அரசு, வங்கிப் பணியாளர்களை  உருவாக்கும்  ரயில்  நிலையம்...!

சுற்றிலும்  பசுமையான மரங்கள்... மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகள் எழுப்பும் பலவித ஒலிகள்... வெப்பத்தை விரட்டிவிட்டு தவழ்ந்து வரும்   குளிர்ந்த காற்று....
அரசு, வங்கிப் பணியாளர்களை  உருவாக்கும்  ரயில்  நிலையம்...!

சுற்றிலும்  பசுமையான மரங்கள்... மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகள் எழுப்பும் பலவித ஒலிகள்... வெப்பத்தை விரட்டிவிட்டு தவழ்ந்து வரும்   குளிர்ந்த காற்று.... ஆட்கள் அரவமற்ற.. ஒலி பெருக்கிகள் அலறாத .....  வாகன போக்குவரத்து  கிளப்பிவிடும்  புகை.. தூசி இல்லாத  சூழல்.  அமைதி   நெஞ்சில் தேங்க, தூக்கம் கண்களைத்  தழுவ வைக்கும்  சூழல்....!   

ஆனால்,  என்ன அதிசயம்...   வரும்  உறக்கத்தை உதறிவிட்டு, அமைதியாக இளைஞர்கள் கூட்டம்  அங்கும் இங்குமாக பரவி அமர்ந்து   புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறது.  

கல்லூரியில்... பள்ளிகளில்  வீடுகளில் மாணவர்கள்  புத்தகங்களை விரித்துப் படிப்பது என்பது ஒரு அதிசய நிகழ்வாகக்  கருதும்  காலகட்டத்தில், இப்படியோர் அதிசயம் ஒரு பூங்காவில் அரங்கேறினாலும் நம்பலாம்.   ஆனால், ஒரு ரயில் நிலையத்தில் இளைஞர்கள் கூட்டம் அரசியல், சினிமா என்று அரட்டை அடித்துப்  பொழுதைக் கழிக்காமல்,  கட்டுச்சோறு,  குடிக்க தண்ணீர் பாட்டில்களைக்  கையுடன் கொண்டு  வந்து கருமமே கண்ணாக புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கும்போது மனது ஆனந்தத்தில் துள்ளுகிறது. ரயில் நிலையம் அரசு,  வங்கி வேலைகளைப்   பெற்றுத்தரும்   பயிற்சிக்  களமாக   மாறியிருக்கிறது என்பது மற்றோர் ஆச்சரியம்.  

ரயில் நிலையம்   எப்படி பயிற்சிக்  களமாக மாறும் ? வண்டிகள் வந்து போய்க் கொண்டிருக்கும்... பயணிகள்  வந்து சென்று கொண்டிருப்பார்கள்... எப்போதும் பரபரப்பாக இருக்கும்  ரயில் நிலையத்தில்  எப்படி  பாடப்   புத்தகங்களைப் படிக்கும்  அமைதியான  சூழல் ஏற்படும்?

தேனி ரயில் நிலையத்தில்  எந்த பரபரப்பிற்கும்  வாய்ப்பில்லை. ஏனென்றால், போடி - மதுரை ரயில் வண்டிப் பாதையை அகலப் பாதையாக மாற்ற ரயில் போக்குவரத்தை 2010-இல்  நிறுத்திவிட்டார்கள். அரசு வங்கி வேலைகளைப் பெறுவதற்காக  தேர்வுகள் எழுத தங்களைத் தயார் செய்து கொள்வதற்காக இயற்கை சூழலில் அமைதியை சுவாசிக்கும் தேனி ரயில் நிலையத்தினை "அறிவிக்கப்படாத பயிற்சிக் களமாக' படித்துவிட்டு வேலை தேடும்  இளைஞர்கள் மாற்றிக் கொண்டுள்ளனர்.

ஆங்கில இலக்கியம் படித்து விட்டு   அரசு வேலைக்காகத்  தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும்  மதன் குமார்  சொல்வது:

""தேனி சுற்று வட்டாரத்தில் வேலை தேடும் இளைஞர்களில் பலர் பல ஆண்டுகளாக சும்மா கிடக்கும் தேனி ரயில் நிலையத்துக்கு பாடங்கள் படிப்பதற்காக வந்து செல்கிறார்கள். வீட்டில்  படிப்பதற்கேற்ற சூழல் அமைவது குறைவு. யாராவது வந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஏதாவது பிரச்னை பெரியவர்களை அலைக்கழிக்கும். அது  வீட்டில்   எதிரொலிக்கும்.

அது படிப்பவர்களின் கவனத்தையும் மனநிலையையும் திருப்பிவிடும். தெருவில்  ஏதாவது காரணம் சொல்லி  ஒலி பெருக்கிகள் முழங்கும். வீட்டில் டிவி ...  பண்பலை  ரேடியோ.. இப்படி  கவனத்தைச் சிதறடிக்கும் இப்படிப்பட்ட சூழல் தான் பல நடுத்தர குடும்பங்களின் நிலை. அதனால் நிம்மதியாக அமர்ந்து படிக்க அமைதியான இடம் தேவை. தேனி ரயில் நிலையத்தில் அமைதியான சூழல் அப்பட்டமாக இருப்பதால் என்னைப் போன்ற இளைஞர்கள்  இங்கு வருகிறார்கள்.  

ஊரை விட்டு ரயில் நிலையம் விலகி இருப்பதால், சிறிய பெட்டிக்கடை கூட கிடையாது. காலை ஒன்பது பத்து மணியளவில் வரும்  அனைவரும்  மதிய உணவு,  குடிக்கத் தண்ணீர்  கொண்டு வந்து விடுவோம். இங்கே புதிய நண்பர்கள்  கிடைக்கிறார்கள். யாரும் வெட்டிப் பேச்சு பேசி  பொழுதைக் கழிப்பது கிடையாது. தேர்வுகளின்   மாதிரிக் கேள்விகளுக்கு விடை   என்ன.. எப்படி   விடைகளை  எழுதுவது    என்பதைக்  குறித்தும்,  சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும்  இங்கே  இதர இளைஞர்களுடன்  கலந்து பேச முடிகிறது.  இங்கு  வந்து படித்த  சுமார்  இருபது பேர்களுக்கு அரசுத் துறைகளில்  வங்கிகளில்  வேலை கிடைத்துள்ளன.  அதுதான்   எங்களை இங்கே  வரச்  செய்தது . 

தேனி சுற்று வட்டாரத்தில்  அரசு வேலைகள் கிடைத்தவர்களும்  இங்கு வந்து, உயர்வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்காக  இங்கு வந்து படிக்கிறார்கள். அதனால் ஞாயிறு  அன்று படிக்க வருபவர்கள் கூட்டம்  அதிகமாக இருக்கும்.  இவர்கள்  போட்டித் தேர்வுகள் எழுத  டிப்ஸ்  சொல்லுவார்கள். முன்பு சுமார் நூற்றுக்கும் அதிகம் பேர்கள் வருவார்களாம். இப்போது  ஐம்பது பேர்கள் வருகிறார்கள். குடிகாரர்கள்  சுற்றித் திரிந்த இந்தப் பகுதி, இன்று படித்தவர்கள் வலம் வரும் பகுதியாக  மாறியுள்ளது.  வேலைக்கு முயற்சிக்கும்  படித்த பெண்கள்  ஒரு சிலர்  ஆரம்பத்தில் வந்தார்களாம்.  தேனி ரயில் நிலையம் ஊரைவிட்டு வெளியில் இருப்பதாலும்,  ஆட்கள்  போக்குவரத்து  இல்லாமல் இருப்பதாலும்,  இங்கு  போக வேண்டாம்   என்று  அறிவுறுத்தியதால்  பெண்கள் யாரும் வருவதில்லை. சிரத்தையுடன்  படித்தால்  தனியார்  பயிற்சி   போட்டித் தேர்வு நிலையங்களில்  சேராமலேயே  போட்டித் தேர்வுகளில்  வெற்றி பெற்று அரசு, வங்கிகள் வேலை கிடைக்கும்  என்று  நேரடியாக  நாங்கள்  தெரிந்து   கொண்டதால், நாங்கள் தொடர்ந்து இங்கு வந்து படித்துக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார்.

தேனி  சுற்று வட்டார படித்த  இளைஞர்கள்,  பிற மாவட்ட இளைஞர்களுக்கு  ஒரு முன்மாதிரியாக  ஆகியிருக்கும் அதே நேரத்தில், இயங்காமல்  இருக்கும்  தேனி ரயில் நிலையம் அரசு மற்றும் வங்கிப் பணியாளர்களை  உருவாக்கிக் கொண்டிருக்கிறது...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com