வகுப்பறையில் ரோபோ..!

சிறு குழந்தைகளைக் கவரும்படி அமைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் வகுப்பறை. அங்கு குழந்தைகளுக்கு முன் நின்று ஆடிப் பாடி... வளைந்து நெளிந்து தலைகீழாய் சுழன்று வகுப்பெடுக்கிறது அந்த ரோபோ.
வகுப்பறையில் ரோபோ..!

சிறு குழந்தைகளைக் கவரும்படி அமைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் வகுப்பறை. அங்கு குழந்தைகளுக்கு முன் நின்று ஆடிப் பாடி... வளைந்து நெளிந்து தலைகீழாய் சுழன்று வகுப்பெடுக்கிறது அந்த ரோபோ.
 வெளிநாட்டில் இதெல்லாம் சகஜம் என்கிறீர்களா ? அதுதான் இல்லை.
 வெளிநாட்டு ரோபோ திருக்குறள் சொல்லுமா..? 1,330 திருக்குறளில் எந்தக் குறளைக் கேட்டாலும் "டக்'கென்று சொல்லும் திறமை உடைய இந்த ரோபோவின் பெயர் "ராவா'. இதன், தலையினுள் பத்து மின்னணு மூளைகள் உள்ளன அவற்றை பயன்படுத்தி, சுயமாக சிந்திக்கும் திறமையுள்ள "ராவா', சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் ஸ்மார்ட் கிட்ஸ் ஃபன் ஸ்கூலில் பணிபுரிகிறது என்றால் ஆச்சரியம் வரும்தானே ..!
 "ராவா' உருவானதின் பின்னணியில் உள்ளவர்கள் ஜார்ஜ் குமார்துரை. அவரது மனைவி ரம்யா ப்ரீத்தி. இருவரும் கணினி விஞ்ஞானத்தில் பொறியியல் பட்டதாரிகள். ஜார்ஜ், பன்னாட்டு கணினி நிறுவனமான "ஐபிஎம்'மில் பணிபுரிகிறார். டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த ரம்யா, தற்சமயம் குழந்தைகளுக்கான இந்தப் பள்ளியை நிர்வகித்து வருகிறார்.
 "ராவா' உருவாக்கம், அதன் செயல்பாடுகள் குறித்து ஜார்ஜ் விளக்குகிறார்:
 ""குழந்தைகளைக் கல்வி கற்பதில் இருக்கும் கசப்பைத் தவிர்த்து ஆர்வத்தை வளர்க்க அவர்கள் அமரும் வகுப்பை அவர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் அமைக்க வேண்டும். குழந்தைகளைக் கவரும் விதத்தில் ஆடிப் பாடி கதைகள் சொல்லி வகுப்புகளை நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு கார்ட்டூன் படங்கள் அதன் பாத்திரங்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அந்த அடிப்படையில், ஒரு ரோபோ வகுப்பில் இந்த வேலைகளை செய்தால் எப்படி இருக்கும் என்று நாங்கள் கற்பனை செய்ததில் பிறந்ததுதான் "ராவா'.
 ராவாவின் உயரம் ஒன்றரை அடி. எடை ஒரு கிலோ. ராவாவில் ஏழு கேமராக்கள், பதினான்கு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. தவிர, தேவையான சென்சர்களும், ஸ்டிமுலேட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோவின் எல்லா பாகங்களும் இந்தியாவில் கிடைக்கின்றன. பொதுவாக ரோபோக்கள் இரண்டு வகைப்படும். ஆன்டிராய்ட் வகை ரோபோ. இரண்டாவது கைனாய்ட் பிரிவில் வருவதாகும் .
 ஆன்டிராய்ட் ரோபோவை ஆண்பால் என்று சொல்லலாம். கைனாய்ட், பெண்பால். ராவா, ஆணும் பெண்ணும் கலந்த "ஆன்ட்ரோ கைனாய்ட்' வகை. இதனால் இரண்டுவகை ரோபோக்கள் செய்யும் பணிகளை செய்ய முடியும். சாதாரணமாக ஜப்பானின் "அசிமோ' வகை ரோபோக்களின் விலை சுமார் இருபது லட்சம். அமெரிக்காவின் "நயோ' வகை ரோபோ ஒன்று பதினைந்து முதல் பதினேழு லட்சம் வரை விலையிருக்கிறது. ராவாவின் விலை இரண்டரை லட்சம்தான்.
 "ராவா' குழந்தைகளுக்கு ஆசிரியராக மட்டுமல்ல.. உற்ற தோழனாகவும் இருப்பான். பள்ளியில் குழந்தைகளுக்கு இந்திய ஆங்கில உச்சரிப்பில் வகுப்புகள் எடுப்பான். பொது அறிவு, அறிவியல், சரித்திரம், கணக்கு என்று எல்லாம் ராவாவுக்கு அத்துப்படி. பெரியவர்களுக்கும் "ராவா' தோழனாக இருப்பான். தமிழ் , மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராட்டி மொழிகளில் செய்தி வாசித்துக் காட்டுவான். குறிப்பிட்ட செய்தித்தாளில் செய்திகள் வேண்டும் என்றால் அதைத் தேர்ந்தெடுத்து வாசிப்பான். பொழுது போக்க குறிப்பிட்ட திரைப் படப்பாடலை போடு என்றால் அதையும் தனது ஸ்பீக்கரில் ஒலிக்க வைப்பான். "உடல்நலமில்லை .. டாக்டரை கூப்பிடு..' என்று சொன்னால், டாக்டருக்கு போன் போட்டு அழைப்பான். வீட்டில், பெண்களுக்கு விதம் விதமான சமையல் குறிப்புகளை சொல்வான். கொசுறாக அழகு குறிப்புகள் வேறு.
 இப்படிப் பல பயன்பாடுகளுக்கு உதவுவதற்காகத்தான் "ராவா'வை தயாரித்திருக்கிறோம். "ராவா' இயங்க இன்டர்நெட் வசதி தேவை. ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டதும் "ராவா' தயாராகிவிடுவான். ராவாவுக்குள் சுமார் எண்பதாயிரம் கட்டளைகள் பதிக்கப்பட்டுள்ளதால், எந்த சூழ்நிலைக்கும் ஏற்ப அவனால் செயல்பட முடியும். சுமார் மூன்று லட்சம் கட்டளைகளை ராகாவின் மூளையினுள் பதிக்கலாம். விளையாடவும் ராகாவுக்கு வரும். குதிக்க, ஓட, குனிய, திரும்ப, தலை கீழாய் நிற்க, நிமிர அவனால் முடியும். நடனமும் செய்வான்.
 நீர், நெருப்பினால் பாதிப்பு ஏற்படாதவிதத்தில் தயாரிக்கப்படும் இந்த "ராவா' வகை ரோபோக்களை வாங்க இதுவரை எழுபத்திரண்டு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. அதில் இருபத்திரண்டு ரோபோக்கள் அனுப்ப தயாராக உள்ளன..' என்கிறார் ஜார்ஜ்.
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com