கண்ணீர் வழிகிற நிமிடங்கள்

"அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கின்றன. அது நல்லதோ கெட்டதோ...
கண்ணீர் வழிகிற நிமிடங்கள்

"அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கின்றன. அது நல்லதோ கெட்டதோ... சில 
நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கையும் மாற்றி விடுகிறது. அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஓர் அனுபவம். ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்த சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை''. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொடுப்பதில் நிறைய சவால். கதையின் உள்ளடக்கத்தை உள்ளபடி பேசுகிறார் ரவி அப்புலு. விஜய் ரசிகர்களுக்கு என்றென்றும் பிடிக்கிற "ஷாஜஹான்' படத்தை தந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பின் "செயல்' படத்தின் மூலம் கோடம்பாக்கம் வருகிறார். 

நீங்கள் பேசுகிற விதம் இந்தப் படத்துக்கு ப்ளஸ்ஸாக கூட இருக்கலாம்... ஆனால், இப்போதுள்ள டிரென்டுக்கு எந்த விதத்தில் இது சரி வரும்...
எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும்... அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. 
ரசிகர்களுக்கு பரிச்சயமான முகங்களாக இருந்தால், எந்த விஷயத்துக்கும் தகுந்த வரவேற்பு உண்டு... இது இப்போதுள்ள சினிமாவின் நிலை... 
அப்படி ஒரு நிலை இப்போது மட்டும்தான் இருக்கிறதா? அப்படி எனக்குத் தோன்றவில்லை. கதைக்கு பொருந்துகிற முகங்கள் இருந்தால் அந்தப் படம் ஹிட். இதுதான் இப்போதைய சினிமா என உணர்கிறேன். கடந்த சில வருடங்களில் முன்னுக்கு வந்து நிற்கிற நடிகர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் சந்திக்கிற முகங்கள் தான். நடிகராக ரசிகர்களுக்கு அவர்களைப் பிடிக்கிறது அவ்வளவுதான். அது போல் வில்லன், ஹீரோ என்றெல்லாம் பார்ப்பது இல்லை. கதையில் அவருக்கான பங்கை ஒரு நடிகர் சரியாக செய்திருந்தால், அவரைப் பற்றித்தான் பேசுகிறோம். அந்த அளவுக்கு சினிமா மாறியிருக்கிறது. இதில் வரும் ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் முற்றிலும் புதுமுகம். ஆனால், சினிமாவுக்காக நீண்ட காலம் தயாராகி வந்தவர். கதாநாயகியாக தருஷி இவரும் புதுமுகம்தான். இந்த இருவரையும் தவிர்த்து, மற்றவர்கள் ரசிகர்களுக்கு வெகுவாக அறிமுகமானவர்கள்தான். ரேணுகா, முனீஸ்காந்த், "சூப்பர்குட்' சுப்பிரமணியம், வினோதினி, "தீப்பெட்டி' கணேசன், "ஆடுகளம்'ஜெயபாலன் இப்படி எல்லா இடங்களிலும் எல்லாருடைய மனதையும் கவர்ந்த நட்சத்திரங்கள். இதனால் எந்த விஷயமும் யாருக்கும் அந்நியப்படாது.
முதல் படத்திலேயே விஜய்.... நீண்ட நெடிய சினிமா அனுபவம்.... கோடம்பாக்கம் முழுவதும் தெரிந்த முகங்கள்.... அறிந்த விலாசங்கள்... இருந்தும் இவ்வளவு தாமதம் ஏன்?
சினிமாக்காரனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறுமென நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்ததா... நான் தேடிப் போகவில்லையா... என்பதை இப்போது கணக்குப் போட்டு பார்க்க முடியாது. பெரும் கனவு, லட்சியம் என கோடம்பாக்கத்துக்கு ஓடோடி வந்த நாள்கள் நினைவில் நிழலாடுகின்றன. கனவு தேடி அலைந்த எல்லா இடங்களிலும் சின்ன சின்ன தோல்விகள். முதல் படமே விஜய் சாருக்கு... அப்போது ஒரு உதவி இயக்குநர் தொட்டு விட முடியாத மைல் கல் அது. படமும் வெற்றிதான். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் விஜய் சாருக்கு கிளாசிக்கல் படமாக "ஷாஜஹான்' இருக்கும். சினிமா தவிர தேடிப் பிடிக்க மனசு இல்லை. குடும்பம், மனைவி, மக்கள் என சமூகச் சூழல்களின் துரத்தல் ஒருபுறம். சிதைந்து விடாத சினிமா கனவு மறுபுறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அதை வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியும். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் இருக்கை கொடுத்திருக்கிறது காலம். பார்க்கலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com