பாடல்கள் எழுதிய இயக்குநர் - கவிஞர் முத்துங்கம் 

திருத்தணியைச் சேர்ந்த கேசவராம் என்ற டாக்டரும் இன்னொருவரும் சேர்ந்து "மூக்கணாங்கயிறு' என்றொரு படம் தயாரித்தார்கள்.
 பாடல்கள் எழுதிய இயக்குநர் - கவிஞர் முத்துங்கம் 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -39
 திருத்தணியைச் சேர்ந்த கேசவராம் என்ற டாக்டரும் இன்னொருவரும் சேர்ந்து "மூக்கணாங்கயிறு' என்றொரு படம் தயாரித்தார்கள். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் தான் இசைமைப்பாளர்.
 "இந்தப் பாட்டை வேறொரு கவிஞரை வைத்து எழுத வேண்டும் என்று டைரக்டர் சொன்னார். முத்துலிங்கமும் காமெடியாக எழுதுவார்; அவரை வைத்து எழுதலாம் என்று நான்தான் சொன்னேன்'' என்றார் எம்.எஸ்.வி.
 எடிட்டர் பாஸ்கர் டைரக்ட் செய்த பாக்கியராஜ் நடித்த "பாமா ருக்மணி' என்ற படத்தில் எழுதினீர்களே ஒரு பாடல்
 "கதவைத்திறடி பாமா - என்
 காலு வலிக்க லாமா
 பார்த்தவன் சிரிப்பாண்டி பத்தினிப் பெண்டாட்டி
 தாப்பாழைப் போடாதே - அடி
 ஆயிரம் ஆனாலும் வீட்டுக்குள்ளே வச்சுக்கோ
 வெளியில விரட்டாதே'' என்று.
 அது மாதிரி காமெடியான பாடல் இது.
 நடிகை மனோரமா பாடுவது போல் பாடல் வருகிறது. நாற்பது வயதாகியும் மனோரமாவுக்கு கல்யாணம் நடக்கவில்லை. யாரும் அவரைக் காதலிக்கவும் இல்லை. மனோரமா அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன்னை விட வயதில் இளையவரான நடிகர் கார்த்திக் மீது அவருக்குக் காதல் ஏற்படுகிறது. அது ஒரு தலைக்காதல். அப்போது கார்த்திக்கைப் பார்த்து ரொமான்டிக்காக மனோரமா பாடவேண்டும். சிந்தித்து எழுத வேண்டுமென்று நினைக்காமல் யோசிக்காமல் எழுதுங்கள்'' என்றார்.
 "யோசிக்காமல் எப்படி எழுதுவது?'' என்றேன். "பாசவலை' படத்தில் "மச்சான் உன்னைப் பார்த்து மயங்கிப் போனேன் நேத்து'' என்று ஒரு பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். சரணம் எழுத ரொம்ப நேரம் யோசித்தார். யோசிக்காமல் "சும்மா எதையாவது எழுது. நீ எழுதுவது எல்லாம் பாட்டுத்தான்' என்றேன்.
 "முத்தாத கத்திரிச்செடி - கொத்தோட பூத்த கொடி - முத்துப்போல் சிரிச்சபடி - சுத்திச் சுழலும் சித்திரக்கிளி' என்று அவர் பாட்டுக்கு எழுதிவிட்டார். லொள், லொள், லொள்" என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல்.
 அந்தப் பாடலைப் பாடிய ராஜாமணி என்ற பாடகிக்கு "லொள் லொள் ராஜாமணி' என்று அடைமொழியே வந்து விட்டது. யோசிக்காமல் எழுதிய அந்தப் பாடல் ஹிட்டானதைப் போல் இந்தப் பாடலும் ஹிட்டாக வேண்டும்.
 நானே உங்களுக்குப் பல்லவியில் முதலடியைச் சொல்கிறேன் என்று,
 "நேற்று இன்று வந்ததல்ல
 இந்த ரொமான்சு''
 என்று ஆர்மோனியம் வாசித்துக் கொண்டே பாடிக் காட்டினார்.
 உடனே நான்
 "என்னைக் - கட்டிப்பிடிச்சுக் காதல் பண்ண
 தந்தேனே சான்சு''
 "இது எப்படி இருக்கிறது?'' என்றேன். "நன்றாக இருக்கிறது. அப்புறம்...'' என்றார் எம்.எஸ்.வி.
 "எப்ப மேரேஜு - எனக்கு
 ஏறுது ஏஜு''
 என்றேன்.
 "சபாஷ். இதுதான் பல்லவி'' என்று மீண்டும் பல்லவியை நான் எழுதிய வார்த்தைகளோடு பாடினார். பாடிவிட்டு சரணத்திற்கு டியூன் போடும்போது,
 "பப்பாளிப் பழமே நீ பதுக்கி வச்ச சக்கரை'
 என்று அவரே வார்த்தையோடு பாடி, "இதற்கு அடுத்த வரிகளை யோசிக்காமல் "டக்'கென்று சொல்லுங்கள். பார்க்கலாம்'' என்றார். சொன்னேன். "நன்றாக இருக்கிறது. இது மாதிரி இன்னும் இரண்டு சரணம் எழுதுங்கள்'' என்றார். மூன்று சரணத்தையும் எழுதி அவரிடம் காட்டினேன். என் முகவாயைப் பிடித்து உருவி "சபாஷ்'' என்று மீண்டும் பாராட்டினார்.
 தயாரிப்பாளர், டைரக்டருக்கெல்லாம் அந்தப் பாட்டு ரொம்பப் பிடித்துவிட்டது. எல்.ஆர். ஈஸ்வரி அந்தப் பாடலைப் பாடியிருப்பார். அந்தப் பாடல் இதுதான்.
 "நேற்று இன்று வந்ததல்ல
 இந்த ரொமான்சு - என்னைக்
 கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ண
 தந்தேனே சான்சு
 எப்ப மேரேஜு - எனக்கு
 ஏறுது ஏஜு
 சரணம்
 பப்பாளிப் பழமே நீ பதுக்கிவச்ச சக்கரை
 தக்காளிப் பழமே நான் தாவிவந்தேன் இக்கரை
 கொய்யாத பழம் நான் என்னைக் குருவிகூடக் கொத்தலே
 கல்யாண சகுனம் பாத்தேன் கழுதை கூடக் கத்தலே
 ஆபீசு பைலைப் பாத்து அலுத்து போச்சு மாப்பிளே
 அன்றாடம் நீயும் நானும் ஆடவேணும் பீச்சுலே
 எல்லாமே கொதிக்குதய்யா ஏங்கிவிட்டே மூச்சுலே
 தன்னாலே மயங்குறேன் உன் சரசமான பேச்சுலே
 ஏங்காணும் மாப்பிளை உனக் கென்னைக் கண்டா வெக்கமா
 இப்போதே டெüரிப் பணம் லட்சம்தாரேன் ரொக்கமா
 அஞ்சோட அஞ்சு வச்சா ஆகமொத்தம் பத்துங்க
 ஆலோலம் பாட்டுப் பாடி டப்பாங்குத்துக் குத்துங்க''
 இந்தப் பாடல் அந்தப் படத்தில் பிரபலமான பாடலாக அமைந்தது. படமும் ஐம்பது நாள் ஓடியது.
 இந்தப் படத்தின் இயக்குநர் "கல்லூர் சுப்பையா' என்பவர்.
 நான் பாடல் எழுதும்போது எழுத்தாளர் மெர்வின், "வெற்றிமேல் வெற்றி', "மாநகரக் காவல்' போன்ற பல படங்களை இயக்கிய தியாகராசன் ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் இருவரும் அந்தப் படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். இவர்களில் தியாகராசன் இயக்கிய "வெற்றி மேல் வெற்றி' என்ற படத்தில் விஜய் ஆனந்த் இசையில் மூன்று பாடல்கள் எழுதி இருக்கிறேன்.
 இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் டைரக்டர் செய்த படங்களில் "நன்றிக் கரங்கள்' என்ற படமும் ஒன்று. "வெற்றி மேல் வெற்றி' என்ற படத்தைத் தயாரித்தவர் சிவஸ்ரீ பிக்சர்ஸ் அதிபர் மணி ஐயர். அவர் தான் "நன்றிக் கரங்கள்' படத்தின் தயாரிப்பாளர்.
 அவரது முழுப் பெயர் சுப்பிரமணிய ஐயர். எனக்கு மிகவும் வேண்டியவர். எம்.ஜி.ஆர். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். "எம்.ஜி.ஆருக்கு ஆத்மார்த்தமாக வேண்டிய கவிஞர் முத்துலிங்கம்'' என்று பல விழாக்களில் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
 "நன்றிக் கரங்கள்' படத்திற்குப் பாட்டெழுதும்போது, "ஆங்கிலம் கலந்து நகைச்சுவையோடு எழுத வேண்டும் முத்துலிங்கம். எழுதுவீர்களா?'' என்றார் டைரக்டர். ""நீங்கள் காட்சியைக் சொல்லுங்கள் சார்'' என்றேன்.
 ""மூன்று பெண்கள் பாடுகிறார்கள். முதல் பெண் ரொம்ப சாது. பயந்த சுபாவம் உள்ளவள். எல்லோர் மீதும் அன்பு செலுத்துபவள். அடுத்த இரண்டு பெண்களும் மேல்நாட்டு நாகரிகத்தைக் கடைப்பிடிப்பவர்கள். துடுக்குத்தனம்
 உடையவர்கள். மூவரும் அக்காள் தங்கைகள். மேல் நாட்டு நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் பெண்கள் பாடும்போது தான் ஆங்கிலம் கலந்து எழுத வேண்டும். அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் அது இருக்க வேண்டும்'' என்றார்.
 படத்தின் இசையமைப்பாளர்கள் சங்கர்கணேஷ். முதல் பெண் பாடுவதற்கான பல்லவியை தத்தக் காரத்தில் பாடிக் காட்டினார்கள்.
 "மியாவ் மியாவ் பூனைக்குட்டி
 வீட்டைச் சுத்தும் பூனைக் குட்டி
 என்ற பாட்டைக் கேட்டிருக்கிறாயா?'' என்றார் டைரக்டர். ""கேட்டிருக்கிறேன்'' என்றேன். "அது பூனைக் குட்டிக்காக எழுதியது. நீ எழுதப் போவது ஒரு நாய்க் குட்டிக்காக'' என்றார். ""நாய்க்குட்டியா பாடப் போகிறது'' என்றேன். "இல்லை. நாய்க்குட்டியைப் பார்த்து அந்தப் பெண் பாடுகிறாள். உன்னுடைய அப்பா அம்மா யாரென்று தெரியுமா? உன் உறவு முறையெல்லாம் தெரியுமா என்று நாய்க்குட்டியை அன்போடு கேட்பது போல இருக்கவேண்டும்'' என்றார்.
 "உங்க - அம்மா யாரு தெரியுமா
 அப்பா யாரு புரியுமா
 அத்தை பாட்டி அக்கா தங்கச்சி
 உறவு முறையும் புரியுமா''
 - என்று பல்லவியை எழுதியதோடு
 டியூனுக்கேற்ப ஒரு சரணமும் எழுதினேன். "நன்றாக இருக்கிறது. அடுத்த இரண்டு பெண்கள் பாடுவது போல் ஆங்கில வார்த்தையுடன் ஆரம்பிக்க வேண்டும். நீ எழுது. அதற்கு டியூன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.
 ஒருத்தி :- கண்டிஷன் - ஒரு
 கண்டிஷன்
 என்னை மணக்கும் இளைஞனுக்கு
 என் கண்டிஷன்.
 நான் - பாய் பிரண்டோடு ஆடுவேன் - தினம்
 பைவ் ஸ்டார் ஓட்டலை நாடுவேன் - அதைத்
 தட்டிக்கேட்டா ஹஸ்பெண்டை - நான்
 சஸ்பெண்ட் செய்து ஓட்டுவேன்
 சத்தம் போட்டா அப்போதே
 டைவர்ஸ் பண்ணிக் காட்டுவேன்
 மற்றொருத்தி :- பியூட்டி உலகத்தின் குயின் - நான்
 பிறரை மயக்கும் ஒயின் - எனக்கு
 வெஸ்டன் ஸ்டைல்தான் டேஸ்டு - நான்
 எதிலும் வெரி வெரி பாஸ்டு.
 நான் - டிரைலர் பார்த்துக் கணவனைத்
 தேர்ந்தெடுக்கும் லேடி - என்
 ஹஸ்பெண்டுக்குத் தேவை ஹீரோ
 அமிதாப் பச்சன் பாடி
 புரூஸ்லி போலே கராத்தே வீரன்
 கட்டணும் எனக்குத் தாலி - நான்
 போடும் கட்டளை மீறி நடந்தால்
 புருஷன் பட்டம் காலி
 இப்படி எழுதியதை நான் சொன்னதும் என்னைக் கை குலுக்கிப் பாராட்டினார். "வாலிதான் இப்படியெல்லாம் எழுதுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீயும் அவரைப்போல் எழுதுகிறாய். வாலி கூட "கற்பகம்' படத்தில் எழுதும்போது "இந்தப் பூங்குயில் கூட்டம் பண்பாடும்' என்று எழுதிவிட்டு அடுத்த வரி எழுதுவதற்கு ரொம்ப நேரம் யோசித்தார். நான்தான் "இந்த மான்குட்டி கேட்டுக் கண்மூடும்' என்று வரியைச் சொல்லி பாட்டை முடிக்கச் சொன்னேன்.
 ஆனால் நான் எதுவும் வார்த்தைகள் சொல்லாமலேயே நீயே எழுதிவிட்டாய். வெரிகுட்'' என்றார். இந்தப் பாடலை வாணி ஜெயராமும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடினார்கள்.
 கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்குநர், வசனகர்த்தா மட்டுமல்லர். அவர் கதை வசனம் எழுதிய "தெய்வப்பிறவி' என்ற படத்தில் "கட்டடத்துக்கு மனைப் பொருத்தம் அவசியம் - நம் காதலுக்கு மனப்பொருத்தம் அவசியம்' என்ற பாடலையும் சிவாஜி-பத்மினி நடித்த "எதிர்பாராதது' என்ற படத்தில் "சிற்பி செதுக்காத பொற்சிலையே' என்ற பாடலையும், "உத்தம புத்திரன்' படத்தில் "உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே' என்ற பாடலையும் இவை போன்ற பல பாடல்களையும் எழுதியவர் இவர்.
 (இன்னும் தவழும்)
 படங்கள் உதவி: ஞானம்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com