர், பேன்ப் என்ற ராக்கி மலைத்தொடர்களின், தேசிய பூங்காக்களை தன்னகத்தே கொண்ட கனடாவின் நகரங்களைப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், கால்கிரியில் நடக்கும் ஸ்டாம்பிட் திருவிழாவைப் பார்க்கவும் 
திட்டமிட்டிருந்தோம்.
கனடா நாட்டின் முக்கிய மாகாணமான ஆல்பர்ட்டாவின் அழகிய நகரம்தான் கால்கிரி. அங்கே ஒவ்வொரு வருடத்தின் ஜூலை மாதத்திலும் உலகின் மிகப்பெரிய, உயரிய வெளிப்புற (ஞன்ற்க்ர்ர்ழ் ள்ட்ர்ஜ்) நிகழ்ச்சியான ஸ்டாம்பிட் திருவிழா, பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஸ்டாம்பிட் திருவிழாவைக் காண உலகில் எல்லா பாகங்களிலிருந்தும் ஒரு மில்லியன் உல்லாசப் பயணிகள் கால்கிரியை நோக்கிப் படையெடுக்கின்றனர். அங்கே அப்படி என்னதான் நடக்கிறது என்ற கேள்விக்குப் பதிலாக அமைவது, ரோடியோ என்கின்ற குதிரை போன்ற கட்டுக்கடங்காத விலங்குகள் மீது சவாரி செய்யும் போட்டி, சக்வேகன் என்னும் குதிரைகள் இழுத்துச் செல்லும் பார வண்டிகளின் ஓட்டப்பந்தயங்கள், பொருட்காட்சி, விவசாய விளைச்சல்களை காட்சிக்கு வைக்கும் விவசாயப் பொருட்காட்சி, சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடுகளைக் கடந்து கலந்து, மகிழும்படியான கேளிக்கைகள், கிராண்ட் ஸ்டான்ட்ஷோ (Grand stand show) என்ற பலவிதமான கலைநிகழ்ச்சிகள், லேசர் ஷோக்கள் அரங்கேற்றப்படுவது என்று கால்கிரியே குலுங்கி மகிழ்கிறது. இந்த நிகழ்ச்சிகள் போதாது என்று இவற்றுக்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போன்று ஸ்டாம்பிட் பரேட் என்று ஆரம்பநாளில் நடக்கும் பரேட் பிரம்மிப்பின் விளிம்புகளை எட்ட வைக்கும் என்று கால்கரியில் வாழுகின்ற எங்கள் குடும்ப நண்பர் சுப்பிரமணியம் சொல்லியிருந்தார்.
இந்த நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான நுழைவுச் சீட்டுகளை அந்த நண்பரின் உதவியோடு ஸ்டாம்பிட் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்து இருந்தோம். சிக்காகோவில் நடந்த ஒரு இருதய மாநாட்டுக்குச் சென்றுவிட்டு பிறகு ராக்கி மவுண்டன் சுற்றுலாவை முடித்துக்கொண்டு, கடைசியாக கால்கிரியில் ஸ்டாம்பிட்டை பார்ப்பது என்று அட்டவணை போட்டிருந்தோம்.
நாங்கள் சிகாகோவில் இருந்தபோது பெரிய மழையால் ஆல்பர்ட்டா மாகாணம் பாதிக்கப்பட்டது. அதனால் கால்கிரி ஸ்டாம்பிட்டை ரத்து செய்துவிடுவார்கள் என்ற செய்தியை அறிந்தோம். என் மனம் எல்லையில்லா வருத்தத்தில் ஆழ்ந்தது. சரி கனடா டிரிப்பைக் கான்சல் செய்துவிட்டு இந்தியா திரும்பிவிடுவது என்று முடிவு செய்தோம். எங்களின் பேரதிர்ஷ்டம், ஸ்டாம்பிட் திருவிழாவின் பிரசிடண்ட் பாம் தாம்ஸன் அந்த திருவிழாவை நடத்தியே தீருவது என்று முடிவு செய்தார். அவர் சொன்னார் "கால்கிரியின் சரித்திரத்திலேயே, இரண்டு முறை போர் மூண்டபோதும், பொருளாதார சீர்கேடுகள் நிகழ்ந்தபோதும் உலகின் பெரிய உயரிய நிகழ்ச்சியான ஸ்டாம்பிட்டை நிறுத்தவில்லை. ஆகையால் இப்போது நரகமோ, வெள்ளமோ ஸ்டாம்பிட் நடக்கும்" என்றார்.
2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எங்களுடைய ராக்கி மவுண்டன் சுற்றுலாவை முடித்துக் கொண்டு கால்கரிக்குள் காலை வைத்தோம். நாங்கள் தங்கப்போகும் ஹோட்டல், மற்றும் பெருவாரியான கட்டிடங்களின் வெளிப்புறக் கண்ணாடிகளில் எல்லாம் கால்நடைகளை மேய்க்கும் கவ்பாய்ஸ் (CowBoys) குதிரைகளின் மீது கவ்பாய்ஸ் தொப்பிகளோடு அமர்ந்திருப்பது போல வரைந்து பல வண்ணங்களில் பெயிண்ட் செய்திருக்கிறார்கள். நீளமான தாம்புக்
கயிறை சுழற்றியபடி இருக்கும் கோலம், கவ் பாய்ஸ் உருவங்களுக்கு மேலும் மெருகூட்டியது.
கால்கிரி ஸ்டாம்பிட்டின் தோற்றம் 1912 என்று அறிந்தோம். (Guy Weadick) கை விடிக் என்ற அமெரிக்க வியாபாரி ரோடியோவை அறிமுகப்படுத்தி அதற்கு ஸ்டாம்பிட் திருவிழா என்ற நாமகரணத்தைச் சூட்டினார். பிறகு 1919-இல் அவர் மீண்டும் கால்கரிக்கு வந்து வெற்றி ஸ்டாம்பிட் என்ற திருவிழாவை ஒன்றாம் உலகப்போரில் வெற்றிவாகை சூடி திரும்பி வந்த சிப்பாய்களை உற்சாகப்படுத்த நடத்தினார். இப்படி கை விடிக் தோற்றுவித்த ஸ்டாம்பிட் திருவிழா 1923-ஆம் ஆண்டு முதல் வருடம்தோறும் கால்கிரி தொழிற் பொருட்காட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு, கொண்டாடப்படுகிறது.
ஸ்டாம்பிட் பரேடைப் பார்ப்பதற்காக அவரசமாகப் புறப்பட்டோம். காலைசூரியன் சுள்ளென்று அடித்தாலும் சுட்டெரிக்கவில்லை. வெப்பக் கதிர்களோடு, குளிர்காற்று கலந்து உடலுக்குப் புத்துணர்வு அளித்தது. நடைபாதையில் போடப்பட்டிருந்த தற்காலிகப் படிக்கட்டுகளில் எங்கள் எண்கள் இருக்கும் இடத்தில் சென்று அமர்ந்துகொண்டோம். கைக்கடிகாரம் காலை மணி 7.30 என்று காட்டியபொழுது ஸ்டாம்பிட் அணிவகுப்பு தொடங்கியது.
கால்கிரியின் படைத்தளபதியும், விண்வெளி வீரர் கிரிஸ் ஹேட்பீல்டும் ஊர்வலத்தின் முன்னால் வெள்ளை குதிரைகளில் வந்தனர். மிக அழகான ஆறு பெண்கள் "எங்கள் நாடு மற்றும் மாகாணத்தின் மனஉறுதியை வெள்ளத்தால் அடித்துச் செல்லமுடியாது" என்ற பேனரை சுமந்து வந்தனர். 700 குதிரைகள், 30 ஊர்திகள், 4,000 பங்கேற்பாளர்கள் என்று கனடாவின் மிகப்பெரிய அணிவகுப்பு மனதை ஈர்த்தது. சிறிய கார்களையும், விமானங்களையும் ஓட்டிவந்தனர். இதைக் கண்ட நான் மீண்டும் குழந்தையானேன். கைகளைத் தட்டி மகிழ்ந்தேன். கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மக்களோடு மக்களாக உட்கார்ந்து, அணிவகுப்பைப் பார்த்து ரசித்ததைப் பார்த்து அதிசயித்தோம். மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. அது.....
தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com