திரையிசைப் பாடல் கவிதை நயம் - கவிஞர் முத்துலிங்கம்

மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர் உவமைக் கவிஞர் சுரதா. வெற்றுச் சொல் என்பதே அவர் கவிதையில் வராது. அனைத்தும் முத்துச்சொல்தான். 
திரையிசைப் பாடல் கவிதை நயம் - கவிஞர் முத்துலிங்கம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -38

மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர் உவமைக் கவிஞர் சுரதா. வெற்றுச் சொல் என்பதே அவர் கவிதையில் வராது. அனைத்தும் முத்துச்சொல்தான்.
நிலவைப் பற்றிச் சொல்லும்போது வானவிளக்கென்றும், இரவுத் தீபம் என்றும் கவிஞர் பலர் கழறி இருக்கின்றனர். இவரும் அதைத்தான் சொல்கிறார். ஆனால் சொல்லும் முறை வேறு.
"எண்ணெய்விளக் கேற்றிவைத்தால் அணையக்கூடும்
என்பதனால் அதோ அந்த நீலவானம்
வெண்ணெய்விளக் கேற்றுவதைப் பாராய் என்று
வெண்ணிலவை அவன் சுட்டிக் காட்ட லானான்''
என்பார்.
கடல் அலைகளைச் சொல்லும்போது "தண்ணீர்ச் சுவர்கள்' என்பார். வெயில் நேரத்தில் குளங்களில் மீன்கள் "தண்ணீருக்கு மேலே வந்து நீந்திக் கொண்டிருக்கும் அல்லவா? அதைச் சொல்லும்போது தண்ணீரின் கதவுகளைத் திறந்து கொண்டு தலை நீட்டிப் பார்க்கின்ற கயல்மீன் கூட்டம்' என்பார். ஓடிக் கொண்டிருக்கும் நதியைத் "தண்ணீர் வீதி' யென்பார். தேங்கிக் கிடக்கும் குளம் குட்டையைச் சொல்லும்போது "தண்ணீர் மெத்தை' என்பார்.
தோட்டத்தில் தென்னை மரங்களைப் பார்த்த காதலன் காதலியிடம் சொல்கிறான் :
"தென்னையிலே செவ்விளநீர் இரண்டைக் காணோம்
திருட்டுத்தான் போயிருக்க வேண்டும் என்றான்
என்னருமைக் காதலரே அவற்றைத் தென்னை
எனக்கென்றோ பரிசளித்து விட்ட தென்றாள்''
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவர் ஒருநாள் என்னைப் பார்த்து, "நீ முத்தாரத்தில் பல்லாண்டுகளுக்கு முன் எழுதிய கவிதையை மீண்டும் ஒருமுறை பத்திரிகைகளைப் புரட்டும்போது பார்த்தேன். நன்றாக இருந்தது. அந்தக் கவிதையிலுள்ள நயங்களை நீ திரைப்பாட்டிலும் கொண்டு வரலாம். பாராட்டுக் கிடைக்கும்'' என்றார். அதைப்போல அந்தக் கவிதையிலுள்ள ஒன்றிரண்டு கருத்தை நான் சினிமாப் பாட்டிலும் கொண்டு வந்தேன். முதலில் அந்தக் கவிதையைச் சொல்கிறேன். 
அப்புறம் அந்தத் திரைப்பாட்டைச் சொல்கிறேன்.
"தேனைப்போல் இனிக்கின்ற பெண்ணே என்றேன்
தெவிட்டுகின்ற பொருளாநான் என்று கேட்டாள்
வானத்து முழுநிலவே என்று சொன்னேன்
வந்து வந்து தேய்ந்தழியும் பொருளா என்றாள்.
முகில்போலக் கூந்தலென்றேன்; என் கூந்தல் போல் 
முகிலுக்கு மணமுண்டா என்று கேட்டாள்
நகம்போலப் பவளமென்றேன்; என் நகம் போல்
நறுக்கிவிட்டால் வளர்வதுண்டோ பவளம் என்றாள்.
கற்கண்டு நீயென்றேன்; எறும்பும் ஈயும்
கடிக்கின்ற பொருளாநான் எனச் சினந்தாள்
கற்றவளே நீ எனது கண்கள் என்றேன்
கண்ணென்றால் நான் என்ன கறுப்பா என்றாள்.
தாமரைப்பூ முகமென்றேன்; கதிரோன் மேற்கே
சாய்ந்துவிட்டால் அப்பூவும் வாடும் என்றாள்
மாமகளே உன்பற்கள் முல்லை யென்றேன்
மணிவண்டு மொய்த்திடுமோ பல்லில் என்றாள்.
எழில் மின்னும் கண்ணாடிக் கன்னம் என்றேன்
இதில் உங்கள் முகம்பார்க்க முடியாதென்றாள்
பழம்போல உதடென்றேன்; உதட்டில் வந்து
பைங்கிளிகள் கொத்திடுமோ எனச் சிரித்தாள்.
முருக்கவிழ்ந்த ரோஜாப்பூ கன்னம் என்றேன்
முட்பொருளா நான்என்று முறைத்துப் பார்த்தாள்
திருமகளே உன் அங்கம் தங்கம் என்றேன்
தேகமென்ன நகை செய்யும் பொருளா என்றாள்.
மங்கையுன்னை எவ்வாறு புகழ்வதென்றேன்
மடந்தையரை வர்ணிக்கத் தெரிந்திடாது
நங்கையர்பால் கேட்பதற்கு வெட்க மில்லை
நானிலத்தில் நீங்களொரு கவியா என்றாள்''
இதுதான் அந்தக் கவிதை.
இந்தக் கவிதையின் ஒன்றிரண்டு கருத்தைப் பாலச்சந்தர் இயக்கிய "உன்னால் முடியும் தம்பி' என்ற படத்தில் எழுதினேன். இளையராஜா தெலுங்குப் படம் ஒன்றிற்குப் போட்ட மெட்டு அது. "லலிதப் பிரியே கமலம்' என்று தொடங்கும் அந்தப் பாடல். அந்தத் தெலுங்குப் பாடல் மெட்டிற்கு நான் எழுதிய தமிழ்ப்பாடல் இதுதான்.
ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
ஆண் : இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது தனிமையில் நெருங்கிட 
இனிமையும் பிறக்குது
என்று தொடக்கமாகும். இதில் "காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்' என்று முதல் சரணம் ஆரம்பமாகும். இரண்டாவது சரணம் இப்படி வரும்.
ஆண் : தோகை போல மின்னும்
பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே.
பெண் : பாவை எந்தன் கூந்தல்
வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய்கண்ணா
ஆண் :- அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்தப் பூமுகம்
அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
பெண் :- நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
ஆண் :- மங்கை உன்பதில் மனதினைக் கவருது
மாரன் கணைவந்து மார்பினில் பாயுது
பெண் :- காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
ஆண் :- மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
பெண் :- மோகம் நெருப்பானால்
அதைத் தீர்க்கும் ஒரு
ஜீவநதி அருகினில் இருக்குது
என்று முடியும் அந்தப் பாடல். எல்லாரும் விரும்பிக் கேட்கின்ற பாடல் இது. 
காதல் பாடல் மட்டுமல்ல. பக்திப் பாடல்களும் பல படங்களில் எழுதியிருக்கிறேன். ஆயினும் பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர் என்று போற்றப்படுகின்ற கவிஞர் பூவை செங்குட்டுவன், இவர் எங்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பூங்குடி என்பது இவர் ஊர். "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' என்ற "கந்தன் கருணை' பாடலை யாராவது மறக்க முடியுமா?
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - முருகா
திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்'
என்றால், "முருகன் என்ன வில்லன் சிரிப்பா சிரித்தான் எதிரொலிக்க?'' என்று சென்னை மாவட்ட மத்திய நூலகத்தில் நடந்த ஒரு விழாவில் வில்லிப்புத்தன் என்ற கவிஞர் விமர்சித்துப் பேசினார். உடனே கவிஞர் சுரதா எழுந்து, "மலைக்கு சிலம்பு என்று ஒரு பெயரும் உண்டு. சிலம்பு என்றால் ஒலித்தல் என்று பொருள். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருந்து அப்போது சத்தமாகப் பேசினாலும் சிரித்தாலும் எதிரொலிக்கும். அதனால் சிலம்பு என்பது மலைக்குக் காரணப் பெயர். இதெல்லாம் தெரிந்து பேசவேண்டும். தெரியாமல் எதையும் பேசக்கூடாது'' என்று கூறினார்.
"திருப்புகழைப் பாடப் பாட வாய்மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்'
என்று திருப்புகழுக்கு எதிர்ப்புகள் என்ற எதுகை ஓசைச் சொல்லப் பயன்படுத்தியவர் இவர்.
"வணங்கும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்
வேல் போல் அது இருக்கும்' 
என்ற பாடல்,
"தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தந்தைசொல் மிக்க மந்திரம்இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள்இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை'
என்ற பாடல்.
எல்லாவற்றிற்கும் மேலாக "புதியபூமி' படத்தில் எம்.ஜி.ஆருக்காக எழுதிய
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை-இது
ஊரறிந்த உண்மை'
என்ற பாடல்களெல்லாம் தமிழிருக்கும் காலம்வரை வாழக்கூடிய பாடல்கள். நான் "பொண்ணுக்குத் தங்க மனசு' என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான போது இவர் பெயருக்குக் கீழேதான் என் பெயரைப் போட்டிருப்பார்கள். எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன் பாடல் எழுதியவர்கள் பெயரைத்தான் முதலில் போட வேண்டும். அதுதான் முறை. அதனால் அப்படிப் போட்டார்கள்.
ஆனால் "மஞ்சள் நிலா' என்ற படத்தில் என் பெயருக்குக் கீழே புலமைப்பித்தன் பெயரையும் "மருமகளே வாழ்க' என்ற படத்தில் என் பெயருக்கு அடுத்து வாலி பெயரையும், "தூங்காத கண்ணின்று ஒன்று' என்ற படத்தில் என் பெயருக்குக் கீழே மருதகாசி பெயரையும் போட்டார்கள். அது எனக்கு வருத்தமாக இருந்தது. அதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கோபமாகக் கூடப் பேசினேன். அந்தப் படத்தின் இயக்குநர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அப்போதுதான் ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. ஒரு படத்தில் மருதகாசி, கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பெயருக்குக் கீழே உடுமலை நாராயணகவி பெயரைப் போட்டார்கள். அப்போது ஒரு நண்பர் உடுமலையாரிடம் "என்னய்யா, எவ்வளவு பெரிய சீனியர். நீங்கள் உங்களுக்குக் கீழே இவர்கள் பெயரைப் போடாமல் அவர்களுக்குக் கீழே உங்கள் பெயரைப் போட்டிருக்கிறார்களே?'' என்று வருத்தப்பட்டாராம்.
அதற்கு நாராயணகவி, "இவர்களையெல்லாம் தாங்கி நிற்கக் கூடிய ஆற்றல் எனக்குத்தான் இருக்கிறது என்று காட்டுவதற்காகப் போட்டிருக்கிறார்கள். அதைவிடு'' என்றாராம். அதைத்தான் அப்போது நினைத்துப் பார்த்தேன்.

(இன்னும் தவழும்)
படங்கள் உதவி: ஞானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com