இன்சூரன்ஸ் மோசடி... இந்தியாவின் வல்லரசு கனவு...

கோலிவுட்டின் சமீபத்திய "ஹிட் டிரெண்ட்' என்ன தெரியுமா? படத்தின் டீஸர், டிரெய்லரே "நச் முத்திரை' பதிக்க வேண்டும். அப்படி, படத் தலைப்பிலேயே கவனம் கொள்கிறது "படித்தவுடன் கிழித்து விடவும்'.
இன்சூரன்ஸ் மோசடி... இந்தியாவின் வல்லரசு கனவு...

கோலிவுட்டின் சமீபத்திய "ஹிட் டிரெண்ட்' என்ன தெரியுமா? படத்தின் டீஸர், டிரெய்லரே "நச் முத்திரை' பதிக்க வேண்டும். அப்படி, படத் தலைப்பிலேயே கவனம் கொள்கிறது "படித்தவுடன் கிழித்து விடவும்'.
 "டீஸர் பார்த்துட்டு, இது காமெடிப் படம் என்று நினைத்து விடாதீர்கள். ரொம்ப சீரியஸ் படம்...'' என எடிட்டிங் டேபிளில் அமர்ந்தபடி சிரிக்கிறார் படத்தின் இயக்குநர் ஹரி உத்ரா. டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக "தெரு நாய்கள்' படத்தின் மூலம் கொடி பிடித்தவர்...
 "கதை, பயங்கரமாக வித்தியாசமாக இருக்கும் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் அப்படிச் சொன்னாலே அது வழக்கமானதாகி விடும். இன்சூரன்ஸ் மோசடி... இதுதான் படத்தின் கான்செப்ட். இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை. சம்பந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை. இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. இதை வசூலிக்கும் வேலையை செய்கிற என் நண்பர் ஒருத்தர் சில விஷயங்களைச் சொன்னப் போது, அதை வைத்து ஒரு சினிமாவே எடுக்கலாம் என்று தோன்றியது'' என்கிறார்.
 இன்சூரன்ஸ் மோசடி மிகப் பெரிய வலைப் பின்னல்... அதை திரைக்கதை எழுதும் அளவுக்கு இழுத்த விஷயம் எது...?
 இங்கே எல்லாமும் சாதாரணமாகி விட்டது. வரதட்சணை கேட்கிற மாப்பிள்ளைக்கும் குற்ற உணர்ச்சி இல்லை. கொடுக்கிற பெண் வீட்டாருக்கும் குற்ற உணர்ச்சி இல்லை. பல நாடுகளில் குற்றமாக பார்க்கிறப்படுகிற லஞ்சம், மோசடி, ஊழல் எல்லாம் இங்கே நம்முடைய காலாசாரமாக மாறி வருகிறது. லஞ்சம் கொடுத்தால் தவறென பேசிக் கொள்ளலாமே தவிர, காசு கொடுத்தால்தான் இங்கே எல்லாமும் நடக்கும் என்ற நிலை வந்துவிட்டது. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் கல்வியும், மருத்துவமும் இன்னும் எளிய மக்களைப் போய் சேரவில்லை. சரியாக கல்வி கிடைக்காத காரணத்தால்தான் நாம் இன்னும் வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கிறோம். சரியான மருத்துவம் இல்லாத காரணத்தால் இறப்பு விகிதம் அதிகாமாகி கொண்டே இருக்கிறது. லஞ்சம் வாங்கி கைதானவன், மறுபடியும் லஞ்சம் கொடுத்து விடுதலையாகி விடுகிறான். லஞ்ச ஒழிப்பு இலாகாவில் வேலைக்கு சேர லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. பன்னாட்டு சந்தைகளின் அடுத்தடுத்த வரவுகளால் இந்தியா இன்னுமொரு சுதந்திரப் போரை சந்திக்க வேண்டியுள்ளது. இப்படி பல வலிகள் என்னை இந்தக் கதைக்குள் இழுத்தன. அதை ஒரு இந்திய குடிமகனாகப் பதிவு செய்திருக்கிறேன்.
 பரிச்சயமான முகங்கள் யாரும் தெரியலையே... சொல்ல வருகிற விஷயம்... சென்று சேர வேண்டுமே...?
 நான் ஒரு கதை சொல்லி. கற்பனை வளத்தின் காரணமாக நான் ஒரு கதை சொல்ல போகிறேன். அதற்கு எதற்கு நட்சத்திர நடிகர்கள். படத்தில் சில விஷயங்களை வெளியே சொன்னால், பெரிய நடிகர்கள் நடிக்க வர மாட்டார்கள். யாருக்கும் தனி இமேஜ் இந்தக் கதையில் கிடையாது. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு கதை சொல்லப் போகிறேன். இது நீங்களும், நானும் கடந்து வந்த கதையாக இருக்கும். அதனால் இது அந்நியப்படாது.
 ஒரு அரசியல்வாதி.. செய்யும் இன்சூரன்ஸ் மோசடியால் இறந்தவர்கள், ஆவியாக வந்து மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்குகிறார்கள் என்பது கதையின் பிரதான உள் சுவடு.
 இதில் தற்கால தமிழ் காலாசார, பொருளாதார சீரழிவு இருக்கிறது. கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி, ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா இப்படி பல கதாபாத்திரங்கள். எல்லாமே வாழ்வின் துளிகளாக இருப்பார்கள். இவர்தான் கதாநாயகன், இவர்தான் கதாநாயகி, இப்படியொரு வில்லன் இருந்தே ஆக வேண்டும். பெயருக்கு காமெடியன் இருந்தே ஆக வேண்டும் என்று சம்பிரதாயங்கள் இந்தப் படத்தில் இல்லை.
 இப்படியொரு தயாரிப்பு.... எந்தளவுக்கு சுதந்திரம்...?
 கார் வாங்க வங்கியில் ஃபைனான்ஸ் வாங்கி விட்டு, மூன்று மாதம் தவணை கட்டவில்லை என்றால், "நீங்க லோன் கட்டாததால உங்க காரைக் கைப்பற்றப் போகிறோம்' என்று வீட்டுக்கு நோட்டீஸ் வரும். அப்புறம்தான் காரைப் பறிமுதல் செய்வார்கள். மீதித் தொகையைக் கட்டி விட்டுத்தான் காரை மீட்க முடியும். இதுதான் சட்டம்.
 ஆனால், தனியார் நிதி நிறுவனங்களில் காருக்கு ஃபைனான்ஸ் வாங்கிக் கொண்டு கட்டவில்லையென்றால், இந்தச் சட்டம் எல்லாம் செல்லாது. தவணை கட்டாதவர்கள் பட்டியல் சில ஏஜென்ட்களுக்குப் போகும். கூடவே வண்டிகளின் டூப்ளிகேட் சாவிகளும் போகும். "இதுமாதிரி இந்த ஏரியால இந்தந்த வண்டிகளைத் தூக்கப்போறோம். அவங்க புகார் கொடுத்தா கண்டுக்காதீங்க'னு லோக்கல் போலீஸுக்குத் தகவல் போகும். அப்புறம் சம்பந்தப்பட்ட கார்களை ரகசியமாப் பின்தொடர்ந்து, சரியான சமயத்துல ஓட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். முன்னாடி, இப்படி தினமும் நூற்றுக்கணக்கான கார்களைத் தூக்கி விடுவார்கள். இதில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதையெல்லாம் ஆங்காங்கே வைத்து ஒரு சினிமாவுக்கான திரைக்கதை தயார் செய்தேன்.
 கதை, திரைக்கதையைப் பகுதி பகுதியாக விவரிக்கிற மாதிரி, தயாரிப்பாளருக்கு சொன்னேன். அந்த கதை சொல்லும் விதம் பிடித்துப் போய் கதை மேலயும் என் மேலயும் அவருக்கு நம்பிக்கை வந்து விட்டது. ஐ கிரியேசன்ஸ் ஆர். உஷா, சுரேஷ்குமார், சேரமணி ஸ்ரீதர் எல்லோருக்கும் நன்றிகள்.
 - ஜி.அசோக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com