டியூனுக்கு எழுதுவதில் சிக்கல்! - கவிஞர் முத்துலிங்கம்

இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்களில் லட்சுமிகாந்த் - பியாரிலால் இசையில்தான் முதலில் எழுதினேன்.
 டியூனுக்கு எழுதுவதில் சிக்கல்! - கவிஞர் முத்துலிங்கம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 64
இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்களில் லட்சுமிகாந்த் - பியாரிலால் இசையில்தான் முதலில் எழுதினேன். அது கோவைத் தம்பியின் மதர்லாண்ட் பிக்சர்ஸ் தயாரித்த படம். படத்தின் பெயர் "உயிரே உனக்காக'. நதியா, நடிகர் மோகன் இருவரும் நடித்த படம். அவர்கள் பாடுவதுபோல் அமைந்த பாடல் அது.
 "கையாலே உன்னைத் தொட்டால் போதும்
 காதல் வெள்ளம் நெஞ்சில் ஓடும்
 உன் சொல்லைக்கேட்டு - நான்
 ஓடிவந்த பாட்டு
 உன்னை நம்பி இங்கே வந்தால்
 தொல்லை தானோ சொல்லு'
 என்ற பல்லவியுடன் தொடக்கமாகும்.
 எம்.ஜி.வல்லபன் வசனத்தில் கே. ரங்கராஜன் இயக்கிய படம். மதர்லாண்ட் பிச்சர்ஸ் எடுத்த எல்லாப் படமும் வெற்றிப்படம் தான். அதில் இதுவும் ஒன்று.
 இது 1986-ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தை இயக்கிய ரங்கராஜன் இயக்கத்தில் பல படங்களில் நான் எழுதியிருக்கிறேன். இவர்தான் "உதயகீதம்' படத்தையும் இயக்கியவர். அதுவும் நூறு நாட்கள் ஓடிய படம்.
 லட்சுமிகாந்த்-பியாரிலாலுக்கு அடுத்து, நான் பாடல் எழுதிய இந்தி இசையமைப்பாளர் மனோஜ் - கியான் என்ற இரட்டையர்கள். ஆபாவாணன் தயாரித்த படம் அது. விஜயகாந்த் ராம்கி, நிரோஷா ஆகியோர் நடித்த படம். இதுவும் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய மிகப்பெரிய வெற்றிப் படம்.
 மனோஜ் - கியான் டியூன் போடும்போது படத்தின் பெயர் என்னவென்று ஆபாவாணனிடம் கேட்டேன். அவர் "செந்தூரப் பூவே' என்றார். ""செந்தூரப் பூவே என்று தொடங்கும் வகையில் பல்லவி எழுதலாமா? இந்த டியூனில் அந்த வார்த்தை வருகிறது'' என்றேன். "அதுதான் எங்களுக்கு வேண்டும். எழுதுங்கள்'' என்றார்.
 "செந்தூரப் பூவே இங்கு தேன்சிந்த வாவா
 தென்பாங்குக் காற்றே நீயும் தேர் கொண்டு வாவா
 இரு கரைமீறியே தன் நிலைமீறியே
 ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே'
 என்ற பல்லவியை எழுதியவுடன், "நன்றாக இருக்கிறது சரணத்தை எழுதுங்கள்'' என்றார். சரணத்தையும் உடனே அங்கேயே எழுதி விட்டேன். இதை எஸ்.பி. பாலசுப்ரமணியமும் சசிரேகாவும் பாடியிருப்பார்கள். இந்தப் படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதினேன்.
 "சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக - ஒரு
 தேவதை வந்தது நீராட
 வெண்ணிற ரோஜா தன்னிறம் மாறி
 மாலை சூடுதே - அந்த
 வானம் பூக்களைத் தூவாதோ - புது
 வாழ்த்துக் கவிதைகள் பாடாதோ'
 என்ற இரண்டாவது பாடலையும் ஒரே நாளில் எழுதினேன்.
 மூன்றாவது பாடலை மறுநாள் எழுதினேன்.
 "தோப்புக்குள்ளே பூ மலரும் நேரம் வந்தாச்சு
 தோட்டத்திலே வண்டுக்கெல்லாம் தூது விட்டாச்சு'
 என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல். இதில் வைரமுத்து மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார். ஆபாவாணனும் எழுதியிருக்கிறார். படத்தில் இணை இசை என்று இவர் பெயரைத்தான் டைட்டிலில் காட்டுவார்கள். இசை ஞானமும் உள்ளவர். இந்தப் படம் 1988-ஆம் ஆண்டு வெளிவந்தது.
 இந்தப் படத்தை இயக்கியவர் தேவராஜ். இவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார். அது போல் மனோஜ் - கியான் என்ற இரட்டையரில் கியான் பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டார். அவர்கள் இருவர் இசையிலும் நான்கு படங்களில் எழுதியிருக்கிறேன். மனோஜ் மட்டும் தனியாக இசையமைத்த படங்களிலும் எழுதியிருக்கிறேன்.
 பொதுவாக அந்த நாளில் கதாநாயகன் பாடுகின்ற அறிமுகப் பாடலென்றாலும், அல்லது டைரக்டர் புதிதாக முதன்முதலில் டைரக்ட் செய்யும் படம் என்றாலும் பெரும்பாலும் என்னைத் தான் பாடல் எழுத அழைப்பார்கள்.
 அதில் "ஈரமான ரோஜா' என்ற படமும் ஒன்று. இது கே.ஆர். தயாரித்து இயக்கிய படம். நடிகை மோகினி, இதில் தான் அறிமுகம் ஆனார். அவர் அறிமுகப் பாடலையும் நான்தான் எழுதினேன். படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.
 "வண்ணப் பூங்காவனம்
 வாழ்க்கை பிருந்தாவனம்
 இனிய கவிதை உதயமாகுது
 தென்றல் தாலாட்டுது ஜீவராகம்
 அன்பு பாராட்டுது மோககீதம்
 இங்கு பூபாள சங்கீதம் பாடு'
 என்று பல்லவி எழுதினேன். இளையராஜா அதைப் பார்த்துவிட்டு "வாழ்க்கை பிருந்தாவனம்' என்பதை "சின்னப் பிருந்தாவனம்' என்று மாற்றினார்.
 " "வாழ்க்கை பிருந்தாவனம்' என்ற வார்த்தைக்காகத் தான் இந்தப் பல்லவியைத் தேர்ந்தெடுத்தேன். இளையராஜா அதை ஏன் மாற்றினார்?'' என்று கே.ஆர். என்னிடம் கேட்டுவிட்டு இளையராஜாவிடமே சென்று கேட்டார். "வண்ணப் பூங்காவனம் - சின்னப் பிருந்தாவனம் என்பது ஓசைக்கு நன்றாக இருக்கிறது. "தன்னத் தானானனா, தன்னத் தானானனா' என்பதுதான் டியூன். "தன்னத்தானானனா' என்பதை "தானத் தானானனா' என்று அவர் மாற்றி எழுதியிருக்கிறார். அதனால்தான் நான் மாற்றினேன்'' என்றார். டியூனுக்கு எழுதுவதில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிட்டேன்.
 நடிகர் ராமராஜன் நடிகர் ஆவதற்கு முன், டைரக்டராக அறிமுகமான படம் "மண்ணுக்கேத்த பொண்ணு'. இது நடிகர் பி.எஸ். வீரப்பாவின் சொந்தப் படம். கங்கை அமரன்தான் அந்தப் படத்திற்கு இசை. என்னை பி.எஸ். வீரப்பாவிடம் அறிமுகப்படுத்தியபோது, ""டைரக்டர் இராம நாராயணன் படத்திற்கு பெரும்பாலும் வாலிதான் எழுதுவார். படம் நான்கு வாரம் ஓடும். முத்துலிங்கம் ஒரு படத்திற்கு எழுதினார். அது நூறு நாட்கள் ஓடியது. ராசியான பாடலாசிரியர்.
 அதனால்தான் சென்டிமெண்டாக இவரைப் பாடல் எழுத அழைத்தேன். எம்.ஜி.ஆர். படங்களுக்கெல்லாம் பாடல் எழுதியவர்'' என்று அறிமுகப்படுத்தினார். ""தெரியுமே. "மதுரையை மீட்டசுந்தரபாண்டியன்' படத்திற்கெல்லாம் பாடல் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரும் இவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரே?'' என்றார்.
 ராமராஜன் இயக்கிய "மண்ணுக்கேத்த பொண்ணு' என்ற படத்தில் நான் எழுதிய பாடல்,
 "ஆண் :- பூங்காத்தே - அந்தப்
 பொண்ணுக்கிட்டே ஒண்ணு சொல்லிவா
 தனியா - அவ இல்லாமே நெஞ்சம் வாடுதே
 பெண் :- பூங்காத்தே - என்
 ராசாக்கிட்டே என்னைக் கொண்டு போ
 மனமோ - துணை இல்லாமே இங்கே வாடுதே'
 என்று ஆரம்பமாகும். மலேசிய வாசுதேவனும் சுசீலாவும் பாடியிருப்பார்கள். பாடல் பிரபலமான பாடல்.
 ராமராஜன் முதன்முதல் கதாநாயகனாக நடித்த படம் "நம்ம ஊரு நல்ல ஊரு'. வேந்தன்பட்டி அழகப்பன் தயாரிப்பு இயக்கத்தில் உருவானபடம் இது. இதிலும் கங்கை அமரன்தான் இசை. நான்தான் முதல் பாடலை எழுதினேன்.
 "பூத்தமல்லிகை காத்து நிற்குது
 தேன்போலே
 காதல் வண்டுடன் பேச எண்ணுது
 கண்ணாலே
 அந்த காதல் வரும் நேரம்
 அதன் வாழ்வில் வரும் யோகம்'
 என்று பல்லவி தொடக்கமாகும். எஸ். ஜானகி பாடியிருப்பார். இது நூறு நாள் ஓடிய வெற்றிப்படம். அந்தப் படத்தை இயக்கிய வேந்தன்பட்டி அழகப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார்.
 2011-ஆம் ஆண்டு நடிகர் ராமராஜன் நடித்து வெளிவந்த படம் "மேதை'. அந்தப் படத்தில் நான் எழுதிய பாடலுக்காகத்தான் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசு என்னை 2017-ஆம் ஆண்டு தேர்ந்தெடுத்தது. 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தப் பாடலுக்கான விருதை தமிழக அரசு வழங்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.
 2011-இல் இருந்தே தமிழக அரசு திரைப்பட விருதுகளோடு கலைமாமணி விருதையும் வழங்கவில்லை. எல்லாவற்றையும் சேர்த்து இப்போதுதான் நூற்றுக்கணக்கானோர்க்கு வழங்க இருக்கிறார்கள்.
 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அண்மையில் தமிழக அரசு கொண்டாடியது. அதில் எம்.ஜி.ஆரோடு திரைப்படங்களில் பங்கு பெற்ற கலைஞர்களை அழைத்துச் சிறப்பித்திருக்கலாம். எம்.ஜி.ஆர் புகழுக்குப் பெரும்பாலும் காரணமாக அமைந்தது அவர் படத்தின் பாடல்கள்தாம்.
 அவர் படத்திற்குப் பாடல்கள் எழுதிய கவிஞர்களில், நானும் புலமைப்பித்தனும்தான் இருக்கிறோம். ஆகவே எங்களுக்கு எம்.ஜி.ஆர் விருதென்று ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ கொடுத்துச் சிறப்பித்திருக்கலாம். அப்படிக் கொடுத்தால் அது எம்.ஜி.ஆருக்கும் பெருமை. எங்களுக்கும் பெருமை. தமிழக அரசுக்கும் பெருமை. ஆனால் இவர்கள் அம்மாவுக்குக் கொடுக்கின்ற பெருமையை எம்.ஜி.ஆருக்குக் கொடுப்பதில்லை. எம்.ஜி.ஆர் இல்லையென்றால் கழகம் எங்கே? அம்மா எங்கே?
 சைதை துரைசாமிதான் "உலக எம்.ஜி.ஆர் பேரவை' மாநாட்டை நடத்தி, எனக்கும் புலமைப்பித்தனுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து எங்களைச் சிறப்பித்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி. எம்.ஜி.ஆர் மீது உண்மையான பற்றுடையவர் அவர் என்பதை இதன் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார்.
 (இன்னும் தவழும்)
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com