அந்த மனநிலையை நான் தொலைக்க மாட்டேன்

அந்த நம்பிக்கை மட்டும்தான் என் வாழ்க்கை. கும்பகோணத்துக்கு பக்கத்தில் ஊர். "காமதேனு மசாலா' என்ற பெயரில் மசாலா பாக்கெட் வியாபாரம்.
அந்த மனநிலையை நான் தொலைக்க மாட்டேன்

வில்லன், ஹீரோ, குணச்சித்திரம்... என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அநாயாசமாகக் கையாளுகிறார் ரவி. 

"மதுபானக்கடை' படத்தில் அழுந்த பதிந்ததால், "மதுபானக்கடை' ரவி என்றால் இன்னும் அடையாளம் மிளிர்கிறது. "சண்டியர்', "கபாலி', "ஹரிதாஸ்', "இசை', "சண்டிவீரன்' என படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டுகிறார்.

இயக்குநர்கள் உங்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து நடிக்க வைக்கிறார்களே...?

அந்த நம்பிக்கை மட்டும்தான் என் வாழ்க்கை. கும்பகோணத்துக்கு பக்கத்தில் ஊர். "காமதேனு மசாலா' என்ற பெயரில் மசாலா பாக்கெட் வியாபாரம். பணம், பேர் என கும்பகோணம் வட்டாரப் பகுதிகளில் பிரபலம். தொழிலில் பெரும் நஷ்டம். ஈடுகட்ட முடியாத நேரத்தில் அந்த தொழிலை விட்டு விட்டு சென்னைக்கு வந்து விட்டேன். எதிலாவது சாதிக்க வேண்டும் என்று உள்ளுக்குள் எப்போதுமே ஒரு உத்வேகம் இருக்கும். அதை மட்டுமே முதலீடாக வைத்து பயணமானேன். ஏதேச்சையாக சினிமா, சீரியல், நாடகம் என வாய்ப்பு வந்தது. கோமல் சுவாமிநாதன் நாடகங்களில் நடித்தேன். "சங்கீத பைத்தியங்கள்', "இருட்டில் தேடாதீர்கள்' என நான் நடித்த நாடகங்கள் பிரபலம். இன்னமும் கூட "தண்ணீர் தண்ணீர்' நாடகத்தில் நடித்து வருகிறேன். தியேட்டர் லேப், ஸ்டேஜ் என நாடக கம்பெனிகள் என்னை பெரிதாக வளர்த்தெடுத்தன. 

இந்த அனுபவத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடத் தொடங்கினேன். ராதிகா, "வெள்ளைத்தாமரை' சீரியல் எடுத்துக்கொண்டிருந்தார். நண்பர்கள் மூலம் அவரின் அறிமுகம் கிடைத்தது. "முதலில் ஒரு மானிட்டர் எடுத்து விடலாம்'' என்று கூறினார். 12 பக்க வசனத்தை நான் எளிதாக பேசுவதைப் பார்த்து விட்டு, ""வேண்டாம் நேராக காட்சிப்படுத்தி விடலாம்'' என்றார். ஏக சீரியல்கள் நல்ல அனுபவங்களை தந்தன. இப்போதும் வருகிற "சரவணன் மீனாட்சி' தொடரிலும் நல்ல பெயர். இயக்குநர்களின் இந்த நம்பிக்கைக்கு நான் கடந்து வந்த பாதை காரணமாக இருக்கலாம்.

பொதுவாக நாடகம், சீரியலில் ஹிட் ஆனவர்கள் ஒரே ஃபார்மெட்டில் பயணமாவார்கள்... நீங்கள் சினிமாவிலும்.... 

மாற்று சிந்தனைதான் காரணம். நாடகம், சீரியல், சினிமா என தனித்தனியாக இயங்கி வந்த காலம் வேறு. இப்போது எல்லாமே ஒன்று. ஒரு கேரக்டரை நன்கு வடிவமைக்க வேண்டி வந்தால், ஒரு நடிகன் தேடிச் செல்லும் இடமாக கூத்துப் பட்டறை வந்திருக்கிறது. இதுதான் இந்த காலம். ஏதோ ஒரு திருப்பத்தில் "மதுபானக்கடை' வாய்ப்பு வந்தது. இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்ன படம் வெற்றினு நான் பார்க்கலை. இது புதிய சிந்தனைகளோட வெற்றி. மக்களின் ரசனையைப் புரிந்து, காலத்துக்கு ஏற்ற மாதிரி சினிமா மாற வேண்டும் என வந்த நேரம் இது. அந்த படத்தில் நான் இருந்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து "பாஸ் (எ) பாஸ்கரன்', "காதல் சொல்ல வந்தேன்', "ஹரிதாஸ்', "சண்டியர்', "இசை', "சண்டமாருதம்', "சண்டிவீரன்', "கட்டப்பாவக் காணோம்', "அரிமா நம்பி', "கபாலி' என எல்லாப் படங்களிலும் என் நடிப்பு மிளிர்ந்தது. "சண்டைகோழி 2', "வண்டி' என இப்போது நடிக்கிற இரு படங்களும் வேறு மாதிரியாக என்னைக் காட்டும். 

கவனிக்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. இதில் வில்லன் பாத்திரம் கூட விதிவிலக்கல்ல. சினிமாவில் நெகடிவ் கதாபாத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் பதியும்.

ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாக் கேரக்டரிலும் நடிக்கிற "மல்டி பெர்சனாலிட்டி ஆர்ட்டிஸ்ட்' அடுத்து வரவே இல்லை என்கிற ஒரு ஆதங்கம் இங்கே இருக்கிறது...

நிறைய பேர் அந்த இடத்தை நோக்கி வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் மாதிரியான ஆள்கள் அந்த இடத்துக்கு தகுதியானவர்கள் என்று தோன்றுகிறது. நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதிதாக உள்ளே வருகிறார்கள். சில உயரங்களைத் தொடும்போது இழப்பதும் அதிகமாக இருக்கும். அதற்கு நடிகர்கள் தயாராக இருக்க வேண்டும். எனக்கும் அந்த இடம்தான் ஆசை. என் முகம் எல்லோருக்கும் தெரிகிறது. என்னை நம்பினால், இவர் கதைக்கு துணையாக இருப்பார் என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். இதுதான் அந்த இடத்துக்கு என்னை கொண்டு செல்லும் விஷயம். நடிகன் என்பதை விட, இந்த இடத்தில் இருக்கும் நடிகன் என்ற பெயரே முக்கியமானது. பார்த்த முகமாக இருக்கே என்று சிலர் யோசிக்கிறார்கள். இதனால் நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம். அதனால் "நல்ல கேரக்டர் என்றால் நடித்து தருகிறேன்' என்று நான் கத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது. 

இன்னும் வாய்ப்புகளுக்காக சுற்றி வர வேண்டியிருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா..?

நான் மட்டும் அல்ல, எந்த ஒரு நடிகனின் எதிர்காலமும் உத்தரவாதமாக இருக்க வேண்டும் என்றால், அது யார் கையில் இருக்கிறது தெரியுமா? எப்படியாவது வெற்றிப்படம் தர வேண்டும் என்ற வெறியோடு கதை தயார் செய்கிற உதவி இயக்குநர், ஒரு கேரக்டரை யோசிக்கும்போது, ரவி மாதிரி என நினைத்து கதை செய்கிறாரே, அவர் கையில் இருக்கிறது. அப்படி யாராவது யோசிக்கிற வரைக்கும் நடிகனாக எனக்கு எந்தக் குறையும் வராது. உதவி இயக்குநர்கள் சிந்தனையில் நான் இல்லாமல் போய் விட்டால், இன்னொருத்தர் அந்த இடத்துக்கு வந்து விட்டால், என் பங்களிப்பு போதவில்லை என யாரும் சொல்லாமலேயே எனக்குப் புரிந்து விடும். சம்பளம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அந்த மாதிரி ஒரு கதை கிடைத்தால் போதும். முழு மனதோடு போய் நிற்பேன். அந்த மனநிலையை என்றைக்கும் நான் தொலைக்க மாட்டேன்.

சினிமா கனவோடு இருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன...?

அறிவுரை சொல்கிற அளவுக்கு நான் இன்னும் சினிமா கற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளலாம். "தூங்கும்போது வருவது கனவு இல்லை. தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு' என்று அப்துல் கலாம் சொல்லிருக்காரே... சினிமா வெறும் ஆசையாகவோ, கனவாகவோ மட்டும் இருந்தால் போதாது. இது அறிவுரை இல்லை. என் அனுபவம்.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com