சென்னையைச் சேர்ந்தவருக்கு கோல்டன் குளோப்!

'கோல்டன் குளோப்' விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிற ஒன்று என்றாலும் அது தமிழ்நாட்டுடன் தொடர்பு ஏற்படுத்துகிற போது முக்கிய செய்தியாகிவிடுகிறது. 
சென்னையைச் சேர்ந்தவருக்கு கோல்டன் குளோப்!

'கோல்டன் குளோப்' விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிற ஒன்று என்றாலும் அது தமிழ்நாட்டுடன் தொடர்பு ஏற்படுத்துகிற போது முக்கிய செய்தியாகிவிடுகிறது. 

அறுபத்தி ஆறாவது கோல்டன் குளோப் விருது விழா 2009-இல் நடைபெற்றது. அதில், "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வாங்கிய முதல் இந்தியர் ரஹ்மான்தான். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோல்டன் குளோப் விருது அமெரிக்காவில் வாழும் அசிஸ் அன்சாரி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது பூர்வீகம் சென்னை. 

ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக தரவரிசையில் நிற்பது கோல்டன் குளோப் விருது. அங்கே அமெரிக்காவில் திரைப் படம், சின்னத்திரை என்று பிரித்துப் பார்ப்பதில்லை. திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்சிகளில் திறமையை நிலைநிறுத்தி பங்களிப்பு செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 75-ஆவது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடந்தது. 

நகைச்சுவைப் பிரிவில் அமெரிக்காவில் "மாஸ்டர் ஆஃப் நன்' தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்து நடித்து வரும் அசிஸ் அன்சாரிக்கு "சிறந்த ஹாஸ்ய நடிகர்' என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. "மாஸ்டர் ஆஃப் நன்' தொடர், "நெட்பிளிக்ஸ்' இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது. அன்சாரியின் கூட்டு தயாரிப்பாளர் அலன் யாங். அன்சாரிக்கு முப்பத்துமூன்று வயதாகிறது. 

அன்சாரி பிறந்ததும், படித்ததும் வளர்ந்ததும் அமெரிக்காவில். அப்பா ஷவுக்கத் டாக்டராக அமெரிக்காவில் பணி புரிகிறார். அம்மா ஃபாத்திமாவுக்கு மருத்துவ நிறுவனம் ஒன்றில் வேலை. இவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். 
அன்சாரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 2004 முதலே நடிக்கத் தொடங்கிவிட்டார். இதுவரையில், 28 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் 14 ஹாலிவுட் படங்களிலும் தனது பங்களிப்பினைச் செய்திருக்கிறார். அன்சாரி அடிப்படையில் நடிகர் சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு "ஸ்டாண்ட் அப் காமெடியன்'. 

"எல்லா இணையதள கணிப்புகளும் எனக்கு விருது கிடைக்காது என்று இருந்தன. ஆனால் விருது கிடைத்திருக்கிறது. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி'' என்கிறார் அன்சாரி. ஹாஸ்ய நடிப்பிற்காக விருது வாங்கும் முதல் ஆசியரும் (Asian) இவர்தான்! ஹாஸ்ய நடிப்பிற்காக அதிகம் சம்பளம் பெரும் அன்சாரி ஒரு புத்தகம் ஒன்றினையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். ‘Modern Romance : An Investigation’ என்ற தலைப்பில் நியூயார்க் பல்கலை கழகத்தின் பேராசிரியர் க்ளினின்பெர்க்குடன் இணைந்து எழுதி இருக்கிறார். நூறு பேர்களுடன் பேட்டிகளை நடத்தி அதன் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.

வலைதளம், தொழில் நுட்பம் இன்றைய காதலையும், உறவு முறைகளையும் எப்படி பாதித்துள்ளது என்பதுதான் இந்த நூலின் அடிப்படையான விஷயம். 
அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென்று பிரத்யேகமாக வழங்கப்பட்டு வரும் எம்மி (Emmy)  விருதினையும் அன்சாரி இரண்டு முறை பெற்றிருக்கிறார்...!

- சுதந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com