விசித்திரமான விசாரணைக் குழு

ஒரு காட்டில் ஒரு மனிதன் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தான். அங்கு அவனுக்கு ஒரு யானையின் நட்பு கிடைத்தது.
விசித்திரமான விசாரணைக் குழு

கென்ய நாடோடிக் கதை
 ஒரு காட்டில் ஒரு மனிதன் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தான். அங்கு அவனுக்கு ஒரு யானையின் நட்பு கிடைத்தது.
 ஒருநாள் பயங்கரமான புயல் வீசியது. பெரிய, பெரிய ஆலங்கட்டிகள் விழுந்தன. உணவு தேடி வெகு தூரம் சென்றிருந்த யானை, ஆலங்கட்டிகளின் அடி தாங்க முடியாமல் அங்கும், இங்கும் வெறி பிடித்தாற்போல் ஓடியது. கடைசியில் மனிதனிடம் வந்து, "என்னை இந்த பயங்கரப் புயலில் இருந்தும், ஆலங்கட்டிகளில் இருந்தும் நீதான் எப்படியாவது காப்பாற்ற வேண்டும்'' என்று கெஞ்சியது.
 மனிதன் யானையின் மேல் அனுதாபம் கொண்டான். "நண்பா! உனக்கு எப்படி உதவுவது என்றுதான் புரியவில்லை. இயற்கையின் சீற்றத்தை எதிர்க்கும் திராணி என்னிடம் இல்லையே'' என்றான்.
 "அதிகம் வேண்டாம். என் துதிக்கையைக் காத்துக்கொள்ள உன் குடிசையில் கொஞ்சம் இடம் கொடு!'' என்று யானை வேண்டி நின்றது.
 மனிதன் அதற்கு இரங்கி, "என் குடிசையில் நாம் இருவரும் இருக்கும் அளவுக்கு இடமில்லை. இருந்தாலும் உன் துதிக்கையைக் காத்துக்கொள்ள நான் உதவுகிறேன் ஜாக்கிரதையாக உன் துதிக்கையை மட்டும் என் குடிசைக்குள் நுழைத்துக்கொள்'' என்று அனுமதி அளித்தான்.
 யானை நன்றி தெரிவிக்கும் முறையில், "ஆபத்துக்கு உதவுபவனே உற்ற நண்பன் என்னும் கூற்றுக்கு எள்ளளவும் பொய்யில்லை. நீ பேருதவி புரிந்து என்னைக் காப்பாற்ற முன்வந்ததற்கு நன்றி. இத்தகைய ஆபத்து உனக்கு வர வேண்டாம். வந்தால் உனக்கு உதவும் வாய்ப்பு எனக்குக் கிட்டுமாக'' என்றது. அதைத் தொடர்ந்து, மனிதனின் குடிசைக்குள் யானை தன் துதிக்கையை நுழைத்தது.
 ஆனால் என்ன கொடுமை! தனக்கு உதவிய மனிதனையே தன் துதிக்கையால் தூக்கியெறிந்துவிட்டது யானை!
 யானையின் இந்த இழிசெயலைக் கண்டு மனிதன் கொதித்துக் கூச்சலிட்டான். அவன் கூப்பாட்டைக் கேட்டு காட்டு மிருகங்கள் கூடின. அவன் ஏன் கூச்சலிடுகிறான் என்ற காரணத்தைக் கேட்டன. மனிதன் நடந்ததை நடந்தபடியே சொன்னான்.
 அந்த நேரத்தில் காட்டுக்கு அரசனான சிங்கம் அங்கு வந்தது. அதிகாரக் குரலில் கர்ஜனை செய்துவிட்டு,"என்ன விஷயம்? எதற்காகக் காட்டின் அமைதியைக் குலைக்க முற்பட்டிருக்கிறாய்?'' என்று கேட்டது.
 மனிதன் தனக்கு நேர்ந்ததைக் கூறி நியாயம் கேட்டான்.
 சிங்கம் உறுமியபடியே, ""குடிசை உன்னுடையதா, யானையினுடையதா என்று தீர்மானிக்க நான் ஒரு விசாரணைக் குழுவை நியமிக்கிறேன். ஆனால் நீ என்னுடைய குடியிடம், குறிப்பாக எனது அமைச்சர் குழுவில் இருக்கும் யானையுடன் பகைமை பாராட்டுவதை ஒருபோதும் விரும்ப மாட்டேன்'' என்றது.
 சிங்கம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. அதில் யானை, காண்டாமிருகம், நரி, கழுதை, புலி முதலியன இடம்பெற்றன.
 மறுநாள் விசாரணைக் குழு முன்பு யானை தன் வாக்குமூலத்தைத் தந்தது. "எனது மனித நண்பர் தவறான கருத்துக்கு இலக்காகி விட்டது குறித்து நான் வருந்துகிறேன். எனது ஆப்த நண்பரான இம்மனிதர் ஆலங்கட்டி மழையிலிருந்தும், பெரும் புயலிலிருந்தும் தன் குடிசையைக் காப்பாற்றித் தருமாறு என் உதவியைக் கோரினார். குடிசை காலியாக இருப்பதைப் பார்த்து புயல் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. குடிசையில் அதன் ஆட்சியை நிலைப்படுத்திவிட்டது. நான் என் நண்பரின் நலனை உத்தேசித்துப் புயலை குடிசையிலிருந்து விரட்டி அடித்தேன். குடிசையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதே நல்லது. அப்போதுதான் ஆக்கிரமிப்புப் பிரச்னை தீரும் என்ற முடிவுக்கு வந்தேன். என் நிலையில் நீங்கள் இருந்தாலும் இதையே செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்று உருக்கமாகக் கூறியது.
 அதற்குப் பின் மனிதன் வரவழைக்கப்பட்டான். அவன் பேச வாயெடுக்கும் முன் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஏக காலத்தில் குரல் கொடுத்தனர். "எல்லா விஷயங்களையும் நாங்கள் ரகசியமாக விசாரித்துத் தெரிந்து கொண்டோம். நாங்கள் கேட்கும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. யானை வருவதற்கு முன்னால் உன் குடிசையில் யாராவது இருந்தார்களா?'' என்று கேட்டனர்.
 "இல்லை...'' என்றபடி ஏதோ சொல்ல வாயெடுத்தான் மனிதன்.
 அதற்குள் குழுவின் உறுப்பினர்கள் குறுக்கிட்டு, "சரி, சரி! நாங்கள் எல்லாவற்றையும் நன்கு விளங்கிக் கொண்டு விட்டோம். இனி தீர்ப்பை எதிர்பார்'' என்று கூறிய கையோடு எழுந்துவிட்டனர்.
 அன்று இரவு யானை, விசாரணைக் குழு உறுப்பினர்களுக்கு தன் வீட்டில் பெரிய விருந்தை அளித்தது. பழம், புலால் உணவு என்று ஏக தடபுடல்! யானையின் மனைவியே எல்லா ஏற்பாடுகளையும் முன் நின்று கவனித்தாள். விருந்து முடிந்தவுடன் மனிதன் மீண்டும் அழைக்கப்பட்டான். தீர்ப்பும் உடனே வழங்கப்பட்டுவிட்டது.
 அந்தத் தீர்ப்பு இதுதான்:
 "யானை குடிசையை செவ்வனே உபயோகித்தது என்பது தெளிவாகிறது. மனிதன் புயலிலிருந்து குடிசையைக் காப்பாற்றும் முயற்சியில் தோல்வியே கண்டிருக்கிறான். குடிசையை விட்டு விட்டு வெளியேறவும் அவனுக்கு மனமில்லை. யானையை உதவிக்குக் கூப்பிட்டிருக்கிறான். எனவே, குடிசையை யானைக்கே தந்து விடுவது தான் நியாயம். மனிதன் விரும்பினால் இந்தக் கானகத்திலேயே வேறு இடம் தேடிக் கொள்ளலாம். குடிசையும் போட்டுக் கொள்ளலாம். அதற்கான அனுமதி வழங்கஇக்குழு இசைவு தெரிவிக்கிறது. கானக ஆட்சி மனிதனுக்கு சகல விதமான வசதிகளையும் செய்துதர சித்தமாயிருக்கிறது. எனவே மனிதன் தைரியமாக இக்குழுவின் கூற்றினை நம்பலாம்!.''
 -எஸ்.ஆதினமிளகி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com