அனுபவபூர்வமாகத் தெரிந்துகொள்வதே ஹிந்து ஆன்மிகம்! - ஆர்.ராஜலட்சுமி

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் "ஹிந்து ஆன்மிக கண்காட்சி', அண்மையில் குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
அனுபவபூர்வமாகத் தெரிந்துகொள்வதே ஹிந்து ஆன்மிகம்! - ஆர்.ராஜலட்சுமி

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் "ஹிந்து ஆன்மிக கண்காட்சி', அண்மையில் குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்களும், அனைத்துச் சமுதாயத்தினரும் கலந்து கொண்ட இந்தக் கண்காட்சியில் முன்னின்று செயல்பட்டவர், ஆர்.ராஜலட்சுமி. அவரைச் சந்திப்போம்:

"இது கண்காட்சியோ, பொருட்காட்சியோ அல்ல. இது ஹிந்து தர்மக் கொண்டாட்டம். இந்திய நாகரிகக் கொண்டாட்டம்!'' என்று தொடக்கத்திலேயே நம்மிடம் அறிவிக்கிறார், ஆர். ராஜலட்சுமி. சென்னையில் நடந்து முடிந்த இந்தக் கொண்டாட்டம் 9-ஆவது. ராஜஸ்தானத்தில் ஜெய்ப்பூர், உதய்ப்பூர் ஆகிய நகரங்களிலும், பெங்களூருவிலும், மும்பையிலும், காஸியாபாதிலும், புவனேசுவரிலும், குருகிராமிலும், இந்தோரிலும், கௌஹாத்தியிலும், ராய்ப்பூரிலும், ஆமதாபாதிலும், திருவனந்தபுரத்திலுமாக இவை ஆண்டுதோறும் நடந்திருக்கின்றன. அடுத்த கொண்டாட்டம் அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டனில்!
இதை நடத்தும் "ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை'யும், "நேர்மை மற்றும் கலாசாரப் பயிற்சி அறக்கட்டளை' என்ற அமைப்பும்தாம் இந்தக் கோலாகலமான கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றன. முன்னதற்கு வித்திட்டவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. 
"எது ஹிந்துத்வம் அல்லது யார் ஹிந்து'' என்று கேள்விக்கு உச்சநீதிமன்றம் 1995-இல் அளித்த விளக்கத்தைக் கூறுகிறார் ராஜலட்சுமி. "ஹிந்துத்துவம் என்ற வார்த்தை இந்திய மக்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும், அவர்களுடைய வாழ்க்கை முறையையும் அடக்கியது; இது குறுகிய மதம் சார்ந்த கருத்தல்ல என்று கூறியிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் வருமான வரித்துறை இதற்கு நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளித்திருக்கிறது.'' 
"பாரதப் பண்பாடு என்பது, எதிலும் கடவுளைக் காண்பதுதான். கடவுள் அனுக்கிரகம் என்று சொல்கிறோமே, அதில் ஒரு குறிப்பிட்ட கடவுளைச் சொல்ல முடியாது. ஏனென்றால் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தை ஏற்கக்கூடிய மனநிலை உள்ளவன் தான் ஹிந்து. இப்படி எல்லோரையும் உள்ளடக்கியதுதான் "வசுதெய்வ குடும்பகம்' எனப்படுவது. "லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து' என்று ஒவ்வோர் ஆன்மிக நிகழ்ச்சியின்போதும் வேண்டுகிறோம். அதாவது "உலக மக்கள் அனைவரும் சுகமாக இருக்கட்டும்' என்ற வேண்டுகோள்.''
உலகம் நன்றாயிருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்பது இவர் அழுத்தமாகச் சொல்லும் கருத்து. "குழந்தைக்கு அம்மாவைத் தெரிகிறது. அம்மாவை எப்படி, எந்த வகையில் வர்ணிக்க முடியும்? அப்படியும் குழந்தை அம்மாவைப் புரிந்துகொள்கிறது. ஆனால் அப்பா யாரென்று அம்மா காட்டும்போதுதான் அவரைத் தெரிகிறது. ஓரளவுக்கு மேல் புரிந்துகொள்ள முடியாததுதான் ஹிந்துத்துவம். வார்த்தைகளையும், வர்ணனைகளையும் தாண்டியது இது. அனுபவபூர்வமாகத் தெரிந்துகொள்வதுதான் ஹிந்து ஆன்மிகம்''என்கிறார் ராஜலட்சுமி.
இவர் தாய்வழிப் பாட்டனார் கொச்சி ராஜாவுக்கு குருவாக இருந்தவர். பாரம்பரியத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர். மிகவும் ஆசாரமான குடும்பப் பின்னணி உள்ளவர். எம்.காம். முடித்துவிட்டு, "இந்தியப் பொருளாதாரத்தில் பெண்ணியம்' என்ற தலைப்பில் பி.ஹெச்.டி.க்கான ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். 
"பெண்மையை மதிக்கிறேன். பெண்கள் மூலமாகத்தான் குடும்பமும், சமுதாயமும், நாடும் செழிக்கும் என்று நம்புகிறேன்!'' என்கிறார். 
"சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டபோது, அந்தத் துறையில் ஈடுபட்டேன். பழைய சிதிலமடைந்த கோயில்களைப் புதுப்பிப்பதில் முனைந்தேன். உழவாரப் பணி செய்தேன். மதமாற்றம் கடுமையாக இருந்தபோது, அதற்கு எதிராகச் செயல்பட்டேன். நடிகர் நம்பியாரின் மகன் சுகுமார் நம்பியார் எங்கள் குடும்ப சிநேகிதர். ரங்கராஜன் குமாரமங்கலம் குடும்பத்தினர் நெருங்கிய குடும்ப நண்பர்கள்.
அரசியல் துறையில் மன நிம்மதி கிடைக்கவில்லை. எனவே ஆன்மிகம் எனக்குக் கைகொடுத்தது. அப்போதுதான் சுவாமி தயானந்த சரஸ்வதியின் "தர்ம ரக்ஷண சமிதி' என்ற அமைப்பில் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. "துக்ளக்' வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தியின் தொடர்பு 1997-98 வாக்கில் கிடைத்தபோது, கலாசார ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்பட்டது. அவர் சார்ந்த சுதேசி ஜாக்ரண் மஞ்ச்சின் மாநில கூடுதல் அமைப்பாளராக நியமிக்கப்பட்டேன்!'' என்கிறார் ராஜலட்சுமி.
" "ஹிந்து ஸ்பிரிசுவல் அன்ட் சர்வீஸ் பவுண்டேஷன்' (ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை அமைப்பு), "இனிஷியேடிவ் ஃபார் மாரல் அன்ட் கல்சுரல் ட்ரெயினிங் ஃபவுண்டேஷன்' (பண்பாடு மற்றும் கலாசார முனைய அறக்கட்டளை) என்ற இந்த இரு அமைப்புகள் வாயிலாக எங்கள் பணிகளை நடத்தி வருகிறோம். பள்ளிக்கூடங்கள் விரும்பிச் சேர்ந்தால் அவர்களைப் பயிற்சியில் இணைத்துக் கொள்கிறோம். சென்னையில் மட்டும் சுமார் 700 பள்ளிகள் இதில் அடக்கம். இதற்காக, வனம்-வனவிலங்குகள்-ஜீவராசிகள், சுற்றுச்சூழல், பெற்றோர்-பெரியோர், ஆசிரியர், பெண்மை, நாட்டுப் பற்று என்று ஆறு அம்சங்களின் அடிப்படையில் எங்கள் அமைப்பு செயல்படுகிறது. போட்டிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன!'' என்று தம் நடவடிக்கைகளுக்கு விளக்கம் தந்தார். 
"குடும்பம் என்ற அடிப்படையில் வாழும் நாடு பாரத நாடு. மேற்கத்திய கலாசாரத்தை நாம் புகுத்தப் பார்க்கிறோம். அவர்களுக்கு வழிபாடு ஒரு நாள், வாரம் முழுக்க அலுவலகம், கேளிக்கை என்று எல்லாமே பகுதி பகுதியாக, கம்பார்ட்மென்டலைஸ்டாக இருக்கின்றன. நமக்கு அப்படி இல்லை. கோயிலுக்குப் போனாலும் போகாவிட்டாலும் ஹிந்துதான். பஜனை செய்தாலும் செய்யாவிட்டாலும் ஹிந்துதான். எதைப் பின்பற்றுவது என்பதில் குழப்பம் இருக்கலாம். இங்கேதான் மனமாற்றம் தேவை. மனமாற்றம் வரவில்லை என்றால் மாற்றம் வராது. மாற்றம் வந்தால் கொலை, கொள்ளை, ஊழல் எதுவுமே இருக்காது. இது தவறு, இது சரியல்ல என்ற மனநிலையில் நாம் இருக்க வேண்டும்!''என்பதை வலியுறுத்துகிறார் ராஜலட்சுமி. 
இந்த அமைப்பில் இருக்கும் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், கலாசாரத் தலைவர்கள் எல்லோரும் மேற்கண்ட நல்ல நோக்கில் செயல்பட வாய்ப்புப் பெற்றிருப்பதுதான் இவர்களின் உற்சாகமான செயல்பாட்டுக்குக் காரணமோ?
- சித்தார்த்
படங்கள்: ஏ.எஸ். கணேஷ், கே. அண்ணாமலை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com