மெய்ச்சிர்க்க வைத்த மலேசிய தமிழ்க் குழந்தைகள்!

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பூர்வீகமாக வசிக்கும் நாடுகளில் மலேசியா குறிப்பிடத்தக்கதாகும்.
மெய்ச்சிர்க்க வைத்த மலேசிய தமிழ்க் குழந்தைகள்!

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பூர்வீகமாக வசிக்கும் நாடுகளில் மலேசியா குறிப்பிடத்தக்கதாகும். அனைத்துத் தரப்பு மக்களையும் மேற்கத்திய நாகரிகம், கலாசாரம் சூழ்ந்து கொண்ட நிலையிலும், மலேசியாவில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள், பிற மொழிக் கலப்பில்லாத தனித் தமிழில் எழுதியும், பேசியும் மொழியின் மாண்பைக் காத்து வருகின்றனர் என்றால் அது மிகையல்ல.
உலகளவில் தமிழ்மொழியின் புகழ் பரப்பும் பல்வேறு மாநாடுகளை முந்திக் கொண்டு நடத்துவதிலும், மலேசியா தனித்துவம் பெற்றுள்ளது. அந்த வரிசையில், தமிழகம், புதுச்சேரி, இலங்கை, சிங்கப்பூர், கனடா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள், ஆர்வலர்களைத் திரட்டி, ஜூன் 8}ஆம் தேதி முதல் 10}ஆம் தேதி வரை, மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும், மலாய் பல்கலைக்கழகமும் இணைந்து, அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மலாய் 
பல்கலைக்கழகத்தில், முதலாம் தமிழ்க் குழந்தைகள் இலக்கிய மாநாட்டை நடத்தின.
குழந்தைகளுக்குத் தேவையான இலக்கியங்களைப் படைப்பது குறித்தும், குழந்தைகளையே இலக்கியங்கள் படைக்கச் செய்வது குறித்தும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, பெருமை சேர்த்தனர்.
ஈராண்டுக்கு ஒருமுறை குழந்தைகள் இலக்கிய மாநாடு நடத்துவது, சிறந்த குழந்தை இலக்கிய நுôல்களைத் தேர்வு செய்து பரிசுகள் வழங்குவது, குழந்தைகளுக்கு இணைய வழி மின் நூல் துவக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
முத்தாய்ப்பாக, ஜூன் 9}ஆம் தேதி இரவு, மலாயாப் பல்கலைக்கழக கலையரங்க மண்டபத்தில் சிறுவர் இலக்கியக் கலைவிழா நடைபெற்றது. அந்த விழாவில், முற்றிலும் குழந்தைகளே ஏற்று நடத்திய கலைநிகழ்ச்சிகள், அரங்கத்தில் குவிந்திருந்த சர்வதேச தமிழ் அறிஞர்களை மெய்ச்சிலிர்க்க வைத்தன.
முயல், புலி போன்று தத்ரூபமாக வேடமணிந்த சிறுவர்கள் தொகுத்து வழங்கிட, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நடைபெற்ற அந்த விழாவில், பரத நாட்டியம், கவியரங்கம், பாரம்பரிய நடனம், வரலாற்றுக் கவிதை நாடகம் ஆகியவற்றை நடத்திய மலேசியக் குழந்தைகள் அனைத்துத் தரப்பினரையும் வியக்க வைத்தனர்.
கலைவிழாவில், சிறுதுளி கூட பிறமொழி வார்த்தைகள் கலப்பின்றியும், திரைப்படப் பாடல்கள், சாயல்கள் ஏதுமின்றியும், முழுக்க முழுக்க கலாசாரம் சார்ந்த விழாவை நடத்தியது மலேசியக் குழந்தைகளின் மீதான தாய் மொழி ஆர்வத்தை உலகத் தமிழர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்ததென்றால், அது மிகையல்ல.
தமிழகத்தில் இப்படிப்பட்ட பாரம்பரிய கலைவிழாக்களை நடத்தி, தமிழ் குழந்தைகளுக்கு, மொழி, கலாசாரம், பண்பாடு மீதான ஆர்வத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டியது இலக்கியம் சார்ந்த அமைப்புகளுக்கு மட்டுமின்றி, அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் மிகப்பெரிய தார்மிகப் பொறுப்பாகியுள்ளது. அதற்கு மலேசியாவில் நடைபெற்ற முதலாம் தமிழ்க் குழந்தைகள் இலக்கிய மாநாடு புது அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com