சார் தாம் யாத்ரா!- சாந்தகுமாரி சிவகடாட்சம்

பகவத்கீதையில், கங்கை நதியின் மேன்மையைப் பற்றி கிருஷ்ண பரமாத்மா இப்படி சிலாகித்து கூறுகிறார்.
சார் தாம் யாத்ரா!- சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 31

மீன்களில் நான் சுறாவாக இருக்கிறேன்,
நதிகளில் நான் கங்கையாக இருக்கிறேன்."
-பகவான் கிருஷ்ணன்
பகவத்கீதையில், கங்கை நதியின் மேன்மையைப் பற்றி கிருஷ்ண பரமாத்மா இப்படி சிலாகித்து கூறுகிறார். இவரின் பாதங்களிலிருந்து புறப்பட்ட கங்கை, குதித்து கும்மாளம் இட்டு, பொங்கி, பெருகி, கட்டுக்கடங்கா வேகத்துடன் பூமியில் இறங்கத் தொடங்கினாள்.
பண்டைய இந்தியாவின் கோசல நாட்டை பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனின் வேண்டுகோளுக்கு இணங்க பூமிக்கு வந்த கங்கையின் வேகத்தை அடக்கி, தன்னுடைய தலையில் தாங்கி பிறகு, பூமி செழிக்க, நம் தேசத்து மக்களின் வாழ்வு ஓங்க மிதமான வேகத்தில் பாயச் செய்கிறார் சிவபெருமான்.
கடந்த ஆண்டு மே மாதம் ஹரித்துவாருக்கு செல்லும் அரிய வாய்ப்பு என் கணவருக்கும் எனக்கும் கிட்டியது. எங்களைச் சுமந்துகொண்டு அந்த வாடகைக் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. வழிநெடுக ஏராளமான மக்கள், பேருந்துகளிலும், பலவிதமான ஊர்திகளிலும் ஹரித்துவாரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
" "சார் தாம் யாத்ரா', அதாவது கங்கோத்ரி, யமுநோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் என்கின்ற, இந்துக்களுக்கு முக்கியமான 4 புனித ஸ்தலங்களுக்கு அழைத்துச் செல்கின்ற யாத்திரை தொடங்கியிருந்த நேரம் என்பதால் இத்தகைய கூட்டம்'' என்றார் ஓட்டுநர்.
அதுமட்டுமல்ல, அன்றைய தினம் புத்த பூர்ணிமா என்று அழைக்கப்படுகின்ற புனித நாள், புத்தபிரான் அவதரித்த தினம், வைகாசி விசாகம் மற்றும் பெüர்ணமி என்று எல்லா விசேஷங்களும் கைகோர்த்துக் கொள்ள யாத்திரிகர்கள் முண்டியடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் ஹரித்துவாருக்கு.
கங்கோத்திரியிலிருந்து ஓடிவரும் கங்கை, 253 கி.மீ ஓட்டத்திற்குப் பிறகு சமவெளிக்கு வரும் முதல் இடம் என்பதால் "கங்காதுவாரா' என்ற பெயர் ஹரித்துவாருக்கு உண்டு. "ஹரித்துவார் என்று ஏன் பெயர் வந்தது' என்பதற்கு "ஹரி என்றால் விஷ்ணு, அவருடைய கோயில் இருக்கும் பத்ரிநாத்துக்குச் செல்லும் வழியின் கதவாக இருப்பதால் ஹரித்துவார் என்று அழைக்கப்படுகிறது' என்று ஒரு சாராரும், "ஹர' என்றால் "சிவன்' என்று பொருள், "கைலாஷ்' என்ற புனித யாத்திரையின் தொடக்கமாக இருப்பதினால் இதற்கு ஹரித்துவார் என்ற பெயர்' என்று மற்றொரு சாராரும் விளக்கமளித்தனர்.
எது எப்படியோ, ஹரித்துவார் கங்கையின் நுழைவு வாயிலாக உள்ளது என்பது கண்கூடு. ஹரித்துவாரைச் சென்று அடைந்தோம். கங்கா மாதாவை அரவணைத்துக் கொள்ளப் போகிறோம். அவளைக் கண்ணாரக் காணப் போகிறோம்; "நதிகளில் நான் கங்கையாக இருக்கிறேன்' என்று கீதையின் கிருஷ்ண பரமாத்மா சொன்னாரே அந்த புனித நதியில் நீராடப் போகிறோம் என்ற எண்ணங்கள் தந்த மனோதிடத்தில் பெரும் கூட்டத்தைக் கண்டு அஞ்சாமல் மக்கள் முன்னேறிக் கொண்டிருந்தனர்.
ஓட்டுநர், ""மேடம், என் பின்னாலேயே வாருங்கள். உங்கள் இருவரையும் பிரம்ம குண்டத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே கங்கையில் குளித்தால் பலன் அதிகம்'' என்றார். ஹரித்துவாரின் படித்துறைகளிலேயே மிகவும் புனிதமிக்கதாக பிரம்ம குண்டம் போற்றப்படுவதற்கு காரணம் உள்ளது. அங்கேதான் அமிர்தத் துளிகளில் ஒன்று விழுந்தது என்று சொல்லப்படுகிறது.
தேவர்களும், அசுரர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடைந்து எடுத்த அமிர்தக் கலசத்தைச் சுமந்து கொண்டு கருடன் பறந்து சென்றது. அப்பொழுது குடத்திலிருந்து சில துளிகள் சிதறி இந்தியாவில் நான்கு இடங்களில் விழுந்தன. ஹரித்துவார், உஜ்ஜையினி, நாசிக், அலகாபாத் என்கின்ற இடங்களில் இந்த நான்கு துளிகள் விழுந்ததால் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு இடத்திலும் கும்பமேளா நடக்கிறது. இப்படி பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளாவுக்கு எண்ணிக்கையில் அடங்கா, துறவிகளும், பக்தர்களும் ஒருசேர குழுமி கங்கையில் புனித நீராடுவார்கள்.
பிரம்ம குண்டத்தை நோக்கி நடந்தோம். கங்கா மாதாவின் தரிசனம் என்னை நெகிழ வைத்தது. பொங்கிப் புறப்பட்டு பல மரக்கிளைகளைச் சுமந்துகொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தாள். அவள் வேகத்தைக் கட்டுப்படுத்தி பல படித்துறைகளின் வழியாகச் செல்லும் வகையில் விதிகளை அமைத்திருந்தனர்.
பிரம்மகுண்ட படித்துறையை அடைந்தோம். ஒவ்வொரு படியாக இறங்கினோம். பாதங்களைத் தொட்ட கங்கை, பிறகு மெதுவாக மேல்நோக்கி எழும்பத் தொடங்கினாள். என் கணவன் கைகளைப் பற்றி, நீரில் மூழ்கி மூன்று முறை எழுந்தேன். உடம்பின் அத்துனை மயிர்க்கால்களும் சிலிர்த்துக் கொண்டன.
என் அருகில் தொண்ணூறு வருடங்கள் கடந்த மூதாட்டி கைகளைக் கூப்பி, பொக்கை வாய் மந்திரங்களை ஜெபிக்க, சொர்க்கத்தைக் கண்ட ஆனந்தத்தைக் கண்களில் ஏந்தி மெதுவாக நீரில் மூழ்கி எழுந்தார். ஒரு பிராமணர் கையில் ஏந்தியிருந்த பால் சொம்பிலிருந்து பாலை கங்கையில் பயபக்தியுடன் ஊற்றிக் கொண்டிருந்தார்.
"கங்கா மாதாவுக்கு ஜெய்' என்று முழங்கியபடி ஒரு கும்பல் தொபுகடீர் என்று கங்கையில் குதித்தது. பண்டிதர்களின் வேதகோஷம் முழங்க, பெண்கள் இலைகளில் ஏந்திய தீபத்தை கங்கையில் விட்டு அதைக் கைகளால் தள்ளிவிட அவை மிதந்து செல்லும் அழகு, அப்பப்பா! "கங்கா மாதாவே, பாரதத்தின் நம்பிக்கையே, பல கலாச்சாரங்களின் சங்கமமே, வேதங்களின் சாரமே, மனிதகுலத்தின் உயிர்நாடியே, தெய்வங்களின் கருணையே, என் கணவரோடு உன்னுள் மூழ்கி எழுகிறேன்.
பிறவி என்றும் பெரும் பிணியை நீக்கி, முக்திக்கு வழிவகுப்பவளே, உன்னில் மூழ்கி எழுகிறேன். உலக மக்களின் நல்வாழ்விற்காகவும், சமாதானத்திற்காகவும் தோன்றிய புத்தமகான் பிறந்த நாளில் உன்னில் மூழ்கி எழுகின்றேன்' என்று மூன்று முழுக்குகளைப் போட்டேன்.
எல்லையில்லா அமைதியும், ஆனந்தமும் என்னைச் சூழ்ந்துகொண்டன. அருகில் இருந்த சிவன், பார்வதியின் கோயிலில் இருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தோம். பிறகு கங்கையில் விளக்கை மிதக்க விட்டேன்.
ஹரித்துவாரில் சூரிய அஸ்தமனத்தின்போது நிகழும் கங்கை தீப ஆராதனையைக் கண்டு மகிழ்ந்தேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத புத்த பூர்ணிமா அது!
தொடரும்...

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com