பூடான் நிமலங் திருவிழா - சாந்தகுமாரி சிவகடாட்சம் 

பூடானுக்கு வான்வழியாக அழைத்துச்செல்லும் "டிரக் ஏர்'க்கு (Druck Air) சொந்தமான விமானத்தில் அமர்ந்து கொண்டிருந்தே
பூடான் நிமலங் திருவிழா - சாந்தகுமாரி சிவகடாட்சம் 

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 6
பூடானுக்கு வான்வழியாக அழைத்துச்செல்லும் "டிரக் ஏர்'க்கு (Druck Air) சொந்தமான விமானத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். ஜன்னல் வழியாகத் தெரிந்த, பனிக்குல்லாக்களை அணிந்தாற்போல வரிசைக்கட்டி நின்ற இமயமலைத் தொடர்கள், என் சிந்தையைக் கவர்ந்தன. என் மனம் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தது. கண்டுகொண்டிருந்த காட்சிகளுக்காக மட்டும் அல்லாமல், பூடான் நாட்டில் நடைபெற இருக்கிற நிமலங் திருவிழாவில் கலந்துகொள்ளப் போவதும், அதனால் பெறப்போகும் அனுபவங்களும்தான் என் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.
பூடான் இமயமலைத் தொடரின் கிழக்கு மூலையில் உள்ளது. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் அமைந்திருக்கிறது. "இடியாய் முழங்கும் டிராகனின் நிலம்' என்று அழைக்கப்படுகின்ற பூடான், உல்லாசப் பயணிகளுக்காக தன் கதவுகளைத் திறந்துவிட்டது 1970}இல்தான் என்பது, தன்னுடைய தனித்தன்மையையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பதற்காகத்தான் என்றால் மிகையாகாது.
உலகிலேயே, மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பூடான் எட்டாவது இடத்தையும், ஆசியாவிலேயே மகிழ்ச்சியான நாடு என்பதில் முதலிடத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
பூடான் தலைநகரமான (Thimpu) திம்புவில் இரண்டு நாட்கள் தங்கி, சுற்றிப் பார்த்தபொழுது மக்களின் மகிழ்ச்சிக்கான காரணம் புரிந்துபோனது. பூடான் நாட்டில் ஐம்பது சதவீதத்துக்கு மேல் தேசியப் பூங்காக்கள் நிறைந்திருப்பதினால், எங்கு நோக்கினும் இயற்கைக் காட்சிகள், சுத்தமான காற்று, காசுக்காக இயங்காமல் மனசாட்சிக்காக செயல்படும் மக்கள்! இங்கே வானுயர்ந்த மால்கள் இல்லை, 1999}இல் தான் தொலைக்காட்சி, இண்டர்நெட் செயல்படத் தொடங்கியது. வேண்டிய அளவுக்கு மட்டுமே இவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. டிராபிக் லைட்டுகளுக்குக்கூட இங்கே வேலையில்லை, வாகன ஓட்டிகளுக்கு தங்களுடைய நிலைப்பாடு தெரிவதினால் அத்துமீறல்களுக்கு இடமில்லை, காதைப் பிளக்கும் ஹாரன்களுக்கு வேலையும் இல்லை, உல்லாசப் பயணிகளை ஏமாற்றும் அவசியம் இல்லை. வேண்டிய அளவுக்கு சம்பாதித்து, பெளத்த மதம் காட்டும் நல்வழியில் நடந்து, மகிழ்ச்சியுடன் வாழும் பூடான் மக்கள் கொண்டாடும் நிமலங் திருவிழாவில் கலந்துகொள்ள அது நடைபெறும் கிராமமான (Bumthang) பூம்தாங்கை நோக்கி காரில் பயணித்தேன்.
வழியில் கடல் மட்டத்திலிருந்து 10,200 அடி உயரத்தில் இருக்கும் 'டச்சுலா பாஸை'க் (Duchula pass) கடந்தோம். இங்கே ஒரு சிறிய குன்றின் மீது கட்டப்பட்டிருந்த 108 ஸ்தூபிகள் கண்களுக்கு விருந்தளித்தன. ஏழு மணி நேரம் காரில் பயணப்பட்டு பூம்தாங்கை அடைந்தோம்.
நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் கனிமங்கள் அடங்கிய கற்களை, நெருப்பில் சுட்டு பிறகு அதைத் தண்ணீரில் போட்டு, அதனால் சூடான தண்ணீரில் மூழ்கி குளிக்கும் வசதி இருக்கிறது என்று அறிந்து அப்படி குளிக்க முடிவு செய்தோம். இந்த அருமையான "ஹாட் ஸ்டோன் பாத்' எனக்கும், என் கணவருக்கும் பயணக் களைப்பை நீக்கிப் புத்துணர்வைத் தந்தது.
நாங்கள் பூடானில் கழித்த பத்து நாட்களுக்கும், எங்களை நிழல் போலத் தொடர்ந்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, தக்க நேரத்தில் உணவு அளித்து கண்ணின் இமையாக செயல்பட்ட வழிகாட்டி (Tenzin) டென்ஜீனையும், ஓட்டுநர் (Lhamo) லாமோவையும் வாழ்நாளில் மறக்கமுடியாது.
நிமலங் திருவிழாவுக்கான காலைப் பொழுது ரம்மியமாக விடிந்தது.
"என்ன, (Tshechu) செசுவுக்கு கிளம்பலாமா?'' என்றார் டென்ஜின்.
"என்னது செசுவா!... அப்படியென்றால்...'' என்று புருவங்களை உயர்த்தினேன்.
"செசுவென்றால் பூடான் மக்களின் வருடாந்திர மதத்திருவிழா என்று பொருள். இது பூடானின் ஒவ்வொரு மாவட்டம்தோறும் ஒவ்வொரு மாதத்தின் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. இன்று பூம்தாங்கில் ஜூன் மாதத்தில் கொண்டாடப்படும் நிமலங் திருவிழாவைப் பார்க்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். 
இன்று நாம் இப்பகுதியில் உள்ள மடாலயத்திற்கு செல்லப்போகிறோம். அங்கேதான் எங்களுடைய குரு (Rinpache) ரின்பாச்சுக்கு மரியாதை செய்யும் விதமாகக் கொண்டாடப்படும் நிமலங் திருவிழா நடக்கிறது''.
"டென்ஜின், யார் இந்த ரின்பாச்?'' என்று ஆவலோடு கேட்டேன்.
ஒரு விநாடி டென்ஜின் கண்களை மூடிக்கொண்டார். அவர் முகம் முழுவதும் பரவசம் பரவியது. "வாருங்கள் காரில். மடாலயத்திற்கு செல்வதற்கு ஒரு மணி நேரமாகும். அப்பொழுது ரின்பாச்சைப் பற்றிய முழு விபரத்தையும் சொல்லுகிறேன். 
ரின்பாச்சை நாங்கள் குரு பத்ம சம்பவா என்றும் அழைப்போம். எங்களுக்கு இவர் இரண்டாவது புத்தர். இவரைப் போற்றும் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருக்கும் நீங்கள் இருவரும் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறீர்கள். நிமலங் திருவிழாவில் பங்கு பெறுவோர்கள் தங்கள் பாவங்களைத் தொலைத்து, நற்கதிக்கு செல்ல வழிவகுத்துக் கொள்கின்றனர்''.
கார் வேகம் பிடித்து ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் காட்சி அளித்த இயற்கை அன்னையின் வெளிப்பாடுகள் மனதைக் கவ்வினாலும் மனம் ரின்பாச் குருவைப் பற்றி அறிந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டியது.
என் எண்ணத்தைப் படம் பிடித்தவர் போல டென்ஜின் பேசத் தொடங்கினார். "நிமலங் திருவிழாவில் அரங்கேறும் நிகழ்ச்சிகளையும், நடனங்களையும், சடங்குகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் எங்கள் குரு ரின்பாச்சைப் பற்றி அறிந்திருந்தால் மட்டுமே முடியும்.
புத்தரின் அந்திமக் காலம், இன்னும் சிறிது நேரத்தில் உயிர் பிரியப்போகிறது. அவரைச் சுற்றி நின்ற சீடர்கள் வருத்தம் மிகுதியால் அழுது கொண்டிருந்தனர். அப்பொழுது புத்தர் சொன்னார், "அழாதீர்கள், இன்று நான் இறந்தபின் சரியாக பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து "தனகோசா" என்கின்ற ஏரியில் மிதக்கும் தாமரை ஒன்றில் நான் மீண்டும் ஜனிப்பேன்' என்று சொல்லி மறைந்தார்.
அதேபோல தாமரையில், ஆண், பெண் அணுக்களின் சேர்க்கை இல்லாமல் பிறந்தவர்தான் பத்ம ஜெகனியான குரு பத்ம சம்பவா. 
தன்னுடைய ஒரே மகனை இழந்த இந்தரபோடி என்கின்ற அரசர் இந்த குழந்தைக்கு ரின்பாச் என்று பெயர் சூட்டி வளர்த்தார். 
திருமணம் முடிந்த பின்பு, குடும்ப வாழ்வைத் துறந்து ரின்பாச் துறவறத்தைத் தழுவினார். பல இறைசக்தி நிறைந்த குருமார்களுக்கு சீடராக இருந்து பணி பல புரிந்து, தியானம் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெற்று தன்னுடைய உருவத்தைப் பல நிலைகளில் மாற்றி அமைத்துக் கொள்ளும் சக்தியைப் பெற்றார்.
எட்டு விதமான வெளிப்பாடுகளை எடுத்து பெளத்த மதத்தையும், அதனுடைய கோட்பாடுகளையும் அவர் போதிக்கத் தொடங்கியது, எங்கு தெரியுமா?'' என்று டென்ஜின் நிறுத்த, நான் அவரின் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக காத்திருந்த அந்த நொடிகள்...
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com