ஒலித்தது இசையா? கேட்டது இசையா?

இசை உங்களிடம் எப்படி உருவானது? நீங்கள் எப்படி "இசை உருவாக' ஆனீர்கள். தத்துவார்த்தமாக சொல்லுங்களேன்?
ஒலித்தது இசையா? கேட்டது இசையா?

இசை உங்களிடம் எப்படி உருவானது? நீங்கள் எப்படி "இசை உருவாக' ஆனீர்கள். தத்துவார்த்தமாக சொல்லுங்களேன்?
 இது ஒரு நதியிடம்- உன்னுடைய நீரோட்டம் எப்படி உருவானது என்று கேட்பதைப் போல் உள்ளது. நதி ஓடிய பாதை அந்த நதியின் உருவாக ஆவதைப் போல, என் மீது இசை ஓடியதால் நதி ஓடிய பாதையையும் நதி என சொல்வது போல் நானும் இசை உருவாக ஆகி விடுகிறேன் போலும்.
 பாவலர் வரதராஜனின் தாக்கம் உங்களிடம் எப்போது ஆரம்பித்தது?
 சிறு பிராயத்திலிருந்தே.
 திரை இசை மூலமாக உங்களின் "இசை நன்கொடை' உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?
 திருப்தி இல்லை என்றால் பாடல் வெளியே வராது.
 விமர்சகர்களைப் பற்றி உங்களது அபிப்ராயம் என்ன?
 விமர்சகர்களும் ரசிகர்களே. ரசிகத்தன்மை இல்லாத பட்சத்தில் தான் விவகாரம். நான் கொடுத்து அவர்கள் பெற்றதுதான் அதிகம். விமர்சிப்பதால் மட்டும் ஒரு பாடல் நன்றாக ஆகப்போவதில்லை. சகிக்க முடியாத பாடலை எந்த விமர்சனமும் இனிமையான பாடல் ஆக்கப்போவதில்லை.
 உங்களது குருமார்கள் என்று நாங்கள் அறிந்த தன்ராஜ் மாஸ்டர், தெட்சிணாமூர்த்தி, ஹாண்டில் மானுவல் உள்ளிட்ட பெரியவர்களிடம் இருந்து நீங்கள் அறிந்ததும், அதன் பயன்பாடும் சொல்ல முடியுமா?
 ஹாண்டில் மானுவல் என் குருமார்கள் பட்டியலில் இல்லை. சரியாகக் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் தான் முன்னால் வந்து நிற்கிறதே தவிர, வேறு ஒன்றும் தோன்றவில்லை. இந்தப் பட்டியலில் சங்கீத கலாநிதி டி.வி.கோபாலகிருஷ்ணனையும், மதுரை கிருஷ்ண அய்யங்காரையும் விட்டு விட்டீர்கள்.
 இசை என்பது ஆன்மிக அனுபவமும்- அதே சமயத்தில் கணித வல்லமையுள்ள கலையும் என்கிறார்கள் உங்கள் பார்வையில் என்ன தோன்றுகிறது?
 அவர்கள் இப்படி சொல்கிறார்கள், இவர்கள் இப்படி சொல்கிறார்கள், நீங்கள் இசையைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விகளாலும் பதில்களாலும் ஒரு பயனும் இல்லை. ஒரு இசையை ரசிக்கின்ற அந்த ஒரு நொடி உடனே கடந்து போய் விடுகிறது. அந்த நொடியில் ஏற்பட்ட இனிமையின் சுக அனுபவம், அப்படியே மனதில் நின்று போய் விடுகிறது. கணப் பொழுது ஒலித்து மறைந்து போனது இசையா? அதைக் கேட்ட நேரத்தில் ஏற்பட்ட சுக அனுபவம் இசையா? அதைப் பற்றி எந்த அபிப்ராயத்தை யார் சொன்னாலும் யானையைப் பற்றி குருடர்கள் சொல்வது போல் தான்.
 இசைத்துறையில் உங்களுக்கு முன்னோடிகளிடமிருந்து நீங்கள் கற்றதும், பெற்றதும் என்ன?
 அந்த விலையற்ற பொக்கிஷங்களை வெறும் வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது. காரணம் பெற்றதற்கும் உருவமில்லை. அதைப் பெற்றதால், என்னுள் எழுந்த உணர்வுகளில் என்னிலிருந்து வெளியான இசைக்கும் உருவமில்லை. அது போய் சேர்ந்து இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மட்டும் அந்தப் பாடல், இந்தப் பாடல் என்று போய் சேர்ந்து விட்டது.
 உங்களைப் பின்பற்றுகிற இளம் இசையமைப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
 அவர்கள் என்னிடம் கேட்பவர்களாக இருந்தால் சொல்லலாம். யாருக்கும் நானாகப் போய் புத்திமதி சொல்வது நாகரிகம் இல்லை.
 சினிமாவுக்கு பின்னணி இசை உட்பட பாடல்கள் சார்ந்தவை தேவையா?
 உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.
 இது எதுவுமற்ற படைப்புகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
 அவைதாம் படைப்புகள்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com