ஆலப்புழாவின் படகுத் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

ஆலப்புழாவின் படகுத் திருவிழா "கடவுளின் சொந்த ஊர்' என்று போற்றப்படுகின்ற கேரள மாநிலத்தின் ஓர் அங்கமாக ஆலப்புழா திகழ்கின்றது. 
ஆலப்புழாவின் படகுத் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 25

ஆலப்புழாவின் படகுத் திருவிழா "கடவுளின் சொந்த ஊர்' என்று போற்றப்படுகின்ற கேரள மாநிலத்தின் ஓர் அங்கமாக ஆலப்புழா திகழ்கின்றது. இது ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலின் ஓரத்தில் உள்ளது. ஏரிகள், உப்பங்கழிகள், ஆறுகள் இந்த ஊரின் உள்ளே குடிகொண்டு இதற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
"பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும்' என்பார்கள், ஆனால் இந்த பாம்பைப் பார்க்க ஆர்வத்தோடு மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் மாதம், இரண்டாவது சனிக்கிழமை ஆலப்புழா அருகில், "புன்னை மடா' ஏரியில் நடக்கும் "வெள்ளம் களி' படகு போட்டிக்குத்தான் மக்கள் வெள்ளம் முட்டி மோதி வருகிறது. அதைக் கண்டும் களிக்கிறது.

இதற்கும் பாம்புக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது. தண்ணீரில் நின்று பதினைந்து அடிகள் உயர்ந்து, நூறு அடிக்கு மேல் நீளம் கொண்டு, மொத்தம் நூறு ஆட்கள் துடுப்பு போட்டு ஓட்ட, கம்பீரமாகத் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு வேகமாகச் செல்லும் (Chundan Vallam) சந்தன் என்று அழைக்கப்படும் படகுகள். இந்த படகுப்போட்டியில் பங்கு பெறுகின்றன.
பளபளப்பான பாலீஷ் செய்யப்பட்ட மரத்தினாலும், பித்தளை தகடுகளாலும் அழகுற செய்யப்பட்ட இந்தப் படகின் ஒரு மூலை படம் எடுத்து ஆடும் பாம்பின் தலையை ஒத்து இருப்பதால் இதற்கு "பாம்பு படகு" என்ற காரணப் பெயர் கிடைத்திருக்கிறது.

1952-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆலப்புழாவிற்கு வருகை தந்திருக்கிறார். அப்பொழுது அவரைப் பாம்பு படகில் அழைத்து வந்திருக்கிறார்கள். அவரைச் சுற்றி சூழ்ந்து வந்த பாம்பு படகுகளின் வேகம், கம்பீரம், ரிதம் அதன் அழகிய தோற்றம் நேருவை மிகவும் கவர்ந்திருக்கிறது. படகுப்போட்டி நடத்துவதற்கான வித்து அவர் நெஞ்சில் விதைக்கப்பட்டது.

1952-இல் "வெள்ளம் களி' படகுப் போட்டியை நடத்தியதுடன், ஒவ்வொரு வருடமும் அந்தப் போட்டி நடைபெறும் வகையில் "நேரு சுழல் கோப்பையை' அறிமுகப்படுத்தினார்.

2012-ஆம் வருடம் நடைபெற்ற அறுபதாவது படகுப்போட்டியைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. படகுப்போட்டி நடக்கும் இடத்திற்கு இட்டுச் செல்லும் பாதைகளில் எல்லாம் வியாபாரிகள் கடை விரித்திருந்தார்கள். தொப்பிகள், ஊதுகுழல்கள், குளிர்பானங்கள், பாப்கார்ன், முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகள், நேந்திர பழத்தால் செய்யப்பட்ட பஜ்ஜிகள் என பலதரப்பட்ட பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை ஆகிக் கொண்டிருந்தன.

நீல நிறத்தில் பளபளத்த ஒரு ஊதுகுழலை நானும் வாங்கிக் கொண்டேன். நுழைவுச் சீட்டுகளைக் காட்டி நானும் என் கணவரும் எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்து கொண்டோம். உள்நாட்டிலிருந்தும், பல வெளிநாடுகளிலிருந்தும் உல்லாசப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இதைத் தவிர பக்கத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் முண்டியடித்து வந்தவண்ணமிருந்தனர்.

ஏரியின் தண்ணீரில், போட்டியில் பங்குபெறப் போகும் பலவகையான படகுகளில், சந்தன் வல்லத்தைத் தவிர, ஓடி வல்லம், சுருளான் வல்லம், வைப்பு வல்லம், வடக நாட்டு வல்லம், கோசு (Kochu) வல்லம் என்று பலவிதமான தோற்றங்களைக் கொண்ட படகுகள் அணிவகுத்து போட்டியை ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து வரிசை கட்டி நின்றன.

சந்தன் வல்லம் என்கின்ற பாம்பு படகுகள் வரிசையாக வந்தபொழுது மக்கள் பெருங்குரல் கொடுத்து ஆரவாரித்தனர். பெண்கள் மட்டுமே ஓட்டி வந்த படகுகள் வந்தபோது மீண்டும் எழுந்த ஆரவாரம் காதுகளைப் பிளந்தது.

மதியம் மூன்று மணிக்கு (அப்போதைய) மக்களவைத் தலைவர் மீராகுமார் படகுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். வண்ண பலூன்கள் நீலம், சிகப்பு, வெள்ளை, பச்சை என்று வானில் பறக்க விடப்பட்டது. முதலமைச்சர் உம்மன் சாண்டி, நேருவின் சிலையை நிரந்தரமாக படகுப்போட்டி நடத்தப்படும் பெவிலியனில் இருக்கும்படி திறந்து வைத்தார்.

பலவிதமான படகுகளின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் பதினாறு சந்தன் வல்லம் படகுகள், நான்கு என்று வரிசைகட்டி வந்தபொழுது எழுந்த கைதட்டல்கள் விண்ணைப் பிளந்தது.

கடைசியாக நான்கு பாம்பு படகுகள் முதல், இரண்டாவது, மூன்றாவது இடத்திற்காக வேகம் கூட்டி வந்தபொழுது, ஊதுகுழல்களின் பூம், பூம் ஒலி தாளங்களின் ஓசை "வா, வா முந்தி வா" என்று கூடியிருக்கும் மக்கள் இடும் ஆரவாரம், நூறு ஆட்கள் தாளம் தவறாமல் துடுப்புகளை வலிக்கும்பொழுது தண்ணீரில் ஏற்படுத்தும் சத்தம், அந்தப் படகுகளின் நடுவில் அமர்ந்திருக்கும் பாடகர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள், சலங்கைகளைக் கட்டிய உலக்கைகளைப் பிடித்தபடி நிற்கும் மனிதர்கள் அவைகளைப் பாடலின் தாளத்திற்கு ஏற்பட தட்டி தொம், தொம் என்று எழுப்பிய இனிமையான ஒலி, கேரளத்து படகு ஓட்டுனர் பாடும் நாட்டுப்புற பாடல்களைக் கைகளைத் தட்டிப் பாடும் மக்களின் குரல்கள், உச்ச ஸ்தானத்தில் அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் வர்ணனையாளர்கள் என்று இத்தனை ஓசைகளையும் ஒருசேரக் கேட்டு மலைத்துப் போனேன்.

இந்த படகுப்போட்டிகளை மிக அருகில் சென்று பார்ப்பதற்கு வாடகைக்கு படகு வீடுகள் கிடைக்கின்றன. ஒரே சீராக நூறு படகோட்டிகள் துடுப்புகளை வலித்துச் செல்வதும், தண்ணீரை கிழித்துக் கொண்டு சந்தன் படகுகள் செல்லும் அழகையும், மக்களின் குதூகலத்தையும், கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தையும் பார்த்து மகிழ்ந்து நாமும் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற, செல்ல வேண்டும் ஆலப்புழா திருவிழாவுக்கு!
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com