பஜன் பாடல்களை பாடி பாராட்டு பெற்ற பாகவதர்!

கணீரென்ற குரல். வார்த்தைகளில் ஒரு தெளிவு. மக்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு கதைகள். இவை எல்லாம் ஒருங்கே பெற்றவர்தான் மயிலாடுதுறை ஞானகுரு பாகவதர்.
பஜன் பாடல்களை பாடி பாராட்டு பெற்ற பாகவதர்!

கணீரென்ற குரல். வார்த்தைகளில் ஒரு தெளிவு. மக்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு கதைகள். இவை எல்லாம் ஒருங்கே பெற்றவர்தான் மயிலாடுதுறை ஞானகுரு பாகவதர். இவ்வளவு ஸ்பஷ்டமாக ஸ்லோகங்களையும், பஜன் பாடல்களையும் பாடும் இவருக்கு சுமார் 6 வயது வரை வார்த்தைகளே வரவில்லை என்று சொன்னால் யாராவது நம்புவார்களா என்ன? ஆனால் அதுதான் உண்மை என்கிறார் மயிலாடுதுறை ஞானகுரு பாகவதர்: 

""இந்த நாம சங்கீர்த்தனம் செய்வது எங்கள் குடும்பத்தில் வழி, வழியாக வந்தது. எனது தாத்தா ராமன் ஒரு பிரபலமான பாகவதர். அவர் வழியாக எனது தகப்பனார் மயிலாடுதுறை கிருஷ்ணமூர்த்தி பாகவதர் தொடர்ந்தார். அவர் மிகவும் பிரபலமானவர். அவரது வழியில் நான் வந்திருக்கிறேன். ஆனால் பிறந்தபோது நன்றாக இருந்த எனக்கு 6 வயது வரை பேச்சு வரவில்லை. எனது தகப்பனாருக்கும், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், எனது வீட்டில் நான் தான் கடைக்குட்டி. எனக்கு முன் பிறந்தவர்கள் எல்லோரும் நன்றாக பேசும்போது நான் மட்டும் பேசவில்லை என்றால் அதிர்ச்சி ஏற்படும் இல்லையா? என்ன செய்வது என்று தெரியாத நிலையில், தபோவனத்தில் உள்ள ஞானாநந்தகிரி ஸ்வாமிகள் சித்தி அடைந்த வருடம் என்னை எனது பெற்றோர் அழைத்துக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்த ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் எனது தந்தையாரை பார்த்து ""என்ன வருத்தம்?'' என்று கேட்டார். ""என் பிள்ளைக்கு பேச்சு வரவில்லை'' என்று தந்தை சொல்ல, ""நாற்பத்து எட்டு நாட்கள் இங்கு உனது பஜன் பாடல்களை பாடுங்கள். உங்கள் குழந்தைக்கு பேச்சு வரும்'' என்று ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் சொல்ல, நாற்பத்து எட்டு நாட்கள் பாடலானார். 48-ஆவது நாள் பாடிக்கொண்டே அங்கிருந்த கடவுளை சுற்றி வரும்போது நான் பேச ஆரம்பித்து விட்டேன் என்று தந்தை அவ்வப்போது கூறுவார். 
இன்று நான் பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணமானவர் சுவாமி ஞானானந்த கிரி ஸ்வாமிகள் தான். இந்த பஜனைக்கு குரு எனது தகப்பனார்தான். அவர் 1992}ஆம் வருடம் இறைவன் திருவடியில் சேரும் வரை எனக்கு இந்த நாம சங்கீர்த்தனம் செய்வது எப்படி என்றும், எதை எதற்குப் பிறகு செய்யவேண்டும் என்று சொன்னதுடன், பல்வேறு பாடல்களையும் சொல்லிக் கொடுத்தார். ஆண்டவனின் நாமத்தை அனுதினமும் சொல்வதற்கு எனக்கு உறுதுணையாக, எனது 5 சகோதரர்களுடன் ஒரு சகோதரியும் இருக்கிறார்கள். இவர்கள் தான் என்னை ."நீ ஆண்டவன் நாமத்தை ஜபித்துக் கொண்டிரு, அது போதும்' என்றார்கள். அவர்கள் எல்லோரும் வேலை செய்கிறார்கள். நான் மக்களின் ஷேமத்திற்காக, எல்லா இடங்களிலும் சென்று பகவானின் நாமத்தை சொல்லிக் கொண்டு, "எல்லோரும் இன்புற்றிருப்பதோடு அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே'. ஆண்டவன் காட்டும் வழியில் பல ஊர்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன். 
பஜனில் இன்று மூன்று கல்யாணம் இருக்கு. அது, ராதா கல்யாணம், சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம். இவை எல்லாம் வைணவ சம்பிரதாயம். சைவ சித்தாந்தத்தில மீனாட்சி கல்யாணம், பார்வதி கல்யாணம். இந்த இரண்டுமே ஒன்று தான். 
ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர்வது, என்றாலும் அதற்கென சில மாற்று நிலைகளும் உண்டு. நாங்கள் எல்லா கல்யாண உற்சவங்களும் செய்கிறோம். அதில் மிகவும் ப்ரசித்தி பெற்றவை ராதா கல்யாணம்தான். இந்த கல்யாண உற்சவம் எந்த மாதமும் செய்யலாம் . அடுத்து நாங்கள் செய்வது சீதா கல்யாண வைபவம். இது வசந்த ருது என்ற பங்குனி சித்திரை வைகாசி மாதங்களில் செய்வோம். 
ருக்மிணி கல்யாணம் கிரீஷ்ம ருது என்ற ஆனி, ஆவணியிலே செய்கிறோம்.
நமக்கு மூன்று யுகங்கள் உண்டு. அவை கிருத யுகம் , த்ரேதா யுகம், துவாபர யுகம். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்றைப் பிரதானமாக பகவான் கொடுத்தார். இந்தக் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் செய்தால் வாழ்நாள் முழுவதும் நாம் சுபிட்சமாக இருக்கலாம். வைணவ சம்பிரதாயத்தில் நம்மாழ்வார், ராமானுஜர் ஆகியோரை படைத்தார். சைவ சம்பிரதாயத்திலே ஆதிசங்கரர் வழியில் வந்த காஞ்சி மடாதிபதி போன்றவர்கள். இவர்கள் அனைவரும் நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை உலகறிய செய்தனர். பஜன் பாடல்களினால், நாம் ஆண்டவனை அழைத்தால் அவன் நம்மை நோக்கி வருவான் என்ற உண்மையை இவர்கள் அனைவருக்கும் உணரவைத்தனர். 
காஞ்சி மடத்தின் 59}ஆவது பீடாதிபதி ஆத்மபோதருடன், அவருடைய சீடராக இருந்து பின்னர் மடாதிபதியாக மாறிய பகவந்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஒருமுறை காசி நகருக்கு சென்றார்கள். இரவு ஒரு சத்திரத்தில் படுத்துக் கொண்டிருந்தார்கள். விடியற்காலையில் எழுந்து செல்ல படுக்கையில் உட்கார்ந்தார்கள். அப்போது அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒரு மங்கையும் அவரது கணவரும் வந்து நின்று வீட்டின் கதவைத் தட்டினார்கள். 
அந்த வீட்டின் கதவு திறந்து ஒரு பெண்மணியும் ஒரு சிறுவனும் வந்து நின்றார்கள். கதவை தட்டிய தம்பதியின் கணவர், "இவள் என் மனைவி. என்னை விட்டு பிரிந்து பல காலம் ஆகிவிட்டது. இவளை நான் சேர்த்துக் கொள்ளலாமா இல்லை சேர்த்துக் கொள்ள கூடாதா என்று உங்கள் வீட்டுப் பெரியவரை கேட்டுப் போக வந்தேன்' என்றார். 
அதற்கு அந்த வீட்டில் உள்ள பெண்மணி, "பெரியவர் வெளியூருக்கு சென்றுள்ளார்' என்று சொல்லி முடிக்கும் முன்னரே அந்தச் சிறுவன், ""உங்கள் மனைவியை அழைத்துக் கொண்டு எதிரே உள்ள கங்கையில் இருவரும் கைகோர்த்துக்கொண்டு மூன்று முறை முழுகுங்கள். ஒவ்வொரு முறையும் முழுகும்போது "ராமா' என்று சொல்லிவிட்டு முழுகுங்கள். உங்களை விட்டு உங்கள் மனைவி எப்படி போனாளோ, அப்படியே திரும்பி வந்து விட்டார் என்று நீங்களே உணர்வீர்கள்'' என்றான். 
இதை கேட்ட பெண்மணி அந்தச் சிறுவனை ஓங்கி அறைந்தார். பின்னர், ""ஏன் மூன்று முறை, ஒருமுறை, சொன்னாலே போதும், ஆண்டவன் அருள் பாலிப்பான்'' என்று கூறினார். இதைப் பார்த்தும், கேட்டுக் கொண்டிருந்த சுவாமிகள் இருவரும் அன்றிலிருந்து நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை உணர்ந்தார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் வழியில் நாங்கள் இன்றும் இந்த பஜனைகளை செய்து வருகிறோம். 
ஒரு காலத்தில் இந்த கல்யாண வைபவங்கள் எல்லாமே 10 நாட்கள் வெகு விமரிசையாக நடந்தேறியது. பின்னர் அது ஒரு வாரமாகியது. பின்னர் அதுவும் குறைந்து 5 நாட்கள் நடைபெற்றது. கால வர்த்த நிலையை கருத்தில் கொண்டு 3 நாட்கள் நடத்தினோம். இன்று அதுவே ஒன்றரை நாட்கள் என்று வந்து நிற்கிறது. என்னை பொருத்தவரை நாட்கள் கணக்கு முக்கியமில்லை. பண்ணவேண்டும் என்ற எண்ணம் தான் மிக முக்கியம். 
அதிலும் இதை சிறப்பாக செய்பவர்கள் எங்கேயும் உண்டு. உதாரணமாக சென்னை, பம்மலில் உள்ள சங்கர நகர், சிவார்யா குருகுலம் இந்த வருடம் சிறப்பாக ராதா கல்யாண மஹோத்சவத்தை நடத்தியது. குறிப்பாக என். 
சங்கரன் தம்பதியை நாம் மிகவும் பாராட்டியே தீரவேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார்கள். ராதா கல்யாணம் என்பது கிருஷ்ணனும் ராதையும் இணைவதுதான். அதற்கென்று தனியாக ஒரு கல்யாண பத்திரிகை அடித்து, மிகவும் விமரிசையாக நடத்தினார்கள். என்னை பொருத்தவரை இந்த வருடத்தில் நடந்த சிறப்பான ராதா கல்யாண உற்சவம் இதுதான்'' என்றார் ஞானகுரு பாகவதர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com