வழிபாடுகள் முடங்கியிருக்கும் கேரள யூத சினகோக்!

கேரளத்திற்கு சுற்றுலா வரும் எந்தப் பயணியும் மறக்காமல் வருவது கொச்சியின் மட்டாஞ்சேரி பகுதியில் உள்ள யூதர்களின் "சினகோக்' எனப்படும் பழைமையான வழிபாட்டுத் தலத்திற்குத்தான்.
வழிபாடுகள் முடங்கியிருக்கும் கேரள யூத சினகோக்!

கேரளத்திற்கு சுற்றுலா வரும் எந்தப் பயணியும் மறக்காமல் வருவது கொச்சியின் மட்டாஞ்சேரி பகுதியில் உள்ள யூதர்களின் "சினகோக்' எனப்படும் பழைமையான வழிபாட்டுத் தலத்திற்குத்தான். அந்த வழிபாட்டுத் தலத்தில் நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சமயச் சடங்கு நடந்தது தலைப்பு செய்தியாகியிருக்கிறது. மட்டாஞ்சேரியில் ஆயிரக்கணக்கான யூதர்கள் வாழ்ந்த காலம் போய் இப்போது வெறும் ஐந்து பேர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக யூதர்கள் இந்தியாவிற்கு வாழ்வதற்கும் வணிகம் செய்வதற்கும் வந்தார்கள். வாசனைப் பொருட்களுடன், மயில்களைக் கூட இங்கிருந்து வாங்கிச் சென்றுள்ளனர். இந்தியாவை அவர்கள் "ஒது' என்று குறிப்பிட்டார்கள். கி. பி. 70-இல் ரோமானியர்கள் யூதர்களின் வழிபாட்டுத் தலத்தை அழித்ததும், இன்றைய ஜெருசலேம் பகுதியில் வாழ்ந்து வந்த யூதர்கள் உலகின் எல்லா திசையிலும் உள்ள நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.
இந்தியாவில், யூதர்கள் முதலில் கால் பதித்தது கேரளத்தின் "கிராங்கனூர்' என்ற நகரில். யூதர்கள் கிராங்கனூரை "ஷிங்கிலி' என்று அழைத்தார்கள். இது தற்போது கொடுங்கல்லூர் என்று அழைக்கப்படுகிறது. யூதர்கள் மலபார், கொச்சி பகுதிகளுக்கு குடிபெயர்ந்தார்கள்.
நாளடைவில் கிராங்கனூர் துறைமுகத்தைவிட கொச்சி துறைமுகம் பிரபலமானது. யூதர்கள் ஆயிரக்கணக்கில் கொச்சி நகரின் மட்டாஞ்சேரி பகுதியில் வாசிக்க ஆரம்பித்தனர். தற்போது அது "ஜியூஸ் டவுன்' என்று அழைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான யூதர்கள் வழிபாடு நடத்த, சினகோக் கட்டுவதற்காக அன்றைய கொச்சி அரசனிடம் அனுமதி கேட்டனர். வழிபாட்டுத் தலம் கட்டிக்க கொள்ளவும், கல்லறைக்காகவும் தேவையான நிலம் அன்பளிப்பாகக் கிடைத்தது. அப்படி கி.பி. 1568-இல் கட்டப்பட்டதுதான் இந்த யூத வழிபாட்டு இல்லம். வெளிநாட்டிலிருந்து இந்த யூதர்கள் வந்தவர்கள் என்பதால் "பரதேசி' சினகோக் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள விளக்குகள் பெல்ஜியத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை. தரையில் பதிக்கப்பட்டிருக்கும் ஓடுகள் சீனாவில் கைகளால் தயாரிக்கப் பட்டதாகும். ஒவ்வொரு ஓட்டிலும் கையால் வரையப்பட்டிருக்கும் ஓவியம் அச்சிட்டது போல் இருக்கும். காமன்வெல்த் நாடுகளிலேயே இருக்கும் சினகோகுகளில் பழமையானது "பரதேசி சினகோக்' தான்.
யூதர்களின் வேதப் புத்தகம் "டோரா'. இறைத்தூதர் மோசஸின் ஐந்து புத்தகங்கள் அடங்கியதுதான் "டோரா'. யூதர்கள் சந்திரனை அடிப்படையாக வைத்து மாதம், ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். காலை, மதியம், மாலை வேளைகளில் தலா ஒருமுறை தொழுகிறார்கள். இஸ்லாமிய தொழுகையின் சாயல் யூதர்களின் தொழுகை முறையிலும் உள்ளது.
"இன்றைக்கு கேரளத்தில் வெறும் இருபத்தாறு யூதர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்' என்ற அதிர்ச்சித் தகவலை சொல்கிறார் இலியாஸ் ஜோசஃபி. இவர் எர்ணாகுளம் சினகோக்கைச் சேர்ந்தவர். அவர் கூறியதாவது:
"இஸ்ரேல் நாடு உதயமானதும் ஆயிரக்கணக்கான யூதர்கள் கேரளத்திலிருந்து சென்றுவிட்டனர். இதனால் கேரளத்தில் யூதர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு குறைந்தது. பல இடங்களில் சினகோக்குகள் பூட்டப்பட்டுவிட்டன. சில இடிந்து போயின. சினகோக்கில் வழிபாடுகள் நடத்த பதிமூன்று வயதுக்கும் மேற்பட்ட பத்து ஆண்கள் சேர வேண்டும். தற்போது இருக்கும் இருபத்தாறு பேரும் பல இடங்களில் இருப்பதால் வழிபாடு நேரத்தில் ஒன்று சேர முடியாமல், வழிபாடுகள் முடங்கியுள்ளன. வெளிநாட்டு யூதர்கள் எங்கள் சினகோக்களை தரிசிக்க வரும்போது அவர்களில் ஒன்பது ஆண்கள் இருந்தால் பத்தாவதாக நான் அவர்களுடன் சேர்ந்து வழிபாடுகள் நடத்துவோம். இப்படியான பிரார்த்தனைகள் அத்தி பூத்தது போல் மிக அரிதாக நடக்கும். கேரளத்தில் யூத திருமணம் நடந்து முப்பது நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. நானே மும்பையிலிருந்துதான் பெண்ணெடுத்து திருமணம் செய்து கொண்டேன்'' என்கிறார் இலியாஸ்.
ஜியூஸ் டவுனில் சாரா கோஹென் என்ற மூதாட்டியின் கை பின்னல் வேலைகள் (எம்பிராய்டரி) இன்னமும் பிரசித்தம். இஸ்ரேலிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சாராவைப் பார்த்து சந்தித்துப் பேசி படம் எடுத்துக் கொள்ளாமல் போக மாட்டார்கள். தொண்ணூற்றைந்து வயதாகும் சாரா தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்கிறார். கண் பார்வை சற்று குறைந்திருப்பதால் பின்னல் வேலைகளைச் செய்வதில்லை. பழைய நினைவுகள் சில மறந்து போனாலும் நினைவில் நிற்பவைகளை சாரா பகிர்கிறார்:
""முன்பெல்லாம் சனிக்கிழமை இரவு எப்போது வரும் என்று காத்திருப்போம். உறவினர்கள் வருவார்கள். நண்பர்கள் ஒன்று கூடுவோம். விருந்தும், நடனமும் உண்டு. இப்போது எல்லாம் கனவாகிப் போனது. இந்த வீட்டிற்கே வயது நூற்றி அறுபது. கணவர் உட்பட எனது மூதாதையர்கள் இங்கேயே வாழ்ந்தார்கள். இப்போது மண்ணுக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பந்தங்களை மறந்து இஸ்ரேல் போக மனது வரவில்லை. எனது பந்தங்களுடன் இங்கேயே ஒன்றிவிட விரும்பி இங்கேயே தங்கிவிட்டேன்.
எனது உறவினர்கள் அனைவரும் இஸ்ரேலுக்குச் சென்று விட்டார்கள். ஆண்டிற்கு ஒருமுறை அவர்களின் வாரிசுகளுக்கு பூர்வீக ஊரினைக் காட்ட வந்து போகிறார்கள். எனது சகோதரியின் பேத்தியின் மகனுக்கு பதிமூன்று வயதாவதால் எங்கள் முறைப்படி ஒரு சடங்கினை சினகோக்கில் வைத்து செய்ய வேண்டும். இப்போது அவர்கள் முழுக்க முழுக்க இஸ்ரேலியர்கள். எனது சகோதரி இங்கேயே பிறந்து வளர்ந்ததால், அவள் ஓடி விளையாடிய, பிரார்த்தித்த மட்டாஞ்சேரி சினகோக்கில் சென்ற வாரம் அந்த சடங்கு நடந்தது. இது மாதிரியான சடங்கு இந்த சினகோக்கில் நடந்து நாற்பத்தேழு ஆண்டுகள் ஆகின்றன. நல்லவேளை, தற்சமயம் இஸ்ரேலிலிருந்து ஒரு புரோகிதர் வந்திருக்கிறார். அவரை "ரப்பாயி' என்போம். இந்தப் புரோகிதர் இல்லையென்றால் இந்த சடங்கினை நடத்த முடியாமல் போயிருக்கும்.
என்னை தாய் போல் பார்த்துக் கொள்பவர் தாஹா இப்ராஹிம். அவர் ஓர் இஸ்லாமியர். யூதர்களும் இஸ்லாமியர்களுக்கும் விரோதம் இருக்கலாம். அது அரேபிய நாடுகளில். இங்கே ஆண்டாண்டு காலமாக சகோதரர்களாகப் பழகி வருகிறோம். இங்கு இந்துக்கள், ஜைனர்கள், குஜராத்திகள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் என்று இருந்தாலும், இதுவரை "யூதன்' என்று எங்களை யாரும் தள்ளி வைத்தது கிடையாது. புறம் பேசியது கிடையாது. தாஹா என்னுடன் பழகுவதை வெளிநாட்டவர்கள் அதிசயமாகப் பார்ப்பார்கள்.'
"மாமிச உணவினை எங்கள் "கோஷர்' முறைப்படி அறுத்தால்தான் நாங்கள் சாப்பிடுவோம். கோஷர் முறையைச் செய்ய இங்கே யூதர்கள் யாரும் இல்லாததால், இறைச்சி வகைகளை மும்பையிலிருந்து தருவிக்கிறோம். மட்டாஞ்சேரி பரதேசி சினகோக்குடன் இணைந்திருக்கும் யூதர்கள் நான் உட்பட ஐந்து பேர். அவர்களில் நான்கு பேர் பெண்கள். ஒருவர் ஆண். அவருக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. நான்தான் வயதானவள். இன்னும் சில ஆண்டுகளில் இப்போது வாழும் ஐந்து பேரும் இல்லாது போவோம். அப்போது நாங்கள் பார்த்து பிரார்த்தித்து வளர்ந்த இந்த சினகோக் வெறும் ஒரு சுற்றுலா தலமாகிவிடும். அதை நினைத்தால்தான் மனது வலிக்கிறது'' என்கிறார் சாரா.
- பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com