சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 30: மஸ்கட் திருவிழா!

"இந்த நாட்டில் எல்லோரும் சமமானவர்கள். இங்கே பெரியவன், சிறியவன், பணக்காரன், ஏழை என்கின்ற பாகுபாடுகள் இல்லை.
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 30: மஸ்கட் திருவிழா!

"இந்த நாட்டில் எல்லோரும் சமமானவர்கள். இங்கே பெரியவன், சிறியவன், பணக்காரன், ஏழை என்கின்ற பாகுபாடுகள் இல்லை. எல்லோரும் சமம் என்பது, அவர்களை உடன்பிறப்புகளாக்கி, சமூகநீதி என்கின்ற குடையின் கீழ் கொண்டு வரும்'
- Qaboos bin said al said கபோஸ் பின் செய்த் அல் செய்த்

யார் இந்த கபோஸ் என்று புருவங்களை உயர்த்தாதீர்கள். ஓமன் நாட்டின் சுல்தான்தான் இந்த கபோஸ். ஜூலை 23, 1970-இல் தன் தந்தையின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அரியணையைக் கைப்பற்றி, சுல்தானாக ஆனவர். ஓமன் நாட்டை பழமையிலிருந்து விடுவித்து பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.
கபோஸ், 47 வருடங்களுக்கு மேலாக நல் ஆட்சியை நல்கி, ஓமன் மக்களுடைய மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார். மத ஒருங்கிணைப்பை செயல்படுத்தி வருபவர். நான்கு கத்தோலிய மற்றும் புராடெஸ்டாண்ட் தேவாலயங்களையும், இந்து கோயில்களை கட்டிடவும் பணஉதவி செய்தவர். கலை மற்றும் கைவினைப் பொருட்கள் மேன்மை அடைய வழிவகுத்தவர். இவருடைய அனுமதியோடு, மஸ்கட்டின் நகராட்சியின் அதிகாரிகளும், ஊழியர்களும் வருடம்தோறும் மஸ்கட்டில், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில், முப்பது நாட்களுக்கு தொடரும் மஸ்கட் திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.
இத்தகைய திருவிழாவைப் பற்றிய தகவல்களை, ஓமானின் தலைநகரமான மஸ்கட்டில் வாழும் எங்களது நண்பர்கள் சொல்லி, அந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள பலமுறை எங்களை அழைத்திருந்தனர்.
ஓமானிய மக்களின் கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, சரித்திர வரலாறு, கேளிக்கைகள், பாரம்பரிய உணவு வகைகள், நாட்டுப்புறப் பாடல்கள், நடனங்கள், வாழ்க்கைமுறை, கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் முறை போன்ற பலவகையான செய்திகளை அறியவும், நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவும் மஸ்கட் திருவிழா பாலமாக அமையும் என்றனர்.
2016-ஆம் ஆண்டு ரஷியாவுக்கு இருதய மாநாடு ஒன்றுக்காக பயணப்பட்டோம். திரும்பி வரும்பொழுது மஸ்கட்டில் இறங்கினோம். நாங்கள் சென்ற சமயம் அங்கே மஸ்கட் திருவிழா நடந்து கொண்டிருந்ததால், அதைப் பார்த்து மகிழ பேராவல் கொண்டு அங்கே சென்றிருந்தோம்.
விமான நிலையத்தை விட்டு எங்களைச் சுமந்து சென்று கொண்டிருந்த கார் வெளிவந்து, தார் சாலையில் வழுக்கியபடி ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிச் சுழன்ற என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தது. சாலைகளின் இருபக்கங்களிலும், பசும் புல் பாய்விரித்திருந்தது. சீராக வெட்டப்பட்ட செடிகளில் பலவிதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. மஸ்கட்டிலிருந்து 2 மணி நேரம் பயணம் செய்தால் (ரஹட்ண்க்ஷஹ நஹய்க்ள்) "வகிபா சாண்ட்' என்று அழைக்கப்படுகின்ற பாலைவனம் வந்துவிடுகிறது. இப்படி சூரிய வெப்பமும், பாலைவனமும், தண்ணீர் பற்றாக்குறையும் உள்ள இடத்தில் எப்படி இப்படிப்பட்ட அழகிய பூங்காக்களை உருவாக்குகிறார்கள் என்று அசந்துபோனோம். இதைத் தவிர, நான்கு சாலைகள் கூடும் இடங்களில் (round abouts) அழகிய அற்புதமான கற்பனா சக்தியுடன் உருவாக்கப்பட்ட  அலங்கரித்தன.
ஒரு இடத்தில் மீன்கள் இணைந்து நிற்பதுபோல், கூஜாக்களில் இருந்து தண்ணீர் வழிந்து கிண்ணங்களில் நிரம்புவதுபோல என்று அசத்தின.
கண்களுக்கு விருந்தளித்த காட்சிகளை ரசித்துக் கொண்டே எங்களுக்கு என்று பதிவு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். என் கணவரின் பெரியப்பா மகன் குமார் மஸ்கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் தன் மனைவி ரேவதியுடன் எங்களைப் பார்க்க ஹோட்டலுக்கு வந்திருந்தார். அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மஸ்கட்டில் வசித்து வருகிறார்கள். ஆகையினால் அந்த நகரத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தனர்.
குமார் சொன்னார்: ""இந்த வருட மஸ்கட் திருவிழா அமரட் பூங்காவில் (அம்ங்ழ்ஹற்) நடைபெறுகிறது. இதற்காகவே ஓமானிய பாரம்பரிய கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதைத்தவிர குழந்தைகளுக்காக டைனாசரஸ் பூங்காவும் திறந்திருக்கிறார்கள்'' என்றதும், நான் ""வாவ்!'' என்றேன்.
""இதோ, உன் அண்ணியே ஒரு குழந்தையாகி விட்டாள் பார்'' என்றார் என் கணவர்.
""அண்ணி இன்னொரு விஷயமும் உங்களைக் கவரப்போகிறது.''
""அது என்ன தம்பி''
""குடும்ப கிராமமும் உருவாக்கி, அதில் குடும்ப உறுப்பினர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அப்படியே தத்ரூபமாகக் காட்ட ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.''
""இது எல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?'' 
என்றேன்.
""எல்லாம் செய்தித்தாள்களில் படித்ததுதான்.''
""சரி அண்ணா, மஸ்கட் திருவிழாவுக்கு நாளை சாயங்காலம் உங்கள் இருவரையும் அழைத்துப் போகிறேன். இன்று நீங்கள் அவசியம் காண வேண்டியது, கபோஸ் கிராண்ட் மசூதியை!'' என்றார் குமார்.
""என்னது மசூதிக்கு போகணுமா. நாம் இந்துவாயிற்றே, நம்மை உள்ளே விடுவார்களா!''
""ஓமனிலே, இந்துக்களை மட்டும் அல்ல முகமதியர் அல்லாத எல்லா மதத்தினரையும் அங்கே அனுமதிப்பார்கள்'' என்றார்.
சரி என்று சிறிது ஓய்வுக்குப் பின்னர், கபோஸ் கிராண்ட் மசூதியை காணச் சென்றோம்.
கபோஸ் மசூதியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடுகின்றேன். தலையை முக்காடு இட்டு மறைத்து, மணிக்கட்டுவரை மூடும் ஜாக்கெட் அணிந்து, பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் கபோஸ் மசூதியின் உள்ளே நுழைந்தேன். மலைத்து நின்றேன். என்னை மறந்தேன். மசூதியின் 
அழகில் கரைந்தேன்.
தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com