ஒரு கணமும் மறு கணமுமாக மாறுவதுதான் மனித மனம்

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் அடுத்தடுத்து நடந்த திருப்பங்கள் சினிமாவிலும் காண முடியாதது.
ஒரு கணமும் மறு கணமுமாக மாறுவதுதான் மனித மனம்

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் அடுத்தடுத்து நடந்த திருப்பங்கள் சினிமாவிலும் காண முடியாதது. அதிலும் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரின் தற்கொலை காரணங்கள் இன்னுமொரு பரபர சினிமா. சட்டென நிகழ்ந்து விட்ட சம்பவங்கள், பரபரப்புகள், காட்சிகள் எல்லாவற்றிலும் கற்பனைகள் கலந்து "நுங்கம்பாக்கம்' என்ற பெயரில் சினிமாவாக்கி முடித்துள்ளார் எஸ்.டி.ரமேஷ்செல்வன். "உளவுத்துறை, "ஜனனம்' படங்களின் மூலம் அழுத்தமாக தடம் பதித்தவர். தற்போது பரபரப்பு மிகுந்த கதை சொல்ல வருகிறார்:
 
 நுங்கம்பாக்கம் ரயில் நிலைய சம்பவத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு திருப்புமுனை.... அதை அப்படியே சினிமாவில் கொண்டு வருவதற்கு இடர்பாடுகள் இருந்திருக்குமே....?
 இதற்கு முதலில் வைத்த பெயர் "சுவாதி' என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பல லட்ச ரூபாய் செலவழித்து விளம்பரங்கள் செய்து, வெளியீட்டுக்கு படம் தயாராகி வந்தபோது, திடீரென்று நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பெயர் மாற்றம் செய்தோம். இடர்பாடுகள் இருக்கின்றன என்பதற்காக இதை சினிமாவில் பதிவு செய்யக் கூடாது என்று இல்லை. இதுதான் இப்போதைய சமூக அவசியம். இதுபோன்ற சம்பவங்களுக்கு சமீபமாக நிறைய உதாரணங்கள். தூத்துக்குடி சர்ச் ஒன்றில் பிரான்சினா என்ற இளம் ஆசிரியை அவர் மீது கொண்ட காதல் வெறியனின் கத்திக்கு இரையானார். சோனாலி என்ற மாணவி மீது காதல் கொண்ட சக மாணவனால் கட்டையால் அடித்து கொல்லப்பட்டார். 17 வயது நவீனா, தன்னை பல மாதங்கள் தொடர்ந்து வந்து தொல்லைக் கொடுத்த 34 வயது நபரால் நெருப்புக்கு இரையாக்கப்பட்டார். முகநூலில் அறிமுகமான நபர், ஊர் கடந்து வந்து பெண்ணைத் தாக்கிய கொடுமையையும் செய்தியாக அறிந்து வந்தோம். இந்த கொடூர நிகழ்ச்சிகளுக்கு சிகரம், நுங்கம்பாக்கம் சம்பவம். சுவாதி என்ற இளம் பெண் பட்டப்பகலில் பலர் நடுவே அரிவாளுக்கு பலியானது. ஒரு கையில் ரோஜாப்பூவும், மறு கையில் அரிவாளும், ஆசிட் குப்பியும் ஏந்தி வருகிறது இன்றைய பயங்கரவாத காதல். இதை ஊடகங்களும், சினிமாவும் வேறு மாதிரி உருமாற்றி வைத்திருக்கின்றன. ஒரு பெண்ணை தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வதே காதல் என்ற கோட்பாடே பூதாகரமாக வெடித்துள்ளது. சர்ச்சையை கிளப்புவதோ, வீண் பரபரப்பை உருவாக்குவதோ அல்ல இந்தப் படத்தின் நோக்கம். மீண்டும் அது போல் ஒன்று நடந்து விடக் கூடாது என்பதையே விரும்புகிறோம்.
 சம்பவங்களை மட்டுமே உள்ளடக்கமாக வைத்தால் போதுமே... என்ன சொல்ல வேண்டும் என்பது இந்த இடத்தில் முக்கியம்தானே...?
 இளைஞனுக்கு பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்த சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் இளைஞர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. அதுவும் இளைஞர்களை பெரும்பான்மையாக கொண்ட இந்திய சமூகத்தில் இது பெரும் பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் இளைஞர்கள் எத்தனை பேர். வேலையையே சந்தோஷமாகவும் காதலாகவும் அனுபவிக்கும் இளைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லாமல் போனதுதான் இங்கே துரதிருஷ்டம். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் இளைஞர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட கல்வியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை. ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. ஏதேதோ யோசனைகளில் இருக்கும்போது, திடீரென்று ஒரு உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்து செல்லும். அப்படியான உணர்வுதான் இந்த சினிமா.
 கதை எழுதி இயக்குகிற அளவுக்கு இதில் வியக்க வைத்த விஷயம் என்னவாக இருக்கும்...?
 சாப்பாடு, சம்பளம், சந்தோஷம் எனக் கிடைக்கிற வாழ்வு, எல்லோருக்கும் எப்போதும் அமைவது இல்லை. அப்படி கிடைத்தாலும் கனவு, லட்சியம், வேட்கை என துரத்தும் இந்த வாழ்வில் ஒரு கட்டத்தில் எங்கோ போய் விடுகிறோம். என்னுடன் சினிமாவுக்குப் புறப்பட்டு வந்த நண்பன், இன்றைக்கு கண்ணுக்கு தெரியாத தேசத்தில் மனைவி, மக்கள், குடும்பம் என்றாகி விட்டான். நான் இங்கே சினிமா, லட்சியம் என இலக்கு வைத்து சுழன்று கொண்டிருக்கிறேன். மனித மனம் எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலேயே கடந்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அடைய வேண்டியவற்றை அடைந்து விடுகிறது. இனி அடைய வேண்டியது ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு சொல்கிறவர்களை கூட நான் பார்த்திருக்கிறேன். அதன் பின்னர்தான், இங்கே பிரச்னைகளே துளிர் விடுகிறது. பணம் பிரச்னை இல்லை என்கிற போது மனம் பிரச்னையாகி விடுகிறது. எல்லாம் அடைந்த பின் அன்புக்கு ஏங்குகிறோம். வன்மம் இல்லாத உலகை அடைய தவிக்கிறோம். சந்தோஷங்களுக்கு காத்திருக்கிறோம். எப்போதும் பரிசுத்தமான காதலுக்குப் பரிதவிக்கிறோம். ஒரு கணமும் மறு கணமுமாக மாறுவதுதான் மனித மனம். அப்போது உணரும் ஒரு தனிமைதான் நாம் யார் என்று உணர வைக்கும். அப்படி உணர்ந்த ஒரு சங்கதிதான் இந்த கதை. அனைத்து பிளவுகளையும் கடந்து நிலைத்து நிற்பது அன்பும், மனிதநேயமும்தான் என்று உணர வைக்கும் களம். பின்னணியில் ஒரு நிஜ சம்பவம் இருப்பது இதை அர்த்தப்படுத்துகிறது.
 புதுமுகங்கள்தான் நம்பிக்கைக்குரியவர்களாக வந்தார்களா....?
 பெரிய நட்சத்திரங்களை அணுகி பேசியிருக்கலாம். ஆனால், இங்கே அதற்கு வேலை இல்லை. நீங்கள், நான், நாம் எல்லோருமே கடந்து போன ஒரு நிகழ்வு இது. அதனால், அதையொட்டியே கதாபாத்திரங்களை கொண்டு வந்தேன். அஜ்மல் விசாரணை அதிகாரி வேடத்துக்கு பொருந்தி வந்தார். ஆயிரா புதுமுகம்தான். ஆனால், கதைக்கு ஏற்ற வேடம் அவருக்கு. இன்னொரு புதுமுகம் மனோ. வழக்கறிஞர் வேடத்தில் இயக்குநர் ஏ. வெங்கடேஷ். வாழ்க்கையிலிருந்து அந்நியம் காட்டாத முகங்கள் எல்லாருமே இதற்கு அத்தனை பொருத்தம்.
 -ஜி. அசோக்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com